தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Friday, July 3, 2020

எட்டுத்தொகை நூல்களின் பதிப்பு வரலாறு குறித்த ஆய்வு நூல்கள்


    


    சுவடி வரலாறு போலவே தமிழ்ப் பதிப்பு வரலாறு குறித்தும் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. மா.சு.சம்பந்தன் அவர்களின் அச்சும் பதிப்பும், மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் முதலான நூல்களின் வழியாகத் தொடங்கிய பதிப்புகள் குறித்த ஆராய்ச்சி அடுத்த பல நிலைகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. பொது நிலையில் பதிப்பாய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் பதிப்பாசிரியர்கள், தனி நூல் பதிப்புகள் குறித்தும் ஆய்வுகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன. 

    இந்த வரிசையில் டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் இரா. அறவேந்தன்,  முனைவர் அ. செல்வராசு, முனைவர் மோரிஸ்  ஜாய், முனைவர் மு. முனீஸ்மூர்த்தி, முனைவர் க. பாலாஜி, முனைவர் மா. பரமசிவன், முனைவர் ம. லோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து எட்டுத்தொகையில் உள்ள ஒவ்வொரு நூலின் பதிப்புகள் குறித்தும் தனித்தனியே ஆய்வுகள் நிகழ்த்தி நூல்களை வெளியிட்டுள்ளனர். சி.வை.தாமோதரம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர் ஆகியோர் குறித்துப் பல நிலைப்பட்ட ஆய்வுகள் வெளிவந்திருந்த போதிலும் தனி நூல்களின் பதிப்பு வரலாறுகள் குறைவாகவே வெளிவந்திருந்தன. 

    சங்க நூல்களின் பதிப்புகள் குறித்து கட்டுரைகளாகவே அதிகம் எழுதப்பட்டிருந்த நிலையில் நூல்களாக வெளிவந்தது மிகக்குறைவே. அந்தக் குறையைப் போக்கும் விதமாக எட்டுத்தொகை நூல்களின் பதிப்பு வரலாற்றை ஆவணப்படுத்தியும் ஆய்விற்குட்படுத்தியும் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளாகவே இந்த எட்டு நூல்களின் ஆய்வும் விளங்குகின்றன. ஒவ்வொரு ஆய்வாளருமே இந்தத் துறையில் தொடர்ந்து இயங்கி வருபவர்கள். பதிப்புகளின் ஆழ அகலங்களை அறிந்ததோடு அதன் நுணுக்கங்களையும் தெரிந்தவர்கள். ஆய்வின் போக்குகளையும் உள்வாங்கியவர்கள். அதன் விளைவாக உருவான இந்நூல்கள் தமிழ் எட்டுத்தொகை பதிப்பு வரலாற்று ஆய்வுகளில் குறிப்பிடத் தக்க நூல்களாகவே திகழ்கின்றன.

1. இரா. அறவேந்தன், குறுந்தொகை பதிப்பு வரலாறு     - (1915 - 2010)
2. ம. லோகேஸ்வரன், ஐங்குறுநூறு பதிப்பு வரலாறு         - (1903 - 2010)
3. மு. முனீஸ்மூர்த்தி, கலித்தொகை பதிப்பு வரலாறு     - (1887 - 2010)
4. க. பாலாஜி, நற்றிணை பதிப்பு வரலாறு                           - (1915 - 2010)
5. மா. பரமசிவன், அகநானூறு: பதிப்பு வரலாறு.              - (1918 - 2010)
6. அ. செல்வராசு, புறநானூறு பதிப்பு வரலாறு                      (1894 - 2010)
7. இரா. மோரிஸ்ஜாய், பதிற்றுப்பத்து பதிப்பு வரலாறு  - (1904 - 2010)
8. ம. லோகேஸ்வரன், பரிபாடல் பதிப்பு வரலாறு            - (1918 - 2010)  

இந்த அனைத்து நூல்களும் சென்னை காவ்யா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.



















2 comments: