தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Saturday, June 18, 2011

அறியப்பட வேண்டிய அரிய ஆவணங்கள் : தொல்காப்பிய முதல் முழுமைப்பதிப்பு (இ. சாமுவேல்பிள்ளை - 1858)தமிழ் இலக்கிய வரலாற்றை, தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதப்புகும் ஒருவருக்குக் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டும், இருபதாம் நூற்றாண்டும் உருவாக்கித் தரும் வெளி என்பது அளவிடற்கரியது. இவ்விரு நூற்றாண்டுகளுக்கு முந்தைய நூற்றாண்டுகளின் மொழி, இலக்கிய, சமூகச் செயல்பாடுகளிலிருந்து இந்த இரு நூற்றாண்டுகளும் முற்றிலும் வேறொரு தளத்தில் செயல்பட்டுள்ளதைக் கூர்ந்து கவனிப்பவர்கள் துல்லியமாக விளங்கிக் கொள்ள முடியும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே தான் இன்றைய நவீனகாலச் சமூக உருவாக்கத்திற்கான அடிப்படை விவாதங்களை முன்னெடுக்க முடியும். குருகுலக்கல்வி மரபிலும், திண்ணைப்பள்ளி மரபிலும் உயர்மனோபாவப் பின்புலத்தில் கட்டமைக்கப்பட்டிருந்த கல்விப்புலம் இந்நூற்றாண்டின் நிறுவனக் கல்வி’’ செயல்பாட்டில் நெகிழ்ச்சியடைந்து பரவலாக்கம் பெற்றதோடு மாற்றுச் சிந்தனை மரபுகளையும் உருவாக்க வழிவகை செய்தது.

ஐரோப்பியர்களின் புதிய கல்விக்கொள்கை - சென்னைக் கல்விச்சங்க உருவாக்கம் - அச்சு ஊடகப் பரவலாக்கம் - மரபு இலக்கண, இலக்கியங்களின் புதிய வடிவ அச்சுப்பதிப்புகள் - கால்டுவெல்லின் திராவிட மொழி ஒப்பிலக்கணம்எனப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பன்முகப்பட்ட செயல்பாடு தமிழ்க்கல்வி மரபின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அச்சாணியாய் இருந்தது என்று உறுதிபடக் கூறமுடியும்.
சென்ற நூற்றாண்டிலே அச்சியந்திரம் வாராமல் இன்னும் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு வந்திருக்குமானால் இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள பல பழைய இலக்கிய நூல்கள் நமக்குக் கிடைக்காமலே அழிந்து போயிருக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தியே, ஒன்றிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு அச்சியந்திரம் நம்மவரிடம் வந்திருக்குமானால் இப்போது, மறைந்து போய்விட்ட பல பழைய இலக்கிய நூல்கள் நமக்குக் கிடைத்திருக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டிலே அச்சியந்திரம் கல்வி வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் பேருதவியாக இருந்தது என்பதில் சிறிதும் ஐயமில்லை.1
என்னும் மயிலை சீனி. வேங்கடசாமியின் கூற்று அச்சியந்திரத்தின் இன்றியமையாமை குறித்தும் அதன்வழி உருப்பெற்ற தமிழ்க்கல்வி வளர்ச்சி குறித்தும் எடுத்தியம்புகிறது.
இந்தப் பின்புலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் (1858)இ. சாமுவேல் பிள்ளை என்பவரால் பதிப்பித்து வெளியிடப்பட்ட தொல்காப்பிய - நன்னூல்பதிப்பு குறித்தும் அதன் தன்மை குறித்தும் இன்றைய நிலையில் விவாதிக்க வேண்டிய தேவையுள்ளது. தமிழின் தொன்மை இலக்கணம் - கிடைப்பனவற்றுள் முதல் இலக்கணம் - செவ்விலக்கியங்களோடு ஒப்பத்தகுந்த இலக்கணம் எனப் பல சிறப்புக்களையுடைய தொல்காப்பியத்தை முதன்முதல் முழுமையாகஅச்சுக்குக் கொண்டு வந்த இ.சாமுவேல்பிள்ளைஅவர்களும், அவரின் பதிப்பும் தமிழ்ச்சமூகத்தால் எளிமையாக மறக்கப்பட்டுவிட்ட காலகட்டத்தில் அவரின் பதிப்புச் செயல்பாட்டின் பன்முகத்தன்மைகளை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது
.
பத்தொன்பதாம் நூற்றாண்டும் தமிழ்ப் பதிப்புச் சூழலும், 1858 வரை தமிழ் இலக்கணப் பதிப்புகள் உருவாக்கம் - தொல்காப்பிய - நன்னூல்பதிப்பு, பதிப்பு உருவாக்கப் பின்புலம்,  ‘மூலப்பதிப்பு - முழுமைப்பதிப்பு - ஒப்பீட்டுப்பதிப்பு’, சாமுவேல்பிள்ளை பதிப்பும் பிற்கால ஒப்பீட்டுப் பதிப்புகளும் என்னும் பகுப்புநிலையில் இக்கட்டுரையின் பொருண்மை வரிசைப்படுத்தப்பட்டு ஆராயப்படவுள்ளது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்ப் பதிப்புச் சூழல்
தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டு தனித்துச் சுட்டத்தக்கது. இந்நூற்றாண்டின் தொடக்கம்தான் மரபிலக்கண, இலக்கிய நூல்களின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட முடியும். பல படிகளைப் பெறமுடியாமல் சுவடிகளிலேயே தேங்கிக்கிடந்த இலக்கண, இலக்கியங்கள் மாற்று வடிவத்தை எடுப்பதற்கும் எண்ணற்ற படிகள் உருவாவதற்கும் இந்நூற்றாண்டும், இதில் கொண்டு வரப்பட்ட அச்சுப் பரவலாக்கச் சட்டமும் முக்கியக் காரணம் எனலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்புவரை இருந்த தமிழ் இலக்கிய வாசிப்பிற்கும் அதற்குப் பிறகு உருவாக்கம் பெற்ற தமிழ் இலக்கிய வாசிப்பிற்கும் உள்ள வேறுபாடு எத்தகையது என்பதை கா. சிவத்தம்பி அவர்களின் பின்வரும் கூற்று தெளிவுபடுத்துகிறது.
இக்கால இலக்கிய வரலாற்றின் பிரதான அம்சம், இக்காலத்து இலக்கிய உற்பத்தி முறைமை இதற்கு முந்திய காலங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்... எழுத்துக்கள் பற்றிய தொழில்நுட்பம், புரட்சிகர மாற்றங்களுக்கு உள்ளாகியது. எழுதுவதற்கான இலக்கிய வகைகள், இந்தியப் பண்பாட்டுக்கு வெளியே இருந்து மேல்நாட்டுப் பங்களிப்புகளாக வந்தன. எழுதப்படும் பொருள் வேறுபட்டது. எழுதுபவர்கள் வித்தியாசப்பட்டார்கள். இவை யாவற்றுக்கும் மேலாக இப்பொழுது வாசகர் என்ற புதிய, பெரிய நுகர்வாளர் வட்டம் வந்தது. இவை யாவும் தமிழ் இலக்கியத்தின் பொருளையும், எழுது முறையையும், எழுத்தின் நுகர்வையும் மாற்றின. தமிழைச் சர்வதேசியமயப்படுத்தியன.2
இவ்வாசிப்பு உருவாக்கத்திற்கு அடிப்படையாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பதிப்புப் பரவலாக்கமும், வடிவ அமைப்புமே முக்கியக் காரணமாகச் செயல்பட்டுள்ளன எனலாம். எவ்வித யாப்பமைப்பும், ஒற்றும், பல்வேறு எழுத்துக்களின் வேறுபாடும் அற்று முறையான பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே படித்துப் பார்க்கக் கூடிய நிலையில் இருந்த இலக்கிய, இலக்கணப் பனுவல்களைச் செழுமைப்படுத்தி, படிப்பதற்கு எளிமைப்படுத்தித் தருவதற்கான முன்னோடிச் செயல்பாடுகள் இக்காலத்தில்தான் வளமையாக முன்னெடுக்கப்பட்டன.
பல்வேறு ஊர்களில் பலநிலைகளில் பலவித பாடங்களுடன் இருந்த சுவடிகளின் வழி சொல்லித்தரப்பட்டு வந்த இலக்கியப் பனுவல்களும், இலக்கணப் பனுவல்களும் இக்காலத்தில் முறையாகத் தொகுக்கப்பட்டு. ஒழுங்குக்குக் கொண்டுவரப்பட்டு அச்சில் நிலைநிறுத்தப்பட்டன. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செல்லரித்தும், சிதிலமடைந்தும் கிடந்த சுவடிகளுக்குள் பொதிந்திருந்த மரபுப்பனுவல்கள் பலவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களாக அச்சிடப்பெற்று பெரும் நிலைபேறடைந்தது இதே காலத்தில்தான்.
இந்தத் தளத்திலேயே தொன்மைப் பனுவல்களில் ஒன்றாகிய திருக்குறள் முதன்முதல் அச்சேறிய முறைமையினை அறிந்து கொள்ள முடிகிறது. கி.பி. 1812ஆம் ஆண்டு ஞானப்பிறகாசன் என்பவரால் மாசத் தினச் சரிதை அச்சுக்கூடத்தின் வழியாகத் திருக்குறள்முதன்முதலாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இப்பதிப்பு உருவாக்கப்பட்ட, செம்மைப்படுத்தப்பட்ட முறை குறித்து இ. சுந்தரமூர்த்தி அவர்கள்,
“1812ஆம் ஆண்டில் வெளிவந்த திருக்குறள் பதிப்பு இன்று நமக்குக் கிடைக்கும் இலக்கிய நூல்களுள் முதல் பதிப்பாகக் கருதப்பெறுகின்றது. இதற்கு முன்னரும் தமிழில் பல நூல்கள் வெளிவந்துள்ளனவாயினும், இந்நூலில் முதன்முதலாகப் பல்வேறு பதிப்பு நெறிகள் தெரியவருகின்றன. பதிப்பு முன்முயற்சிகளும், குழுமுயற்சிகளும், மூலபாட ஆய்வு நெறிமுறைகளும் பின்பற்றியுள்ள தொடர் முயற்சிகளும் தெரிய வருகின்றன. பிற இலக்கிய, இலக்கணங்களையும் துணைகொண்டு மூலபாடத்தை வரையறை செய்த தன்மை, அறிஞர் பெருமக்களுக்கு அனுப்பி அவர்தம் கருத்துக்களைக் கேட்டு பாடத்தை வரையறை செய்தமை முதலாய செய்திகள் அக்காலத்தில் அவர்கள் கொண்டிருந்த பதிப்பு நெறிமுறைகளைக் காட்டும்.3
என்று கூறுகிறார். இவ்வாறாக முறைப்படுத்தப்பெற்ற ஒரு தன்மைக்குள் பதிப்பு மரபு உருவானதன் அடிப்படையைத் தொடர்ந்து பல பனுவல்கள் அச்சில் நிலைபெற்றன. திருக்குறளின் இப்பதிப்பு செம்மைப்படுத்தப்பட்டு வந்த போதிலும் அதற்குப் பிறகு வெளிவந்த பல பதிப்புகள் சுவடிகளிலிருந்து அப்படியே அச்சுக்கு மாற்றப்பட்ட நிலையிலேதான் காணப்படுகின்றன.
முன்னுரை இல்லாமல், காற்புள்ளி, அரைப்புள்ளி என குறிகள் இடப்படாமல், பாடல்களும், நூற்பாக்களும் யாப்பின் அடிப்படையில் ஒழுங்கு படுத்தப்படாமல், பாடவேறுபாடுகள் தரப்படாமல் பதிப்பிக்கப்பட்ட பதிப்புகள்தான் அச்சிடப்பட்ட புத்தகங்கள்தான் தொடக்கத்தில் பெரும்பாலும் வெளிவந்தன. சுதேசிகள்நூல்களை அச்சிடலாம் என்ற 1835ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்டத்திற்குப் பிற்பாடு இவ்வாறான பதிப்புகள் பலவும் எண்ணிலடங்காமல் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. இந்த நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் படிநிலை முறையில் மாற்றம் பெற்றுப் பதிப்புகளின் தரம் செழுமை பெற்றது. வளர்ச்சி பெற்ற இப்பதிப்பு மரபில் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர் ஆகியோரின் செயல்பாடுகள் சுட்டத்தக்கனவாகவே உள்ளன.
ஒரு பனுவலைப் பதிப்பாசிரியர் பதிப்பிக்கும்பொழுது என்னென்ன முறைமைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கான அடிப்படைகளை வகுத்துத் தந்தவர்களில் மேற்சொல்லப்பட்டோரின் பங்கு அதிகம். ஆறுமுக நாவலருக்கும், சி.வை. தாமோதரம்பிள்ளைக்கும் ஒருபடி மேலே சென்று, உ.வே. சாமிநாதையர் உருவாக்கிய பயன்பாட்டுப் பதிப்பு இருபதாம் நூற்றாண்டுப் பதிப்பாசிரியர்களுக்கு முன்னத்தி ஏராய் இருந்தது.  1812ஆம் ஆண்டு தொடங்கி 1900 வரை பதிப்பிக்கப்பட்டு வெளிவந்த பதிப்புகள் அனைத்தையும் ஒருங்கே திரட்டிவைத்து ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போதுதான் அக்காலப் பதிப்பு முறைமைகளையும், பதிப்பாசிரி யர்களின் செயல்பாடுகளையும் வரிசை நிலையில் வைத்துச் சீர்தூக்கி மதிப்பிடமுடியும். ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை, உ.வே. சாமிநாதையர் எனத் திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருக்கும் நமக்கு, இவர்கள் தவிர ஒன்றிரண்டு நூல்களை மட்டும் செம்மையாகப் பதிப்பித்து வெளியிட்டுள்ள சிறந்த பதிப்பாசிரியர்கள் பலரின் பணிகளையும் புரிந்து கொள்ள முடியும்.
கிட்டத்தட்ட 1820 தொடங்கி 1910 வரை பல்வேறு துறைகளையும் சார்ந்த நூற்றுக்கணக்கான நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளதை இந்த இலண்டன் கேட்லாக் வழியே பார்க்கும்போது, தமிழ்நாட்டு அறிவுச்சூழல் என்பது நாம் இதுவரையில் எழுதப்பட்ட நூல்களில் சித்திரிப்பது போன்று இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.4
என்ற பொ. வேல்சாமி அவர்களின் கூற்று பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் அதன்வழியாகப் புதியதாக எழுதப்பட வேண்டிய வரலாறு குறித்தும் கவனப்படுத்துகிறது.
    
1858 வரை தமிழ் இலக்கணப் பதிப்புகள் உருவாக்கம்:
தமிழில் தோன்றிய பல்வேறு மரபிலக்கணங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சில் வெளிவரத் தொடங்கின. அச்சேற்றப்பட்ட நூல்களைவிட அச்சில் ஏறாமல் அழிந்துபோன நூல்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம். இதற்கு யாப்பருங்கல விருத்தியுரையில் காட்டப்படும் பல்வேறு நூல்களே சான்று. தமிழ் இலக்கணப் பதிப்பு வரலாற்றில் முதன்முதல் அச்சில் வெளிவந்த மரபிலக்கண நூல் நன்னூலே (1835) ஆகும். நன்னூல் பதிப்பாவதற்கு முன்பே கி.பி. 1828இல் தாண்டவராய முதலியார் எழுதி, சென்னைக் கல்விச் சங்கத்தில் வெளியிடப்பட்ட இலக்கண வினாவிடைவந்திருந்த போதிலும் அது தனித்துப் பேசப்படவேண்டிய ஒன்று.
நன்னூலை முதன்முதல் அச்சிட்ட பெருமை திருத்தணிகை விசாகப் பெருமாளையரையே சாரும். 1835ஆம் ஆண்டு கல்வி விளக்க அச்சுக் கூடத்தின்வழி இவர் வெளியிட்ட நன்னூல் மூலமும் காண்டிகையுரையும்தான் இலக்கணப் பதிப்பு வரலாற்றில் முதல் பதிப்பாக நிலைபெற்றுள்ளது. இப்பதிப்பைத் தொடர்ந்து 1858வரை அதாவது சாமுவேல்பிள்ளை பதிப்புவரை வெளிவந்த தமிழ் இலக்கணப் பதிப்புகள் எண்ணிக்கையில் குறைவே. ஆனால் 1858க்குப் பிறகு 1900க்குள் பல இலக்கண நூல்கள் வெளிவந்துள்ளன.
1858க்கு முன்னர், பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட நூல்களில் நன்னூல், நம்பிஅகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, தொன்னூல் விளக்கம், நேமிநாதம், யாப்பருங்கலக் காரிகை, தொல்காப்பியம் - எழுத்து - நச்சினார்க்கினியர் உரை, யாப்பருங்கலம், நேமிநாதம், தண்டியலங்காரம், வெண்பாப்பாட்டியல், வரையறுத்தபாட்டியல் ஆகியவை மட்டுமே அச்சில் நிலைபெற்றன. இவை தவிர இறையனார் அகப்பொருள், வீரசோழியம், இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கம், முத்துவீரியம் எனப் பல பனுவல்கள் இக்குறிப்பிட்ட காலத்தில் அச்சில் ஏறவில்லை.

சாமுவேல்பிள்ளைப் பதிப்புக்கு முன்னர் அச்சடிக்கப்பட்டவற்றில் மூலப்பதிப்புகளும் உரைப்பதிப்புகளும் அடங்கும். அவை நன்னூல் (மூலம் - 1835, 1854, உரை - 1835, 1840 (மறுபதிப்பு), 1847, 1851, 1851, 1855, 1855, 1857) நம்பி அகப்பொருள் (மூலம் - 1835, 1854), புறப்பொருள் வெண்பாமாலை (மூலம் - 1835, 1854), யாப்பருங்கலக்காரிகை (மூலம் - 1854, உரை - 1851, 1854 (இரண்டு பதிப்புகள்) தொன்னூல் விளக்கம் (உரை - 1838), தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் (நச்சினார்க்கினியர் உரை - 1847), நேமிநாதம் (மூலம் - 1836, 1852), யாப்பருங்கலம் (மூலம் - 1854, 1857), தண்டியலங்காரம் (உரை 1857), வெண்பாப்பாட்டியல் - வரையறுத்தபாட்டியல் (உரை - 1854) முதலியனவும் வெளிவந்துள்ளன. (இப்பதிப்புகளின் முழுவிவரம் பின்னிணைப்பு ஒன்றில் தரப்பட்டுள்ளது) 
இக்காலகட்டத்தில் வெளிவந்துள்ள பதிப்புகளைப் பார்க்கும்போது, சிலவற்றைத் தவிர மற்றவை பாடப்புத்தகம், எளிமைப்படுத்துதல் ஆகிய இரு நோக்கங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் நன்னூலே அதிக எண்ணிக்கையில் அச்சிடப்பட்ட பனுவலாகத் தெரிகிறது. சாமுவேல்பிள்ளைப் பதிப்பிற்கு முன்பாக (1858) தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்கு மழைவை மகாலிங்கையரின் பதிப்பு மட்டுமேதான் வெளிவந்திருந்தது என்பதையும் தொல்காப்பியம் முழுமையாக அச்சிடப்படவில்லை என்பதையும் இதன்மூலம் அறியமுடிகிறது. சாமுவேல்பிள்ளை பதிப்பிற்கு முன் வெளிவந்த இலக்கணப் பதிப்புகள் பலவும் அச்சிடப்பட்டவையாக இருந்தாலும் அவற்றின் தரத்தையும், பதிப்பிக்கப்பட்ட முறையையும் சாமுவேல்பிள்ளை பதிப்போடு ஒப்பிட்டு நோக்கும் போதுதான் புரிந்து கொள்ள முடியும்.

தொல்காப்பிய - நன்னூல்பதிப்பு:
தமிழில் கிடைக்கின்ற முதல் இலக்கண நூல் தொல்காப்பியமே என்றாலும் அச்சில் நிலைபெற்ற முதல் இலக்கண நூல் நன்னூலே ஆகும். நன்னூல் அச்சாகிப் (1835) பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே தொல்காப்பியம் (1847) அச்சாயிற்று. அதுவும் முழுமையாக இல்லை. தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களுள் எழுத்ததிகாரம் மட்டுமே நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து பத்து ஆண்டுகள் கழித்துதான் தொல்காப்பியம்’ (1858) மூலம் முதன்முறையாக முழுமையாக அச்சேறியது. இப்பதிப்பை வெளியிட்டவர். சாமுவேல்பிள்ளை என்பவரே. வால்ற்றர் ஜாயீஸ் என்னும் துரையவர்களின் உதவியைக்கொண்டு இப்பதிப்பு வெளியிடப்பட்டதாக நூலின் முகப்புப் பக்கம் தெரிவிக்கின்றது. ஜாயீஸின் உதவி எத்தகையது என்பதைப் பதிப்பின்வழி அறிய இயலவில்லை.

தொல்காப்பியத்தை முதன்முதல் முழுமையாகப் பதிப்பித்து வெளியிட்ட சாமுவேல்பிள்ளைகுறித்த வரலாற்றை அறிய முற்பட்டபோது ஏமாற்றமே மிஞ்சியது. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் ‘19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்’, மா.சு. சம்பந்தன் அவர்களின் அச்சும் பதிப்பும்’, ஜான் மர்டாக் கேட்லாக்’, க.ப. அறவாணன் அவர்களின் எழுநூறு ஆண்டுகளில் நன்னூல்’, 1958ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப்பொழில்இதழில் உள்ள நீ. கந்தசாமிப்பிள்ளை அவர்களின் கால்டுவெலும் அவர் வாழ்ந்த காலமும்என்னும் கட்டுரை, இ. சுந்தரமூர்த்தி அவர்களின் பதிப்பியல் சிந்தனைகள்’,ச.வே.சுப்பிரமணியன்,மு.சண்முகம்பிள்ளை,கோ.கிருட்டிண மூர்த்தி, பா.மதுகேஸ்வரன் ஆகியோரின் தொல்காப்பியப் பதிப்பு அடைவுகள், அ. தாமோதரன் அவர்களின் நன்னூல் பதிப்பு’, பா. மதுகேஸ்வரனின் நன்னூல் பதிப்புகள்ஆகிய நூல்களின் மூலமாகச் சாமுவேல்பிள்ளை பற்றியும் அவரது பதிப்புக் குறித்தும் சில செய்திகளை அறிய முடிகின்றது.
இவை தவிர சாமுவேல்பிள்ளை பதிப்பில் இடம்பெற்றுள்ள புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியாரவர்கள் இயற்றிய சிறப்புப் பாயிரமும், புதுவை பொன்னுசாமி முதலியார், தரங்காபுரம் சண்முகக்கவிராயர் ஆகியோர் இயற்றிய சாத்துக்கவிகளும் சாமுவேல்பிள்ளை பற்றிய தரவுகளை அளிக்கின்றன. இத்தரவுகளைக் கொண்டுதான் மேற்சொல்லப் பட்ட ஆய்வாளர் பலரும் அவரைப் பற்றி குறிப்புக்களை அளிக்கின்றனர்.
சாமுவேல்பிள்ளையின் பிறப்பு குறித்தோ இறப்பு குறித்தோ அறிவதற்குப் போதுமான சான்றுகள் இல்லை. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் இவர் வரலாறு ஒன்றும் தெரியவில்லை’5 என்று குறிப்பிடுகிறார். ஆனால் இவரைப்பற்றிய குறிப்பினை அவரது பதிப்பில் இடம்பெற்றுள்ள புரசை அஷ்டாவதானம் சபாபதிமுதலியாரின் சிறப்புப் பாயிரம் அளிக்கிறது.
நறைவார் சோலைப் பிறையா றெனுநகர்
வதிதரு சோழ வேளாள மரபிற்
பதிதரு தாண்டவ ராயவேள் பயந்த
நாட வருசுவி சேடசித் தாந்தி
செங்குவளை யந்தார் தங்குமணி மார்பின்
நாம வேலைப்புவி நயக்கும்
சாமுவே லெனுந் தகைமை யோனே.6
என்ற இச்சிறப்புப் பாயிரத்தின் மூலம் இவரைப்பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. இப்பாடலைக் கொண்டு நீ. கந்தசாமிப்பிள்ளையும், க.ப. அறவாணன் அவர்களும் சாமுவேல்பிள்ளை பற்றிய விளக்கத்தை அளிக்கின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில், தரங்கம்பாடிக்கு அருகிலுள்ள பிறையாறு என்னும் ஊரில், சோழிய வேளாளர் மரபில், சைவ சமயத்தைச் சார்ந்தவரும் வழிபாடு முதலியவற்றை முறையாகச் செய்பவருமான தாண்டவராய பிள்ளை (வாத்தியார்?) என்ற ஒரு சிறந்த தமிழ்ப் புலவர் இருந்தார். அவருடைய மகன் சிறந்த இலக்கணப் புலமை வாய்ந்தவர். தான் பிறந்த சமயத்தை விட்டு, கிறிஸ்தவராக மாறி, சாமுவேல்பிள்ளை என்று பெயர் வைத்துக்கொண்டார்.7
என்றும்,
இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்திலுள்ள பொறையாறு ஆகும். இவரது தந்தையார் பெயர் தாண்டவராய பிள்ளை என்பதாம். அவர் கிறித்துவச் சுவிசேஷ சித்தாந்தி ஆவர்.8
என்றும் இருவரும் கூறுகின்றனர். இவை தவிர சாமுவேல்பிள்ளையின் வேறுசில பணிகள் குறித்தும், அறிய முடிகிறது. சாமுவேல்பிள்ளை ஓர் ஆசிரியர் (munshi). அதோடு சென்னை லூதரன் திருச்சபையின் உறுப்பினர். அங்கிருந்தே திருச்சபைப் பத்திரிகையை அவ்வப்போது வெளியிட்டு வந்தார் என்றும், அப்பத்திரிகையின் தற்போதைய பெயர் கற்பக விருட்சம்என்றும் ஜான் மர்டாக் நூல் விவர அட்டவணையில் குறிப்பொன்று இடம்பெற்றுள்ளது.9 இப்பத்திரிகைகள் முறையே 1863 1864 ஆம் ஆண்டுகளில் வெளிவந்ததாக வேங்கடசாமி குறிப்பிடுகின்றார்.10
சாமுவேல்பிள்ளையும் வால்ற்றர் ஜாயீஸும் இணைந்து 1848ஆம் ஆண்டு நன்னூலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பின் முதற்பகுதியை வெளியிட் டுள்ளனர் (இம்மொழிபெயர்ப்பு பல பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது). மொழிபெயர்ப்பின் பெயர் "Grammatica Tamuliensis or an English Version of the Celebrated Tamil Nunnool " என்பதாகும். இந்த மொழிபெயர்ப்பு "With Explanatory Notes, Vocabulary,Appendics,And Extracts From the Hither to Unpublisued Commentory of Sunghara Namasivayur"  என்ற வகையில் அமைந்து காணப்படுகிறது. அதுவரை அச்சில் ஏறாமல் இருந்த சங்கர நமச்சிவாயர் உரை முதன்முறை இவர்களது பதிப்பிலேயே இடம்பெற்றது. இந்த மொழிபெயர்ப்புக் குறித்து பவரின் "Introduction To The Nunnool"  என்ற புத்தகமும், க.ப. அறவாணனின் எழுநூறு ஆண்டுகளில் நன்னூல்என்ற புத்தகமும் (244-246) விளக்குகின்றன. நன்னூல் ஆங்கில மொழிபெயர்ப்பின் முன்னுரையின் ஒரு பகுதி ஜான்மர்டாக் நூல்விவர அட்டவணையில் இடம்பெற்றுள்ளது.11 மேலும் இந்த மொழிபெயர்ப்பு பதிப்பு குறித்தும் அந்த நூல்விவர அட்டவணை விளக்கம் தருகிறது.12 இவற்றோடு தனது தொல்காப்பிய நன்னூல் பதிப்பில் தாம் மேற்கொள்ள வேண்டிய பணிகளாக சாமுவேல்பிள்ளை ஒரு திட்ட வரையறையை அளித்துள்ளார்13 இது குறித்து,
பழைய முறைகளிலும் புதிய முறைகளிலும் உள்ள நற்பண்புகளை ஒன்றுசேர்த்து இலக்கண இலக்கியப்பணி செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் கிரந்த மந்தணகூடம்’’ ((Tamil Museum and Review of oriental Philology)  ) என ஒன்று நிறுவி, தான் வெளியிட விருப்பனவற்றை, பன்னிரண்டு வகையாகப் பிரித்து வேலை செய்யத் தொடங்கினார். தான் நன்கு தெளிந்த துறைகளிலே அமைந்த நூல்களையே வெளியிடப் போவதாகக் கூறினார். அவருடைய பன்னிரண்டு பிரிவுகளில் ஒப்பியல் மொழிநூற்பகுதியும் ஒன்று. இருக்வேதத்தை தமிழில் மொழிபெயர்த்தலும் ஒன்றாக இருந்தது... இந்த ஆசிரியர் சாமுவேல்பிள்ளையுடைய திட்டங்களை, இங்கு எழுதுவதென்றால், அது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையாகப் பெருகிவிடுமாகையால், சுருக்கமாகக் கூட எழுதவில்லை.14
என்று நீ. கந்தசாமிப்பிள்ளை குறிப்பிடுகிறார். ஆனால் சாமுவேல்பிள்ளை வகுத்தளித்த திட்டங்கள் நிறைவேறினவா என்று பார்த்தால் இல்லையென்றே கூறத் தோன்றுகிறது. இவற்றிலிருந்து சாமுவேல்பிள்ளை மொழிபெயர்ப்பு, பதிப்பு, ஒப்பீடு, இதழாசிரியர், என்ற பல்முனைப்பட்ட தளங்களிலும் அன்றைய காலத்தில் வேலை செய்துள்ளார் என்பதை அறியமுடிகிறது. மேலும் அவர் மிக வலுவான கல்விப் பின்புலத்தில் உருவானவர் என்றும், பலமொழிகள் கற்றவர் என்றும் அவருடைய பணிகள் இனங்காட்டுகின்றன.
சாமுவேல்பிள்ளையோடு பலநிலைகளில் உடன் இருந்தவராக வால்ற்றர் ஜாயீஸ் விளங்குகிறார். இவர்கள் இருவரும் இணைந்தேதான் பணிகள் பலவற்றை மேற்கொண்டிருந்தனர் என்பதை அவர்களின் நூல்களே தெரிவிக்கின்றன. வால்ற்றர் ஜாயீஸ் என்பவர் பிரிஸிடென்ஸி கல்லூரியில் "Vernacular literature" துறையில் பேராசிரியராகப் பணியாற்றி யவர் என்பதை அவரின் "First Reader Tamil" என்னும் நூல் புலப்படுத்து கிறது.15 இதுதவிர "Second Reader Tamil"  என்ற நூலையும் ஜாயீஸ் வெளியிட்டுள்ளார். இவ்விரண்டு புத்தகங்களும் மாணவர்களின் பாடத்திட்டத்திற்காக எழுதப்பட்டவையே.
தொல்காப்பிய - நன்னூல்’’ வெளியிடப்பட்ட அதே அச்சகத்தில் இருந்து வேறுபல நூல்களும் அக்காலத்தில் வெளிவந்துள்ளன. அந்த அச்சகத்தின் பெயர் "Christian Knowledge Society Press - Vepery" (கிறிஸ்து மதக்கியான விளக்கச் சங்கத்தார் அச்சுக்கூடம்). இப்பதிப்பகத்தில் இருந்து எனக்குக் கிடைத்த தரவுகளின்படி பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளிவந்துள்ளன.16 இதில் நன்னூல் ஆங்கில மொழிபெயர்ப்பும் அடங்கும். இந்த அச்சகத்தில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் பலவும் பாடத்திட்ட நோக்கில் உருவாக்கப்பட்டவையே என்பதை அப்புத்தகங்களின் தலைப்பில் இருந்தே அறிய முடிகிறது. சான்றுக்காக, பவர் அவர்கள் 1868ஆம் ஆண்டு பதிப்பித்த சீவகசிந்தாமணியின் - நாமகளிலம்பகமும்’’, "Introduction to the Nannul"   என்ற புத்தகமும் இங்கிருந்தே வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறாகத் தொல்காப்பிய - நன்னூல்பதிப்பை வெளியிட்டவர்கள் குறித்தும் அந்நூல் வெளிவந்த அச்சகம் குறித்தும் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் தரவுகள் மூலம் அறியமுடிகின்றது.
பதிப்பு உருவாக்கப் பின்புலம்
சாமுவேல்பிள்ளையின் தொல்காப்பிய - நன்னூல் பதிப்பு உருவாக்கத்தை அன்றைய காலச்சூழலோடு பொருத்திப் பார்க்கும் போதுதான் அதன் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ள முடியும். பதிப்பின் தமிழ் முகப்புப்பக்கம் பின்வருமாறு அமைகிறது.
தொல்காப்பிய - நன்னூல்;’’ இதனுள் தொல்காப்பியமும் நன்னூலும், தம்முள்ளொற்றுமை வேற்றுமைகள் விளங்க, ஒருபான்மை உதாரணசகிதமாய்ச் சூத்திரசம்பந்தத்துடனே அச்சிடப்பட்டிருக்கின்றன: இந்நூல் ஐந்திர பாணிநீயம் என்றும் சமரசபாஷிய சித்தாந்தம் என்றும் இனிப்பெயர் பெறும் பெற்றிக்கேற்ப உத்தேசித்து, வடமொழிவழக்கும் தமிழ்மொழிவழக்கும் ஐங்கிலியவழக்கும் கொண்டிருக்கின்ற சம்பந்தா சம்பந்தங்களைக் காட்டிப் பூரணவிருத்தியா யெழுதப் புகுந்திருக்குமுரை நூலுக்கு, முதற்பிரயத்தனம். இப்பதிப்பு இ.சாமுவேல் பிள்ளையினால் வால்ற்றர் ஜாயீஸ் துரையவர்களுதவியைக் கொண்டு நிறைவேறியது.

நூற்பயன் : இத்தேசத்தாரிடத்தில் ஐங்கிலியதுரைத்தனத்தார் கல்வி விருத்திபண்ணி வருமுயற்சியினால், இனித்தமிழ்நாட்டின் நன்மைக்கென்று புதுநூலியற்றுவோர்க்குப் பாஷைநடைகளின் பேதா பேதக்கியானத்திற்கு வேண்டிய தெளிவு. இஃது 1858ஆம் வருடம் (ஆண்டு தமிழ் எண்களில் உள்ளது) சென்னை மாநகரம், கிறிஸ்துமதக்கியான விளக்கச்சங்கத்தார் அச்சுக்கூடத்தில் கானர் துரையவர்களால் பதிப்பிக்கப்பட்டது.
சாமுவேல்பிள்ளை பதிப்பின் முகப்புப்பக்கம் அளிக்கும் இந்த நீண்ட விவரணை அன்றைய காலக் கல்விச் சூழலையும் அதற்கேற்ப நூல்கள் உருவாக்கப்படும் முறைமையினையும் தெளிவிக்கின்றது. கி.பி. 1812ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சென்னைக் கல்விச்சங்கம்பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல்லாகத் திகழ்ந்தது. அச்சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்சரித்திரத்தில் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் குறிப்பிடுவன:
அக்காலத்திற் சென்னையில் துரைத்தனத்தார் கல்விச்சங்க மொன்றை அமைத்துப் பல ஊர்களிலிருந்த சிறந்த தமிழ் வித்துவான்களை வருவித்துக்கூட்டி, அவர்கள் வாயிலாக மாணாக்கர்களுக்குப் பாடஞ்சொல்லுதல், பிரசங்கம் புரிவித்தல், பழைய தமிழ்நூல்களை ஆராய்ச்சி செய்து பதிப்பித்தல், செய்யுள் வடிவமான நூல்களை வசனமாக எழுதுவித்தல், பாடசாலைகளுக்கு உபயோகமாகும்படி வசன நடையில் இலக்கணங்களையும் பாடங்களையும் இயற்றுவித்தல், வடமொழி முதலிய வேறுமொழிகளிலுள்ள நூல்களைத் தமிழில் மொழி பெயர்ப்பித்தல்”17
இந்தக் குறிப்பில் இடம்பெற்றுள்ள பல்வேறு திட்ட நோக்குகளின் அடிப்படையில் அக்காலக் கல்விமுறை வளர்த்தெடுக்கப்பட்டது. இச்சங்கத்தின்வழி தமிழ்ச்சூழலில் ஏற்பட்ட மாற்றம் குறித்தும் அதில் செயல்படுத்தப்பட்ட நடைமுறை குறித்தும் தாமஸ் டிரவுட்மனின் - திராவிடச் சான்று நூல் விரிவாக விளக்குகிறது. சென்னைக் கல்விச் சங்கத்தின் சிந்தனைப்பள்ளியில் உருவானவர்கள் பலரும் அன்றைய சூழலில் சிரத்தையான செயல்பாடுகளை முன்னெடுத்தவர்களாகவே அறியப்படுகின்றனர். 1854ஆம் ஆண்டு சென்னைக் கல்விச் சங்கம் மூடப்பட்ட காலத்திற்குள் தமிழ்க்கல்வியின் பரவலாக்கம், நூல்களின் பெருக்கம் பலமடங்கு உயர்ந்திருந்தது.

இதே காலகட்டத்தில் தான் அதாவது 1856ஆம் ஆண்டு கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலும் வெளியிடப்பட்டது. கால்டுவெல் எழுதிய இந்த நூல் அன்று தொடங்கி இன்றுவரை எல்லோராலும் அறியப்பட்ட ஒரு நூலாகவே இருக்கிறது. இவரைத் தொடர்ந்து ஜி.யூ.போப் அவர்கள் உருவாக்கிய இலக்கண நூல்’’ (1857) அன்று பரவலாகப் பேசப்பட்டுள்ளது. முதற்பகுதியில் இலக்கண வினாவிடையும், இரண்டாம் பகுதியில் நன்னூல், யாப்பருங்கலம் ஆகியனவும் இடம்பெற்றிருந்தன. இப்பதிப்பு தமிழை எளிய முறையில் கற்கவிரும்பும் மாணவர்களுக்காக, உருவாக்கப்பட்ட பாடநூலாகவே அமைந்து காணப்படுகின்றது.
ஜி.யூ.போப் அவர்களின் நூலைத் தொடர்ந்தே 1858ஆம் ஆண்டு சாமுவேல்பிள்ளையின் இப்பதிப்பு வெளிவருகிறது. சாமுவேல் பிள்ளை பதிப்புக்கு முன்னர் வெளிவந்த கால்டுவெல் ஒப்பிலக்கணம்’, ஜி.யூ.போப் உள்ளிட்ட அறிஞர்களின் ஒப்பீடு மற்றும் பாடத்திட்ட நூல் உருவாக்க முயற்சி ஆகியவையே இவரின் இத்தகைய ஒப்பீட்டுப் பதிப்பு வடிவமைப்பிற்கும், எளிமைப்படுத்தப்பட்ட வடிவ உருவாக்கத்திற்கும் முன்னோடியாய் இருந்திருக்கலாம் என்று அறியமுடிகிறது. இதனை,
தரங்கம்பாடியிலிருந்த ஜர்மானிய அறிஞர்களுடனும் சென்னையிலிருந்த ஆங்கில அறிஞர்களுடனும் பழகி, மேல்நாட்டு மொழிநூல் முறைகளை நன்கு தெரிந்திருந்தார். வீரமாமுனிவர், இரேனியூஸ், கால்டுவெல் முதலியோர்களுடைய இலக்கண ஆராய்ச்சிகளில் கண்ட சில கருத்துக்களும் முறைகளும் இவருக்கு புதிய முறையில் ஊக்கம் அளித்தன.18
என்று நீ. கந்தசாமிப்பிள்ளை கூறுவதிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. தொல்காப்பிய - நன்னூல் மேற்சொன்ன தன்மைகளிலிருந்து மேலும் ஒருபடி சென்று, அக்காலத்தில் புதிதுபுதிதாக நூல்களை இயற்று வார்களுக்குப் பயன்படும் ஒரு கருவிநூலாக விளங்கவேண்டும் என்ற அவரது விருப்பத்தை  நூலின் முகப்புப்பக்கம் அறிவிக்கிறது.
நூற்பயன்: இத்தேசத்தாரிடத்தில் ஐங்கிலிய துரைத்தனத்தார் கல்விவிருத்தி பண்ணி வருமுயற்சியினால், இனித் தமிழ்நாட்டின் நன்மைக்கென்று புது நூலியற்றுவோர்க்குப் பாஷைநடைகளின் பேதாபேதக் கியானத்திற்கு வேண்டிய தெளிவு.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக சாமுவேல்பிள்ளையின் தொல்காப்பிய - நன்னூல்பதிப்பு அதைப் பயன்படுத்துவோர்க்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மை அளிக்கக்கூடிய பதிப்பாகவே காணப்படுகிறது.
மூலப்பதிப்பு - முழுமைப்பதிப்பு - ஒப்பீட்டுப்பதிப்பு :
தமிழ் இலக்கணப் பதிப்பு வரலாற்றின் தொடக்க காலங்களில் வெளிவந்த பதிப்புக்களில் சாமுவேல்பிள்ளையின் தொல்காப்பிய - நன்னூல் பதிப்பே பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாகத் திகழ்கிறது. இலக்கண நூல் பதிப்பு என்பதையும் கடந்து பயன்பாட்டுப் பதிப்பாகவும்  உள்ளது.
தொல்காப்பியத்திற்கு எழுந்துள்ள பல்வேறு பதிப்புகளிலும் குறிப்பிடத்தக்க பதிப்பாக விளங்குவது 1858இல் எஸ். சாமுவேல்பிள்ளை அவர்கள் வெளியிட்ட தொல்காப்பிய - நன்னூல் பதிப்பாகும். இலக்கண ஒப்பு நோக்கு நிலையிலும், மூலபாடப் பதிப்பு நிலையிலும் காலத்தால் முதன்மைபெற்ற சிறப்பு இப்பதிப்புக்கு உண்டு.19
என்றும்,
தொல்காப்பியத்தின் சொல்லதிகாரமும் பொருளதிகாரமும் முதன் முதலாக இந்த நூலில் தான் அச்சிடப்பெற்றிருந்தது. சூத்திரங்களின் அடைவும், பொருட் சுருக்கமும், மிகத் தெளிவாகக் காட்டப்பெற்றிருந்தன. அறிவுடைய மாணவன், உரையின் துணையின்றி, தொல்காப்பியத்தையும் நன்னூலையும் ஒருசேரத் தெரிந்து கொள்ளுவதற்குப் பெரிதும் துணை செய்தது.”20
என்றும்  இவரது பதிப்புக் குறித்துக் கருத்துரைத்துள்ளனர். இப்பதிப்பின் அமைப்பு பின்வரு நிலைகளில் அமைந்து காணப்படுகிறது. நூலை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஆங்கிலத்தில் Book I, Book II, Book III  என வகைப்படுத்துகிறார். இதில் முதல் பகுதி தான் பலநிலைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆங்கில முகப்புப் பக்கம், கடவுள் வணக்கம் - அவையடக்கம், தமிழ் முகப்புப் பக்கம், செயப்படுபொருள், முன்னுரை, பொருளடக்கம், பாயிரம் (பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம்), சமரசபாஷிய சித்தாந்தம், சிறப்புப் பாயிரம், சாத்துக்கவி, ‘Just Published No.I, Prospectus என இவை 24 பக்கங்களும் தொல்காப்பிய - நன்னூல்எழுத்ததிகாரம், ‘முடிபியல் An Appendix of Telugoo Vowel - Consonants என இவை 128 பக்கங்களும் உள்ளன. அடுத்து இரண்டாம் பகுதி தொல்காப்பிய - நன்னூல்’ - சொல்லதிகாரம் (32 பக்கங்கள்), மூன்றாம் பகுதி, ‘தொல்காப்பிய - நன்னூல் பொருளதிகாரம்’ (32-69), Memoranda (2) என அமைகின்றது. இப்பதிப்பின் மொத்த பக்கங்கள் 222 ஆகும்.

அ) தொல்காப்பிய - நன்னூல் - எழுத்ததிகாரம் :
இப்பதிப்பின் முதல் பகுதியான எழுத்ததிகாரத்தில் பல்வேறு முறைமைகள் வகுத்தளிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் சாமுவேல்பிள்ளை எடுத்துள்ள சிரத்தை இந்தக் காலத்திலும் போற்றும்படியாகவே உள்ளது. எழுத்ததிகாரப் பகுதி தொடங்குவதற்கு முன்பு முன்னுரையில் பனம்பாரனார் பாயிரம், தமிழ் மொழியின் வரலாறு (இவ்வரலாறு பழைய புராண அடிப்படையில் எழுதப்பட்டதாகவே உள்ளது), தொல்காப்பிய - நன்னூல் இவற்றிற்கான ஒப்பீட்டுப் பொது இயல்பு, சமண முனிவரின் பாயிரம் (நன்னூல் சிறப்புப்பாயிரம்) ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சாமுவேல் பிள்ளையின் பாயிரம் ஐந்திரம், பாணினீயம், தொல்காப்பியம், நன்னூல் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள உறவை முன்னிறுத்துகிறது. நச்சினார்க்கினியரின் எழுத்ததிகாரப் பாயிரப்பகுதியில் இடம்பெற்ற அகத்தியன் - தொல்காப்பியன் கதை பல்வேறு மாற்றங்களோடும், வேறு பல புனைவுகளோடும் இவரது பதிப்பில் இடம்பெறுகிறது. இவை தவிர தமிழ்மொழியின் உருவாக்கம் பற்றிய செய்திகளும் இடம்பெற்றுள்ளன. இப்பாயிரத்தில் இடம்பெற்ற தகவல்களை இன்றைய நிலையில் நாம் அறிவியல் பூர்வமாக அணுகி அவற்றின் உண்மைத்தன்மையைத் தெரிந்துகொண்டாலும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொல்காப்பியம்எனும் பனுவல் பற்றிய புறவரலாறு எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டது என்பதை அறிவதற்கு இதுவே தொடக்கநிலையில் சான்றாக அமைகின்றது.
பாயிரத்தைத் தொடர்ந்து இரண்டு பக்கங்களில் ஒரு நீண்ட பொருளடக்கம் இடம்பெற்றுள்ளது. நூலில் இடம்பெறக்கூடிய அத்தனைச் செய்திகளையும் இப்பொருளடக்கம் தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து வரிசைப்படுத்தியுள்ளது. இதற்கு அடுத்து நன்னூலின் பொதுப்பாயிரம் மற்றும் சிறப்புப்பாயிரம் அளிக்கப்பட்டுள்ளன. இப்பாயிரங்கள் நன்னூல் பாயிரங்கள் என்று தலைப்பிடப்படாமல் நூல் முழுவதற்கும் பொதுவானதாகவே தரப்பட்டுள்ளது.
தொல்காப்பிய - நன்னூல் என்ற முதற்பகுதியில் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம் முதலிலும் நன்னூல் எழுத்ததிகாரம் இரண்டாவதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. தொல்காப்பிய எழுத்ததிகார இயல் தலைப்பு தொடங்கி, சில இயல்களின் சுருக்கங்கள், மற்றும் சில உதாரணங்கள், தேவையான சில விளக்கங்கள் எனப் பலவும் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளன. சான்றாக எழுத்ததிகாரம் -Ortho Graphy", “நூன் மரபு - of Letters in General and The Elementary Principles of Languageமொழிமரபு - of Letters as Constituent Parts of Words,  பிறப்பியல் - Articulation of Letters" எனத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளது. தொல்காப்பிய எழுத்ததிகார நூற்பாக்களுக்கு இணையான நன்னூல் சூத்திர எண்களை ஒப்பிட்டுக் காட்டுதல், பழைய உரைகளிலிருந்தும் சமகால வழக்கிலிருந்தும் நூற்பாக்களுக்கு ஏற்ப உதாரணங்களைத் தருதல், சில பொருந்தா இடங்களைச் சுட்டிக்காட்டுதல், சில குறிகளைப் (symbols) பயன்படுத்தி அக்குறிகள் பயன்படுவதற்கான காரணங்களைத் தெரிவித்தல், அட்டவணை களின் மூலம் செய்திகளை விளக்குதல் என முதற்பகுதி முழுவதும் தகவல்களால் நிறைந்திருப்பதோடு பல்வேறு முறைமைகளாலும் விளக்கப்பட்டுள்ளது.
இம்முதற்பகுதியில் தொல்காப்பிய எழுத்ததிகாரம் முடியும் இடத்தில் தகவல்கள் பல அடங்கிய அறிக்கையொன்று (Memoranda) தரப்பட்டுள்ளது. அவற்றோடு எழுத்ததிகாரத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு இயலின் சூத்திர எண்ணிக்கையும் அவற்றின் மொத்த எண்ணிக்கையும் தரப்பட்டுள்ளன. மேலும், ‘An Abstract of The Whole Orthography’ என்ற பகுதி பன்னிரண்டு தலைப்புகளில்  எழுத்ததிகாரத்தின் சுருக்கத்தை நிரல்படுத்துகிறது. இதை யடுத்து நன்னூல் எழுத்ததிகாரத்தில் பதவியல் பகுதி பதிப்பாசிரியரால் மிகுதியான விளக்கம் பெற்ற பகுதியாக உள்ளது. இதில் "Synthesis and Analysis of Divisibles", "Sanscrit Letters and Words", "The Same in Telugoo Characters" என்ற பகுதிகள் வடமொழி, தெலுங்கு எழுத்துக்களின் வடிவங்களைப் பதிவுசெய்கிறது. இவற்றோடு இரண்டு பின்னிணைப்புகளும் தரப்பட்டுள்ளன. இதில் முதல் இணைப்பு பதவியலில் 14, 15, 16, 17, 18 ஆகிய நூற்பாக்களுக்கான விளக்கத்தையும் இணைப்பு இரண்டு உயிர், மெய் எழுத்துக்கள் குறித்தும், உயிர்மெய்யெழுத்துக்களுக்கான  அட்டவணை யொன்றையும் விளக்கி யமைகிறது. இதேபோல் மற்ற பிற இயல்களும் தேவையான இடங்களில் பதிப்பாசிரியரால் விளக்கம்பெற்று எளிமைப் படுத்தப்பட்டுள்ளன
தொல்காப்பிய - நன்னூல் - எழுத்ததிகாரப்பகுதியின் நிறைவில் முடிபியல் (SYNOPSIS) என்ற தலைப்பில் 35 பக்கங்களில் அடைவொன்று இடம்பெற்றுள்ளது. இவ்வடைவில் இதுவரை பேசப்பட்ட அனைத்து நூற்பாக்களின் செய்திகளும் எளிமையான உரைநடை வடிவில் தொகுக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளில் அவை வகைதொகைப் படுத்தப்பட்டு படிப்பவர் எளிதில் புரிந்துகொள்ளும்படியாகத் தரப்பட்டுள்ளன. இம்முடிபியலில், இலக்கணக்கொத்து, இலக்கண விளக்கம் ஆகியவற்றின் நூற்பாச் செய்திகளும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன. வடமொழிச் சந்திகள் பற்றிய விளக்கங்களும் அவற்றிற்கான எடுத்துக்காட்டுகளும் இடம்பெற் றுள்ளன.
அடுத்து இம்முடிபியலின் இறுதிப்பகுதியில் "Standard Authors and Commentators" என்ற தலைப்பில் சில நூலாசிரியர் மற்றும் உரையாசிரியர் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இதில் சுப்பிரமணியன் (முருகன்), அகஸ்தியன், அகஸ்தியரின் பன்னிரு மாணவர் (பன்னிருபடலம் உருவாக்கியவர்கள்), தொல்காப்பியன், இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், பவணந்தி, சமணமுனிவர், சங்கரநமச்சிவாயர், சிவஞானதேசிகர், தொல்காப்பியச் சூத்திரவிருத்தி, வைத்தியநாதர், இலக்கண விளக்கச் சூறாவளி, சுவாமிநாத தேசிகர், சுப்பிரமணிய தீட்சதர், வீரமாமுனிவர், இராமானுசகவிராயர், சரவணப் பெருமாளையர், தாண்டவராய முதலியார், திருவேங்கடாசல முதலியார், மகாலிங்கையர், அப்பாசியையர், இரேனியூசையர், பாவரீசையர், எனத் தமிழ் அறிவுச்சூழலின் ஒரு நீண்ட பாரம்பரியத்தை, அதில் இடம்பெற்ற புலமைப் பாரம் பரியத்தை வரிசைப்படுத்தித் தந்ததோடு அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பதிப்பாசிரியர் விளக்கமளித்துள்ளார்.
இக்குறிப்புப் பகுதியில் தம் சமகாலத்தில் வாழ்ந்த சில அறிஞர்களின் பெயர்களையும் சுட்டியிருப்பது பதிப்பாசிரியரின் நேர்மையைக் காட்டுகிறது. இத்தகைய வரலாற்றுக் குறிப்புப் பகுதியில் நச்சினார்க்கினியர் தொடக்கத்தில் புத்த மதத்தில் இருந்து பின்பு சைவரானார் என்பதும், பவணந்தியார் பௌத்தர் என்பதுவும், உரையியற்றிய சமணரைப் பௌத்தர் என்பதுவும், வைத்தியநாதருக்கும் சுவாமிநாத தேசிகருக்கும் இடையே கடும் கருத்துவேறுபாடு இருந்தது என்பதுவும், இரேனியூசையர் இறந்த போது, இடுகாட்டிலேயே, நெல்லைத் திருப்பாற் கடல்நாதன் கவிராயர் பாடிய நான்கு கையறுநிலைப் பாடல்களைப் போற்றித் தந்திருப்பதும் சிறப்பான குறிப்புகளாம்.’’21 இதற்கடுத்து தெலுங்கின் உயிர், மெய்யெழுத்துக்கள் இணைப்பாகத் தரப்பட்டுள்ளன.
தொல்காப்பிய - நன்னூல் - எழுத்ததிகாரம் பதிப்பு நிலையிலும், ஒப்பீட்டுநிலையிலும், பயன்பாட்டு நிலையிலும், வரலாற்றுநிலையிலும் ஒரு பெரும் ஆவணமாகத் திகழ்கின்றது என்றே சொல்லமுடியும்.
ஆ) தொல்காப்பிய - நன்னூல் - சொல்லதிகாரம் :
பதிப்பின் இரண்டாம் பகுதியில் தொல்காப்பியத்தின் சொல்லதிகாரப் பகுதியும் நன்னூல் சொல்லதிகாரப் பகுதியும் ஒப்பிடப்பட்டுக் காட்டப்பட்டுள்ளன. தொல்காப்பிய - நன்னூல் எழுத்ததிகார முதல்பகுதி வடிவமைக்கப்பட்ட அளவு இச்சொல்லதிகாரப் பகுதி அமையவில்லை. முதல் பகுதியில் இரண்டு நூல்களின் எழுத்ததிகாரத்திற்கும் உதாரணங்கள் காட்டப்பட்டுள்ளன. ஆனால் சொல்லதிகாரத்தில் தொல்காப்பியத்திற்கு மட்டும் காட்டப்பட்டு நன்னூலுக்கு விடப்பட்டுள்ளது.
சொல்லதிகாரப் பகுதி இவ்வாறு அமைக்கப்பட்டதற்குப் பதிப்பாசிரியர் சாமுவேல்பிள்ளை தெரிவிக்கும் காரணம் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. 
தொல். சொல்லதிகாரம் மிகக் குறைந்த குறிப்புகளோடுதான் வெளியிடப் பட்டுள்ளது. தற்போதைக்கு அச்சில் வாராத மூலப்பகுதியையாவது முதலில் அறிந்து கொள்ளலாம், என்பதுவே காரணம். வருங்காலத்தில், சொல்லதிகாரப் பகுதியும், எழுத்ததிகாரம் போல, நன்னூலுடன் ஒப்பிடப்பட்டு, ஆங்கில மொழிபெயர்ப்பு, எடுத்துக்காட்டு, குறிப்பு இவற்றோடு விரைவில் வெளியிடப்பெறும்’’22
எழுத்ததிகாரம் போலவே சொல்லதிகாரம் வெளியிடப்படும் என்று சாமுவேல் பிள்ளை கூறியிருந்த போதிலும் இன்றுவரை அப்படியானதொரு பதிப்பு வெளிவந்தாக அறியமுடியவில்லை.
இ) பொருளதிகாரம் :
தொல்காப்பிய எழுத்ததிகாரத்தை நன்னூல் எழுத்ததிகாரத்தோடும், தொல்காப்பியச் சொல்லதிகாரத்தை நன்னூல் சொல்லதிகாரத்தோடும் ஒப்பிட்டுப் பதிப்பித்த சாமுவேல்பிள்ளை பொருளதிகாரத்தை விட்டுவிடாமல் அவற்றையும் இப்பதிப்பிலேயே இணைத்துப் பதிப்பித் துள்ளார். ஆனால் பிற்காலத்தில் தொல்காப்பிய - நன்னூலை ஒப்பிட்டுப் பதிப்பித்த வெள்ளைவாரணனார், ரா. சீனிவாசன் ஆகியோர் எழுத்து, சொல் ஆகியவற்றை மட்டுமே வெளியிட்டனர். சாமுவேல் பிள்ளை பொருளதிகாரத்தை இப்பதிப்பில் இணைத்துப் பதிப்பித்துள்ளதற்கான காரணம் என்னவெனில் அவர்காலம் வரை (1858) தொல்காப்பியம் பொருளதிகாரம் அச்சில் பதிப்பிக்கப்படாமல் இருந்ததே ஆகும். தமிழர்களின் தொல்வாழ்க்கை முறையை இலக்கண வடிவில் வகுத்துத்தரும் இப்பொருளதிகாரப் பகுதியை முதன்முதல் அச்சிலேற்றிய சாமுவேல் பிள்ளையின் பணி என்றென்றும் நினைத்தற்குரியது. இப்பொருளதிகாரப் பகுதி பதிப்பிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து,
“Book III, The last grand division of the Tholcapyam, forming pp.32 to 69, the end of this Volume, is also published in the original text only, for benefit of such students as might wish to puruse it.”23
என்று பதிப்பாசிரியரே குறிப்பிடுகிறார்.பொருளதிகாரத்தில் இடம்பெற்ற அகத்திணை, புறத்திணை இயல்களை நம்பியகப்பொருளோடும், புறப்பொருள் வெண்பாமாலையோடும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். இந்த ஒப்பீட்டிற்குத் தாண்டவராய முதலியார் 1835இல் பதிப்பித்த இலக்கணப் பஞ்சகங்களில் நன்னூல் மூலமும் அகப்பொருள் மூலமும் புறப்பொருள் இலக்கியத்தோடு வெண்பாமாலை மூலமும்’’ என்ற பதிப்பைப் பயன்படுத்தியுள்ளார். இப்பதிப்பு குறித்து தவறாகப் புரிந்தகொண்ட க.ப. அறவாணன் அவர்கள் தாண்டவராய முதலியார் 1835ஆம் ஆண்டே தொல்காப்பியம் அகத்திணையியல், புறத்திணையியலை வெளியிட்டுவிட்டதாகத் தனது தொல்காப்பியக் களஞ்சியத்திலும்24 எழுநூறு ஆண்டுகளில் நன்னூலிலும்25 குறிப்பிடுகிறார். இத்தகைய ஒரு பதிப்பு இதுவரை வெளிவரவில்லை என்பதையும், சாமுவேல்பிள்ளைதான் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை முதன்முதலில் பதிப்பித்தவர் என்பதையும்  பலரும் நிறுவியுள்ளனர்.
இந்தப் பகுதியின் நிறைவாக MEMORANDA BOOKS II, AND III என்பது இடம்பெற்றுள்ளது. இதில் சொல்லதிகாரம், பொருளதிகாரம் பதிப்பு செய்யப்பட்ட முறைமை பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களுக்கான ஆங்கில விளக்கங்கள்,26 தொல்காப்பியத்திற்கு எழுதப்பட்ட உரைகளின் பயன்பாடு, இறையனாரகப்பொருள், நம்பியகப்பொருள், ஐயனாரிதனார் வெண்பாமாலை, புறப்பொருள் பன்னிருபடலம், தண்டியலங்காரம், மாறனலங்காரம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை ஆகியவை பற்றிய குறிப்புகள், சொல்லப்பட்டுள்ளன27. “இவற்றோடு ‘The Editions of the Nunnool to be had at Present’என்ற தலைப்பில் அவருக்கு முன்பு வெளிவந்த நன்னூல் பதிப்புகளைப் பதிப்பித்தவர்கள் பற்றிய செய்திகளை விவரிக்கின்றார்.’’28
ஈ) பதிப்புக் குறித்த பொதுச்செய்திகள் :
 1 சாமுவேல்பிள்ளை முதன்முதலாக முழுமையாக இப்பதிப்பைப் பதிப்பிக்கும்போது இதில் இடம்பெற்றுள்ள தொல்காப்பிய நூற்பா எண்ணிக்கை மொத்தம் 1583. தொல்காப்பிய நூற்பா எண்ணிக்கையை உரையாசிரியர்களின் நோக்கிலேயே இன்று வகைப்படுத்திப் புரிந்து கொள்கிறோம். ஆனால் சாமுவேல்பிள்ளை முறையே எழுத்ததிகாரம் - 483, சொல்லதிகாரம் - 433, பொருளதிகாரம் - 667 என நூற்பாக்களை முறைப்படுத்தியுள்ளார்.
 2  இளம்பூரணர் உரைப்படி மொத்த நூற்பாத்தொகை 1595, நச்சினார்க் கினியர், பேராசிரியர் இருவரின் ஒத்த கணக்குப்படி 1611 எனவும் எண்ணிக்கையை அறியமுடிகிறது. இவர்களின் பதிப்பில் இடம்பெற்றுள்ள நூற்பாக்கள்தான் சாமுவேல்பிள்ளை பதிப்பிலும் உள்ளன. சாமுவேல் பிள்ளையோ தொல்காப்பியச் சொல்லதிகாரத்திலும், பொருளதிகாரத்திலும் பல நூற்பாக்களை முன் நூற்பாக்களோடு சேர்த்தே பதிப்பித்துள்ளார். குறிப்பாகச் சொல்லதிகார உரியியலில் 99 நூற்பாக்களை 72 ஆக ஒன்றுடன் இரண்டு மூன்று நூற்பாக்களையெல்லாம் சேர்த்துப் பதிப்பித்துள்ளார்.
3.       நூற்பா எண்ணிக்கை தரப்பட்ட முறையை நோக்கும்போது சாமுவேல் பிள்ளையிடம் பல்வேறு வகையான உரைச்சுவடிகள் இருந்திருக்கும், அதைக்கொண்டே அவர் இத்தகையதொரு பதிப்பினை உருவாக்கியுள்ளார் என்பதை ஊகித்தறிய முடிகிறது. ஆனால் சுவடிகள் குறித்த விவரங்களைச் சாமுவேல்பிள்ளை தமது பதிப்பில் எங்கும் பதிவு செய்யவில்லை.
4.  நூற்பாக்கள் அடி அமைப்பில் வகுக்கப்படாமல் அப்படியே பத்தி அமைப்பிலேயே அச்சிடப்பட்டுள்ளன. ஒரு அடிக்கு இருசீர் என சந்திபிரிக்கப்படாமல் உள்ளதோடு ஒரு அடி முடிந்து அடுத்த அடி தொடங்குவதைப் பகுத்துக் காட்ட காற்புள்ளி இடப்பட்டுள்ளது.
5.  பாடவேறுபாடுகள் தருவது குறித்த சிந்தனை மேலெழும்பிக் கொண்டிருந்த காலகட்டத்தில் சாமுவேல்பிள்ளையின் இப்பதிப்பில் பாடவேறு தந்திருப்பது போற்றுதற்குரியது. பாடவேறுபாடுகளை அடியில் தராமல் நூற்பாவின் இடையிலும், இறுதியிலும் பதிப்பாசிரியர் தந்துள்ளார்.
தொல்காப்பிய - நன்னூல் எழுத்ததிகாரத்திலும்,சொல்லதிகாரத்திலும் ஆங்காங்கே சில பாடவேறுபாடுகள் இடம்பெற்றிருப்பினும் பொருளதிகாரத்தில் தான் எண்ணிலடங்கா பாடவேறுபாடுகள் காட்டப்பட்டுள்ளன.29
6.    இப்பதிப்பில் தொல்காப்பியம் , நன்னூல் தவிர்த்து பிற இலக்கணப் பனுவல்களான இலக்கணக்கொத்து, இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் என இன்னும் பல இலக்கணப் பனுவல்களும் ஆங்காங்கே ஒப்பிடப்பட்டுள்ளன. இலக்கணக்கொத்து (1886), இலக்கண விளக்கம் (1889) முதலிய நூல்கள் அச்சாகாத காலத்தில் அவற்றின் சுவடிகளைப் பயன்படுத்தி அதிலிருந்து பல்வேறு செய்திகள் இப்பதிப்பில் இடம்பெற்றிருப்பது இதன் தனிச்சிறப்பு.
7.  தமிழ்மொழி இடம்பெற்ற அதே அளவில் ஆங்கில மொழியும் இடம்பெற்றுள்ளதோடு, வடமொழி மற்றும் தெலுங்கு மொழி எழுத்துகளும், செய்திகளும் இப்பதிப்பில் உள்ளன.
8.          தாம் வாழ்ந்த காலத்திற்கு முன்னர் வாழ்ந்த அறிஞர் பலரையும் நூல் முழுதும் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுச் செல்வதோடு அவர்கள் செய்த பணிகளையும் நினைவுகூர்ந்து சொல்வது பதிப்பாசிரியரின் நேர்மையைக் காட்டுகிறது.
    இத்தகைய பல சிறப்புக் கூறுகளை உள்ளடக்கிய பதிப்பாகச் சாமுவேல் பிள்ளை பதிப்பு திகழ்கின்றது.
நன்னூலுக்கு முன் தோன்றிய தொல்காப்பியத்தின் அருமை பெருமை யினை நினைந்ததோடன்றி தொல்காப்பியத்துடன் உடன் நன்னூலை ஒப்பிட்டுப் பார்க்கும் ஒப்பியல் உணர்வும் அரும்பியிருத்தல் வேண்டும். இவ்வுணர்வின் முழு வெளிப்பாடே இ. சாமுவேல் பிள்ளை பதிப்பித்த தொல்காப்பிய - நன்னூல் பதிப்பாகும். இரண்டு இலக்கண நூல்களையும் ஒப்பிட்டுப் பார்த்துப் பதிக்கப்பட்ட முதற்பதிப்பு முயற்சியும் இதுவேயாகும். தமிழிலக்கண ஒப்பியலாய்வின் தொடக்கமும், தமிழிலக்கணப் போக்கை வரலாற்றுப் பான்மையின் பார்க்க எடுத்துக்கொண்ட முதன் முயற்சியும் இதுவேயாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியான இலக்கணப் பதிப்புகளில் இஃது ஒரு கருத்துக் களஞ்சியமாகும்.30
என்னும் க.ப. அறவாணனின் கூற்று தொல்காப்பிய - நன்னூல்என்னும் பதிப்பின் சிறப்பை விளக்குவதோடு சாமுவேல்பிள்ளை என்னும் தனிமனிதரின் உழைப்பையும் படம்பிடித்துக் காட்டுகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த இலக்கணப் பதிப்புகளுள் இப்பதிப்பே தலையாயதொரு இடத்தைப் பெறுகின்றது. தொல்காப்பியத்திற்கு வெளிவந்த முதல் மூலப்பதிப்பு - முழுமைப்பதிப்பு - ஒப்பீட்டுப்பதிப்பு என்று  எல்லாநிலையிலும் இப்பதிப்பு  சிறப்புப் பெற்று விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.

சாமுவேல்பிள்ளை பதிப்பும் பிற்கால ஒப்பீட்டுப் பதிப்புகளும்
சாமுவேல்பிள்ளையின் தொல்காப்பிய - நன்னூல்’ (1858) ஒப்பீட்டுப்பதிப்பு வெளிவந்த நூறாண்டுகளுக்குப் பின்னரே அடுத்த தொல்காப்பிய - நன்னூல்ஒப்பீட்டுப் பதிப்பு வெளிவந்தது. இரண்டாவது ஒப்பீட்டுப் பதிப்பை வெளியிட்டவர் வெள்ளைவாரணனார் ஆவார். இவர் 1962ஆம் ஆண்டு தொல்காப்பிய - நன்னூல் எழுத்ததிகாரத்தையும், 1971ஆம் ஆண்டு சொல்லதிகாரத்தையும் ஒப்பிட்டுப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து இலக்கணத்தொகை எழுத்து 1967) சொல் (1971) பகுதிகளை ச.வே. சுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்டார். இவர் தொல்காப்பியம் தொடங்கி பிற்கால இலக்கண நூல்கள் வரை உள்ள நூற்பாக்களை ஒன்றுதிரட்டி ஒப்புமைப்படுத்தி அவற்றின் தரவுகளை ஒருங்குபட கோர்த்துத் தந்துள்ளார். இவரையடுத்து ரா. சீனிவாசன் அவர்கள் தொல்காப்பியமும் - நன்னூலும்என்ற தலைப்பில் 1972 ஆம் ஆண்டு ஒரு ஒப்பீட்டுப்பதிப்பை வெளியிட்டார். இம்மூன்று பதிப்புகளும் தொல்காப்பிய - நன்னூல் ஒப்பீட்டைப் புரிந்துகொள்வதற்கு பெரும் துணையாக இருந்தபோதிலும் இப்பதிப்புகளுக்கு முன்னர் வெளிவந்த சாமுவேல்பிள்ளை பதிப்பு பற்றி இப்பதிப்பாசிரியர்கள் என்னவகையான பதிவுகளை அளிக்கின்றனர் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
சாமுவேல்பிள்ளை பதிப்பை அடியொற்றி 1922இல் வெளிவந்த நன்னூல் பதிப்பில் பவானந்தம் பிள்ளை அவர்கள் நன்னூல் நூற்பாக்களோடு ஒத்த தொல்காப்பிய நூற்பாக்களின் எண்களை நன்னூல் சூத்திர அகராதி என்னும் பகுதியில் கொடுத்துள்ளார். அதோடு தாம் பயன்படுத்திய பதிப்பின் குறிப்பையும் அளிக்கிறார்’. ஆனால் மேற்சொன்ன மூவரோ இவ்வாறு இல்லை என்று அ. தாமோதரன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
இவ்விரு நூல்களுக்குப் பிறகு ஒப்பியல் நோக்கில் வெளிவந்த நூல்கள் எல்லாம் அவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டன என்றாலும் அப்பதிப்புகளைப் பற்றி இந்நூல்களின் ஆசிரியர்கள் யாரும் மறந்தும் ஒரு வார்த்தை எழுதவில்லை.’’31
என்று கூறுகிறார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த  ஒப்பீட்டுப்பதிப்பு தமிழ்ச்சூழலில் மறக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட ஒன்றாகவே இன்று உள்ளது.
நிறைவாக
தொல்காப்பியம் உருவானதன் பின்புலம் குறித்த ஆய்வுகளைப் போலவே தொல்காப்பியப் பதிப்புகளுக்கும் நீண்டதொரு ஆய்வுமரபை முன்னெடுக்கும் சூழல் இன்றைய நிலையில் அவசியமாகிறது. தொல்காப்பியத்தை முதன்முதல் முழுமையாகப் பதிப்பித்த இ. சாமுவேல்பிள்ளை உட்பட பல்வேறு பதிப்பாசிரியர்களின் வரலாறுகள் இன்று மறக்கப்பட்டதொரு சூழலிலேயே உள்ளது. சாமுவேல்பிள்ளை முதன்முதல் தொல்காப்பியத்தை முழுமையாகப் பதிப்பித்து வெளியிட்டிருந்த போதிலும் அவரின் பெயர் தமிழ்ச்சூழலில் ஆழமாகப் பதியவில்லை. தொல்காப்பியத்தை முதலில் பதிப்பித்தவர்கள் என்றால் உரையுடன் பதிப்பித்த மழைவை மகாலிங்கையரையும், சி.வை.தா.வையும் உடனே சொல்லிவிடும் நமக்குச் சாமுவேல்பிள்ளையின் பெயர் நினைவுக்குக் கூட வருவதில்லை.
சாமுவேல்பிள்ளை பதிப்பு வெளிவருவதற்கு முன்பு கால்டுவெல் ஒப்பிலக்கணத்தின் முதல்பதிப்பு 1856இல் வெளியிடப்பட்டது. இதன் இரண்டாம் பதிப்பு 1875ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் கால்டுவெல் தொல்காப்பியம்பற்றிய தரவுகளை அளிக்கின்றார். இரண்டாம் பதிப்பு வெளிவருவதற்கு முன்பாக தொல்காப்பியத்திற்கு மொத்தம் ஐந்து பதிப்புகள் வெளிவந்திருந்தன. இதில் சாமுவேல்பிள்ளை பதிப்பு மட்டுமே முழுமைப்பதிப்பு. கால்டுவெல் தனது இரண்டாம் பதிப்பில், பயன்பட்ட நூல்களாக ஒரு நீண்ட பட்டியலையே அளிக்கின்றார். இப்பட்டியலில் அதுவரை வெளிவந்திருந்த தொல்காப் பியத்தின் பதிப்பு ஏதேனுமொன்று இடம்பெற்றிருக்குமா என்று தேடிப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது. குறிப்பாக முழுமைப்பதிப்பாகவெளிவந்த சாமுவேல்பிள்ளை பதிப்பும் இடம்பெறவில்லை. இதற்கான காரணத்தையும் அறியமுடியவில்லை. ஆனால் சாமுவேல்பிள்ளையோ கால்டுவெல்குறித்து தம்நூலிலே சுட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.
சாமுவேல்பிள்ளைப் பதிப்பிற்குப் பின் தொல்காப்பியத்திற்கு ஏராளமான பதிப்புகள் வெளிவந்துள்ளன. இவற்றில் 1868 தொடங்கி 1950 வரை வெளிவந்த தொல்காப்பியப் பதிப்புரைகளைப் படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிட்டியது. இதில் 1885ஆம் ஆண்டு தொல்காப்பியப் பொருளதிகாரத்தைப் பதிப்பித்த சி.வை.தா. புரசபாக்கம் ஸ்ரீசாமுவேற் பண்டிதரவர்கள் தமது சொந்தக் கையினால் எழுதிவைத்திருந்த பிரதி ஒன்றைத் தாம் பயன்படுத்தியதாகக் குறிப்பிடுகிறார். ஆனால் தமக்கு முன்பு தொல்காப்பியம் முழுவதுமாக அச்சிடப்பட்டிருந்த செய்தியையோ பொருளதிகாரமூலம்அச்சிடப்பட்டிருந்த செய்தியையோ அவர் எங்கும் குறிப்பிடவில்லை. இவரை அடுத்து வந்த பதிப்பாசிரியர்கள் மறந்தும்கூட அவர்பெயரைத் தமது பதிப்புரைகளில் பதிவுசெய்யவில்லை.
ஆனால் 1878ஆம் ஆண்டு 'A TAMIL GRAMMAR' என்ற நூலை இயற்றிய ஜான் லாசரஸ்அவர்கள் தமது நூல் உருவாக்கத்திற்கு சாமுவேல்பிள்ளை’, ‘தொல்காப்பிய-நன்னூல்பதிப்பு பயன்பட்டதாகக் குறிப்பிடுகிறார். இவர் தவிர 20ஆம் நூற்றாண்டில் தொல்காப்பிய அடைவுகளை உருவாக்கிய பலரும் இவரைக் குறிப்பிடுகின்றனர்.
தொல்காப்பியப் பதிப்புரைகளில் சாமுவேல்பிள்ளை பதிப்பு பதிவாகாத தற்கும், அவர் பற்றி முழுமையான வரலாற்றை அறியமுடியாததற்கும் இன்று பல்வேறு காரணங்கள் சொல்லக்கூடும். ஆனால் இவற்றை யெல்லாம் கடந்து சாமுவேல்பிள்ளைஎன்னும் தனிமனிதரின் உழைப்பு அவரை வரலாற்றில் நிலைநிறுத்தும்.

சான்றெண் விளக்கம்
1.         மயிலை சீனி. வேங்கடசாமி, 19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்,     ப. 32.
2.          கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழில் இலக்கிய வரலாறு, பக். 239, 240.
3.         இ. சுந்தரமூர்த்தி, பதிப்பியல் சிந்தனைகள், பக். 35, 36.
4.         பொ. வேல்சாமி, பொற்காலங்களும் இருண்ட காலங்களும், ப. 105.
5.         மயிலை சீனி. வேங்கடசாமி, மு.கு.நூ., ப. 287.
6.         தொல்காப்பிய - நன்னூல், ப. 19. (முதற்பகுதி).
7.     நீ.கந்தசாமிப்பிள்ளை, கால்டுவெலும் அவர் வாழ்ந்த காலமும் (கட்டுரை) , ப. 114.
8.        க.ப. அறவாணன், எழுநூறு ஆண்டுகளில் நன்னூல், ப. 212.
9.         John Murdoch, Classified Catalogue of Tamil Printed Books, P. 224. Mr. S. Samuel Pillay, Munshi, a member of the Lutheran Mission Congregation, Madras, has issuded at intervals a magazine called,, திருச்சபைப் பத்திரிகை. The Title of the Periodical edited by him at present is கற்பகவிருட்சம்.
10.        மயிலை சீனி. வேங்கடசாமி, மு.கு.நூ., ப. 150.
11.        John Murdoch, மு.கு.நூ., ப. 200.
12.    மேலது, ப. 202. . "There are Several editions of the Nannul. A Portion of it was translated with notes by messrs. W. Joyes and S. Pillay. This is now out of Print”.

13.         தொல்காப்பிய - நன்னூல், பக். 23, 24.  (முதற்பகுதி).
14.         நீ. கந்தசாமிப்பிள்ளை, மு.கு., பக். 114, 115.
15.        Walter Joyes, First Reader Tamil, Title page, (Seventh Edition, 1890.)
16.      தமிழிலும் இங்கிலீஷிலும் எழுதிய இங்கிலீஷ் இலக்கணம் (1855), 2) A   Dictionary English and Tamil (1852), 3) பள்ளிக்கூடங்களில் பயிற்றிவிக்கவேண்டிய முதலாம் புத்தகம் (1848), பள்ளிக்கூடங்களிலே பயிற்றுவிக்கவேண்டிய தமிழ் வாசக புத்தகம் (1845) என இன்னும் பல. தகவல்: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்.
17.        உ.வே. சாமிநாதையர், ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், முதற்பாகம், பக். 55, 56.
18.       நீ. கந்தசாமிப்பிள்ளை, மு.கு, ப. 114.
19.       இ. சுந்தரமூர்த்தி, மு.கு.நூ., ப. 52.
20.       நீ. கந்தசாமிப்பிள்ளை, மு.கு., ப. 115.
21.      க.ப. அறவாணன், மு.கு.நூ., ப. 219.
22.       மேலது, பக். 214, 215.
23.       தொல்காப்பிய - நன்னூல், (இரண்டாம் பகுதி) ப. 69.
24.       க.ப. அறவாணன், தொல்காப்பியக் களஞ்சியம், ப. 119.
25.       க.ப. அறவாணன், எழுநூறு ஆண்டுகளில் நன்னூல், ப. 220.
26.  தொல்காப்பிய - நன்னூல், (இரண்டாம் பகுதி), ப. 70. அகப்பொருள் - Immediate knowledge The second chapter contains ¹øŠªð£¼œ External or remote knowledge, and relates to kings and their military operations. The Third chapter gives a detailed account of a custom (களவியல்) "Clandestine marriage" peculiar to a class of people denominated கந்திருவர் Gandervas, who appear to have become intermingled with the Hindus at a subsequent period. The Fourth Chapter Explains (கற்பியல்) the customs, Manners and line of conduct of Hindus after marriage in the fifth (called பொருளியல் chapter of things) are laid down further Explanations of the above manners and customs. The sixth chapter treats of the passions of human nature as bearing upon the subjects already enumerated. And the seventh and Eight chapters are Rhetoric and Prosody. The last or Ninth Chapter is an excellent miscellany, somewhat similar to theபொதுப்பாயிரம் and சிறப்புப்பாயிரம் of the Nunnool, and contains rules for composition and criticism.
27.    (i) There are a few subordinate treatises on individual subjects of the Tholcapyam Grammar of General Knowledge, such as the இறையனாரகப்பொருள் whose author is said to have been siva himself, நம்பியகப்பொருள் by Nambi, a Jain, ஐயனாரிதனார் வெண்பாமாலை by (ஐயனாரிதனார்) a king, on the subject of warfare, and புறப்பொருட்பன்னிருபடலம் a joint work on the same subject by the twelve disciples of Agastyan, All these are however, as above said, subordinate to the Tholcapyam. (ii) The Seventh Chapter of the பொருளதிகாரம் by Tholcapyan, viz. Analogy, has also been amplified by தண்டி and மாறன் (Dandi and Maran.) These works are called தண்டியலங்காரம் and மாறனலங்காரம் Rhetoric by Dandi and Rhetoric by Maran. (iii) The Eighth Chapter or Versification, received amplified explanation in காரிகை Karigai a book published by அமுதசாகரமுனிவர் and now generally studied, and in யாப்பருங்கலம்  Yapparungalam more ancient than Karigai, lately published by the Rev. Mr. Pope.
28.    தொல்காப்பிய - நன்னூல், ப. 70. (இரண்டாம் பகுதி) The Editions of the Nunnool to be had at Present 1. Vizagaperumal Iyer's Succinct (Kandigai) Commentary, at his Depository. 2. Ramanuja - Kandigai from Ramanja Cavirayer's  Agent at Royapooram. 3. Ramasawmy Moodelliar's Edition of the large commentary, at the salay street Depository. 4. Pope’s excellent and neat edition of the sootrums and examples, at the American mission Press. 5. Joye's Grammatica Tamuliensis, to be had of himself. 6. The Present Edition of the Nunnool and the whole of the hitherto unpublished tholcapyam, at the vepery mission press.

29.    தொல்காப்பிய - நன்னூல், (இரண்டாம் பகுதி), பக். 48, 49, 50 இன்னும்     பல.
30.     க.ப. அறவாணன், மு.கு.நூ, ப. 214.
31.   அ. தாமோதரன், நன்னூல் மூலமும் சங்கர நமச்சிவாயரசெய்துசிவஞான முனிவரால் திருத்தப்பட்ட புத்தம் புத்துரை என்னும் விருத்தியுரையும், ப. 88.

துணைநூற்பட்டியல் :
1)   அறவாணன். க.ப, எழுநூறு ஆண்டுகளில் நன்னூல், பாரிநிலையம், சென்னை, 1977.
2)  அறவாணன். க.ப, தொல்காப்பியக் களஞ்சியம், தமிழ்க் கோட்டம், சென்னை, 1975.
3)          அன்னிதாமசு, பதிப்பியல், அமுதநிலையம் லிமிடெட், சென்னை, 1977.
4)    இராசு.செ, உ.வே.சா. பதிப்புப்பணியும் பன்முக மாட்சியும், உ.த.ஆ.நி., சென்னை, 2003.
5)     இளங்குமரன். இரா, சுவடிப்பதிப்பு வரலாறு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1990.
6)   கனகரத்தினம். இரா.வை, ஆறுமுகநாவலர், குமரன் புத்தக இல்லம், சென்னை, 2007.
7)       கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழில் இலக்கிய வரலாறு (வரலாறெழுதியல் ஆய்வு), NCBH, 2007.
8)         கிருட்டிணமூர்த்தி. கோ, தொல்காப்பிய ஆய்வின் வரலாறு, சென்னைப் பல்கலைக்கழகம், 1990.
9)   சதாசிவம்பிள்ளை. அ, பாவலர் சரித்திர தீபகம் (I, II பாகங்கள்) ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் (பதி. பொ. பூலோகசிங்கம்), கொழும்புத் தமிழ்ச்சங்கம், கொழும்பு, மீள்பதிப்பு, 2001.
10)        சம்பந்தன், மா.சு, அச்சும் பதிப்பும், தமிழர் பதிப்பகம், சென்னை, 1980.
11)     சாமிநாதையர். உ.வே, ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், (முதற்பாகம்), மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை, 2001.
12)        சுந்தரமூர்த்தி. இ, பதிப்பியல் சிந்தனைகள், சேகர் பதிப்பகம், 2005.
13)      சுப்பிரமணியன். ச.வே, தொல்காப்பியப் பதிப்புகள், உ.த.ஆ.நி. சென்னை, 1992.
14) தாமஸ் டிரவுட்மன், திராவிடச் சான்று (எல்லீஸும் திராவிட மொழிகளும்) (தமிழில் - இராம. சுந்தரம்), Mids - காலச்சுவடு பதிப்பகம், சென்னை, 2007.
15)  தாமோதரம்பிள்ளை. சி.வை, பதிப்புரைகளின் தொகுப்பு, தாமோதரம், குமரன் பப்ளிஷர்ஸ், மறுபதிப்பு, 2004.
16)  தாமோதரன். அ, பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் சங்கரநமச்சிவாயர் செய்து சிவஞான முனிவரால் திருத்தப்பட்ட புத்தம் புத்துரை என்னும் விருத்தியுரையும், உ.த.ஆ.நி., சென்னை, 1999.
17)        நாச்சிமுத்து. கி, உ.வே.சா. இலக்கணப் பதிப்புகள், உ.த.ஆ.நி, சென்னை, 1986.
18) பெருமாள்முருகன் (தொகுப்பு), உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2005.
19)      போப். ஜி.யூ, இலக்கண நூல், Printed and Published by P.R. Hunt at the American Mission Press, 1857.

20)    மதுகேஸ்வரன். பா, தொல்காப்பியப் பதிப்பு வரலாறு, சந்தியா பதிப்பகம், சென்னை, 2008.
21)      மதுகேஸ்வரன். பா, நன்னூல் பதிப்புகள், 2006.
22)   மனோன்மணி சண்முகதாஸ், சி.வை. தாமோதரம்பிள்ளை, குமரன் புத்தக இல்லம், சென்னை, 2007.
23)    மாதவன். வே.இரா., சுவடிப்பதிப்பியல், பாவை வெளியீட்டகம், தஞ்சாவூர், 2000.
24) மீனாட்சிசுந்தரம். கா, ஐரோப்பியர் தமிழ்ப்பணி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 2003.
25)    வேங்கடசாமி. சீனி. மயிலை, 19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம், சாரதா மாணிக்கம் பதிப்பகம், சென்னை, 2003.
26)       வேங்கடராமையா. கே. எம்., சுப்பிரமணியன். ச.வே,, நாகராசன். ப.வெ., (பதி.) தொல்காப்பிய மூலம், பாடவேறுபாடுகள்: ஆழ்நோக்காய்வு, பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம், திருவனந்தபுரம், 1996.
27)     வேல்சாமி. பொ, பொற்காலங்களும் இருண்ட காலங்களும், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2006.

ஆங்கில நூல்கள் :
1)    Barnett and The Late G.U. Pope (Compiled), A Catalogue of the Tamil Books in the        Library of the British Museum, 1909.
2)    Bower. H., Introduction to the Nannul, (with a foreword by V.M. Gnanapragasam), The South India Saiva Siddhanta Works Re-edition, 1972.
3)   First Reader Tamil, by, L. Garthwaite, (part. I), Edited by - Walter Joyes (Late Professor of Vernacular Literature, Presidency College), Printed at the Empress of Indian Press, Seventh Edition - 1890.
4)    John Lazarus, A Tamil Grammar, Pioneer Book Services, Madras, Reprint, 1985. (First Edition 1878)
5)    John Murdoch (compiled), Classified catalogue of tamil printed books with introductory notices (Reprinted with a number of Appendices of supplement edited by M. Shanmukham), Tamil Development And Research Council, Government of Tamilnadu, First Edition, 1865, Reprint 1968.
6)    Robert Caldwell, A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages. (A Complete and Unabridged second edition renewed after 133 years by Kavithaasaran), Kavithaasaran Pathippagam, Chennai, 2008.
7)   Simon Casie Chitty, The Tamil Plutarch, Asian Educational services, New Delhi, Reprint, 1982.

இதழ்கள் :
1)   கந்தசாமிப் பிள்ளை. நீ, ‘கால்டுவெலும் அவர் வாழ்ந்த காலமும்’, தமிழ்ப்பொழில் (கால்டுவெல் நூற்றாண்டு மலர்) தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்கள் வெளியீடு, 1958 ஆகஸ்டு.
2)      மதுகேசுவரன், ‘தமிழில் வெளிவந்த பழந்தமிழ் இலக்கண நூல்கள் முதல் பதிப்புகள் மட்டும்’, தமிழியல் ஆராய்ச்சி (தொகுதி - 8) (பதி. பொற்கோ), புலமை மன்றம், சென்னை, 2005.
3)    வேல்சாமி. பொ, பெருமாள் முருகன் (தொகுப்பு), பதிப்பு: அடிப்படை ஆதாரத் தரவுகள், காலச்சுவடு, இதழ் 85, ஜனவரி 2007.
4)   வேல்சாமி. பொ, பெருமாள் முருகன் (ஒருங்கிணைப்பு), தமிழுக்குப் புத்துயிர் தந்த பதிப்புகள் - உ.வே. சா.விற்கு முன்னும் பின்னும், காலச்சுவடு, இதழ் 73, ஜனவரி 2006.
நன்றி     :தரவுகள் பலவற்றை வழங்கிய ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், மறைமலையடிகள் நூலகம், உ.வே. சாமிநாதையர் நூலகம், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகத்திற்கும், கட்டுரை குறித்து விவாதங்களை நிகழ்த்திய பொ. வேல்சாமி அவர்களுக்கும் நன்றி. நன்றி மு.இளங்கோவன்; முகப்புப் பக்கம்
இணைப்பு:
1858 ஆம் ஆண்டுக்கு முன் வெளிவந்த இலக்கணப் பதிப்புகள் :
1. நன்னூல் மூலமும் காண்டிகையுரையும், திருத்தணிகை விசாகப்பெருமாளையர் (ப-ர்), கல்வி விளக்க அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1835.
2.       இலக்கணப் பஞ்சகங்களில் நன்னூல் மூலமும் அகப்பொருள் மூலமும் புறப்பொருள் இலக்கியத்தோடு வெண்பாமாலை மூலமும், தாண்டவராய முதலியார் - அ. முத்துச்சாமிப்பிள்ளை (ப-ர்), 1835.
3.    நன்னூல் விருத்தியுரை, இராமாநுச கவிராயர் (ப-ர்) சஞ்சிவிராயன் பேட்டை (சென்னை), 1847.
4.  நன்னூல் காண்டிகையுரை, களத்தூர் வேதகிரி முதலியார் (ப-ர்), இலக்கணக் களஞ்சிய அச்சுக்கூடம், சென்னை, 1851.
5.  நன்னூல் மூலமும் விருத்தியுரையும், ஆறுமுக நாவலர் (ப-ர்) வித்தியாநுபாலன யந்திரசாலை, 1851.
6.    நன்னூல் மூலம் - அகப்பொருள் மூலம் - புறப்பொருள் மூலம் - யாப்பருங்கல மூலம் - காரிகை மூலம் - தண்டியலங்கார மூலம், நரசிங்கபுரம் வீராசாமி முதலியார் (ப-ர்), இயற்றமிழ் விளக்க அச்சுக்கூடம், 1854.
7.   நன்னூல் மூலமும் விருத்தியுரையும், தில்லையம்பூர்ச் சந்திரசேகர கவிராஜ பண்டிதர் (ப-ர்), முத்தமிழ் விளக்க அச்சுக்கூடம்.
8.         நன்னூல் மூலப்பாடம் - தருக்கச் சூத்திர மூலப்பாடம், சண்முகசுவாமி (ப-ர்), கல்விப் பிரவாக அச்சுக்கூடம், சென்னைபட்டணம், 1855.
9.    நன்னூல் மூலமும் பொழிப்புரையும், ஜி.யூ.போப்பையர் (ப-ர்), அமெரிக்கன் மிஷன் பிரஸ், சென்னை, 1857.
10.          தொல்காப்பியம் எழுத்ததிகாரம் (நச்சினார்க்கினியர் உரை) மழைவை மகாலிங்கையர் (ப-ர்), கல்விக்கடல் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1847.
11.          தொன்னூல் விளக்கம், மூலமும் உரையும், வேதகிரிமுதலியார், 1838.
12.          யாப்பருங்கலம் (தமிழ் இலக்கணம் பகுதி 2), ஜி.யூ. போப்பையர் (ப-ர்) அமெரிக்கன் மிஷன் பிரஸ், சென்னை, 1857.
13.        காரிகை மூலமும் குணசாகரர் விருத்தியுரையும், ஆறுமுக முதலியார் (ப-ர்), இலக்கணக் களஞ்சிய அச்சுக்கூடம், 1854.
14.   யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும், தில்லையம்பூர்ச் சந்திரசேகர கவிராஜ பண்டிதர், முத்தமிழ் விளக்க அச்சுக்கூடம், 1854.
15.    தண்டியலங்காரம் மூலமும் உரையும், தில்லையம்பூர்ச் சந்திரசேகர கவிராஜ பண்டிதர் (ப-ர்) முத்தமிழ் விளக்க அச்சுக்கூடம், 1857.
16.   வெண்பாப் பாட்டியல் மூலமும் உரையும், வரையறுத்த பாட்டியல் மூலமும் உரையும், தில்லையம்பூர்ச் சந்திரசேகர கவிராஜ பண்டிதர் (ப-ர்), 1860.
Ø  இத்தகவல்கள் பா. மதுகேசுவரன் அவர்களின் தமிழில் வெளிவந்த பழந்தமிழ் இலக்கண நூல்கள் முதல் பதிப்புகள் மட்டும்என்னும் கட்டுரையிலிருந்து அளிக்கப்பட்டுள்ளது.

.

4 comments:

 1. வாழ்த்துக்கள்,
  சிறப்பான கட்டுரை தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 2. வணக்கம்
  வாழ்த்துகள் அனைத்துக் கட்டுரைகளும் அரிய பதிவுகள் மேலும் இணையத்தில் தரவுகளை ஏற்றுங்கள்.

  ReplyDelete
 3. தமிழ் இலக்கண உலகில் இவற்றையெல்லாம் ஆராய்வது மிகவும் அவசியமாகிறது. அந்த வகையில் உங்கள் கட்டுரை மிகவும் புதிய சிந்தனையில் அமைந்துள்ளது. மேலும் பல இது போன்ற கட்டுரைகள் இனையத்தில் தாங்கள் வெளியிடின் எங்களைப் போன்ற ஆய்வாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும். அருமையானக் கட்டுரைக்கு நன்றி...
  ச. அபினாஷ் குமார்
  JNU NEW DELHI.

  ReplyDelete