தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Saturday, July 12, 2014

பத்தொன்பதாம் நூற்றாண்டுப் புத்தக விற்பனை முறைகள்

கலித்தொகை பதிப்பு - 1887


21ஆம் நூற்றாண்டில் புத்தகங்களை வாங்குவது என்பது எளிதானதொரு செயல். புத்தகங்களை விற்பதற்கென்றே பல்வேறு இணையதளங்கள் இயங்கி வருகின்றன. இது தவிர முக்கியமான இடங்களிலெல்லாம் புத்தக வி்ற்பனை நிலையங்களும் உள்ளன. இதனால் உலகத்தின் மூலை முடுக்குகளில் வெளியாகும் புத்தகங்கள் அனைத்தும் சர்வசாதாரணமாக நம் பார்வைக்குக் கிடைப்பதோடு வீடு தேடியும்  வந்து சேர்கின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த நிலை இல்லை. சுவடிகளில் இருந்து அச்சடிக்கப்பட்ட வடிவங்களாக நூல்கள் மாறியபடி வந்த காலகட்டம் அது. சுவடிகளில் காசுக்காக நூல்களை எழுதுவோரே அன்றிருந்தனர். ஆனால் சுவடிகளில் நூல்களை எழுதி விற்றவர்களை அறியமுடியவில்லை. சுவடியிலிருந்து அச்சடிக்கப்பட்ட நூல்களாக மாறிய காலகட்டமான பத்தொன்பதாம் நூற்றாண்டில் நூல்களை அவர்கள் எவ்வாறு விற்பனை செய்திருப்பர் என்று பார்க்கும்போது சில சான்றுகள் அக்காலகட்டப் பதிப்புகளின் பின்பக்கங்களிலும் முன்பக்கங்களிலும் காணக்கிடைக்கின்றன. 

தனியான புத்தக விற்பனை நிலையங்கள் என்று எதுவும் தோன்றாத காலகட்டத்தில் அப்புத்தகங்களை விற்பனை செய்வதற்கு அச்சகத்தார் பல ஊர்களில் உள்ள வீடுகளையும் அச்சுக் கூடங்களையுமே புத்தக விற்பனை நிலையங்களாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். பின்னர் படிப்படியாகப் புத்தகங்களை விற்பனை செய்யும் புத்தக ஷாப்புகளும் புத்தக செல்லர்களும் உருவாகி புத்தகங்களை விற்பனைசெய்த முறைமையினையும் அறிய முடிகிறது. பின்வரும் குறிப்புகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புத்தகங்களை விற்பனை செய்த முறைமையின் வளர்ச்சிப் படிநிலைகளைக் காட்டுகின்றன.

சான்றுகள்:

1.    “இதனாலியாவர்க்கும் அறிவிக்கப்படுவதியாதெனில் சென்ன பட்டணம் பெத்துநாயகன் பேட்டையில் கொத்தவால் கடைக்குஞ் செங்கான் கடைக்கு மத்தியிற் கோவிந்தநாயகன் தெருவில் இஸ்கூர் - கிணற்றிற்கெதிர் மேலண்டைவாடையில் 53 வது நெம்பருடைய வீட்டிருக்கும் அச்சிற் பதிப்பித்தான பலவகைத் தமிழ்ப்புத்தகங்கள் வேண்டியவர்கள் மேற்சொன்ன வீட்டில், வளவனூர் - சுப்பராய முதலியாரவர்கள் குமாரராகிய முத்துச்சாமி முதலியாரிடத்தில் விலைக்கு வாங்கிக் கொள்ளப்படும்”

“மேலும் பிறதேசங்களிலிருக்கின்றவர்கள் மேற்படி பட்டணத்திலிருக்குந் தங்கள் காரியக் காரர்களுக்காவது அல்லது மேற்சொல்லப்பட்ட முத்துச்சாமி முதலியாருக் காவது தபால் மூலமாக உண்டியனுப்பிப் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். அப்படிப்பட்டவர் களுக்குப் பங்கித்தபாற் செலவு ஒத்துக் கொடுக்கப்படும்”.                  ( நாலடியார் - 1844).

2.    “இப்புத்தகம் வேண்டியவர்கள், சென்னை மாநகரம், பெத்துநாயகன் பேட்டையில் தஞ்சாவூர் இராமநாயகர் தெருவில் திருவாவடுதுறை யாதீனமடத்திலும், மேற்படி பேட்டையில் தங்க சாலைத் தெருவில் இராமசுவாமி கோயிலுக்கடுத்த தென்னண்டை  85 வது நெம்பருடைய வீட்டிலும், மேற்படி பேட்டை ஐயாமுதலியார் தெருவில்  7 வது  நெம்பருடைய வீட்டிலும் வாங்கிக்கொள்ளலாம்”. (யாப்பருங்கலக்காரிகை, தில்லையம் பூர்ச் சந்திரசேகர கவிராஜபண்டிதர், 1854)

3.    “இப்புத்தகம்  வேண்டியவர்கள் மயிலாப்பூரிலிருக்கும் ராயல் ஹோட்டல் - புதுவை வேலு முதலியாரிடத்திலும் சென்னப்பட்டணத்தில் ஏழு கிணற்றுக்கடுத்த வீராசாமிப் பிள்ளை வீதியில் 38வது கதவிலக்கமுள்ள வீட்டில் இ. இரத்தின முதலியாரிடத்திலும் கிருஷ்ணப்ப நாயக்கன் அக்கிரஹாரம் வண்ணாரச் சந்தில் 20வது கதவிலக்கமுள்ள வீட்டில் சி. செல்வராய முதலியாரிடத்திலும் கூடலூரில் முத்துகிருஷ்ண ராமசாமி செட்டியார் குமாரர் மு.அப்பாசாமி செட்டியாரிடத்திலும் ராயவேலூரில் மண்ணடி - அ.வேலு முதலியாரிடத்திலும் இதன்விலை ரூ.3 கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம். வெளிதேசத் தார்களுக்கு இப்புத்தகம் வேண்டுமானால் மேல்விலாசத்துடன் புத்தக கிரயத்தையும் தபால் செலவையும் அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்”. (திருவருட்பா, தொழுவூர் வேலாயுத முதலியார், 1867).

4.    “இவை வேண்டியவர்கள் சென்னை எழுமூர்ச்சீதாப்பேட்டை வெங்குப்பிள்ளை வீதியில் 3ஆவது கதவிலக்கமுள்ள வீட்டில், திரிசிரபுரம் சுப்பராய செட்டியாரிடத் திலும், திருவல்லிக்கேணி பைகிராப்ட்சாலையில், 2ஆவது கதவிலக்கமுள்ள கடையில் பாகை கட்டும் நாராயண சாமிமுதலியார் குமாரர் இராமசாமி முதலியாரிடத்திலும், விலைக்கி வாங்கிக் கொள்ளலாம். வெளிதேசத்தார்கள் தபாற்செலவுடன் அனுப்ப வேண்டும்”. (தொல்காப்பியம், எழுத்ததிகாரம், இளம்பூரணர், சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார், 1868).

5.    “இதன் அடியிற் குறித்த புத்தகங்கள் சென்னபட்டணத்தில் வித்தியானுபாலன யந்திர சாலையில் ந.க.சதாசிவப்பிள்ளையவர்களிடத்துஞ், கலாரத்நாகர அச்சுக் கூடத்தில் ஊ.புஷ்பரதச்செட்டியாரவர்களிடத்துஞ், சிதம்பரத்திற் சைவப்பிரகாச வித்தியாசாலை விசாரணைக்கருத்தர் க.பொன்னுசாமிப் பிள்ளையவர்களிடத்தும், யாழ்ப்பாணத்திற் சுன்னாகம் அ. குமாரசாமிப்பிள்ளையவர்களிடத்துஞ், தஞ்சாவூரிற் புத்தக வியாபாரம் தா. திருவேங்கடபிள்ளையவர்களிடத்துந், திருநெல்வேலியிற் புத்தக வியாபாரம் ந.வ.சொக்கலிங்க பிள்ளையவர்களிடத்தும் வாங்கிக் கொள்ளலாம்”. (கலித்தொகை, சி.வை.தா. பதிப்பு, 1887)


6.    “இப்புத்தகம் வேண்டுவோர் சென்னை சைனாபஜார் வீதி புத்தக ஷாப்பில் க. முருகேச செட்டியாரிடத்திலும் மதராஸ் ரிப்பன் பிரஸிலும் ரூபா. 1. கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்”. (மணிமேகலை, திருமயிலை சண்முகம்பிள்ளை, 1894).

7.    “இப்புத்தகங்களை அடியிற்சொல்லப்படுபவர்களிடத்தும், என்னிடத்தும் விலைக்குப் பெற்றுக்கொள்ளலாம்:

சென்னபட்டணத்தைச் சார்ந்த திருவல்லிக்கேணி புக்ஸெல்லர் ஸ்ரீநிவாச வரதாசாரியார், திருச்சிராப்பள்ளி ஸெண்ட் ஜோஸப் காலெஜ் தமிழ்ப்பண்டிதர் முத்துச்சிதம்பரம்பிள்ளை, சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலை உபாத்தியாயர் அ.சிவராமசெட்டியார், மதுரைப் புதுமண்டபம் புஸ்தகக்கடை சண்முகம்பிள்ளை, யாழ்ப்பாணம் ஏழாலைச் சைவப்பிரகாச வித்தியாசாலை உபாத்தியாயர் அ.குமார சாமிப்பிள்ளை”. (இங்ஙனம், கும்பகோணம் காலேஜ், வே.சாமிநாதையன், புறநானூறு , 1894)

இன்றைய அபரிமிதமான புத்தக விற்பனை மையங்களின் மூலங்களாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இக்குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.

Wednesday, July 9, 2014

தி.வே. கோபாலையர் பதிப்புகளின் புலமைத்தன்மை. (T.V. Gopalaiyar)தி.வே. கோபாலையர்

தமிழ் இலக்கண, இலக்கியங்களை எழுதுதல் என்பதன் வழி அடையாளம் பெற்ற மரபிலிருந்து அவற்றைப் பதிப்பித்தல் என்ற வேறொரு தளத்திலான அடையாளத்தைப் பெறுதல் என்ற மரபு 19 ஆம் நூற்றாண்டில் தமிழ்ச்சமூகத்தில் வேரூன்றி நிலைபெற்றது. மூலநூலாசிரியர்களான தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர் ஆகியோர் படைத்த படைப்புகளைப் பதிப்பித்தலின் வழி அவர்கள் பெற்ற மதிப்பீடுகளுக்கு நிகரானதொரு இடத்தினைப் பெற்றவர்கள் இக்காலப் பதிப்பாசிரியர்கள். 

இவர்களுள் மூத்த நிலையிலும் தமிழுலகம் என்றென்றும் போற்றும் வகையிலும் சிறந்த பதிப்பாசிரியர்களாக, நுண்மாண் நுழைபுலம் மிக்கவர்களாக, அறிஞர்களாக விளங்கிய பெருமக்களுள் ஆறுமுக நாவலர், சி.வை.தா., உ.வே.சா., வையாபுரிப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கோராவர். இம்மரபின் தொடர்ச்சி-யாய் நம் சமகால சமூகத்தில் வாழ்ந்து இன்று நம் கண்முன் மறைந்தவர் பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர். கல்வியாளர், பதிப்பாசிரியர், பன்மொழிப் புலவர், சிறந்த ஆசிரியர் என எல்லா நிலைகளிலும் தன்னையும், தன் புலமையின் ஆளுமையையும் வெளிப்படுத்திய இவரின் பதிப்புச் செயல்பாடுகளை முன்வைக்கும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

Monday, July 7, 2014

தமிழ் இலக்கண நூல்களின் முதல் பதிப்புகள்


ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு தமிழ்ச்சமூகத்தில் ஏற்பட்ட கல்வி குறித்த சிந்தனை வெவ்வேறு புதிய போக்குகளை உருவாக்கின. மரபார்ந்த பயிற்றல் முறைகள் பின்தள்ளப்பட்டு நவீன வாசிப்பு சார்ந்த நிறுவனங்களும், புதிய வகையிலான பயிற்றல் கருவிகளும் தோற்றம் பெற்றன. ஐரோப்பியரின் தமிழ் மொழி அறிதல் என்னும் சிந்தனை விரிவுபெற்று ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தின் மொழி அறிதலாக ( எழுத்து அறிதல்) விரிவடைந்தது. இம்மொழி அறிதலுக்காக ஐரோப்பியர்கள் தாம் கொண்டுவந்த அச்சு ஊடகத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டனர். எனவே தான் தமிழ் இலக்கணப் பதிப்பு வரலாற்றை ஐரோப்பியர்களின் மொழி கற்றல் வரலாற்றிலிருந்தே தொடங்க வேண்டியுள்ளது. மதம் பரப்பலுக்காகவும், அதிகாரம் செலுத்துவதற்காகவும் தமிழைக் கற்க விழைந்த ஐரோப்பியர்கள் இரு நிலைகளில் அதற்கான கருவி நூல்களை உருவாக்கத் தொடங்கினர். இக் கருவி நூல்களின் உருவாக்கத்தில் தொடக்ககாலத்தில் அதிக பங்களிப்புச் செய்தவர்கள் சென்னைக் கல்விச் சங்கத்தைச் சார்ந்த எல்லிஸ்துரை மற்றும் அச்சங்கத்தின் புலவர்களே ஆவர்.