தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Monday, July 6, 2020

சங்க இலக்கியத்தில் பாய்மரக் கப்பல்




வினா

பாய்மரக் கப்பல் என்பதில் உள்ள பாய் Sails என்பதற்கு இணையாக இன்று பயன்படுத்தப்படுகிறது. சங்க இலக்கியத்தில் பாய் இந்தப் பொருளில் வரவில்லை. வேறு எந்தச் சொல் பயன்படுத்தப்படது? அந்தச் சொல் எனக்குத் தெரியும். நீங்கள்  முயற்சி செய்து பார்த்தால்தான் ஒத்த சொல் கண்டுகொள்வது எவ்வளவு கடினம் என்பது தெரியும். முயன்று பாருங்கள்.

விடை:

நாவாய், வங்கம், கலம் முதலிய சொற்கள் கப்பல் போன்ற பெரிய படகுகளைக் குறிப்பிடும். பாய் என்ற மரக்கலத்தின் உறுப்பைக் குறிப்பதில்லை.
நல்லது, பாய் என்பதற்கு இணையான ஒத்த சொல் சங்க இலக்கியத்தில் "இதை" என்பதாகும்.
"இதையும் கயிறும் ... இரிய, சிதையும் கலத்தை" என்னும் பரிபாடல் (10.53) அடியைப் பார்க்கவும். மேலும் மதுரைக்காஞ்சி 536 வரியிலும் "இதை" என்பது பாய் என்னும் பொருளில் வருகிறது.
தமிழ் லெக்சிகனில் "சிதை" என்பதும்  இதே பொருளில் வருவது விளக்கக் கூடியது. அதில் உள்ள 'ச்' மறைந்தால் "இதை". திராவிட மொழிகளில் சகரம் மறைவது உண்டு.

விளக்கம்

நானும் எனக்கு அடுத்த தலைமுறையில் வருகிற நீங்களும் உவேசா போலவோ கோபாலையர் போலவோ அதி நினைவாற்றல் உடையவர்களாக முடியாது. தேவையும் இல்லை. எனவே நாம் நமக்குக் கிடைத்திருக்கிற  கருவி நூல்களைப் பயன்படுத்தி ஒத்த சொற்களைக் கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது. நான் "இதை" என்பதற்கு எப்படி வந்துசேர்ந்தேன் என்று சொல்கிறேன்.
1. முதலில் என்னிடம் இருந்த பிங்கல நிகண்டில் கப்பல், நாவாய் முதலிய சொற்களைத் தேடினேன். அவற்றின் உறுப்புகளுக்கான சொற்களைக் காண முடியவில்லை.
2 Burrow & Emeneau  Dravidian Etymological Dictionary தாங்கள் பொருளாகத் தந்துள்ள ஆங்கிலச் சொற்கள் அகரவரிசையில்  sail என்பது எந்தத் திராவிட மொழிகளில் இடம்பெற்றுள்ளது எனப் பார்த்தேன். எண் 1547 என்னும் பதிவின் உள்ளே 'சிதை' என்பது பெயர்சொல், sail பொருளாகத் தரப்பட்டுள்ளது. 
 தமிழ் லெக்சிகனில் சிதை என்னும் பதிவில் இந்தப் பொருள் உண்டு. ஆனால் திருவிளையாடல் மேற்கோள்.
3. தமிழில் சொல்லின் முதலில் உள்ள சகரம் மறைந்து சொல் நிற்கும் என்பதால் (சிறகு - இறகு, செட்டி - எட்டி) இதை என்னும் சொல் சங்க இலக்கியத்தில் இருக்கலாம் என்று தேடினேன். கண்டடைந்தேன். என் தேடுதல் கதையை உங்களிடம் பகிர்ந்துகொண்டேன்.


இந்தச் செய்தியை வழங்கியவர் பா.ரா.சுப்பிரமணியன் அவர்கள்

நன்றி: புகைப்படம்: இந்து தமிழ்திசை

No comments:

Post a Comment