தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Wednesday, December 5, 2012

பேரா. செ.வை. சண்முகத்தின் அணிந்துரை


நூல் - தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு 



பேரா. செ.வை. சண்முகம்





   
     உரை என்பது இன்று கலைச்சொல்லாய் ஒரு நூலுக்குக் குறிப்பாகப் பழங்கால நூலுக்குப் பொருள் விளக்கம் தரும் முறையில் எழுதப்பட்டு மூல நூலும் சேர்ந்தது என்ற பொருளில் தமிழ் அறிஞர்களிடையே  வழங்குகிறது. அதன் பொதுப் பொருள் சொல் அல்லது பேசு என்பதால் ஒரு பொருள் குறித்த  பேச்சு  என்ற முறையில் பொருளும் புதைந்துள்ளது எனலாம்.  அதனால் பேச்சு உரை (நேரடிப் பேச்சு), எழுத்து உரை  ( எழுதிப் படிப்பது) என்ற தொடர்களும் இன்று கையாளப்படுகின்றன. தொல்காப்பியத்திலேயே உரை என்பது  பொதுப்பொருளிலிலும் (உரை எனத் தோழிக்கு உரைத்த கண்ணும்’, களவு. 21.3), உரைநடை என்ற பொருளிலும் (உரைவகை நடையே நான்கென மொழிப’ (செய்யுள்.171.5), இன்று வழங்கும் விருத்தி உரை என்ற சிறப்புப் பொருளிலும் (சூத்திரத்துப் பொருள் அன்றியும் யாப்புற/ இன்றியமையாது இயைபவை எல்லாம் / ஒன்ற உரைப்பது உரைஎனப் படுமே’, மரபு.104) பயின்று வந்துள்ளது. அதாவது இன்றைய கலைச்சொல் பொருள், விருத்தி உரை என்ற கலைச்சொல் பொருளின் விரிவு எனலாம். அது கல்வி பரவலாக்கம் அல்லது பொதுமையாக்கம் ( Universalization)  என்ற சமூக மாற்றத்தின் எதிரொலி.