தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Wednesday, December 5, 2012

பேரா. செ.வை. சண்முகத்தின் அணிந்துரை


நூல் - தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு 



பேரா. செ.வை. சண்முகம்





   
     உரை என்பது இன்று கலைச்சொல்லாய் ஒரு நூலுக்குக் குறிப்பாகப் பழங்கால நூலுக்குப் பொருள் விளக்கம் தரும் முறையில் எழுதப்பட்டு மூல நூலும் சேர்ந்தது என்ற பொருளில் தமிழ் அறிஞர்களிடையே  வழங்குகிறது. அதன் பொதுப் பொருள் சொல் அல்லது பேசு என்பதால் ஒரு பொருள் குறித்த  பேச்சு  என்ற முறையில் பொருளும் புதைந்துள்ளது எனலாம்.  அதனால் பேச்சு உரை (நேரடிப் பேச்சு), எழுத்து உரை  ( எழுதிப் படிப்பது) என்ற தொடர்களும் இன்று கையாளப்படுகின்றன. தொல்காப்பியத்திலேயே உரை என்பது  பொதுப்பொருளிலிலும் (உரை எனத் தோழிக்கு உரைத்த கண்ணும்’, களவு. 21.3), உரைநடை என்ற பொருளிலும் (உரைவகை நடையே நான்கென மொழிப’ (செய்யுள்.171.5), இன்று வழங்கும் விருத்தி உரை என்ற சிறப்புப் பொருளிலும் (சூத்திரத்துப் பொருள் அன்றியும் யாப்புற/ இன்றியமையாது இயைபவை எல்லாம் / ஒன்ற உரைப்பது உரைஎனப் படுமே’, மரபு.104) பயின்று வந்துள்ளது. அதாவது இன்றைய கலைச்சொல் பொருள், விருத்தி உரை என்ற கலைச்சொல் பொருளின் விரிவு எனலாம். அது கல்வி பரவலாக்கம் அல்லது பொதுமையாக்கம் ( Universalization)  என்ற சமூக மாற்றத்தின் எதிரொலி.
     அதே போல நூல் என்ற சொல்லும் தொல்காப்பியத்தில் பொதுப் பொருளிலும் (தன் நூலானும் முடிந்த நூலானும்’,  மரபு.105.2), பாட்டு, உரை ஆகிய இரண்டோடு மாறுபட்ட அறிவியல் நூல் அல்லது இலக்கண நூல்  (பாட்டு, உரை, நூலே’, செய்யுள்.78.1) என்ற பொருளிலும் வழங்கினாலும்இன்று பொதுப்பொருள் மட்டுமே வழக்கத்தில் உள்ளதற்கும்  கல்விப் பரவலாக்கமே காரணமாக இருக்கலாம். தொல்காப்பியரே ஒரு இடத்தில் நூலையும் உரையும் மாறுபடுத்திக் கையாண்டிருப்பது (நூலினான, உரையினான’, செய்யுள்.163.2) இன்றைய வழக்குக்கும் வரலாற்றுப் பின்னணி இருக்கிறது என்பதையும், தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியையும் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.     
    உரை என்னும்போது அதற்கு ஒரு மூல நூல் இருக்க வேண்டும் என்பதும்  அதுபோல மூல நூலை எழுதிய ஆசிரியர், உரை எழுதிய ஆசிரியர் - உரையாசிரியர் இருக்க வேண்டும் என்பதும் வெளிப்படை. அந்த உரைமூல நூலுக்கும் உரையாசிரியர்க்கும் உள்ள உறவு, உரையாசிரியரின் துறை பயிற்சி, அவரின் ஆளுமை அதாவது புலமை, சமூகப் பண்பாட்டு உணர்வு, வரலாற்று உணர்வு, உரை நோக்கம்  ஆகியவைகளையும் புலப்படுத்தும். மேலும் நூலின் வகையும் அந்த உறவின் தன்மையை நிர்ணயிக்கும். உரைக்கு மூலமான நூல் இலக்கியம், இலக்கணம் என்ற வகைப்பாடு உலகப் பொதுவானது. முன்னது கலை சார்ந்தது, பின்னது அறிவியல் சார்ந்தது. மேலும் இலக்கணத்தின் தரவு இலக்கியம், இலக்கியத்தின் தரவு மனித வாழ்க்கையும்  புலவனின் கற்பனையும். இலக்கியம் காலத்துக்குக் காலம் மாறுபடுவதுபோல் அதை ஒட்டி இலக்கணமும்  இலக்கண உரைகளும் மாறுபடும், மாறுபடுவது இயல்பானது. வரலாற்று நிலையில் இலக்கியத்தைப் புரிந்துகொள்ள இலக்கணமும், இலக்கணத்தைப் புரிந்துகொள்ள உரையும் தோன்றியது. பின்னரே இலக்கியத்துக்கும் உரை தோன்றியது.
      இலக்கண உரை அறிவியல் துறை சார்ந்தது என்பதால்உரைக் கருத்து மூல நூல் கருத்தாக மாறும் நிலை (உதாரணம் இளம்பூரணர் என்ற உரையாசிரியர் கருத்து நன்னூல் என்ற இலக்கண நூல் கருத்தாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலை)  உண்டு என்னும்போது  இலக்கண உரையின் தனிச் சிறப்பு புலனாகும். மேலும் இலக்கியம், இலக்கணம் பற்றிய பொதுக் கோட்பாடும் உரையிலிருந்து உருவாகலாம். அப்படி சில கோட்பாடுகள் உரை அடிப்படையில் பேசப்படுவது பின் பகுதியில் குறிப்பிடப்படும். உரையாசிரியரின் மனப்பாங்கும் உரைப் போக்கைத் தீர்மானிக்கும். உதாரணமாகத் தொல்காப்பியச் செய்யுளியலுக்கு உரை எழுதிய இளம்பூரணர் மனப்பாங்கும் அதற்குப் பின்  பேராசிரியர் மனப்பாங்கும் மாறுபட்டதை இந்த நூல் ( ப. 9) எடுத்துக்காட்டியுள்ளது. அதாவது இளம்பூரணர் பிற்கால மரபுகளைப் பொருத்திக்காட்டும் முயற்சியில் ஈடுபட பேராசிரியர்  மூல நூலின்  கால உணர்வையும் கருத்து உணர்வையும் அடிப்படையாகக் கொண்டே உரை வகுத்துள்ளது இலக்கணம் பற்றிய மாறுபட்ட கருதுகோள்களே காரணம். அதாவது இலக்கணம் எல்லாக் காலத்துக்கும் (Pan chronic)  பொருந்துவதாக உரை நூல் உதவ வேண்டும் என்ற கருதுகோள் ஒன்று, அது இளம்பூரணர் கருத்தின் அடிப்படை. இலக்கணம் எழுதப்பட்ட காலத்தை (Synchronic) -  கால நிலையைப் பிரதிபலிப்பது என்ற கருதுகோள் மற்றொன்று. அது போராசிரியர் கருத்தின் அடிப்படை. 
   இலக்கண உரைகளுக்குள்ளும் எழுத்து, சொல் இலக்கண உரையின் பரிமாணமும் யாப்பு இலக்கண உரையின் பரிமாணமும் மாறுபட்டவை. அதனால்தான் இந்த நூலில் முதல் இயல் தமிழ் இலக்கண உரை வரலாறு, இரண்டாவது இயல் யாப்பியல் உரைகள் என்று அமைக்கப்பட்டுள்ளதும்  புலப்படுத்தும்.  எழுத்து, சொல் மூலமான மொழி, உலகம் முழுமையும் ஒரே கட்டமைப்பை உடையது.  காலந்தோறும் மாறுபடும் என்றாலும், அது சமூகம் சார்ந்தது. ஆனால் யாப்புக்கு மூலமான இலக்கியம் அதன் சமூகம் பண்பாட்டோடு உறவு உடையதாயினும், அவைகளைப் படைப்பாளி உள்வாங்கிக்கொண்டு படைப்பது என்னும்போது  இலக்கியம் படைப்பாளி சார்பானதே தவிர சமூகச் சார்பானது அல்ல. யாப்பு படைப்பாளி உருவாக்குவது. யாப்பு சமூகத்துக்கு சமூகம் மாறுபடும். யாப்பு வரலாறும் சமூகம் சார்ந்தது, சில வகை  யாப்பை மக்கள் வழக்கிலிருந்து ( நாட்டுப்புறப் பாடல், தமிழில் கலிப்பா) புலவன் பெற்றாலும் அதிலும் சில மாற்றங்கள் செய்தும், தான் விரும்பும் புதிய பாடுபொருளில் அமைப்பான். யாப்பு அமைப்பு அந்தச் சமூகத்தில் படைப்பாளிகளின் திறமைக்குச் சான்று.
    யாப்பு மாற்றம்யாப்பின் அடிப்படை உறுப்புகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைத் தமிழ் யாப்பு வரலாறு புலப்படுத்துகிறது. இடைக்காலத்தில் சந்தப் பாக்கள் குறிப்பாக வண்ணச் சந்த விருத்தங்கள் உருவான போது குழிப்பு, சந்தம், தொங்கல், கலை என்ற புதிய உறுப்புகளோடு  சந்த வாய்பாடாகத் தத்தன தனதன என்பது உருவாகி யுள்ளது. அவைகளைச் சீர், தளை, அடி என்ற முன்னர் உறுப்புகளோடு  இணைத்துப் பார்க்கலாம் என்றாலும் அமைப்பு மாறுபட்டது என்பதை அதன் புதிய உறுப்புகள் புலப்படுத்திவிடுகின்றன என்பது சிறப்பானது (பொற்கோ,1995, புதிய நோக்கில் தமிழ் யாப்பு, ப. 53).
    முனைவர் பா. இளமாறன் அவர்கள் எழுதிய தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு என்ற நூல் யாப்பு இலக்கணம் என்பதன் கருதுகோளும் மாறுபட்டுள்ளதை எடுத்துக் காட்டியுள்ளது. 1.  தனிச் செய்யுளின் வடிவத்தை ஆராய்வது யாப்பு நூல்கள், 2.  தொடர்நிலைச் செய்யுளின் இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்கள், 3. இலக்கியங்களின் வழி இலக்கணத்தைப் புரிந்து  கொள்ள உதவும் பாப்பாவினம் என்ற நூல்  என்று மூன்று வகை யாப்பு இலக்கண நூலில் மாறுபடுவதை ஒட்டி உரைத் தன்மையும் மாறுபட்டதையும் இந்த நூல் ( ப.90) எடுத்துக்காட்டியுள்ளது. எனவே யாப்பிலக்கண உரை வரலாறு தனியே ஆராயப்பட வேண்டிய துறை என்று இந்த நூல் விளக்கியுள்ளது ஏற்றுக்கொள்ளத் தகுந்தது; சிறப்பானது.  அதனால்தான், 1. தமிழ் இலக்கண உரை வரலாறு, 2. யாப்பியல் உரைகள், 3. யாப்பருங்கல விருத்தியுரையும், யாப்பருங்கலக் காரிகையுரையும், 4. தொல்காப்பியச் செய்யுளியல் உரைகள்,  5. பிற யாப்பியல் உரைகள் என்ற ஐந்து இயல்களோடு முன்னுரையும் முடிவுரையும் கொண்டுள்ள இந்த நூலில், முதல் இரண்டு இயல்கள் அமைத்தது நியாயப்படுத்தப்படுகிறது.  
      நூலின் முன்னுரை சில அடிப்படையான கருத்தமைவுகளை விளக்குவதாகவும், முடிவுரை வருங்காலத்தில் மேலாய்வுக் களங்களைச் சுட்டுவதாகவும் அமைந்துள்ளது சிறப்பானது, பாராட்டுவதற்கு உரியது. முதல் இரண்டு இயல்களும் கோட்பாட்டுப் பின்னணி, வரலாற்றுப் பின்னணி உடைய  முன்னுரை என்றும், அடுத்த மூன்று இயல்களும் தரவு அடிப்படையிலான ஆய்வாக மையப் பகுதி ஆய்வு என்றும்  கொள்ளலாம்.
    உண்மையில் இந்த நூல், தலைப்பு பற்றிய ஆழ்ந்த புரிதல்களோடு அழுத்தமாகவும் தெளிவாகவும் எழுதப்பட்டுள்ளது. தமிழ் ஆய்வு நல்ல தடத்தில் செல்கிறது என்ற நம்பிக்கை  ஊட்டுவதாக உள்ளது. ஆசிரியர் இளமாறன் அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
   தமிழ் இலக்கண  உரை வரலாறு என்ற முதல் இயலில் தமிழில் கிடைக்கக்கூடிய உரை நூல்களை உரைகளின்  கால வரிசைப்படி தொகுத்துக்கொடுத்துள்ளது (ப. 27தொ.) வாசகருக்கு வியப்பை அளிக்கலாம். அதாவது களவியல், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய நூல்களுக்கு உரை வந்த பிறகே தொல்காப்பியத்துக்கு உரை எழுதப்பட்டுள்ளது என்ற வரலாற்று   உண்மையின் பின்புலத்தில் தமிழ்க் கல்வி சார் சமூகப் பண்பாட்டு வரலாறு புதைந்துள்ளதை இந்த நூல் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
   முதல் இயலில் இலக்கண உரைகளும் எழுதப்பட்ட முறைகளும் என்ற பெருந் தலைப்பில் 1. காலப்படிநிலை வளர்ச்சியில் இலக்கண உரைகள், 2, உரை வகைகளும் இலக்கண உரைகளும், 3. இலக்கண உரைகளும் சமயப் பின்புலமும், 4) இலக்கண வகைகளும்  உரைகளும் என்ற நாலு தலைப்புகளோடு, நூலாசிரியரும் உரையாசிரியரும்  என்ற கூடுதல் தலைப்பிலும் நூலாசிரியருக்கும் உரையாசிரியருக்கும் உள்ள உறவு ஆராயப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது. இயலின் முடிபாக நூலாசிரியரே  இலக்கண உரைகள் மூல இலக்கண விதிகளின் பொருளை எடுத்துரைத்தல் என்னும் முதன்மை முயற்சியோடு, 1. பல நிலை விளக்கங்களைத் தருதல், 2. பல நிலைகளில் சான்று காட்டுதல், 3. ஒத்தும் உறழ்ந்தும் செல்லும் பிற இலக்கண நூற் கருத்துகளையும் பிற உரைக்கருத்துகளையும் எடுத்துரைத்தல், 4. பண்டைக் கால இலக்கியங்களிலிருந்து  சமகால இலக்கியங்கள்  வரை சான்று காட்டி விளக்குதல், 5. குறிப்பிட்ட இலக்கணத் துறை தொடர்பாகப் பிற மொழிச் செய்திகளைக் குறிப்பாக, வட மொழிச் செய்திகளைக் கூறிச் செல்லுதல், 6. பிற துறைசார் அறிவோடு விளக்கம் தருதல்முதலிய செயல்பாடுகளைக் கொடுத்து, ‘ உரை வரைதல் ஒரு தனி அறிவுத் துறையாகவே வடிவம் பெற்றுள்ளது இறுதிப் பத்தியில் தொகுத்துக் கொடுத்துள்ளது (ப.46) சிறப்பானது.
    அவை தொடர்பாக இங்கு மூன்று செய்திகள் குறிப்பிடத்தகுந்தவை:  அ. விளக்கம்; பல நிலைகளில் சான்று காட்டுதல்என்ற இரண்டாவது கருத்தும், ஒத்தும் உறழ்ந்தும் செல்லும் பிற இலக்கண நூற் கருத்துகளையும் பிற உரைக்கருத்துகளையும் எடுத்துரைத்தல் என்ற மூன்றாவது கருத்தும் நூல் பதிப்பு நெறியாகவும் மாறியுள்ளது. உ.வே. சா. குறுந்தொகை போன்ற பல நூல்களின் பதிப்புகளாலும் அறியலாம். குறுந்தொகைப் பதிப்பில்  கருத்து, விசேடவுரை, மேற்கோளாட்சி  என்ற தலைப்புகளைச் சேர்ப்பதற்கு உரை வாசிப்பே காரணம் என்று தெளிவாகிறது.     
    ‘ஒத்தும் உறழ்ந்தும் செல்லும் பிற இலக்கண நூற் கருத்துகளையும் பிற உரைக் கருத்துகளையும் எடுத்துரைத்தல்என்ற மூன்றாவது கருத்தை இன்னொரு நிலையில்  அகநிலை ஒப்பாய்வும் என்றும், ‘துறை தொடர்பான பிற மொழிகளைக் குறிப்பாக வட மொழி செய்திகளைச் கூறிச் செல்லுதல் என்ற   ஐந்தாவது கருத்தைப் புறநிலை ஒப்பாய்வு என்றும் பொதுமைப்படுத்தலாம். 20 ஆம் நூற்றாண்டில் ஒப்பாய்வு என்ற தனி உள்துறை வளர்ச்சிக்கு (Comparative study. அதாவது ஒப்பிலக்கண ஆய்வு, ஒப்பிலக்கிய ஆய்வு) முன்னோடி. அதே சமயத்தில தொல்காப்பியத்திலேயே புறநிலை ஒப்பாய்வுக் குறிப்புகளும் (பிறப்பியல் இறுதி சூத்திரம், களவியல் முதல் சூத்திரம்), அகநிலை ஒப்பாய்வுக் கருத்துகளும் (வேற்றுமை எண்ணிக்கை பற்றிய விளி மரபு முதல் சூத்திரம்) இருப்பதும் சிறப்பாகச் சுட்டிக்காட்டத்தகுந்தது.
    இன்னொரு நிலையில் தாய்மொழிக் கருத்துகளை இந்திய  அளவில் இணைத்தல் என்றும் பொதுமைப்படுத்தலாம்.  இன்றைய சமூகப் பொருளாதார நோக்கில் பேசப்படும் உலகமயமாக்கம் (Globalization) என்ற கருத்தமைவின் முன்னோடியாக, அறிவுத் துறையில் தொல்காப்பியர் காலத்திலேயே இந்தியமயமாக்கம் என்ற நிலையில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.  இதுவே தமிழ்க் கல்வியில் பிற மொழிக் கல்வியில் இடம் பெற்றிருந்தது என்பதைப் புலப்படுத்துவதோடு அதன் தொடர்ச்சியே இருபதாம் நூற்றாண்டில்  தமிழ்க் கல்வியில் ஆங்கிலம் இடம் பெற்றதால்தமிழ் ஆய்வில் மேலை நாட்டு அறிஞர்களின் கருத்துகள்  இன்று மேற்கோளாகக் காட்டப்படுகிறது என்று நாம் புரிந்துகொள்ளலாம்.
      ஆ) உரை ஆய்வில் உரையாசிரியர்கள் கொண்ட பாட பேதத்தையும், கண்ட அதாவது பிற உரையாசிரியர்கள் கொண்ட பாட பேதம் பற்றிய அவர்களுடைய குறிப்புகளையும் ஆராயும்  பாட பேத ஆய்வு என்பது உரை ஆய்வில்  ஒரு புதிய பகுதியாகச் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். நூலாசிரியரே (ப. 225) பேராசிரியர் உரையில் பாடம் கொள்ளப்பட்ட முறை வெளிப்படுகின்றதுஎன்று குறிப்பிடுவதால் இலக்கண உரை ஆய்வில் பாட பேத ஆய்வின் சிறப்பு புலனாகும். எனவே, அது உரை ஆய்வின் ஒரு கூறாகப் பாட பேத ஆய்வைச் சேர்த்துக்கொள்ளலாம்.
     இங்கு இன்னொரு பொது உண்மையும் புதைந்துள்ளது எடுத்துக்காட்டடத் தகுந்தது. அதாவது மூலபாடப் பிரதி  உரையாசிரியரின் பனுவலாக ( text) மாறியே உரை பெறுகிறது  என்ற வாசிப்புக் கோட்பாட்டாளர் கூறும் பொது உண்மையும் இங்கு அடங்கியுள்ளது. ஏனெனில்  பாட பேதத்தை ஒட்டியே  சில உரைக்கருத்துகளும்  சில கருத்து மாறுபாடுகளும் அமைகின்றன என்பதும், மூல பாடம் பற்றிய அவர்களின் மனப்பாங்கும்   பிறர் கொண்ட பாடம் பற்றியும் அவர்கள் மதிப்பீடும் புலனாகின்றன  என்பதும்  சுட்டிக்காட்டத் தகுந்தவை. தங்கள் கருத்துக்கு ஏற்ப புதிய பாடத்தை உரையாசிரியர்கள் உருவாக்குகிறார்கள் (பாடப் படைப்பு) என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
    இளம்பூரணருக்குப் பின், கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுக்குப் பின் வந்த சேனாவரையர், பேராசிரியர் ஆகியவர்களுக்குப்  புதிய மூலச்  சுவடிக் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை. இருந்தும், தொல்காப்பிய மூல பாடம் பற்றிய  அவருடைய மதிப்பீடே அவர்களைப் புதிய  பாடம் கொள்ளத் தூண்டியிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. அது பாடப் படைப்பு என்று இன்று பேசப்படுகிறது.  உதாரணமாகத் தொல்காப்பியச் செய்யுளியலில் ( 227) ‘சின்மென் மொழியால்’  என்று இளம்பூரணர் உரையில் தொடங்கும் அம்மை பற்றிய சூத்திரம் பேராசிரியர் உரையில் வனப்பியல் தானே வகுக்குங்காலை’  என்பது கூடுதலாக முதல் அடியாகத் தொடங்குகிறது. அதாவது வனப்பியல் தானே வகுக்குங்காலை’  என்பது பேராசிரியரின் பாடப் படைப்பு என்று நாம் புரிந்துகொண்டால், அதற்கான காரணத்தை ஆராயத் தூண்டுகோல் ஏற்படும்.   
       இளம்பூரணருக்குப் பின், கிட்டத்தட்ட  இரண்டு நூற்றாண்டுக்குப் பின் வந்த பேராசிரியருக்குப் புதிய மூலச்சுவடிக் கிடைத்து அந்தப் புதிய பாடத்தைக் கொண்டிருக்க மாட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.  தொல்காப்பிய மூல பாடம் பற்றிய  அவருடைய மதிப்பீடே புதிய  பாடம் படைக்கத் தூண்டியிருக்க வேண்டும் என்று கருத வேண்டியிருக்கிறது. அது நம்மை மூலபாடம் பற்றிய பேராசிரியர் வாசிப்பை அறியத் தூண்டுகிறது. 
       தொல்காப்பியர் செய்யுளியல்  முதல் சூத்திரத்தில் 26 உறுப்புகளை முதலில் பட்டியலிட்டு வண்ணமொடு யாப்பியல் வகையின்’  என்ற கூறி  அந்த 26 உறுப்பு களுக்கும் யாப்புஎன்று பொதுக் பெயர் கூறியவர்அடுத்த  8 உறுப்புகளைப் பட்டியலிட்டு பொருந்தக் கூறிய எட்டொடும் தொகைஇ’   என்று மட்டும் கூறி அதற்குப் பொதுப் பெயர் எதுவும் கொடுக்காதது குறை  என்று கருதியே பேராசிரியர்  எண் வகை வனப்பு’  என்று முதல் சூத்திர உரையில் குறிப்பிட்டதோடு, அதை நியாயப்படுத்தும் வகையில் எட்டு வனப்புகளில் முதலாவதான அம்மை பற்றிய சூத்திரத்தில்  மேலே குறிப்பிட்டபடி வனப்பியல் தானே வகுக்குங்காலை …’ என்பது அடிகளைப்  பாடப் படைப்பாக சேர்த்ததோடு உரையிலும் வனப்பியல் தானே வகுக்குங்காலை சின்மென் மொழியாற் றாய பனுவலின் ’  என்று மீண்டும் மேற்கோள் காட்டிப் பாடமாக உரைத்தாம் என்க’  என்ற விளக்கமும் அளித்துள்ளார். இங்கு பாடமாக உரைத்தாம் என்கஎன்ற தொடர் கவனத்திற்குரியது. அதாவது மூல நூலில் குறை இருக்கக் கூடாது, இருந்தால் உரையாசிரியர் பாடப்படைப்பு செய்து குறையைப் போக்கலாம்  என்பது பேராசிரியருடைய உரைக் கோட்பாடாகக்  கொள்ளலாம்.
   பேராசிரியர் மூல நூலான தொல்காப்பியத்தையும்  அதன் ஆசிரியரையும் எவ்வளவு தூரம் மதிப்பவர் என்பதற்குப் பலரும் காட்டும் உதாரணத்தால் அறியலாம்.
     உயிர்களை ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர்  என்று தொல்காப்பியர் பாகுபடுத்தி, அவைகளைப்  பட்டியிலிடும்போது நண்டை நாலறிவுயிராகக் குறிப்பிட்டுள்ளார் (மரபு.31). ஆனால் நண்டுக்கு மூக்குணர்வு அதாவது நாற்றத்தை உணரும் உணர்வு  உண்டோ என்று பேராசிரியரை ஒருவர் கேட்க,  ‘நண்டிற்கு மூக்கு உண்டோவெனின் அஃது ஆசிரியர் கூறலான் உண்டது என்பது பெற்றாம் ’  என்று பதில் சொல்லியுள்ளதால் அவர் மூல நூலாசிரியரிடத்து எவ்வளவு பற்று வைத்திருக்கிறார் என்று புலனாவிடுகிறது. எனவே பாட பேத ஆய்வும் உரையாசிரியரைப் பற்றிச் சில உண்மைகளைப் புலப்படுத்தும்.
   இ)  உரை நூல்கள் சிறந்த இலக்கியத் திறனாய்வு நெறிகளைக் கொண்டாடப்பட்டாலும் உரையில் இலக்கண/ இலக்கியக் கோட்பாடுகளின் ஆணிவேர் இருப்பது கண்டுபிடித்து புதிய கருத்தமைவுகளைப் பரிந்துரைக்கும் முறை குறைவாகவே காணப்படுகிறது. எனவே இலக்கண உரையின் ஒரு நெறியாக புதிய கருத்தமைவுக்கான ஆணிவேர்களைக் காணுதல் என்ற கருத்தும் சேர்க்கப்படவேண்டும்.  பேராசிரியர் குறிப்பிட்ட யாப்புசார் சில புதிய கருத்துகள் பின்பகுதியில் காட்டப்படும். 
      யாப்பியல் உரை என்னும் இரண்டாவது இயல்,  ‘கி. பி. 11ஆம் நூற்றாண்டு தொடங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை யாப்பிலக்கணத் துறைக்கு வளஞ் சேர்க்கின்றன’ (ப. 51) என்று குறிப்பிட்டு, அந்த நூல்களின் பட்டியலை அதே பக்கத்தில் கொடுத்துள்ளார். அதாவது  32 இலக்கண உரை நூல்களில் யாப்பு உரைநூல்களாக 13நூல்களே அமைந்துள்ளன. அந்த நூல்களின் வரலாறுகள் இந்த இயலில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதே சமயத்தில் இங்கு யாப்பு என்ற தனி இலக்கணப் பிரிவு ஏற்பட்டது பற்றி யாப்பு உரையாசிரியர்களாலேயே கேள்விக் குறி ஆக்கப்பட்டிருப்பது இந்த இயலில் எடுத்துக்காட்டப்பட்டிருப்பதும் யாப்பியல் நூல்களைப் பற்றி ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது.
     பேராசிரியர் (செய்யுளியல் நூ. 1 உரை) யாப்பைத் தனி அதிகாரமாக ஆக்கினால் வழக்கு அதிகாரம் என்று இன்னொரு தனி அதிகாரம் ஆக்க வேண்டும் என்றும் கூறியதோடு அது  தொல்காப்பியர் கருத்துக்கு மாறுபட்டதுஎன்று கூறியிருப்பதைச் செய்யுளியலும் பேராசிரியரும் என்ற தலைப்பில் நூலாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார். அதன் உள்கிடை என்ன என்ற கேள்வி எழுகிறது (ப. 75). தமிழ் இலக்கண  மரபில் யாப்பு வடிவம் சார்ந்ததாக மட்டுமே முன்னெடுக்கப்படவில்லை. யாப்பியல்  என்பது இலக்கியத்தின் முழுமை நோக்கிய தன்மையாக முன்னெடுக்கப்பட்டது. எனவே யாப்பு என்பது அடிப்படையில்  ஒரு கோட்பாடாகக் கருதப்பட்டது ’  என்று நூலாசிரியரே முன்னுரையில் (ப. 6) கூறியிருப்பது பேராசிரியர் கருத்துக்கு ஆதரவு போல உள்ளது.  
   பிற்காலத்தில் யாப்பிலக்கணம் என்று கருதப்படும் நூல்கள் பெரும்பான்மையும் வடிவ ஆராய்ச்சியிலேயே கவனம் செலுத்தியுள்ளன. தொல்காப்பியர் செய்யுள் உறுப்புகளில் ஒன்றாகக் குறிப்பிட்ட யாப்புஎன்ற உறுப்பு, வடிவமும் பொருளும் ஒருங்கிணைகிற முறையைப் பற்றி பேசுகிறது. அந்த நிலையில்  பின் வெளிவந்த யாப்பு இலக்கணங்கள்  பிற்காலத்தில் தமிழ் பாடல்களில் ஏற்பட்ட  வடிவ வளர்ச்சியை அறிந்துகொள்ள உதவும் நூல்களாகவே அமைந்துவிட்டன. தமிழ்க் கவிதையைச் சுவைக்கவும், பொருளும் வடிவமும் இணைகிற முறைகளை அறிவதும் யாப்பின் பகுதியே ஆகும்.  எனவே அந்த நிலையில் யாப்பு நூல்கள்  உருவாக்கப்பட வேண்டும. அந்தத் தேவையை நிறைவேற்றும் விதத்தில் அவை  அமையவில்லை என்ற குறை ஏற்படுத்தி விடுகிறது. அதனால் இந்த நூற்றாண்டு  புதுக்கவிதைகளில்  யாப்பு இல்லை என்று பரவலாகக் கருதப்படுவது சிலரால் மறுக்கப்பட்டாலும், பாடுபொருளில் புதுமை இல்லாமல் வெறும் யாப்பு இலக்கணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கவிதை எழுதப்பட்டதும் கவிதை ஆய்வு என்பது வெறும் யாப்பாய்வு என்று சுருக்கப்பட்டுவிட்டது என்பதைப் புலப்படுத்துவதாகக் கொள்ளலாம்.  
     அடுத்த மூன்று இயலும் யாப்பருங்கல விருத்தியுரையும் யாப்பருங்கலக் காரிகை யுரையும்     ( 3வது இயல்), தொல்காப்பியச் செய்யுளியல் உரைகள் (4வது இயல் ), பிற யாப்பியல் உரைகள் (5வது இயல்) ஆகிய மூன்றும் உரை நெறி என்ற முறையில் சிறப்பாகவும் தெளிவாகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் பொதுவாகப் புதிய யாப்பியல் கருத்துகளுக்கு  உரையாசிரியரின் பங்கு சரியாகக்  கவனப்படுத்தப்படவில்லை. அதைக் கவனப்படுத்தும் வகையில் யாப்பருங்கல விருத்தி உரையிலிருந்தும், பேராசிரியர் செய்யுளியல் உரையிலிருந்தும் ஒவ்வொரு உதாரணம் காட்டப்படும்.
   யாப்பருங்கலம்தொடை என்பதை அடி இரண்டு இயையத் தோன்றும்’  (சூ.33) என்ற இலக்கணம்,   ஒரு அடிக்குள்ளும் ( பொழிப்பு, ஒரூஉ போன்றவை) தொடை அமைந் துள்ளதால், குன்றக் கூறல் என்று குற்றத்துக்கு ஆளாகிறது. அதை உணர்ந்த உரையாசிரியர்காக்கைபாடினியார் தொடை இலக்கண சூத்திரத்தை அப்படியே எடுத்துக்காட்டியதில் அடியொடு அடியிடை யாப்புற நிற்கும் என்ற அடி உள்ளதால் தொடை  ஒரு அடிக்குள்ளும் அடிகளுக்கு இடையேயும் வரும் என்ற கருத்து பெறப்பட்டு மூல நூலில் உள்ள குறை  நீக்கப்பட்டுவிடுகிறது. மேலும் அடுத்த சூத்திரத்தில் யாப்பருங்கல ஆசிரியர் 13தொடைகளை வெறும் பட்டியிலிட்டுக் கூறியதை உரையாசிரியர்  ஒரு சார்த் தொடைகளது பெயரும் அவற்றின் விகற்பமும் உணர்த்துதல்என்று இரண்டு வகைப்படுத்திச் சூத்திர பொருளை விளக்கும்போதே குறிப்பிட்டு, அதன் பொழிப்பு என்பதிலும் மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை  என்று இவை ஐந்தும்அடி, இணை, பொழிப்பு. ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று  என இவற்றொடு பொருந்தி அவை ஓரோவொன்று எட்டு வகைப்பாட்டைச் சொல்லுதும்’   என்று கூறுவதால்அடிக்குள்ளும் அடிகளுக்கு இடையேயும் வரும் தொடைகள் மாறுபடுவதைச் சுட்டிக்காட்டி  மூல நூலின் குறையை நீக்கியதோடு தொடை மேலாய்வுக்கு உரையாசிரியரும் பங்கு ஆற்றியுள்ளதைப் புலப்படுத்திவிடுகிறார்.  
   யாப்பருங்கலம் ஒழிபியலில் வகையுளி என்பதை வழுக்கா வகையுளி சேர்த்தலும்’ (சூ.95. 4) என்று மட்டுமே கூறஉரையாசிரியரே வகையுளி என்பது முன்னும் பின்னும் அவை முதலாகிய உறுப்புக்கள் நிற்புழி அறிந்து குற்றப்படாமை வண்ணம் அறுத்தல்என்று விளக்கி அதற்கு உரிய உதாரணங்களைக் கொடுத்துள்ளதோடு, கோட்பாட்டு நோக்கில் ஒரு உதாரண சூத்திரத்தையும் கொடுத்துள்ளார். வகையுளி என்ற கருத்தமைவு தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் கவிதைக் கட்டமைப்பில்  காணப்படும் ஒரு உண்மை ஆகும். எனவே விருத்தி உரை அசை வகையுளி, சீர் வகையுளி ஆகிய இரண்டு வகைக்கே உதாரணம் கொடுத்து உரைச்சூத்திரம் மூலம் அடி வகையுளியையும் குறிப்பிட்டது சிறப்பானது.
கடியார்பூங் கோதை கடாயினான் திண்டேர்
சிறியாடன் சிற்றில் சிதைத்து (குறுந்தொகை – 28)
என்ற வெண்பாவில் பூங்கோதை என்ற சொல் தனிச் சீராக  அமைத்தால் வெண்பாவுக்கு உரிய தளைதட்டும் என்பதால் இரண்டு சீராக  அமைத்து தளைதட்டாமல் போற்றப் பட்டிருப்பதால் அது சீர் வகையுளி என்பது அவருடைய கருத்து.  நெறிநின்றார் நீடுவாழ் வார்என்ற குறள் அடியில் (3) வாழ்வார் என்று இரண்டு சீரின் பகுதியாக அமைந்துள்ளதும் சீர் வகையுளியே. சங்க இலக்கியத்திலும் சீர் வகையுளியைக் காணலாம். முட்டு வேன்கொல் தாக்கு வேன் கொல் ( )  என்ற குறுந்தொகை முதல் அடியில் முதல் சீரிலேயே வகையுளி அமைந்துள்ளதையும் யாயும்  ஞாயும் யாரா கியரோஎன்ற பாடலில் (குறுந். 40) முதல் அடியில் கடைசி சீரில் வகையுளி அமைந்துள்ளதையும் காணலாம்.
பாடுநர்க்கும் ஆடுநர்க்கும் பண்டுதாம் கண்டவர்க்கும்
என்ற நேரிசை வெண்பா அடியில் பாடு + நர்க்கும், ஆடு + நர்க்கும் பண்டுதாம்  கண்டவர்க்கும்  என்று நிறுத்தி வாசிக்கப்படுவதால் முதல் இரண்டு சீரின் அசை அமைப்பான  நேர்நிரைநேர் என்பது வாசிக்கும்போது  நேர்நேர், நேர்நேர் என்று அமைவதால் அசைவகையுளி என்பது கருத்து. வாயிலோயே வாயிலோயே என்ற புறநானூற்று அடி ( 216. 1) ஒவ்வொன்றும் இரண்டு இரண்டு சீராக அமைக்கப் பட்டிருக்கிறது. தனிச்சொல் என்ற முறையில் அது நேர்நிரைநேர் என்ற மூவகைச்சீராக அமையும். ஆனால் அது இரண்டு சீராக அமைக்கப்பட்டிருப்பதால் ( வாயி + லோயே) நேர்நேர் + நேர்நேர் என்று ஈரசைச் சீராக அமைகிறது. எனவே இதனை இலக்கியத்தில் அசைவகையுளிக்குரிய உதாரணமாகக் கொள்ளலாம்.
தொல்காப்பியரே ஆசிரியப்பாவில் வெண்சீரும் ( செய்யுளியல் .29) வஞ்சியுரிச்சீரும்          ( செய்யுளியல். 30) வரும் என்பதால் மூவசைச்சீராகவும் கொள்வதற்கு இடமிருக்கிறது. ஆனால் புலவர் கருத்து அழுத்தத்திற்காக அதை ஈரசைச்சீராக அமைத்திருக்கிறார். எனவே அசைவகையுளி என்பதும் கவிதை உருவாக்கத்தில் பங்கு கொள்கிறது. முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல் (  ) என்ற குறுந்தொகைப் பாடலுக்கும் இந்தக் கருத்து பொருந்தும்.
ஆனால் இங்கு காட்டிய உரைச் சூத்திரத்தில் கூடுதலாக அடி வகையுளியும் கூறியிருப்பது அறிஞர்கள் கவனத்தைக் கவர்ந்து சங்க இலக்கியத்திலும் பிற இலக்கியங்களிலும் அடி வகையுளி இருப்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது ( செ.வை. சண்முகம், யாப்பும் நோக்கும் ப. 55).
நீயே பிறர்ஓம்புறு மறமன்னெயில்
ஓம்பாது கடந்தட்டுஅவர்
முடிபுனைந்த பசும்பொன்நின்
அடிபொலிய கழறைஇய’ ( புறநானூறு. 40)
இங்கு 2வது, 3வதுஅடிகளில் அடி வகையுளிகள்  உள்ளன. காரணம் அந்த அடியில் பொருள் முற்றுப் பெறாமல் அடுத்த அடிக்குச் சென்று பொருள் முற்றுப்பெறுவதுதான். 2வது அடியில் பொருள் உள்ள அவர்அடுத்த அடியிலுள்ள முடிபுகனைந்தஎன்ற தொடரோடு இணைந்துதான் பொருள் முற்றுபெறுகிறது. இடைக்கால, தற்காலப் பாடல்களிலிலும் ( பாரதியார், பாரதிதாசன் பாடல்களிலிலும் ) அடி வகையுளி வந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது. அது பெரும்பான்மையும் அடியின் ஓசை இனிமைக்குக் காரணமாகும். அது ஆங்கில மொழி யாப்பிலும் காணப்படுவதும் அவர்கள் என்ஜாம்பென்ட் (Enjambent) என்று அழைக்கப்படுவதும் வகையுளி உலகப் பொதுமையானது என்று புலப்படுத்துகிறது. 
             பேராசிரியர் செய்யுளியல் உரை கவிதைக் கலையைப் பற்றி வரன்முறையாகவும், நுட்பமாகவும் சிறந்த மேற்கோள் தந்து ஆராய்ச்சித் திறனோடு விளக்குகிறார்என்று பொதுநிலையில் பாராட்டுவதோடு (ப. 73) நின்றுவிடாமல் தரவு அடிப்படையில்  அவைகளை இனம்காண முயல வேண்டும். உதாரணமாக, நோக்கு பற்றிய  செய்யுளியல் சூத்திர உரையில் ( 103) ‘முல்லை வைந்நுனை தோன்ற என்ற 17 அடி அகநானூற்றுப் பாடல் முழுவதும் எடுத்துக்காட்டி
‘’முல்லை என்பது முதலாக கானம் (7 வது அடி வரை) என்பது ஈறாக .. பருவங் காட்டி வற்புறுக்கும் தோழி பருவந் தொடங்கிய  துணையே காண் என்று வற்புறுத்தினாள் என்பது, ’உவக்காண்  தோன்றும் குறும்பொறை நாடன்என்னும் துணையும் ( 8 முதல்  13 அடி வரை) தலைமகனது காதல் மிகுதி கூறி வற்புறுத்தினாள்என்பது நோக்கி உணரவைத்தான் என்பது, ஒழிந்த அடிகாறும் (14 முதல் 17 அடி வரை) பிரிந்த  காலம்  அணித்தெனக் கூறி வற்புறுத்தினாள் என்பது  நோக்கி உணரவைத்தான் எனப்படும்என்று விளக்கியிருப்பது அந்தப் பாட்டில் மூன்று கருத்துகள் இருக்கின்றன என்று எடுத்துக்காட்டுவதாகும். அதாவது   ஒரு பாட்டைக் கருத்து அடிப்படையில் சில கூறுகள் கொண்டதாகக் கருதுவது என்ற உண்மை எல்லாப் பாடல்களுக்கும் பொருந்தும் பொது உண்மையாகக் கொள்ளலாம் என்று பொதுமைப்படுத்தும்போது ஒரு புதிய கருத்தமைவாக மாற்றப்படுகிறது எனலாம்.  இப்போது  அது கருத்தன் என்று பெயரிடப்பட்டுக்  குறிப்பிடப்படுகிறது (பார்க்க சண்முகம், 1998, இலக்கியமும் மொழி அமைப்பும் ப. 282, யாப்பும் நோக்கும் ப.105). இங்கு கருத்தன் என்பது சீர், அடி, கருத்தன், பாட்டு என்ற முறையில் ஒரு  யாப்பு உயர் உறுப்பாகக் கருத வைக்கிறது.  முரண் தொடை அமைந்த பாடல்களில் எந்தக் கருத்தனுக்கு அதிக அடி அமைக்கப்பட்டிருக்கிறது என்பது (அடி எண்ணிக்கை மாறுபாடு) உளவியல், தத்துவம், சமூகவியல் உண்மைகளைப் புலப்படுத்துவதாகவும் உணரப்பட்டுள்ளது.
    எனவே உரைகளை ஆராயும்போது  உரையாசிரியர்கள் கூறியவைகளில் உள்ள பொதுமை பொதிந்த இடங்களை அடையாளம் கண்டு புதிய கருத்தமைவுகளை உருவாக்க முன் வரவேண்டும். 
     ‘உரை வரைதல் ஒரு தனி அறிவுத் துறையாகவே வடிவம் பெற்றுள்ளதுஎன்று நூலாசிரியரே முதல் இயலின் இறுதிப் பத்தியில் கூறுவது (ப. 46) ‘உரையியல்என்று பொதுநிலை ஆராய்ச்சிக்கான அடிப்படை எனலாம். உலகளாவிய நிலையில் உரைக் கோட்பாட்டை ஆங்கிலத்தில் ஹெர்மெனிடிக்ஸ் (Hermeneutics = science of interpretation) என்று வழங்குவதும் குறிப்பிடத்தகுந்தது. அதைத்  தமிழில் உரையியல் என்று அழைக்கலாம். அதன் ஆணிவேர் தொல்காப்பியத்திலும், உரை நூல்களிலும் புதைந்துள்ளன. தொல்காப்பியரே நூல், உரை என்று வேற்றுநிலை வழக்கில் கையாண்டுள்ளது, உரை பற்றி மரபியலில் பல சூத்திரங்கள் கோட்பாட்டு நிலையில் கூறியுள்ளது, 9ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டு வரை  32 இலக்கண உரை நூல்கள் தோன்றியுள்ளது என்னும்போது தமிழரின் சிந்தனை மரபின் ஒரு கூறாகஉரையியல் என்ற உரைக்கோட்பாடும்  மேற்கொள்ளப்பட வேண்டும்.
       பொதுவாகத்  தமிழில் உரைநெறிஉரைப்போக்கு என்ற முறையில்  உரை வரலாறு ஆராயப்படுகிறதே அல்லாமல் பொதுநிலையில் அதாவது தமிழ் உரை வழி அறியப்படும் உரைக் கோட்பாட்டு என்ற முறையில் உரையியல் ஆராய்ச்சி குறைவு.
     இந்த நூலில் முன்னுரையில் குறித்துள்ளபடிஉரை ஆய்வு தனி ஆய்வாக  1968இல் அரவிந்தன் தொடங்கிய பொதுநிலை ஆய்வு (உரையாசிரியர்கள்  என்ற நூல் ) தனித்த இலக்கண உரையாசிரியர்கள் ஆய்வாகத் தொடர்ந்து வந்துள்ளதை (அவர் ஆய்வேடு முடியும் வரை உள்ள வெளிவந்துள்ள நூல்களை) பட்டியலிட்டுள்ளார் (ப. 4). மேலும்  ச.குருசாமி  தனித்த இலக்கண உரையாசிரியர்களின் ஆய்வாக  இளம்பூரணர் உரைநெறி (2007), சேனாவரையர் உரைநெறி (2007), பேராசிரியர் உரைநெறி (2008), நச்சினார்க் கினியர் உரைநெறி (2008) என்ற நூல்களையும்ரா. செயராமன் சேனாவரையர் உரை நெறி என்ற நூலையும் (1998இல் எழுதியது 2007இல் வெளியீடு) வெளியிட்டுள்ளார்கள். எழுத்து, சொல், பொருள் (குறிப்பாகச் செய்யுளியல்)  ஆகிய தொல்காப்பிய உரைகளில் புதைந்து கிடக்கும் உரையாசிரியர்களின்  அந்தந்தப்  பொருள் பற்றிய கோட்பாடுகள் எழுத்திலக்கணக் கோட்பாடு, சொல்லிலக்கணக் கோட்பாடு, பொருளிலக்கணக் கோட்பாடு என்ற நூல்களில் ஆராயப்பட்டிருப்பதும் குறிப்பிடத் தகுந்தது. எனவே இலக்கண உரையாசிரியர்களின் வழித்  தமிழ் உரையியல் என்ற கோட்பாட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.  அந்த ஆய்வின் தொடக்கத்துக்கு முன்னோடியாகத் தமிழ்  இலக்கணத்தின் ஒரு பகுதியான யாப்பு உரைநெறியாகத் தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு என்ற இந்த நூல் வருவது வரவேற்கத்தகுந்தது. ஆசிரியருக்கு என் வாழ்த்துகள், பாராட்டுகள்.    

1 comment: