தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Tuesday, July 21, 2020

சோறு என்பது...

சாப்பாடு போடறதுக்குன்னு ஒரு மனசு வேணும். சங்க இலக்கியத்துல அகநானூறுல ஒருபாட்டு இருக்கு. வீட்டை விட்டு காதலனோட ஓடிப்போற தப்பு தப்பு உடன்போக்கு மேற்கொள்கிற காதலியோட வளர்ப்பு அம்மா தான் பொண்ணு போற வழியில பத்தறமா போகணும். 

அப்படி அந்த வழியைக் கடந்த பிறகு கோசர்கள் வாழுற நாட்டைப் போய் அவ சேர்ந்துட்டான்னு தனக்கு நிம்மதின்னு சொல்லும். ஏன்னா அந்தக் கோசர்கள் யார் வெறுங்கையோட வந்தாலும் அவங்கள வரவேத்து உண்ண உணவு உடுக்க உடை எல்லாம் கொடுப்பாங்களாம். அதனால தாம் பொண்ணு அங்க போய்ச் சேரனும்னு நினைக்கிறாங்க.சோறு போடறதுல ஒரு ஊரே இப்படி இருந்திருக்குனா சங்க காலத்த பொற்காலம்னு சொல்றதுல ஒன்னும் தப்பு இல்ல. 

அதுவும் வீட்டை விட்டு உடன்போக்கு நிகழ்த்தறவங்களுக்குனா சொல்லவா வேணும் அவங்களோட பெருந்தன்மையை. இன்னொரு பாட்டுல இதே மாதிரி உடன்போக்கு போற பொண்ண நீ போய் கா கான்னு கத்தி கூப்பிட்டனா காக்காவே உனக்கு நல்ல பிரியாணி செஞ்சிதரன்னு ஒரு அம்மா சொல்லும். காக்கா பிரியாணிதான் கேள்விப்பட்டு இருக்கோம். காக்காக்கே பிரியாணி நம்ம ஆளுங்களாலதான் முடியும். இது விருந்தோம்பல் மரபு. 

இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னடி வாழ்ந்தவங்களோட வரலாற வாய்கிழிய பேசற நம்ம இப்போ என்ன பண்றோம். கதவ துறந்து வைச்சி சாப்பிடறது நம்மோளட நாகரிகம்னு சொன்னது போய் சோத்து வேளையா எவனாவது சொந்தக்காரன் வந்துடப் போறான்னு கதவ அடைச்சி சாப்பிடறதுதான் நாகரிகம்னு நாமளே சொல்லிக்க ஆரம்பிச்சுட்டோம்.

 மதிய வேளையில நாங்கலாம் சேர்ந்து உக்காந்து சாப்பிடறப்ப கூட வேலை செஞ்சவர் ஜெய் இன்னைக்கு என்ன அப்பிடின்னு ஆரம்பிச்சு எல்லார் டிபன்பாக்ஸ்லயும் சுத்தி சுத்தி நாலு ரவுண்டு வருவார். முதல் நாள் அவர ஆர்வத்தோட கூப்பிட்டு எடுத்துக்கோங்கன்னு சொன்னவங்களெல்லாம் நாளாக நாளாக பின்வாங்க ஆரம்பிச்சு தங்களோட சமையல் எவ்ளோ கேவலம்னு வரைக்கும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. 

சாப்பாட்டுக்காக சண்டை போட்டு பரம்பரை பரம்பரையா பிரிஞ்ச குடும்பங்கள்லாம் இருக்கு. சின்னப்பையனா இருந்தப்ப என்னோட உறவினர் சொன்ன ஒருவார்த்தை பத்து வருஷம் அவர் வீட்டுப் பக்கமே என்ன போகவிடாம பண்ணிருச்சு. ஆனா நான் எதிர்பாக்காத என்னோட பேராசிரியர் வீட்டுக்கு எப்ப போனாலும் சோறு மட்டும் இல்லாம இருக்காது. முகமலர்ச்சியோட அவரும் சரி அவர் மனைவியும் சரி பிள்ளைகளும்சரிஎல்லாரும் சோறு போடறதுல கவனிச்சுகுவாங்க. அவர்மேல கருத்து வேறுபாடு இருக்கற பலர் கூட இந்த சோறு போடற விஷயத்துல குறை சொனனதா நினைவு இல்ல. 

சோறு போட்டவங்களும் நினைவுல நிக்குறாங்க சோறு போடதவங்களும் நினைவுல நிக்குறாங்க. இதுல நாம எங்க நிக்குறோம்னுசுத்தி ஒருமுறை பாத்துகணும் போல....

Monday, July 20, 2020

ஆண் கவியும் பெண் பெயரும்

ஒருமுறை நண்பராக நினைச்ச ஒருத்தர்கிட்ட பேசிகிட்டு இருந்தன். முதுகலை படிச்சப்ப. உங்களுக்கு பிடிச்ச இரண்டு பெண் கவிஞர்கள சொல்லுங்கன்னு. அவர் உடனே வேகமா சுஜாதா மீரான்னு சொன்னார். சொன்ன கையோட அரை பக்கம் விளக்கம் வேற. இருங்க அவங்க ரெண்டு பேரும் ஆண் கவிஞர்கள்னு சொன்னன். உனக்கு தெரியுமா எனக்கு தெரியுமான்னு பயங்கர கோவத்தோட வேணும்னா இன்னும் ரெண்டு பேர சொல்லவான்னு கேட்டாரு. கையெடுத்து கும்பிட்டு அத்தோட திரும்பனதுதான் இன்னும் அவர சந்திக்கல. தொல்காப்பியத்துல இருந்து அதுக்கு சைடு ரெபரன்ஸ்லாம் கடைசியா தந்தாரு பாருங்க. அதான் ரொம்ப பொறுத்துக்க முடியல.

Sunday, July 19, 2020

தோசை என்பது கலை

தோசை ஊத்தத் தெரியல நீலாம் என்னடா இத்தனை வருஷம் கடையில வேல பாக்கற. ஒவ்வொரு வருஷ தேர் திருவிழா வியாபாரத்துக்கும் இந்த மாஸ்டருங்கள நம்பி நம்பி ஏமாற வேண்டியதா இருக்கு. ஒருத்தனும் ஒழுங்கா இருக்க மாட்டறானுங்க. நீலாம் என்னதான் பண்ணபோறியோன்னு எங்க மாமா தலையில அடிச்சு திட்டனப்போ ஒரு கோவம் வந்துச்சு. 

என்னா பெரிய தோசைன்னு களத்துல இறங்கினன். பெரிய அடுப்பு பெரிய தோசைக்கல்லு. அடுப்ப பராமரிக்கறதே முத வேல. தோசைக்கல்ல பக்குவமா வச்சிக்கணும். மாவு சரியான கரைசல்ல இருக்கணும். தோசையோட வெரைட்டிஸ் எல்லாம் தெரிஞ்சிக்கணும்னு ஒவ்வொன்னா இறங்கிக் கத்துக்கிட்டன். ஒரு வருஷம்தான். பரோட்டா,தோசை, பரோட்டாவின் வகைகள், தோசையின் வகைகள்னு என அத்தனையிலயும் அத்துபடி. 

மூணுவருஷம் நான் தான் எங்க ஊரு தேர் திருவிழாவுல மாஸ்டர். நூறு கிலோ பரோட்டாவ சாதாரணமா தட்டி போடற அளவுக்கு டிரெயினிங். மூணு வருஷத்து முன்னடி வந்த மாஸ்டரே வாயப் பொளந்து நான் இனி வேணாம்னு திரும்பிப் போயிட்டாரு. தலைதட்டன எங்க மாமாவே கணேஷான்னு ஆயிட்டாரு. 

பி.எச்டி சேந்த  பிறகும் ஊரு பக்கம் போணம்னா கணேஷ் ஒரு ஆப்பாயில் உங்ககையால போடன் தோசை ஒன்னு ஊத்தன்னு ஊர்க்காரங்க வந்து நிக்கப்பறப்ப உண்மையாவே நாம நல்லதான் வேலை பண்ணிருக்கோம்னு தோணும்.

எங்க மாமாவோட அந்த அன்பான அடிதான் ஒவ்வொரு வேலையையும் கையில எடுக்கறப்ப உற்சாகப்படுத்தும்.. சில நேரங்கள்ல நம்ம மேல விழற அடிகள சாதாரணமா எடுத்துக்கக்கூடாது. அந்த அடிகள் நம்மளோட வாழ்க்கைப் பாதைகளை நமக்குக் காண்பிக்கற அடிகளாக கூட இருக்கும்.

புகைப்படம்: k. சுரேஷ்குமார்

இங்க் அடிப்போமா

போன வருஷம் பள்ளிக்கூடம் லீவ் விட்டப்ப ஒரு பையன் கிட்ட கேட்டன். லீவு விட்ட பிறகு இங்க் அடிச்சிக்கிட்டிங்களாடான்னு. இங்க்னா என்ன அங்கிள்னு கேட்டான் முதல்ல. அப்பறம் விளக்கி சொன்ன பிறகு  அய்யய்யோ அங்கிள் என்ன அசிங்கம் இது. நீங்க டர்டி அங்கிள்ன்னு சொன்னான். 

ஐஞ்சாவதுல இருந்து நினைவு இருக்கு இங்க் பேனாதான் கையில இருக்கும். மேல கீழ அத ஊத்தி நிரப்பறதுக்குள்ள பெரும்பாடு. ஹீரோ பேனா தான் எங்க கனவு. விலை கொஞ்சம் கூட. தொலைச்சிருவ தொலைச்சிருவன்னு சொல்லியே வீட்ல அவ்ளோ சீக்கிரம் வாங்கித் தர மாட்டாங்க. அவங்க வாய் எவ்ளோ மோசம்னு வாங்கித் தந்த உடனேயே தெரிஞ்சிரும். தொலைச்சி அடியும் வாங்குவன். நான் சொல்லல நீ தொலைப்பன்னு வேற பெருமை பீத்துங்க. கடுப்பா இருக்கும்.

Saturday, July 18, 2020

கட்டைப் பை

பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விட்ட கையோட எங்க பாட்டி வீட்டுக்கு கிளம்புவோம். புது பேண்ட் சட்டை எல்லாம் போட்டு ஜோரா ரெடியாயி நிப்பன். எங்க அம்மா என் தங்கச்சி எல்லாம் ரெடியாயி வெளிவந்து சரிசரி அத எடுத்துக்கோன்னு சொல்வாங்க.
 
என்னன்னு பாத்தா பெரிய கொஞ்சம் கிழிஞ்ச கட்டப்பை. அப்ப ஒரு கடுப்பு வரும்பாருங்க. எம்மா இதுக்கு நான் ஊருக்கே வரலன்னு ஓரமா ஒக்காந்து அழுவன். எங்கம்மா எங்களாலலாம் தூக்க முடியாது. ஆம்பள பையன் நீதான் தூக்கிட்டு வரணும்னு பஞ்ச் வேற. 

தூக்கமுடியலனா சொல்லுடா தலைமேல வச்சிரன் ஈஸியா இருக்கும்னு சொல்லும். அப்படியே முடிவுக்கு வந்து தூக்கின பிறகு எதிர்க்க யாராவது வந்தா கட்டை பைய பட்டுன்னு வச்சுட்டு யாருக்கும் தெரியாம அங்க இங்கன்னு வேடிக்கை பாப்பன். போன பிறகு பயணம். பஸ்ஸூல எனக்கும் கட்டப் பைக்கும் எந்த சம்மந்தம் இல்லன்னு இருப்பன். பேண்ட் சட்டை டிப்டாப் டிரஸ் போட்டா இந்த பிரச்சனை. 

லுங்கி கட்டிட்டா நம்மள விட லோக்கல் யாரும் இல்லன்னு திரிவோம். கருவாட்டுச் சந்தைக்குள்ள எங்க மாமா கூட தெருத்தெருவா திரிவன். இதே பழக்கம்தான் இப்பயும் எங்கயாவது வந்து சேந்துருது. யாருக்காவது உடம்பு சரியில்லனா  ரோட்டுக் கடையில பழம் வாங்கினா கருப்பு கேரிபேக்ல போட்டுக் கொடுக்கறான்னு ரிலையன்ஸ் ப்ரஷ்லதான். பெருமைக்கு எருமை மேய்க்கறது இதுதான்னு அப்பப்ப மூளை சொன்னாலும் பிரஸ்டீஜ்க்கு செத்தவங்களாச்சே  நாம. விட்டுருவோம்மா என்ன.

புகைப்படம் . கு. சுரேஷ்குமார்

Wednesday, July 15, 2020

இளம் ஆய்வாளர் வரிசை - முனைவர் கை. சங்கர்


    முனைவர் கை. சங்கர் அவர்களைத் தொல்காப்பியரின் மாட்டு குறித்த ஆய்வுக்கட்டுரைக்காக முதன்முதலாகத் தொடர்பு கொண்டேன். அவர் மாட்டு என்னும் இலக்கணமும் நச்சினார்க்கினியர் உரையும் என்னும் தலைப்பில் நூல் எழுதியிருந்தார். அந்த நூல் குறித்து அவரோடு உரையாடும் போதுதான் எனக்கு அவர் அறிமுகமானார்.

மாட்டு குறித்து அன்று அலைபேசி வழியாக நிகழ்த்திய விவாதங்களி லிருந்தும் அவர் நூலை வாசித்ததன் வழியும் சங்கர் அவர்களின் ஆய்வின் ஆழத்தை நான் அறிந்துகொண்டேன். அது மட்டுமல்லாது ஆய்வு அறம் கொண்டவர்களில் இவரும் ஒருவர். விரிவாக வாசித்துக் கொண்டிருப்பவர். சங்க இலக்கியங்கள் தொடங்கி நவீன இலக்கியங்களோடு வேறு பல துறைகளையும் நன்கு அறிந்தவர்.

தற்போது நந்தனம் அரசினர் ஆடவர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் சங்கர் அவர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வழியாகத் திருக்குறளும் பொருள்கோளும் என்னும் தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி 2007 ஆம் ஆண்டு முனைவர்பட்டம் பெற்றவர். திருக்குறளில் ஆய்வு மேற்கொண்டு ஆழ்ந்து வாசித்ததன் விளைவாகத் திருக்குறள் தொடர்பாக மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார்.

பல்கலைக்கழக மானியக்குழுவின் பெருந்திட்டத்தின் முனைவர் கை. சங்கர் அவர்கள் சிறந்த செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்தச் செயலியில் 1812 முதல் 1950 வரை வெளிவந்த செம்மொழி இலக்கண இலக்கியப் பதிப்புகள் பலவற்றையும் ஆவணப்படுத்தியுள்ளார். நூல்கள் தேவைப்படுவோர் Sanga Elakkiyam APP என்னும் செயலியின் வழியாகவும் Sanga Elakkiyam. Org என்ற இணையதளம் வழியாகவும் பதிவிறக்கம் செய்து வாசிக்க இயலும்.

பேராசிரியர், ஆய்வாளர் என்பதோடு மட்டும் நின்றுவிடாமல் தம் சிந்தனையின் விருட்சங்களைத் திரையின் வழியாகவும் உலகெங்கும் கொண்டு சேர்த்துள்ளார். இவரின் மாணவர் நெல்சன் அவர்கள் இயக்கிய ஒருநாள்கூத்து, மான்ஸ்டர் எனத் தமிழின் இன்றியமையாத இரண்டு திரைப்படங்களில் சங்கர் தாஸ் என்னும் பெயரில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்துள்ளார். தமிழ் பயிலும் மாணவர்கள் பேராசிரியர் பணி என்று மட்டும் தம்மைச் சுருக்கிக் கொள்ளாமல் திரை உலகிலும் சாதனை புரிய சங்கர் அவர்கள் முன்மாதிரியாக நிற்பதோடு எதிர்காலத்தில் பயணம் செய்ய இருப்பவர் களுக்காகத் தமிழ் இலக்கிய மாணவர்கள் திரைக்கதை, வசனம் எழுது தலுக்கான வழிகாட்டி பயிற்சி நூலாக திரைத்தமிழ் என்னும் நூலை விரைவில் வெளியிடவுள்ளார்.

முனைவர் கை. சங்கர் அவர்களின் நூல்கள்

2003 – ஒரு விடியலில் இருந்து இன்னொரு விடியல் வரை (கவிதை)

2008 – திருக்குறள் பொருள்கோள் உரை விளக்கம் ( அறத்துப்பால்)

2008 – திருக்குறள் உரைச் சிந்தனைகள்

2008 – மாட்டு என்னும் இலக்கணமும் நச்சினார்க்கினியர் உரையும்

2008 – சில குறள்கள் சில முடிவுகள்

திரைப்படப் பணி

(சங்கர் தாஸ் என்ற புனைபெயரில் எழுதியுள்ளார் )

2016 -  ஒரு நாள் கூத்து – (கதை, திரைக்கதை, வசனம்)

2019 – மான்ஸ்டர் (தமிழ்) – (கதை, திரைக்கதை, வசனம்)