முனைவர் பா. ரா.
சுப்பிரமணியன், பா. இளமாறன்
பிறமொழியை நாம் கற்கும்போதும்
நம் மொழியைப் பிறருக்குக் கற்பிக்கும்போதும் அந்தந்த மொழியின் இலக்கணத்தை அறிந்துகொள்வது
என்பது மிக அடிப்படையானது. இலக்கணத்தை அறிந்துகொண்டதுடன் சொல்வளத்தைப் பெருக்கிக்கொண்டாலும்
மொழி நம் வசமாகி விடுவதில்லை. இலக்கணத்திற்கும்
சொல்வளத்திற்கும் அப்பால் அறியவேண்டிய நுட்பங்கள் சில உள்ளன. இந்த நுட்பங்களை அறிந்துகொண்டால்தான்
மொழியை எழுதுவதும் பேசுவதும் மிக இயல்பானதொன்றாக அமையும்.
இக்காலத்
தமிழில் ‘ஒரு செயலை நிகழ்த்துதல்’ என்னும் கருத்தைத்
தரக்கூடிய வினைச்சொற்களான செய்/ புரி/ இழை ஆகிய மூன்றும் ‘குற்றம்’ என்ற பெயர்ச்சொல்லோடு இணைகின்றன.
குற்றம் செய்
குற்றம் புரி
குற்றம் இழை
‘உதவி’ என்னும் பெயர்ச்சொல்லோடு
செய்/புரி என்னும் இரு வினைச்சொற்கள் இணைகின்றன.
உதவி செய்
உதவி புரி
‘இன்னல்’ என்னும் பெயர்ச்சொல்லோடு
இழை என்னும் வினை பொருத்தமாக இணைகிறது.
இன்னல் இழை
செய்/ புரி/ இழை ஆகிய
மூன்று வினைகளும் ‘குற்றம்’, ‘உதவி’, ‘இன்னல்’ என்னும் மூன்று பெயர்ச் சொற்களோடு இணையும்போது ஒன்றில் (குற்றம்)
மூன்றும்,
மற்றொன்றில் (உதவி)
இரண்டும்,
இன்னொன்றில் (இன்னல்)
ஒன்றும் மட்டும் வருவதே இயல்பாக உள்ளது. இவ்வாறு வருவது மரபு வழிப்பட்ட இயல்பான தன்மை
என்பதோடு பொருத்தம் மிக்கதாகவும் உள்ளது.
“உதவி இழைத்தான்” என்று கூறுவதும், “இன்னல் புரிந்தான்” என்று கூறுவதும் மொழியின் இயல்பான தன்மைக்கு
மாறாக அமைந்துவிடுகிறது. எந்த பெயர்ச்சொல்லிற்கு எந்த வினைகள் பொருத்தமானதோ அல்லது
பொருத்தமாக இணைகிறதோ அந்தச் சொற்கூட்டைத்தான் ‘சொற்சேர்க்கை’ எனக் கூறுகிறோம்.
பிறமொழி கற்கும்போது இந்த சொற்சேர்க்கைகளின்
தேவையை நாம் உணர்கிறோம். எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் மழைக்கும் காற்றுக்கும் அவற்றின்
மிகுதியைக் காட்ட அடை தரும்போது வெவ்வேறு அடைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. Strong wind, heavy rain என்பதுதான் ஆங்கிலமொழியின் சொற்சேர்க்கை. இதை மாற்றி heavy wind, strong
rain என்று கூறுவது ஆங்கில
மொழியினுடைய சொற்சேர்க்கையை மீறியதாக ஆகிவிடும். ஆனால் தமிழில் இரண்டிற்குமே ‘பலத்த’ என்பது அடையாக (‘பலத்த மழை’, ‘பலத்த காற்று’) அமைகிறது. ஒவ்வொரு மொழிக்கும் இயற்கையான சொற்சேர்க்கைகள்
உண்டு என்பதை இச்சிறிய எடுத்துக்காட்டு நமக்குப் புலப்படுத்துகிறது.
மொழியில் பல வகையான சொற்சேர்க்கைகள் உள்ளன.
சில பறவைகள்,
சில விலங்குகள் எழுப்பும்
ஒலிக்குக் குறிப்பிட்ட சில வினைகளை இக்காலத்தமிழில் பயன்படுத்துகிறோம். இந்தக் கட்டுரையின்
தலைப்பான ‘மயில் அகவும், குயில் அகவுமா’ என்பதில் ‘மயில்தான் அகவும், குயில் அகவாது’ என்னும் விடை தொக்கிநிற்கிறது.
‘மயில் அகவும்’, ‘குயில் கூவும்’, ‘புலி உறுமும்’ ‘குதிரை கனைக்கும்’ போன்ற சொற்சேர்க்கைகள்
தவிர வேறு எத்தனையோ சொற்சேர்க்கைகளும் இக்காலத் தமிழில் உள்ளன. கட்டுரையின் தொடக்கத்தில்
காட்டிய ‘குற்றம்’, ‘உதவி’, ‘இன்னல்’ என்பவற்றில் இணையும்
வினைகளைக் காட்டினோம். ‘பலத்த’ என்னும் அடை ‘மழை’, ‘காற்று’ ஆகிய இரண்டிற்குமே பொருந்துவதாக இருப்பதையும்
காட்டினோம். எனவே, மொழியில் பெயருக்கு ஏற்ற வினை, பெயருக்கு ஏற்ற அடை, வினைக்கு ஏற்ற அடை
எனச் சொற்சேர்க்கைகளை இனம்காண முடியும்.
இக்காலத் தமிழில் வழங்கும் சொற்சேர்க்கைகளுக்கு
நாங்கள் ஓர் அகராதி உருவாக்கிவருகிறோம். இக்காலத்தில் வழங்கும் சொற்சேர்க்கைகளுள்
சில தமிழின் முதல் இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டில் உள்ளனவா, அன்று முதல் இன்று
வரை தொடர்கின்றனவா என அறிய முற்பட்டோம்.
சங்க இலக்கியச் சொற்சேர்க்கைகள் சிலவற்றைத் தொகுத்தபோது இக்காலச் சொற்சேர்க்கைகள்
அன்றும் இருந்தன. அவை இன்று வரை தொடர்கின்றன என்னும் தகவல்கள் அறியக் கூடியதாக இருந்தன.
சங்க இலக்கியங்களில் வழங்கிய சில சொற்சேர்க்கைகள் இன்று வழக்கில் இல்லை என்பதும் சிலவற்றில்
சொற்கள் மாறிவிட்டன என்பதும் மேலும் தெரியவந்த தகவல்கள் ஆகும்.
இவற்றுள் சில சொற்சேர்க்கைகளை இந்தக் கட்டுரையில்
காட்டி விளக்க முற்படுகிறோம்.
அன்று முதல் இன்று
வரை
இன்றளவும் தொடரும் சொற்சேர்க்கைகளாகப் பின்வருவன
உள்ளன: கனவு காணுதல் என்னும் இணை கலித்தொகையில் (‘கனவுகொல் நீ கண்டது’ 90:21, ‘கண்ட கனவு’ 90:23), வழங்கியுள்ளது.
இக்காலத்தில் நகரத்தில் யாரும் தயிர் கடைவது
இல்லை என்றாலும் ‘தயிர் கடைதல்’ என்னும் சொல் இணை
இன்றும் வழக்கில் உள்ளது. அந்த இணையை அகநானூற்றிலும் (‘தீம் தயிர் கடைந்த
திரள் கால் மத்தம்’ 87:1), கலித்தொகையிலும் (‘பல் ஊழ் தயிர் கடையத் தாஅய புள்ளி’ 106:37) காண்கிறோம். பெரும்பாணாற்றுப்படையில்
‘உறை அமை தீம் தயிர்
கலக்கி’
(158) என ‘கடைதல்’ வரும் இடத்தில் ‘கலக்குதல்’ வந்துள்ளது. நச்சினார்க்கினியர்
இந்த அடிக்கான உரையில் கலக்கி என்பதற்கு ‘கடைந்து’ என்றே பொருள் தந்துள்ளார்.
நாய் குரைத்தல் என்னும் சொல் இணையும் சங்க
இலக்கியங்களில் காணப்படுகிறது. பத்துப்பாட்டில் சிறுபாணாற்றுப்படையிலும் (‘புனிற்று நாய் குரைக்கும்
புல்லென அட்டில்’
132), குறிஞ்சிப்பாட்டிலும்
(‘கதநாய் குரைப்பினும்’ 240) வழங்கியுள்ளது. அகநானூற்றில்
நாய் என்பதற்குப் பதிலாக ஞமலி என்னும் ஒத்தசொல்லுடன் இந்த வினைச்சொல் இணைந்துள்ளது
(‘ஞமலி குரைப்ப’ 140:9).
பொய் என்னும் பெயர்ச்சொல்லோடு தற்காலத்
தமிழில் மிகுதியாக இணைந்துவரும் வினைகள் பேசு, சொல் என்பவை. ஓரளவிற்குக் கூறு என்னும் வினையும்
இணைந்து வருகிறது. சங்க இலக்கியத்தில் ‘பேசு’ என்னும் வினை இடம்பெறவே இல்லை என்பதைப் பலரும்
அறிந்திருக்க மாட்டார்கள். எனவே, ‘பொய் பேசு’ என்னும் இணையைச் சங்க
இலக்கிய நூல்களில் எதிர்பார்ப்பது தவறு. ‘பேசு’ என்னும் வினை இல்லாததால் கூறு, சொல் என்னும் வினைகள்
பொய் என்பதோடு இணைந்துவருகின்றன. பொய் கூறு என்பது புறநானூற்றிலும் (‘பொய் கூறேன் மெய்
கூறுவல்’
136:6), குறுந்தொகையிலும்
(‘வாய்போல் பொய்ம்மொழி
கூறல்’
259:7), கலித்தொகையில் இரு
முறையும் (95:59,
100:8) ஆக நான்கு முறை இணைந்துவருகிறது.
பொய் சொல் என்பது கலித்தொகையில் மட்டுமே இருமுறை (31:23, 33:29) வந்துள்ளது. ஆயினும், சொல் என்னும் பொருளில்
‘வழங்கு’ என்னும் வினை குறுந்தொகையில்
(‘அவர் பொய் வழங்கலரே’ 21:5) இணைந்துவரக் காண்கிறோம்.
மேற்கூறிய நான்கு இணைகளும் (கனவு காணுதல், தயிர் கடைதல், நாய் குரைத்தல், பொய் கூறுதல்/சொல்லுதல்
ஆகிய நான்கும்) சங்க இலக்கியங்களில் பெருவழக்காக இல்லாவிடினும் அவற்றின் சிறுவரவு இக்காலப்
பெருவழக்கிற்குத் தோற்றுவாயாக உள்ளன.
சங்க இலக்கியத்தில் தோற்றம் பெற்ற சில சொற்சேர்க்கைகள்
இன்றளவும் தொடர்கின்றன. வேறு சில சொற்சேர்க்கைகள் சங்க இலக்கியத்தில் பரவலாகக் காணப்பட்டாலும்
அவை தொடர்ந்து வழங்கிவராமல் சங்க இலக்கிய வழக்குகளாகவே நின்றுவிடுகின்றன.
‘வறம் கூர்தல்’ என்னும் தொடர் குறைந்தது
10 முறையாவது சங்க இலக்கியத்தில்
வந்துள்ள ஒரு சொல் இணை. இந்த இணையில் உள்ள இரு சொற்களுமே இக்காலத் தமிழில் வழக்கில்
இல்லாததால் அது தொடராமல் நின்றுவிட்டது. இன்று நாம் இதனை ‘வறுமை அடைதல்/எய்துதல்’ என்னும் இணையால் வழங்குகிறோம்.
இது போன்ற மற்றொரு தொடர் ‘வதுவை அயர்தல்’ என்பதாகும். இன்று
வழங்கும் ‘மணம் புரிதல்’ என்னும் தொடர் இதற்கு
இணையானது. சங்க இலக்கியத்தில் தங்கிவிட்டது, இத்தொடர்.
பறவையை விரட்டுதல் என்பதைச் சங்க இலக்கியத்தில்
‘புள் ஓப்புதல்’ என்றே வழங்கினர். இந்தச்
சொற்சேர்க்கையும் எட்டுத்தொகை நூல்களிலும் பத்துப்பாட்டு நூல்களிலும் வழங்கியுள் ளதைக் காணலாம்.1 காக்கை, குருவி போன்ற பறவைகள் உணவுப் பண்டங்களைக்
கொத்த வருகையில் அவற்றை விரட்டுவது இன்றளவும் நடக்கும் செயல் என்றாலும்
அச்செயலைக் குறிப்பிடும் சங்க இலக்கியச் சொற்சேர்க்கை இக்காலத்தில் வழங்கவில்லை என்பதுதான்
கவனிக்கப்பட வேண்டியது.
துயில் என்னும் பெயருடன்
இணையும் வினைகள்
நிலைபெற்ற சங்க இலக்கியச் சொற்சேர்க்கைகள்
என இனம்காணக்கூடியவை ஒரு வகை; ஒரு பெயர்ச்சொல்லுடன் பல வினைச்சொற்கள் இணைந்துவருவது மற்றொரு
வகை எனலாம். பல வினைச்சொற்கள் இணைகையில் எந்தச் சொல் இணைகள் நிலைபெற்றன அல்லது பெறும்
என அறிய முடியாத நிலையும் உள்ளது.
இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் ‘துயில்’ என்னும் பெயர்ச்சொல்
விளங்குகிறது. சங்க இலக்கிய நூல்களில் இந்தப் பெயர்ச்சொல்லுடன் 22 வினைகள் இணைந்துவருவதைக்
காண முடிகிறது.
அந்த 22 இணைகளின் பட்டியல் கீழே தரப்படுகிறது. ஒவ்வொரு
இணையும் எத்தனை முறை வந்துள்ளது என்பது அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.
1. துயில் மடி (8), 2. துயில் மற (7), 3. துயில் எழு (6), 4. துயில் பெறு (5), 5. துயில் துற (5), 6. துயில் எடுப்பு (4), 7. துயில் அறி (4), 8. துயில் ஏல் (4), 9. துயில் அமர் (2), 10. துயில் இரி (2), 11. துயில் எடு (2), 12. துயில் கொள் (2), 13. துயில் ஆர் (1), 14. துயில் இயம்பு (1), 15. துயில் இயல் (1), 16. துயில் உணர் (1), 17. துயில் செய் (1), 18. துயில் துஞ்சு (1), 19. துயில் முனி (1), 20. துயில் முனை (1), 21. துயில் வதி (1), 22. துயில் வேள் (1).2
இந்தப் பட்டியலில் சங்க இலக்கியத்தில் ஒரு
முறையே வந்துள்ள சொல் இணைகள் - துயில் ஆர்தல் முதல் துயில் வேள் (வேட்டல்) வரை - 10 உள்ளன. இவற்றுள் ஒன்றுகூட
இக்காலத் தமிழில் வழங்கவில்லை. அடுத்து, இரு முறை வந்துள்ள சொல் இணைகள் - துயில்
அமர் முதல் துயில் கொள் வரை - 4 உள்ளன. இவற்றுள் துயில் கொள் என்னும் இணை இன்று ஓரளவிற்கு
அறியப்பட்ட இணை என்று கூறலாம். நான்கு முறை வந்துள்ள துயில் எடுப்புதல், துயில் அறிதல், துயில் ஏற்றல் என்பனவும்
தற்காலத் தமிழில் அறியப் பெற்றவையாக இல்லை. ஐந்து முறை வந்துள்ள இணைகளுள்
துயில் துறத்தல் என்பது இன்று தூக்கம்
துறந்தேன் என்றால் அறியக்கூடியதாக உள்ளது. ஆறுமுறை வந்துள்ள துயில் எழுதல் என்பது தூக்கத்திலிருந்து
எழுதல் அல்லது துயில் கலைந்து எழுதல் என்றால் இன்று ஏற்புடையதாக இருக்கிறது. ஏழு முறை
வந்திருக்கும் துயில் மறத்தல் என்னும் இணை அதனளவில் புரியக்கூடியதாகவும் தூக்கத்தையே
மறந்தேன் என்றால் உடனே ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது.
சங்க இலக்கியத்தில் மிகுதியாக வந்துள்ள துயில்
மடிதல் என்னும் இணையில் உள்ள ‘மடிதல்’ என்னும் வினை இக்காலத் தமிழில் பொருள் மாற்றம் பெற்றுவிட்டதால்
புரியும்படியாக இல்லை. புறநானூற்றுப் பாடல் 126இல் வந்துள்ள இந்த இணைக்குப் பழைய உரைகாரர்
‘உறங்குதல்’ என ஒரு சொல்லாலேயே
பொருள் தந்துள்ளார். இதனால் ‘மடிதல்’ என்பதற்குப் பொருள் அறியும்படியாக இல்லை. சிறுபாணாற்றுப்படை
154ஆவது அடியில் இடம்பெறும்
இந்த இணைக்கு நச்சினார்க்கினியர் ‘உறக்கத்தே கிடத்தல்’ என்று பொருள் தருகிறார்.
‘மடிதல்’ என்பது துயில் என்பதோடு
இணைகையில் ‘கிடத்தல்’ எனப் பொருள்படும்
என உரையாசிரியர் கருதியதாகத் தெரிகிறது.
சங்க இலக்கிய நூல்களில் துயில் என்னும் பெயர்ச்சொல்லுடன்
இணைந்துள்ள 22 வினைகள் பலவும் இக்காலத்தில்
நிலைபெறவில்லை. சங்க இலக்கியத்தில் ‘துயில் மடிதல்’ இணை மட்டுமே சற்றுப்
பெருவழக்குப் பெற்றிருந்ததாகத் தெரிகிறது.
பொது வினையும் சிறப்பு
வினையும்
“அடிசில் அயின்றார், மிசைந்தார் எனவும்
அணி அணிந்தார், மெய்ப்படுத்தார் எனவும்
இயம் இயம்பினார், படுத்தார் எனவும்
படை வழங்கினார், தொட்டார் எனவும்
பொது வினையால் சொல்லுக.
அடிசில் தின்றார், பருகினார் எனவும்
அணி கவித்தார், பூண்டார் எனவும்
இயம் கொட்டினார், ஊதினார் எனவும்
படை எறிந்தார், எய்தார் எனவும்
ஒருசார்க்குரிய வினையாற் சொல்லின்
மரபு வழுவாம்-”
எனச் சேனாவரையர் தொல்காப்பியச்
சொல்லதிகாரக் கிளவியாக்க நூற்பா ஒன்றிற்கு (‘வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினை கிளவார்’ 46) எழுதியுள்ள உரை உணர்த்தும்
செய்தி ‘அகவுதல்’ என்னும் வினைச்சொல்லைக்
குறித்துக் கூறப்போவதற்குத் தேவையாகிறது.
இக்காலத் தமிழில் மயில் எழுப்பும் ஓசையை ‘அகவுதல்’ என்ற வினையாலும் குயில் எழுப்பும் ஓசையைக் ‘கூவுதல்’ என்ற வினையாலும் குறிப்பிடுகிறோம்.
‘மயில் அகவும்’, ‘குயில் கூவும்’ எனப் பாட நூல்கள் வழியாகக்
கற்பிக்கப்படுகிறது. மயிலுக்கு மட்டுமே அகவுதல், குயிலுக்கு மட்டுமே கூவுதல் பொருந்தும் என்று
கூறினால் அகவுதலும், கூவுதலும் சிறப்பு வினை ஆகின்றன. மயில் கூவும், குயில் அகவும் என மாற்றிக்
கூறினால் மரபை மீறியதாக முடிகிறது, இக்காலத் தமிழில்.
சங்க இலக்கியங்களில் ‘அகவு’, ‘கூவு’ என்னும் இரு வினைகள்
வந்துள்ள இடங்களைத் தொகுத்துப்பார்த்தால் நமக்குக் கிடைக்கும் செய்தி வேறு.
‘அகவு’ என்னும் வினைச்சொல் மயில் (அல்லது மஞ்ஞை)
என்பதோடு 11 முறை இணைந்து வந்திருப்பது3 உண்மைதான். இருப்பினும் அந்த வினை குயில்
எழுப்பும் ஓசையைக் குறிக்க மூன்று முறையும்4, அன்றில் என்னும் பறவை
கூப்பிடுவதைக் குறிப்பிட நான்கு முறையும்5 வந்துள்ளது. இவை தவிர
கழுகு,
கம்புள், புறவு ஆகிய பறவைகள்
எழுப்பும் ஒலிக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.6 மேலும், புள்ளினம், வங்கா, பேடை என்னும் பொதுப்
பெயர்களோடும் இணைந்துவந்துள்ளது.7 குழல் என்னும் இசைக்கருவியும் அகவும் எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது (பட்டி. 156). மனிதருள் பெண்டிரோடும்
தொடர்புபடுத்தப்பட்டுள்ளது (‘அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவ’-மதுரைக்காஞ்சி 166).
‘கூவு’ என்னும் வினைச்சொல் குயில் (அல்லது கோகிலம்)
என்னும் பறவைக்கு உரிய ஓசையாக நான்கு முறை குறிக்கப்பட்டுள்ளது.8 ஆயினும் கூகையோடு
இருமுறையும் மஞ்ஞை, காக்கை, கோழி, கிள்ளை ஆகிய பறவைகளோடு
ஒரு முறையும் இணைந்துவந்துள்ளது.9 நரியோடும் தொடர்புபடுத்தி ஒரு முறை வந்துள்ளது.10
1. சங்க இலக்கியங்களில் அகவுதல் மயிலுக்கு மட்டுமின்றிக்
குயில் உட்படப் பிற
பறவைகளுக்கும், பொதுவாகப் பறவைகளுக்கும்
பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பறவைகள்
அல்லாமல் மகளிர்க்கும் (அரந்தைப் பெண்டிர்) இசைக்கருவி குழலுக்கும்
பயன்படுத்தப்
பட்டிருக்கிறது. ஆக, இந்த வினை ‘ஓசை எழுப்புதல்’ என்னும் பொருளில்
பொதுவினையாக
ஆளப்பட்டிருக்கிறது.
2. இது போன்றே, சங்க இலக்கியங்களில்
கூவுதல் குயிலுக்கு மட்டுமல்லாமல் மயில் உட்பட
வேறு சில பறவைகளுக்கும் விலங்குகளுள் நரிக்கும் பயன்படுத்தப்பட்டிருப்பதை நோக்க
இந்த வினையும் பொதுத்தன்மை உடையதாகவே உள்ளது.
வேறு சில பறவைகளுக்கும் விலங்குகளுள் நரிக்கும் பயன்படுத்தப்பட்டிருப்பதை நோக்க
இந்த வினையும் பொதுத்தன்மை உடையதாகவே உள்ளது.
3. மயில் அகவுதல் என்பது 11 முறை வந்திருப்பதைப்
பார்த்தால் மயிலுக்குரிய சிறப்பு
வினையாகும் தடத்தில் இந்த வினை பயணிக்கிறது என்று கூறலாம்.
வினையாகும் தடத்தில் இந்த வினை பயணிக்கிறது என்று கூறலாம்.
4. கூவுதல் என்னும் வினையும் பறவைகளுள் குயிலோடு
4 முறை வந்திருப்பதை
நோக்க இந்தப்
பறவைக்குரிய சிறப்பு வினை ஆகும் தன்மை காணப்படுகிறது. மேலும் இக்காலத் தமிழில்
கோழிக்கும் உரிய வினையாகக் கூவுதல் உள்ளது. இதன் தொடக்கத்தைப் பரிபாடலில்
(‘கோழி குன்று அதிரக் கூவ’ 8 : 19) காண்கிறோம்.
பறவைக்குரிய சிறப்பு வினை ஆகும் தன்மை காணப்படுகிறது. மேலும் இக்காலத் தமிழில்
கோழிக்கும் உரிய வினையாகக் கூவுதல் உள்ளது. இதன் தொடக்கத்தைப் பரிபாடலில்
(‘கோழி குன்று அதிரக் கூவ’ 8 : 19) காண்கிறோம்.
உட்கொள்ளுதல் குறித்த
சில வினைகள்
இக்காலத் தமிழில் திண்மப் பொருளையும் நீர்மப்
பொருளையும் உட்கொள்வதற்குப் பேச்சில் மிகுதியாகச் ‘சாப்பிடு’ என்னும் வினையும், எழுத்தில் உண் என்னும்
வினையும் பயன்படுகின்றன.
சோறு சாப்பிட்டார்
காப்பி சாப்பிட்டார்
உணவு உண்டார்
கள் உண்டவன்
மேலும், இக்காலத் தமிழில் ‘தின்’ என்னும் வினை திண்மப்
பொருளை உட்கொள்வதற்கும், குடி என்னும் வினை நீர்மப் பொருளை உட்கொள்வதற்கும் பயனாகின்றன.
கரும்பு தின்னக் கூலியா
கள் குடிக்கிறான்.
இவை தவிர உயர் நடையில்
‘அருந்து’, ‘பருகு’ என்னும் வினைகளும்
ஓரளவு வழக்கில் உள்ளன.
இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று
இந்த வினைச்சொற்கள் எவ்வாறு வழங்கின எனப் பார்ப்பது சொற்சேர்க்கைகள் எவ்வாறு திடப்படுகின்றன
என்பதைக் காட்ட உதவும்.
சங்க இலக்கியங்களில் ‘உட்கொள்ளுதல்’ என்னும் செயலைக் குறிக்கப்
பல வினைகள் வழங்குகின்றன. பரவலாக அறியப்பட்ட வினைகளாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்:
உண்ணுதல், மாந்துதல்,
மடுத்தல்,
தின்னுதல்,
அருந்துதல்,
பருகுதல்,
குடித்தல்.
மேற்காட்டிய வினைகளில்
‘சாப்பிடு’ என்னும் வினை இடம்பெறவில்லை
என்பதைக் குறிப்பிட்டுக் கூறவேண்டும். இன்று இந்த வினை பெருவழக்காக இருந்தாலும் சங்க
இலக்கியங்களில் ஒருமுறை கூட இடம்பெறவில்லை.11 ‘சாப்பிடு’ என்பதற்கு அடுத்த நிலையில்
இக்காலத் தமிழில் வழங்கும் ‘உண்ணுதல்’ என்னும் வினையே சங்க இலக்கியங்களில் மிகுதியாகவும் பெருவரவாகவும்
உள்ளது. ஏறக்குறைய இருநூறு இடங்களில் இந்த
வினையின் பல வடிவங்கள் வந்துள்ளன என்பதைச் சங்க இலக்கிய வினைவடிவங்கள்
என்னும் அடைவு வழியாக அறிய முடிகிறது.12 உண் என்னும் வினை இணைந்த சொற்சேர்க்கைகளை
(எ-டு ‘தோள் நலம்உண்டு’, ‘வேள் நீர் உண்ட’ கலித். 23:8-9) இந்த இருநூற்றுக்கு
மேற்பட்ட இடங்களில் கண்டறிவது தனி ஆய்வாக இருக்கும் என்பதால் அதனை இங்கு மேற்கொள்ளவில்லை.
மாந்துதல்,
மடுத்தல் ஆகிய இரு
வினைகளும் இக்காலத் தமிழில் வழக்கில் இல்லை என்பதால் அவையும் இங்கு எடுத்துக்கொள்ளப்பெறவில்லை.
‘குடித்தல்’ என்னும் வினை மிகக் குறைவாகவே சங்க இலக்கியங்களில்
வழங்கியதை அறிகிறோம். நான்கு முறையே ‘குடித்தல்’ என்னும் வினை வழங்கியிருக்கக் காண்கிறோம்.13
அந்த நான்கு இடங்களுமே திரவப் பொருளை உட்கொள்ளுதல் தொடர்பானவை.
மேற்கூறிய வினைகளைத் தவிர்த்துவிட்டுச் சங்க
இலக்கியத்தில் பரவலாக அறியப்படுகிற ‘அருந்து’, ‘பருகு’, ‘தின்’ ஆகிய மூன்று வினைகளை மட்டுமே இங்கு எடுத்துக்கொள்கிறோம்.
அவற்றில் கணிக்கக்கூடியதாக இருக்கும் சில தகவல்களை இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது.
அருந்து
சங்க இலக்கியங்களில் அருந்து என்னும் வினை
மனிதர்களோடு தொடர்புபடுத்தப் பட்டிருப்பது மிகக் குறைவு. விலங்குகளோடும் பறவைகளோடும்
தொடர்புபடுத்தப் பட்டிருப்பதே மிகுதி.
மனிதர், விலங்குகள், பறவைகள் அருந்தியது
எது என்பதிலும் குறிப்பிடத்தக்க தகவல் உண்டு. உணவாகக்கூடிய திண்மப்பொருள்களை அருந்துவதாக
மிகப் பெரும்பாலான இடங்களில் காண்கிறோம். நீர் போன்ற திரவப்பொருளை அருந்துவது மூன்று
இடங்களிலேயே வருகிறது. அந்த மூன்று இடங்களிலும் புலி குருதியையும் (அக. 3:8), யாமை நீரையும் நுங்கின்
கள்ளையும் (அக. 356:2, 256:4) அருந்துவதாகக் கூறப்பட்டுள்ளதே தவிர மனிதர் திரவப்பொருளை அருந்தும்
குறிப்பு இல்லை. காட்டுவழி செல்லும் வழிப்போக்கர்கூடப் பலவின் சிறுகாயை (ஐங். 351:2) அருந்திச்செல்வதாகக் கூறப்படுகிறதே அன்றி
சுனைநீர் அருந்திச் செல்வதாகக் கூறப்படக் காணோம். பொதுவாக விலங்குகள் இலை (அக. 292:3),
தழை (குறுந். 281:1), புல் (அக. 14:9),
நெல் (பட்டி. 13), நெற்சோறு (புற. 299:4)
முதலியவற்றை அருந்துகின்றன; பறவைகள் பெரும்பாலும்
மீன் (நற். 291:2), பூந்தாது (அக. 229:17), பழம் (குறுந். 201:2) முதலியவற்றை அருந்துவதாகக் கூறப்பட்டுள்ளன.
இவை தவிர மகளிர் கூந்தலும் (அக. 399:1), ஆடவரின் மார்பும் (புற. 161:26) சாந்து அருந்துவது, நெஞ்சம் (கலி. 129:25) இசையை அருந்துவது
போன்று அஃறிணை எழுவாய்களுக்கு ஏற்றப்பட்ட வழக்குகளும் சங்க இலக்கியங்களில் உண்டு.
‘அருந்து’ என்னும் வினையைச் சங்கப்
புலவர்கள் நீட்டித்துக்கொண்ட முறையை இவை காட்டுவதாக உள்ளன.
சங்க இலக்கியங்கள் காட்டும் அருந்து வினைச்சொல்லின்
வழக்கு இக்காலத் தமிழின் வழக்கோடு கணிசமாக வேறுபடுகிறது. இன்று நமக்கு அருந்து என்றால்
நீர்,
மது போன்ற திரவங்களை
உட்கொள்ளுதல் என்பதே பழக்கமான ஒன்றாக உள்ளது. ‘மான் புல் அருந்துகிறது’, ‘குயில் பூவின் தாதினை
அருந்துகிறது’
என்பவை இக்காலத் தமிழுக்கு
ஏற்புடையதாக இல்லை. இக்காலத் தமிழில் அஃறிணை எழுவாய்க்கு ஏற்றப்பட்ட வழக்குகளும் இல்லை.
பருகு
திரவப் பொருளை உட்கொள்ளுதல் என்பதற்குச்
சங்க இலக்கியங்களில் அருந்து என்னும் வினை மிக அருகியே, அவற்றிலும் விலங்குகள்
உட்கொண்டதாகவே,
வழங்கியுள்ளது. இந்தச்
சமன் அற்ற நிலையைச் சமன் செய்வதாக உள்ளது பருகு என்னும் வினைச்சொல்லின் ஆட்சி. சங்க
இலக்கியங்களில் பருகு என்னும் வினை மனிதரும் விலங்குகளும் திரவப் பொருளை உட்கொள்ளுவதைப்
பதிவுசெய்துள்ளது.
வழிசெல்வோரும் நாட்டில் உள்ளோரும் நீர் (மலைபடு. 251), சுனை நீர் (குறுந். 317:4),
தேறல் (பொரு. 159), கள் (புற. 68:15) முதலியன பருகியதாகக்
காண்கிறோம். விலங்குகளும் தெளிந்த நீரையும் (அக. 23:9) சுனை நீரையும் (புற. 132:5) பருகியதாகப் பரவலாகக் கூறப்பட்டுள்ளது. புலி
குருதி (நற். 158:7) பருகியிருக்கிறது (அருந்தியும் இருக்கிறது
என்பதை முன்பே பார்த்தோம்).
பருகு என்னும் வினை பறவைகளுக்கு ஏற்றிக் கூறப்படவில்லை
என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
அருந்து என்னும் வினையைச் சங்கப் புலவர்கள்
அஃறிணை எழுவாய்க்கும் நீட்டித்தது போன்றே பருகு என்பதையும் வழங்கியுள்ளனர். மேகம்
நீரையும் (அக. 183:6), பருதி இருளையும் (பெரும். 1),
உள்ளம் காதலையும் (அக. 305:6), பருகியதாகக் காட்டப்பட்டுள்ளது.
சங்க இலக்கியங்கள் காட்டும் பருகு என்னும்
வினைச்சொல்லின் ஆட்சியை இக்காலத் தமிழும் பின்பற்றுகிறது. திரவப்பொருளை உட்கொள்ளுதல்
என்னும் முறையில் தான் இக்காலத்திலும் பருகு என்பதன் ஆட்சி உள்ளது. பழச்சாறு பருகுதல், மது பருகுதல் போன்றவை
இக்கால ஆட்சியாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
தின்
புறநானூற்றுப் பழைய உரைகாரர் பாடல் 14இல் வரும் ‘ஊன் துவை கறிசோறு
உண்டு’
என்னும் அடிக்குப்
பின்வருமாறு உரை செய்திருக்கிறார்.
உண்டு என்பது பொதுவினை அன்றேனும் கறி ஒழிந்தவற்றிற்கெல்லாம்
சேறலின்,
பன்மைபற்றி அமைத்துக்கொள்ளப்படும்.
ஊன் துவை கறியொடுகூடிய சோற்றை உண்டென உரைப்பினும் அமையும்; இதனைப் பொதுவினையென்று உரைப்பாரும் உளர்.
உரைகாரர் இவ்வாறு கூறுவதற்குக்
காரணம் இந்த அடியில் வந்துள்ள ஊன் என்பதைக் கருத்தில் கொண்டதால் ஆகும். உண்ணுதல் என்பது
‘கறி ஒழிந்தவற்றிற்கெல்லாம்
சேறலின்’ என்று கூறுவதால் ‘கறி’ என்பதற்கு ஏற்ற வினை
‘உண்’ என்பது அன்று, ‘தின்’ என்பதாக இருத்தல் வேண்டும்
என்பதை உரைகாரர் குறிப்பாக உணர்த்துகிறார். கடித்து, மென்று உட்கொள்ளுதல் என்பதற்குரிய வினை ‘தின்னுதல்’ என்பதாகக் கருதப்படுகிறது.
இவ்வாறு கருதப்படுவதால் உரையாசிரியர்கள் ‘தின்னுதல்’ என்பதைச் சிறப்பு வினையாகவும், உண்ணுதல் என்பதைப்
பொது வினையாகவும் கூறுவது உண்டு. புறநானூற்றுப் பழைய உரைகாரர் ‘உண்டு’ என்பதைப் பொது வினையாக ஏற்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அவரே
‘பொது வினையென்று உரைப்பாரும் உளர்’ என்று குறிப்பிடுகிறார்.
கடித்து, மென்று உட்கொள்ளுவதைத்தான் ‘தின்’ என்னும் வினை குறிப்பிடுகிறதா
என்பதைச் சங்க இலக்கியங்களின் வழியாக அறிய முடியுமா எனப் பார்க்கலாம்.
சங்க இலக்கியங்களில் பெரும்பான்மையும் மனிதர்கள் ஊன் உட்கொள்ளும் (அக. 129:12, புற. 150:13, 359:5,
384:22) இடங்களிலெல்லாம் தின்
என்பது வருகிறது. ‘விலங்கு’ (புற. 359:3), ‘துணங்கை’ (திரு. 56), ‘பேய்’ (திரு. 260) போன்றவை நிணம் அல்லது பிணம் உட்கொள்ளும் இடங்களிலும் தின்
என்னும் வினை ஆளப்பட்டுள்ளது. மென்று, அசைபோட்டு உணவை உட்கொள்கிற ‘யானை’ கழை (அக. 232:2, 328:13,
புற. 73:9) தின்பதாகவும் சங்க
இலக்கியங்களில் பரவலாகக் காணப்படுகிறது. இவை தவிர மென்று உட்கொள்ளக்கூடிய நெல்லி
(அக. 54:15,
குறுந். 262:4), தம்பலம் (வெற்றிலை)
(கலி. 65:13)
வருமிடங்களிலும் தின்
என்னும் வினையே வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றை நோக்க, தின் என்னும் வினை
திடப்பொருளை மென்று உட்கொள்ளும் செயலுக்குரிய வினையாகவே சங்க இலக்கியங்களில் வழங்கப்பட்டுள்ளதை
அறிய முடிகிறது. பற்கள் இல்லாத பறவைகளுக்குத் தின் என்னும் வினை சங்க
இலக்கியங்களில் இணைந்து வராததும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.
சங்க இலக்கியங்களில் தின் என்பது எவ்வாறு
வழங்கியதோ அதே தன்மையில் இக்காலத் தமிழிலும் வழங்குவதை
நாம் அதற்குத் தரும் வினையடைகள் (மென்று, கடித்து) சுட்டிக் காட்டுகின்றன. இன்று
வழக்கிலுள்ள பழமொழியும் ( ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’) தின் என்பதன் அடிப்படைப்
பொருளை உறுதிசெய்கிறது.
1. Words keep company என்று ஆங்கிலத்தில்
சொற்சேர்க்கையை விளக்குவார்கள். இதனை ‘சொற்கள் கைகோக்கின்றன’ எனக் கூறலாம். ஒரு
மொழியில் சொற்கள் தனித்தனித் தீவுகளாக இருந்து விடுவதில்லை. அவை உறவுகொள்கின்றன என்பதையே
சொற்சேர்க்கைகள் உணர்த்துகின்றன.
2. தமிழில் உள்ள சொற்சேர்க்கைகளுள் சில இரண்டாயிரம் ஆண்டுகளாகத்
தொடர்கின்றன என்பது மொழியின் அறுபடாத தொடர்ச்சியைக் காட்டுகிறது.
3. மொழி ஒவ்வொரு கட்டத்திலும் புதிய சொற்சேர்க்கைகளை உருவாக்கிக்
கொள்கிறது. இவற்றுள் சில நிலைக்கின்றன, சில நிலைபெறாமல் போய் விடுகின்றன
என்பதைச் சங்க இலக்கியச் சொல் இணைகள் உணர்த்துகின்றன.
4. சங்க இலக்கியச் சொற்சேர்க்கைகளுள் இன்று வழக்கிழந்த சொற்கள்
வழக்கில் உள்ள சொற்களால் புதுப்பிக்கப்படுகின்றன. இவ்வாறு புதுப்பிக்கப்படுவதால் சொற்சேர்க்கைகள்
இக்காலத் தன்மையைப் பெறுகின்றன (ஞமலி குரைக்கும்: நாய் குரைக்கும், குடிஞை இரட்டும்: ஆந்தை
அலறும்).
5. சொற்சேர்க்கைகள் எவ்வாறு உருவாகக் கூடும் என்பதைக் குறிப்பாகக்
காட்டுகிறது அகவு,
கூவு என்னும் வினைச்சொற்கள்.
மொழியின் ஒரு கட்டத்தில் பொது வினைகளாக இருந்தவை சிறப்பு வினைகளாகப் பொருள் சுருக்கம்
பெற்றுத் தாம் ஏற்ற சொல்லோடு கட்டுண்ட நிலைபெறுகின்றன.
6. சங்க இலக்கியச் சொற்சேர்க்கைகளைப் புரிந்துகொள்ள அவற்றின்
வினைச் சொற்கள் காட்டும் பொருள் வீச்சைத் தெரிந்துகொள்வது நல்லது. சங்க இலக்கியங்களில் உண்ணுதல் என்னும் செயலைக் குறிக்க
வழங்கும் வினைகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு சில தன்மைகளைக் கொண்டதாக இருக்கக்
காண்கிறோம். உண்ணுதலும் மாந்துதலும் பொதுவினையாகவும், அருந்துதல் பெரும்பாலும்
திண்மப்பொருளை உட்கொள்ளுவதற்கும், மிகக் குறைவாக நீர்மப் பொருளை உட்கொள்ளுவதற்கும்
பயன்பட்டுள்ளன. பருகுதலும் குடித்தலும் மடுத்தலும் நீர்மப் பொருளை உட்கொள்ளுவதற்கும், தின்னுதல் திடப்பொருளைக்
குறிப்பாக மென்று தின்னக்கூடிய திடப்பொருளை உட்கொள்வதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இக்காலத் தமிழில் மேற்கூறிய கட்டுக்கோப்பான, தெளிவான முறை சற்று
மாறியுள்ளது என்பதை அறியமுடிகிறது. சங்க இலக்கியங்களில் வழங்காத ‘சாப்பிடு’ என்னும் வினை இன்று
மிகப் பரவலாக வழங்கிச் சில பொது வினைகளின், சிறப்பு வினைகளின் பயன்பாட்டைக் குறைத்து விட்டது.
7. தமிழைக் கற்கும் பிறமொழியாளர்கள் சொற்சேர்க்கைகளை அறியமுடியாத
நிலையில் உள்ளவர்கள், அவர்கள் அவற்றை அறிந்துகொள்ள ஒரு கருவி நூல், அகராதி தேவைப்படுகிறது.
1. அக. 20:2, 80:6, 204:11, நற். 49:4, 331:4, ஐங். 365:2, புற. 29:13, 396:4, குறி. 38, மது. 95.
2. 1. அக. 24:17, 68:9, நற். 271:2, 303:2, 360:11, புற. 126:7, 320:3, சிறு. 154.
2. அக. 69:20, 233:15, 252:14, 393:26, குறு. 254:4, 287:11,
கலி. 128:14.
3. அக. 284:5, கலி. 45:7, புறம். 397:9, பரி. 20:15, பரி.தி. 8:9, குறி. 241.
4. அக. 44:19, கலி. 77:13, 104:20, 104:24, குறி. 242.
5. அக. 237:5, குறுந். 186:4, 301:8, கலி. 123:16, மது. 575.
6. குறு. 147:4, கலி. 70:21, புறம். 247:3, மது. 714.
7. ஐங். 13:4, 172:4, 173:1, மலை. 350.
8. அக. 379:14, நற். 390:2, கலி. 13:16, புற. 317:7.
9. அக. 240:12, நற். 121:12.
10. பெரும். 440, மது. 254.
11. அக. 279:13, குறுந். 107:7.
12. கலி. 122:21, 123:5.
13. கலி. 146:38.
14. குறு. 247:6.
15. பதி. 50:24.
16. பரி. 20:15.
17. ஐங். 14:4.
18. கலி. 75:25.
19. குறு. 213:7.
20. அக. 256:2.
21. முல். 80.
22.
புறம். 280:4.
3. அக. 85:13, 272:18,
334:13, குறுந். 249:1, 264:3, பரி. 6:4, 15:40, திருமுரு. 122, மதுரை. 333, 675,
நெடுநல். 99.
நெடுநல். 99.
4. அக. 97:23, ஐங்குறு. 341:2, கலித். 92:64.
5. அக. 120:15, குறுந். 301:4, பதிற். 131:28, குறிஞ். 220.
6. கழுகு- ஐங். 314:2, கம்புள் - ஐங். 60:1, புறவு-அக. 271:18.
7. புள்ளினம்-குறுந்.
191:4,
வங்கா-குறுந். 151:3, பேடை-குறுந். 191:4.
8. அக. 25:8, 229:19, பரி. 15:41, 9:65.
9. கூகை - புற. 356:2, 362:18,
மஞ்ஞை - குறு. 391:9, காக்கை - புற. 362:18, கோழி-பரி. 8:19,
கிள்ளை-நற். 143:5.
கிள்ளை-நற். 143:5.
10. பதிற். 22:25.
11. இந்த வினைச்சொல் சங்க
இலக்கியங்களில் வழங்கவில்லை. எந்த நூற்றாண்டில் இந்த வினை
தமிழில் வழங்கத்தொடங்கியது
என்பதும் அறியக்கூடியதாக இல்லை. மேலும் இந்த வினை
பிற திராவிட மொழிகளிலும்
காணப்படவில்லை என்பதை Dravidian Etymological Dictionary என்பதில் அந்த வினைக்குப் பதிவு இல்லாத காரணத்தால் அறியமுடிகிறது.
12. சங்க இலக்கிய வினைவடிவங்கள்,
புலவர் மணியன் (தொகுப்பும், பகுப்பும்), பக். 63-65.
13. அக. 54:16, குறு. 356:4, பரி. 8:32, குறி. 211.
சாமிநாதையர், உ.வே., குறுந்தொகை, கேஸரி
அச்சுக்கூடம், சென்னை, முதற்பதிப்பு, 1937.
பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், கபீர்
அச்சுக்கூடம், சென்னை, ஆறாம் பதிப்பு, 1961.
அச்சுக்கூடம், சென்னை, ஆறாம் பதிப்பு, 1961.
புறநானூறு மூலமும் உரையும், கபீர் அச்சுக்கூடம், சென்னை, ஆறாம்பதிப்பு, 1963.
ஏனைய சங்க இலக்கிய
நூல்களுக்கு, மர்ரே ராஜம் வெளியீடுகள்.
புலவர்மணியன் (தொகுப்பும் பகுப்பும்), சங்க இலக்கிய வினைவடிவங்கள், Dravidian Linguistics Associations, Thiruvananthapuram ,
2007.
மாதையன், பெ., சங்க இலக்கியச் சொல்லடைவு, தமிழ்ப்
பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2007.
Thomas Lehmann & Thomas Malten (comp.), A Word Index For Cankam Literature, Institute of Asian Studies, Chennai, Second ed.,
2007.
Burrow, T., Emeneau, M.B. (ed.), A Dravidian Etymological Dictionary, Oxford , Second ed., 1984.
Morton Benson, Evelyn Benson, Robert
Ilson, (comp.), The BBI Dictionary of
English Word
Combinations, Revised ed. John Benjamins Publishing company,Amsterdam , 1997.
Combinations, Revised ed. John Benjamins Publishing company,
(2010 ஆம் ஆண்டு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
குயில் புகைப்படம் - நன்றி தினமணி
No comments:
Post a Comment