தி.வே. கோபாலையர்
தமிழ் இலக்கண, இலக்கியங்களை
எழுதுதல் என்பதன் வழி அடையாளம் பெற்ற மரபிலிருந்து அவற்றைப் பதிப்பித்தல் என்ற வேறொரு
தளத்திலான அடையாளத்தைப் பெறுதல் என்ற மரபு 19 ஆம் நூற்றாண்டில் தமிழ்ச்சமூகத்தில் வேரூன்றி
நிலைபெற்றது. மூலநூலாசிரியர்களான தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர்
ஆகியோர் படைத்த படைப்புகளைப் பதிப்பித்தலின் வழி அவர்கள் பெற்ற மதிப்பீடுகளுக்கு நிகரானதொரு
இடத்தினைப் பெற்றவர்கள் இக்காலப் பதிப்பாசிரியர்கள்.
இவர்களுள் மூத்த நிலையிலும் தமிழுலகம்
என்றென்றும் போற்றும் வகையிலும் சிறந்த பதிப்பாசிரியர்களாக, நுண்மாண் நுழைபுலம் மிக்கவர்களாக,
அறிஞர்களாக விளங்கிய பெருமக்களுள் ஆறுமுக நாவலர், சி.வை.தா., உ.வே.சா., வையாபுரிப்பிள்ளை
ஆகியோர் குறிப்பிடத்தக்கோராவர். இம்மரபின் தொடர்ச்சி-யாய் நம் சமகால சமூகத்தில் வாழ்ந்து
இன்று நம் கண்முன் மறைந்தவர் பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர். கல்வியாளர், பதிப்பாசிரியர்,
பன்மொழிப் புலவர், சிறந்த ஆசிரியர் என எல்லா நிலைகளிலும் தன்னையும், தன் புலமையின்
ஆளுமையையும் வெளிப்படுத்திய இவரின் பதிப்புச் செயல்பாடுகளை முன்வைக்கும் விதமாக இக்கட்டுரை
அமைகிறது.
தமிழ்ச்சூழலில் கடந்த
இரு நூற்றாண்டுகளாக வெளிவந்துள்ள பதிப்புகளின் தன்மைகளை நோக்கும்போது அப்பதிப்புகள்
உருவாக்கப்பட்ட விதம் வெவ்வேறு முறைகளில் அமைந்து காணப்படுகின்றது. சுவடிகளில் இருந்து
அச்சுக்கு அப்படியே மாற்றுவது, பல சுவடிகளை ஒப்புநோக்கிப் பாடவேறுபாடுகள் தருவது, பதிப்பு
செய்யப்படும் அப்பனுவல் சார்ந்த செய்திகளைத் தொகுத்துத் தருவது, அப்பதிப்பைப் பயன்படுத்துவதற்கான
பல்வேறு முறைமைகளைப் பதிப்பின் முன்பின் உருவாக்குவது, பனுவலோடு தொடர்புடைய வேறு பிற
நூல்களிலிருந்து பல தரவுகளை இதனுள் இணைப்பது எனப் பதிப்-பாசிரியரின் செயல்பாடுகள் பதிப்பு
உருவாக்கத்தின் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து படிநிலை வளர்ச்சியில் செயல்பட்டு வந்துள்ளது.
இவற்றின் அடிப்படையில்
இங்கு பதிப்பிக்கப்-பட்ட பதிப்புகளில் எது செம்பதிப்பு, சிறந்த பதிப்பாசிரியர் யார்?
என்ற வினாவை எழுப்பிக்-கொண்டு நோக்கு வோமானால் அவை சார்ந்த பதில்கள், பதிப்புகள் உருவான
கால கட்டத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட வேண்டியவொன்றாக உள்ளது. இந்தப் பின்புலத்தில்
கடந்த காலங்களில் வெளிவந்த தமிழ் இலக்கணப் பதிப்புகளுக்கான உருவாக்கம் என்பது எவ்வாறாகச்
செயல்பட்டுள்ளது என்பதோடு அவற்றில் 1950களுக்குப் பிற்பாடு கோபாலையர் போன்றோரின் இலக்கணப்
பதிப்புச் செயல்பாட்டு முறைமைகள் எவ்வாறு அமைந்து காணப்படுகிறது என்பதும் இத்தருணத்தில்
அவதானிக்கப்பட வேண்டியவொன்று.
‘இலக்கணப் பயிற்சி
இப்படி இருக்கும் சூழலில் இலக்கணப்பதிப்பு பற்றிக் கேட்க வேண்டியதில்லை. ஏற்கெனவே அச்சிடப்பட்ட
நூலின் ஆசிரியருக்கு ‘ஓய்வு’ கொடுத்துவிட்டுத் தம் பெயரை மட்டும் சேர்த்து வெளியிடுவது;
போனால் போகிறதென்று தம் பெயருடன் ஆசிரியர் பெயரையும் சேர்த்துக் கொள்வது; பதிப்புணர்வே
இல்லாமல் மூலப் பதிப்பாசிரியன் பலநாள் உழைத்துத் தொகுத்த முற்சேர்க்கை, பிற்சேர்க்கைகளைத்
திருகி எறிந்துவிட்டு நூலை மட்டும் வெளியிடுவது; மூலநூலில், உரையில் காரணம் ஏதுமில்லாமல்
தம் விருப்பம்போல் பிடுங்கி, செருகித் தம் கைச் சரக்கைக் கலந்து தருவது; கிடைத்தற்கரிய,
முக்கியத்துவம் வாய்ந்த பழைய உரையைத் தூக்கிக் கடாசிவிட்டு சுருக்கமான முன்னுரை தெளிவுரையுடன்
(?) வெளியிடுவது. எதுவும் ஆகாவிட்டால் நோட்ஸ் போடுவது என்று பதிப்புலகில் பல வித்தைகள்
நடந்தேறுவது கண்கூடு’. (காலச்சுவடு, ஜனவரி, 2007, ப _ 90) என்ற நா. அருள்முருகனின்
கூற்றிலிருந்து தமிழ்ச்சூழலில் இலக்கணப்பதிப்புகள் வெளியிடப்பட்ட முறைமையைப் புரிந்துகொள்ள
முடிகிறது.
1835ஆம் ஆண்டு நன்னூல்
பதிப்பின் வழியாகத் தொடங்கப்பட்ட தமிழ் இலக்கணப் பதிப்பு மரபு வெவ்வேறு தன்மைகளில்
செயல்பட்டு வந்துள்ளதை அறிய முடிகிறது. தொல்காப்பியம் தொடங்கிப் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை
முழுமையாகக் கிடைக்கக்கூடிய இலக்கண நூல்களாக ஐம்பது வரை வரையறைப்படுத்தலாம். இந்நூல்களின்
இன்றியமையாமை அவை தமிழ்ச் சமூகத்தில் பெற்ற இடம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவற்றிற்கான
பதிப்புகளும் இங்கு தரப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ச்சியாகச் சில இலக்கண நூல்கள் அச்சிடப்பட்டு
வெளிவரல், சில நூல்கள் வெகுகாலம் ஆனபிறகும் மீள்பதிப்புப் பெறாமலே போதல் என அனைத்தையும்
மேற்சொன்னவற்றின் அடிப்படையிலேயே விளக்க வேண்டியுள்ளது.
தொடக்ககாலங்களில் நூல்களை
அழியவிடாமல் பாதுகாத்தல் என்ற தன்மையில் இலக்கணநூல்கள் பலவும் தொடர்ந்து சுவடிகளில்
இருந்து அச்சில் நிலைபெற்றன. இவற்றின் படிநிலை வளர்ச்சியில் 1950கள் வரை இப்பதிப்புகளின்
தரம் என்பது பல்வேறு தன்மைகளில் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. இதற்குப் பிறகு வெளிவந்த
ஏராளமான இலக்கண நூல்களின் பதிப்புகளில் சிலவற்றைத் தவிர மற்றவை அனைத்தும் மேற்சொன்ன
நா.அருள்முருகனின் கூற்றின் அடிப்படையிலேயே அமைந்து காணப்படுகின்றது.
1950களுக்குப் பிறகு
சிறந்த பதிப்புகள் சிலவற்றை உருவாக்கிய பெருமக்களுள் கோபாலையர் என்னும் தனிமனிதரின்
உழைப்பு தனித்து மதிப்பிடக்கூடிய ஒன்று. அவரின் இப்பதிப்புச் செயல்பாடு ஒட்டுமொத்த
இலக்கணப்பதிப்புகளின் தன்மையின் பின்புலத்-திலேயே புரிந்துகொள்ளப்பட வேண்டியது.
கோபாலையரின் பதிப்புச்
செயல்பாடுகள்
தமிழ், வடமொழி என்ற
இருமரபிலும் உள்ள இலக்கண, இலக்கியங்களை நன்கு கற்றதோடு அவற்றில் தேர்ந்த புலமையாளராகவும்
விளங்கியவர் தி.வே. கோபாலையர். இலக்கண, இலக்கியங்களை மட்டுமல்லாமல் அவற்றின் உரைகளையும்
ஆழ்ந்து கற்று அவற்றை எப்போது யார் கேட்டாலும் தன் நினைவாற்ற-லிலிருந்து உதிர்த்து
வியக்கச் செய்யும் தன்மை கொண்டவர்.
“திருச்சிராப்பள்ளி
தமிழ்ச்சங்கத்திலும், தஞ்சை தொல்காப்பியர் கழகத்திலும் அவர் தொல்காப்-பியத்தைப் பற்றி
ஆற்றிய உரைகள் தமிழறிஞர்களையே வியப்பில் ஆழ்த்தின. தொல்காப்பி-யத்தின் அனைத்து உரைகளையும்
ஒப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேல் உரையாற்றினார். அவர் முடித்தபோது அரங்கமே அதிர்ந்தது.
தொல்காப்பியம் பற்றி அறியாதவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.’’ (ஓயாத தமிழ் அலை ஓய்ந்தது’.
தினமணி, 7 ஏப்ரல், 2007) என்ற உதயை மு. வீரையன் கூற்றையும்,
“தமிழ் இலக்கிய இலக்கணங்கள்
ஒரு சமயம் இல்லாமற் போய்விட்டாலும் கோபாலையர் ஒருவர் இருந்தாலே போதும். அவற்றை மீட்டுக்
கொண்டு வந்துவிடலாம். அந்த அளவிற்குத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தம் நினைவில் வைத்திருப்பவர்’’.
(ஈரத்தமிழில் ஆழங்கால் பட்டவர், பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர், தமிழ் இலக்கணப்
பேரகராதி (எழுத்து _ 1, சென்னை, தமிழ்மண் பதிப்பகம், 2005) என்ற பார்த்தசாரதி கூற்றையும்
இங்கு நினைவுகூர்வதன் மூலம் கோபாலையரின் கல்வியறிவு, நினைவாற்றல், பாடம் சொல்லும்
திறன் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும்.
இத்தகைய வாசிப்பு மற்றும் நினைவுப் பின்புலத்தில்
1970களில் பதிப்புச் செயல்பாட்டைத் தொடங்கிய இவர் இறுதிக்காலம் வரை (2007) அதற்காகவே
தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டார். தமிழ்ச்சமூகத்தின் மூத்த பதிப்பாசிரியர்களான
ஆறுமுக நாவலர், சி.வை.தா., உ.வே.சா., வையாபுரிப்பிள்ளை ஆகியோரின் மரபைப் பின்பற்றுபவராகவும்
அதே சமயம் அவர்களுக்கு இணையான சில பதிப்பு நுணுக்கங்களைக் கையாண்டவராகவும் கோபாலையர்
காணப்படுகிறார்.
1970 _ 74 காலப்பகுதியில்
தஞ்சை சரசுவதி மகால் நூலக வெளியீடாக இவர் இலக்கண விளக்கத்தைப் பல்வேறு தொகுதிகளாகப்
பகுத்துத் தொகுத்துப் பதிப்பித்தார். இங்குத் தொடங்கிய இவரது பதிப்புச் செயல்பாடு பல்வேறு
இலக்கண, இலக்கியங்களைப் பதிப்பிக்க உறுதுணை புரிந்தது. இலக்கணக் கொத்து _ 1973 (மறுபதிப்பு
_ 1990), பிரயோக விவேகம் _ 1973, தொல்காப்பியம் _ 2003, வீரசோழியம் _ 2005, மாறன் அகப்பொருளும்
திருப்பதிக்கோவையும் _ 2005, மாறனலங்காரம் _ 2005 முதலான பல இலக்கணநூல்களும் அதன் உரைகளும்
இவர் கைகளில் தவழ்ந்து செம்பதிப்புகளாக நிலைபெற்றன.
இலக்கியங்களில் பக்தி
இலக்கியங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவரான இவர் அவற்றுள் தேவாரத்தைப் பலநிலைகளில் நின்று
பதிப்பித்துள்ளார். அவை; திருஞானசம்பந்தர் தேவாரம் _ 1984, திருநாவுக்கரசர் தேவாரமும்,
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரமும் _ 1985, தேவாரம் ஆய்வுத்-துணை _ தேவாரம் பற்றிய
விரிவான செய்தி-களுடன் _ 1991. இலக்கியங்களை விட இலக்கணங்களுக்கே
அதிக முக்கியத்துவம் தந்து பதிப்பித்த இவர் பாடவேறுபாடு தருதலை மரபாகக் கொள்ளவில்லை.
தனக்கு முன் பதிப்பிக்கப்பட்டு அச்சில் வெளிவந்தவற்றை அப்படியே பின்பற்றி நகலெடுத்துப்
பதிப்பிக்கும் பழக்கம் இவருக்கில்லை. ஒவ்வொரு பிரதியைப் பதிப்பிக்கத் தொடங்கும் முன்னும்
அப்பிரதிக்கு அதற்கு முன்னர் வரை உள்ள ஓலைச்சுவடிகளை, அச்சு நூல்களை ஒன்று திரட்டி
ஒப்புநோக்கி அதில் இவர்-கொள்ளும் பாடத்தையே மூலமாக முன் வைக்கிறார்.
பாட வேறுபாடுகளை இவர்
தராமல் போனாலும் மூத்த பதிப்பாசிரியர்களின் பதிப்புகளில் இல்லாத பல்வேறு அடைவுகளை முகவுரையிலும்,
பிற்சேர்க்கையிலும் இணைப்பதன் மூலம் இவரின் பதிப்புகள் ஆய்வுலகத்திற்கும் மாணவர்களுக்கும்
நெருக்கம் உடையதாகவும், விருப்பமானதாகவும் விளங்குகின்றன. இவரின் இத்தகைய பதிப்பு
உருவாக்க மரபிற்கு அடிப்படைக் காரணமாய் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தையும் அதில் கௌரவக்
காரிய தரிசியாய் இருந்த நீ. கந்தசாமிப் பிள்ளையையுமே சுட்ட முடியும். 1925ஆம் ஆண்டு
பிறந்த கோபாலையர் 1945இல் வித்துவான், 1951 B.O.L., 1953 பண்டிதம், 1958 B.O.L. (Honrs) என முறையே கல்விப்புலம் சார்ந்த படிப்பை நிறைவு
செய்து அதன்பிறகு உயர்நிலைப்பள்ளி மற்றும் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில்
ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
பின்னர் 1979ஆம் ஆண்டு
புதுவை பிரெஞ்சு கலைநிறுவனத்தில் முழுநேர ஆய்வாளராக இணைந்தார். அது முதற்கொண்டு இறுதிக்காலம்
வரை அங்கேயே பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ 82 (1925 _ 2007) ஆண்டுக்காலம்
வாழ்ந்த கோபாலையரின் வாழ்க்கைப் பின்புலத்தில் 1970ஆம் ஆண்டு தொடங்கிப் பிற்கால 37
ஆண்டுகள் இவரின் கடின உழைப்பைப் பறைசாற்றுவதாக உள்ளன. பள்ளியிலும், கல்லூரியிலும்
ஏறத்தாழ 25 ஆண்டுகள் இலக்கணங்களையும், இலக்கியங்களையும் பாடம் சொல்லித்தரும் ஆசிரியராக
விளங்கிய கோபாலையர் அவற்றைப் பதிப்பிக்கும் திறன்கொண்ட பதிப்பாசிரியராக மாறியதற்கு
யார் காரணம் என்று தேடிப் பார்த்தால் அது தஞ்சை சரசுவதி மகால் நூலகக் கௌரவ காரியதரிசி
நீ. கந்தசாமிப்பிள்ளையையே காட்டு-கிறது. (காண்க: நீ. கந்தசாமி என்னும் புலமை-யாளன்,
பேரா. வீ. அரசு, கவிதாசரண், ஆகஸ்ட் _ செப் _ 2008)
1970ஆம் ஆண்டு இலக்கண
விளக்கத்தைப் பதிப்பிக்கும் பணியைத் தி.வே. கோபாலையரிடம் நீ. கந்தசாமிப்பிள்ளை ஒப்படைத்ததோடு
அப்பதிப்பை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதற்கான ஒரு திட்ட வரையறையையும் அளித்துள்ளார்.
இலக்கண விளக்கம் ஐந்து பகுதிகளாக அமைந்திருந்த போதிலும் மொத்தம் எட்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டது.
இவ்வொவ்வொரு தொகுதியின் பதிப்புரையிலும் கோபாலையர் அப்பதிப்பில் இடம்பெற வேண்-டிய பல்வேறு
முறைமைகள் குறித்து விளக்கி-யுள்ளதோடு அவற்றை உருவாக்க வழிசொன்ன நீ. கந்தசாமிப் பிள்ளைக்கும்
நன்றி கூறியுள்ளார். சான்றாக,
“எடுத்துக்காட்டுப்
பாடல்களின் போந்த-பொருள், அணிவகைகள் பாடல்களில் அமைந்-துள்ள திறன், ஒத்த கருத்துடைய
பிற அணி நூல்களின் நூற்பா மேற்கோள், தேவை-யான அகர வரிசைகள் இவற்றோடு, இவ்வணி-யியலில்
குறிப்பிடப்படாது ஏனைய அணி நூல்களில் காணப்படும் அணி வகைகளின் விளக்கம் அடங்கிய பிற்சேர்க்கையையும்
இணைத்துப் பதிப்பித்தல் வேண்டும் என்று தஞ்சை சரசுவதி மகாலில் கௌரவ காரியதரிசி-யாயிருந்த
முதுபெரும்புலவர் திருவாளர் நீ.கந்தசாமிப்பிள்ளை அவர்கள் இட்ட ஆணையை ஒட்டியே இவ்வியல்
பதிப்பிக்கப்பட்டுள்ளது.’’_ (அணியியல் 1973, ப. V,, தி.வே. கோபாலையர் முன்னுரை)
நீ. கந்தசாமிப்பிள்ளை
அவர்கள் கோபாலையருக்கு உருவாக்கித்தந்த இந்த வெளி அவரைத் தொடர்ந்து இதுபோன்ற பல பதிப்புகள்
உருவாக்குவதற்கு அடித்தளமமைத்துத் தந்தது என்றே சொல்லலாம். கோபாலையன் என்னும் சிறந்த
உரை சொல்லும், பாடம் கற்பிக்கும் ஆசிரியனைத் தமிழ்ப்பதிப்புச் சூழலில் வேறொரு தளத்தில்
செம்பதிப்புகளை, பயன்பாட்டுப் பதிப்பு-களை உருவாக்கும் ஒரு ஆகச்சிறந்த பதிப்பாசிரியனாக
மாற்றிய, அதற்கான வாய்ப்பை அளித்த நீ.கந்தசாமிப்பிள்ளையை இங்கு நினைவுகொண்டே ஆகவேண்டும்.
இந்தச் சூழலின் அடிப்படையில்
பதிப்புக்கானதொரு அடிப்படை முறையியலைத் தனக்கென வகுத்துக்கொண்டு அதன்பிறகு தமிழ் மட்டுமே
தெரிந்த மாணவர்களுக்காக, புலவர்களுக்காகப் பிற்காலத்தில் தமிழும், வடமொழியும் கலந்து எழுதப்பட்ட இலக்கண நூல்களைத் தெளிவித்துப் பதிப்பிப்பதில்
மிக்க கவனம்கொண்டு செயல்பட்டுள்ளார்.
“வீரசோழியம், மாறனலங்காரம்,
பிரயோக விவேகம், இலக்கணக்கொத்து ஆகியன வெளிப்படையாகவே வடமொழி இலக்கண மரபில் வந்தவை.
இலக்கண விளக்கம் வெளிப்படையாகத் தொல்காப்பியம், நன்னூல் இலக்-கணங்களைப் பின்பற்றினாலும்
மொழி என்று வரும்போது, ‘விண்ணிற்கும் புவனாதிக்கும் பொதுவாய்’ வரும் உலகப் பொதுமொழி
வடமொழியே என வடமொழியை உயர்த்திப் பேசுவதாக உள்ளது. ஆக கோபாலையர் பதிப்பித்த இலக்கண
நூல்கள் அனைத்தும் வடமொழி என்னும் புள்ளியில் மையம் கொண்டுள்ளன.’’ (மேலது, ப _
92) என்ற நா. அருள்முருகனின் கூற்று கோபாலையர்
பதிப்பிக்க எடுத்துக்-கொண்ட பனுவல்கள் குறித்த சிந்தனைப் பின்புலங்களை மையப்படுத்துகிறது.
கோபாலையரின் தேர்ந்த வடமொழியறிவு என்பது பிற்கால இலக்கண நூல்களின் செம்பதிப்புகளுக்குப்
பெரிதும் உறுதுணை புரிந்துள்ளதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
கோபாலையர் பதிப்பித்த
பல நூல்களுள் சான்றுக்காகச் சில பதிப்புகளின் தன்மைகள் இங்கு முன்வைக்கப்படுகின்றன.
1973ஆம் ஆண்டு தஞ்சை சரசுவதி மகால் வழியாக வெளியிடப்பட்ட பிரயோக விவேகப் பதிப்பு மொத்தம்
678 பக்கங்களைக் கொண்டதாக உள்ளது. 1882ஆம் ஆண்டு ஆறுமுக
நாவலரால் வித்தியாநுபாலன அச்சு யந்திரசாலையின் வழி முதல் பதிப்பாக வெளியிடப்பட்ட ‘பிரயோக
விவேகம்’ அதன்பிறகு கோபாலையரின் கைபட்டு செம்பதிப்புத் தன்மையை அடைகிறது. 678 பக்கங்கள்
கொண்ட இப்பதிப்பில் கோபாலையர் விளக்க-வுரையும் சேர்த்து 348 பக்கங்களில் அமைந்த நூலுக்கு
330 பக்கங்களில் எளிமையாக நூலை அணுகுவதற்கு வேண்டிய தரவுகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
330 பக்கங்களில்
203 பக்கங்கள் முகவுரையாகவும் 127 பக்கங்கள் பிற்சேர்க்கையாகவும் இப்பதிப்பில் அமைகின்றன.
முகவுரையில் நூலாசிரியர் வரலாறு, மூலம், உரைநூற்பாக்கள், நூலமைப்பு மற்றும் நூலாராய்ச்சி
என்னும் தலைப்பில் பல்வேறு நூல்களையும், உரைகளை-யும் ஒப்பிட்டு அரிய பல செய்திகளைத்
தருகிறார். பிற்சேர்க்கையில் காரிகை, உரை நூற்பா, எடுத்துக்காட்டு நூற்பா, எடுத்துக்காட்டுப்
பாடல்கள் ஆகியவற்றின் முதற் குறிப்புகளும் எடுத்துக்காட்டுச்சொற்கள், தொகைகள், இருமொழித்
தொடர்கள், பன்மொழித்-தொடர்கள், தமிழ் இலக்கண மரபுச் சொற்கள், வடமொழி இலக்கணச் செய்திகள்,
வடமொழி ஆசிரியரும் நூல்களும், வடசொல் எடுத்துக்காட்டுகள், வடமொழி இலக்கண மரபுச் சொற்கள்
ஆகியவற்றை அடைவு செய்கிறார்.
கோபாலையரின் இத்தகைய
அடைவு முயற்சிகள் ஒரு மாணவனை, ஆய்வாளனை அப்பனுவலினுள் எளிதில் நுழைய வைக்க உறுதுணை
புரிகின்றன. இப்பதிப்பைப் போலவே இவர் 2005ஆம் ஆண்டு வெளியிட்ட வீர-சோழியப் பதிப்பும்
சிறந்த பதிப்பாக அமைகின்றது. 1881ஆம் ஆண்டு சி.வை.தாமோதரம் பிள்ளையால் சமணப்பிரதி என்று
பதிப்பிக்கப்பட்ட ‘வீரசோழியம்’ பல்வேறு ஆய்வுமுறைகளால் பௌத்தரால் எழுதப்பட்ட பிரதி
என்று பின்னர் நிறுவப்பட்டது. சி.வை.தா.விற்குப் பிறகு கா.ர. கோவிந்தராஜ முதலியாரால்
பதிப்பிக்கப்பட்ட பதிப்பு கோபாலையரின் உழைப்பால் பல பரிமாணங்களைப் பெற்றது. ஏறத்தாழ
816 பக்கங்கள் கொண்ட இப்பதிப்பில் இதற்கு முந்தைய பதிப்பிலிருந்த பல்வேறு பிழைகள் நீக்கப்பட்டுச்
செம்மைப் படுத்தப்பட்டுள்ளது. பிரயோக விவேகத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைமைகளே இதிலும்
பின்பற்றப்பட்டு இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இதே
ஆண்டு புதுவை பிரெஞ்சிந்திய ஆய்வுப்பள்ளியினால் வெளியிடப்பட்ட ‘மாறன் அகப்பொருளும்
திருப்பதிக்கோவையும்’ என்னும் நூலின் பதிப்பும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது.
1932 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் இதன் முதல் பதிப்பு மூன்று இயல்களோடு மட்டுமே
வெளியிடப்பட்டது. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் திருக்குருகைப் பெருமாள் கவிராயரால் இயற்றப்பட்ட
இவ்வகப்பொருள் நூலின் ஐந்து பகுதிகளுள் மூன்று பகுதிகள் அதாவது மூன்று இயல்கள் மட்டுமே
கிடைத்திருந்தன. அதன்பிறகு 2004ஆம் ஆண்டு வரை முழுமையற்றதாகவே இருந்து வந்த இப்பதிப்பைக்
கேரளப் பல்கலைக்-கழகக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் இருந்த முழுமைச் சுவடியின்
துணைகொண்டு கோபா-லையர் முழுமைப்படுத்தி 2005இல் வெளியிட்டார். மூலம் மட்டுமே இருந்த
இந்த நூலுக்கு எளிமையாகவும், ஆழமாகவும் உரை எழுதியதோடு அந்நூலோடு தொடர்புடைய பல செய்திகளையும்
இதனுள் ஒருங்கிணைக்கின்றார். இந்நூலில் மூலபாடத்தை முன்வைப்பதில் கோபாலையரிடம் சில
சிக்கல்கள் காணப்படு-கின்றன. சில அடிகள் மாறியும், விடுபட்டும் உள்ளன. ஆனால் இக்குறைகளை
அவரின் பதிப்பு உருவாக்க முறை பூசி மெழுகுகிறது.
தேவாரம் போன்ற சில
இலக்கியப் பனுவல்களை மட்டுமே பதிப்பித்த கோபாலையர் இடர்ப்பாடுகள் நிறைந்த இலக்கணப்பனுவல்களைப்
பதிப்பிப்ப திலேயே அதிக கவனம்கொண்டு செயல்பட்டுள்ளார். நன்னூல் உள்ளிட்ட சில பனுவல்கள்
திரும்பத்திரும்ப அச்சுப்போடப்பட்டு வந்த சூழலில் அவை தவிர்த்த பிறவற்றை அச்சிடுவதிலேயே
இவர் சிரத்தை-யோடு செயல்பட்டுள்ளார்.
ஒரு களஞ்சியத்திற்குச்
செய்ய வேண்டிய அரும்பணியை ஒரு இலக்கணப் பதிப்புக்காகச் செய்த கோபாலையரின் பதிப்புத்
திறத்தை நாம் எந்த விலை கொடுத்து ஈடுகொள்வது. ஒரு பானைச்சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது
போல இவரின் எல்லாப் பதிப்புகளும் ஒத்த தன்மை கொண்டு அமைந்து காணப்படுகின்றன.
“ஒரு நூலைத் தமது பதிப்பின்
மூலம் ஆவணப்படுத்துவதில் தேர்ந்த அறிஞர்களாகச் சி.வை.தா., உ.வே.சா., ச. வையாபுரிப்பிள்ளை
ஆகியோரைக் குறிப்பிடுவர். இவ்வகையில் கோபாலையரும் தம் இலக்கணப் பதிப்புகளைச் சிறந்த
ஆவணங்களாக ஆக்கியிருக்கிறார்’’ (மேலது, ப.93) என்ற கூற்றை இங்குப் பொருத்திப் பார்ப்பதன்
வழி கோபாலையரின் ஒட்டுமொத்தமான பதிப்புச் செயல்பாட்டினை விளங்கிக் கொள்ள முடிகிறது.
ஒவ்வொரு பதிப்பாசிரியருக்கும் ஒரு தனித்த பதிப்புமுறை இருக்கும். சிலர் வெவ்வேறு தன்மைகளில்
தாங்கள் வெளியிடும் பதிப்புகளை நெறிப்படுத்துவர். ஆனால் கோபாலையரோ முதல்-பதிப்பில்
என்னென்ன முறைமைகளைப் பின்பற்றினாரோ அதே தன்மை-களைத் தம் இறுதிக்காலம் வரை வெளிவந்த
அனைத்துப் பதிப்புகளிலும் பின்பற்றியுள்ளார் என்பதை இதன்மூலம் உறுதிசெய்ய முடிகிறது.
கோபாலையரின்
பிற செயல்பாடுகள்
பதிப்பாசிரியர் என்ற
ஒருமுகம் காட்டாது ஆய்வாளர், கட்டுரையாளர் என்ற பன்முகங்க-ளோடு தன்னை நிலைநிறுத்திக்
கொண்டவர். பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் ஆய்வுக்கட்டுரைகள் பல எழுதியவர். அவ்வப்போது
சிறுசிறு நூல்கள் சிலவற்றையும் வெளியிட்டுள்ளார். அதில் கம்பராமாயணத்தில் இவர் கொண்ட
ரசனை முறை கம்பனைப் பல தன்மைகளில் விவாதிக்க வழிவகை செய்தது. அவை: கம்பராமாயணத்தில்
முனிவர்கள் _ 1994, கம்பராமாயணத்தில் தம்பிமார்கள் _ 2 தொகுதி _ 1995, 1996, கம்பராமாயணத்தில்
தலைமைப் பாத்திரங்கள் _ 1998, கம்பராமாயண படலச்-சுருக்கம் (பாலகாண்டம் _ 1999, அயோத்தியா
காண்டம் _ 1999, சுந்தரகாண்டம் _ 1999, யுத்த காண்டம் _ 2000) முதலியன. இவைதவிர தொல்காப்பியம்
சேனாவரையம் _ வினா_விடை விளக்கம், சீவகசிந்தாமணி _ காப்பிய நலன், சீவகசிந்தாமணியின்
இலம்பகச் சுருக்கம் _ 2002 முதலியன இவரின் ஆய்வுத் தளத்திற்கு ஆதாரமாக அமைகின்றன.
நெடுங்காலம் இலக்கணங்களில்
தோய்ந்தும் ஆய்ந்தும் இவர் செயல்பட்டதன் விளைவால் உருவானதுதான் தமிழ் இலக்கணப் பேரகராதி
(2005) ஆகும். தமிழ் இலக்கணத்தின் மிக விரிந்த பரப்பில் கண்ட அனைத்து முக்கியமான தலைப்பு
ஒவ்வொன்றுக்கும் அகர வரிசைப்படி, உரிய நூற்பாக்களும், பல்வேறு உரையாசிரியர்கள் கூற்றுகளும்
தொகுத்துத் தரப்பட்டுள்ள இப்பேரகராதியை கோபாலையரின் வாழ்நாள் பணியாக நாம் கொள்ளலாம்.
இப்பேரகராதி 17 தொகுதிகள் கொண்டது என்பதோடு இலக்கணத் துறை ஆய்வாளர்களுக்கு இது மிகவும்
பேருபகாரமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
எழுத்துப் பணியோடு
மொழிபெயர்ப்பு சார்ந்த துறையிலும், இவர் சிறப்புடன் செயல்பட்டுள்ளார். தமிழ், வடமொழி,
ஆங்கிலம் என மும்மொழிப்புலமை கொண்ட இவர் மொழிபெயர்ப்பிற்குத் தகுதியானவர் என்பதை அவர்
வெளியிட்ட நூல்கள் முன்மொழிகின்றன. 2006ஆம் ஆண்டு திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிக்குப்
பெரியவாச்சான் பிள்ளை எழுதிய உரையினை எளிமையான பதங்களைக் கொண்டு தமிழாக்கம் செய்தார்.
தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை வழியாக இரு தொகுதிகளாக வெளியிடப்பட்ட இம்மொழிபெயர்ப்பு
பக்தி இலக்கியங்களில் குறிப்பிடத்தகுந்த மொழிபெயர்ப்பாகச் சுட்டிச் சொல்லலாம்.
நிறைவாக
தமிழ்ச்சூழலில் கேட்பாரற்று
மறைந்துபோகும் இலக்கணப் பனுவல்களைப் பலநிலைகளில் செம்மைப்படுத்தி அவற்றைத் தமிழ்ச்சமூகத்தின்
ஓர் அங்கமாக மாற்றிய கோபாலையரின் பதிப்புப்பணியை எளிதில் நாம் புறந்தள்ளிவிட முடியாது.
கி.பி. 7, 8ஆம் நூற்றாண்டுகளில் வடமொழியின் செல்வாக்கு வலுவாக நிலைபெற்ற நிலையில் அதற்குப்
பிறகு உருவான இலக்கியப்பனுவல்கள் பலவும் அதன் தன்மையிலேயே செயல்படத் தொடங்கின. இக்கலப்பு
இலக்கிய வகைகளை அடியற்றி அவற்றை எளிதில் புரிந்து கொள்ள காலத்தின் தேவை கருதி இலக்கணநூல்களும்
இவ்விரு மரபையும் முன்வைத்து எழுந்தன.
கி.பி. 11ஆம் நூற்றாண்டு
தொடங்கி கி.பி. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வலுப்பெற்று மிக வீரியமாகச் செயல்பட்டு
வந்த இம்மரபின் பின்புலத்திலேயே இக்காலங்களில் வெளிவந்த இலக்கணப் பதிப்புகளும் புரிந்து
கொள்ளப்பட வேண்டியன. 1950களுக்குப் பிறகு தமிழ்ச்சூழலில் காத்திரமாகச் செயல்பட்ட ‘தனித்தமிழ்
இயக்கம்’ வடமொழிசார் சிந்தனை மரபுகளை பல்வேறு கேள்விகளுக்குட்படுத்தியதோடு அவற்றைப்
புறந்தள்ளவும் தயங்காமலிருந்தன. தமிழின் தனித்தன்மையை மையப்படுத்தவும் அவற்றிற்கான
செழுமையை நிலைநாட்டவும் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி வடமொழி சார் இலக்கண, இலக்கியங்களைப்
புலமை மரபிலிருந்து வெளியேற்றவும் செய்தது. அக்காலகட்டத்தில் இச்செயல் பாடு மிக நுண்ணிய
அரசியலின் தமிழ் இன, மான அரசியலின் அடிப்படையில் செயல்பட்டிருந்த போதிலும் காலத்தின்
தேவை கருதி எழுதப்பட்ட பனுவல்கள், தமிழில் எழுதப்பட்ட பனுவல்கள் இங்கு தானாகவே விலக்கப்பட்டு
அழியும் தருவாயை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டன.
இன்னொருபுறம் தமிழின்
நீண்ட மரபில் வெளிவந்த பல இலக்கணப் பனுவல்களில் எளிமையாகவும், தொன்மையாகவும் இருந்த
இலக்கணப் பனுவல்களே பாடத்திட்டத்தின் அடிப்படையிலும், நிறுவனத்தின் அடிப்படையிலும்,
பதிப்பாசிரியர்களின் தனிப்பட்ட ஆர்வங்களின் அடிப்படையிலும் தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்பட்டு
வெளியிடப்பட்டு வந்தன. வடமொழியோடு இணைந்த பல சிக்கல்களை உடைய இப்பிற்காலப் பனுவல்களைப்
பதிப்பாசிரியர்கள் பலரும் பதிப்பிப்பதற்குத் தயங்கியே வந்துள்ளனர். இவ்விரு காரணங்களி-னாலும்
அதிக பதிப்புகளைப் பெறாது போன இவற்றின்மீது கோபாலையர் என்னும் இலக்கண ஆசிரியனின் கவனம்
சென்று குவிந்தது, இந்-நூல்கள் மீட்டுருவாக்கம் பெற வழிவகை செய்தது.
பௌத்தப் பிரதியோ, சமணப்
பிரதியோ, சைவப் பிரதியோ, வைணவப் பிரதியோ அது எவ்வகைப்பட்ட பிரதியாக இருந்தாலும் சரி,
அது வடமொழி மற்றும் தமிழ் ஆகியவை கலந்த இலக்கணப் பிரதியாக, வாசிப்பவர்களுக்குப் புரிபடாத
பிரதியாக இருந்தால் அவற்றைப் பதிப்பிப்பதையே தன் முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டவராக
கோபாலையர் காணப்படுகிறார். பல்வேறு சுவடிகளை ஒப்புநோக்கிப்
பதிப்பிக்கும் போது அவற்றில் தான்கொண்ட பாடத்தையே மூலபாடமாக நிர்ணயிப்பதோடு வேறுபாடங்களை
அடிக்குறிப்பில் தருவதை இவர் மரபாகவும் கொள்ளவில்லை. மூலபாட ஆய்வை முன்னிறுத்துவதை
விட அதைப் பயன்பாட்டுப் பதிப்பாக மாற்றுவதிலேயே கோபாலையர் முழுக்கவனம் கொண்டு செயல்பட்டுள்ளார்.
“கோபாலையர் தம் பதிப்பிற்குள்
அங்குலம் அங்குலமாக இயங்கியிருக்கிறார். மிகுந்த கவனத்தோடும் பொறுப்புணர்வோடும் செயலாற்றியிருக்கிறார்.
மெச்சத் தகுந்த அவரது அபார நினைவாற்றல் நூல் முழுக்க வியாபித்துள்ளது. இதனால் பதிப்பாளுமை
மிக்க ஒரு பேராசிரியராக அவர் மிளிர்கிறார்’’
(மேலது, ப _ 94) என்னும் கூற்று கோபாலையரின் பணியைக் கவனப்படுத்துகிறது. அடிப்படையில்
ஓர் ஆசிரியர், நூற்பாக்களுக்கு விளக்கம் கூறும் உரையாசிரியர் ஒரு பதிப்பாசிரியராக மாறும்-போது
அப்பதிப்புகள் என்ன வகையான வடிவம் எடுக்கின்றன என்பதற்குக் கோபாலையரின் இத்தகைய பதிப்புகளே
சாட்சியாக அமைகின்றன. பேராசிரியர், சிவஞான முனிவர் போன்ற ஆசிரியர்கள் பாடம் சொல்லும்
மரபிலிருந்து உரையாசிரியராகப் பரிணமித்தது போன்று கோபாலையர் என்னும் ஆசிரியர் உரையாசிரியராக
மட்டுமே நின்றுவிடாது தம் காலத்துச் சூழலுக்குத்தக பதிப்பாசிரியராகவும் மாறியுள்ளார்
என்று அவதானிக்கும்போது இவரின் ஆற்றல் விளங்குகிறது.
இலக்கணப் பனுவல்களைப் பதிப்பித்தலில்
தொடர்ச்சியாகப் பதிப்பாசிரியர்கள் பலர் ஈடுபட்டு இருந்தபோதிலும் கோபாலையரின் பதிப்பு
உருவாக்கம் ‘பதிப்பின் வழி பாடம் சொல்லுதல்’ என்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுள்ளது
என்பதையே இக்கட்டுரை அடையாளப்படுத்துகிறது. செம்பதிப்பிற்கான இலக்கணம் என்ன என்பதை
அறிய-முடியாமல் போகிறதொரு சூழலில் தி.வே. கோபாலையரின் இப்பதிப்புகள் செம்பதிப்புகளாகவே
என் கண் முன் விரிந்து நிற்கின்றன.
விரிவான அணுகுமுறை.நுண்ணிய புரிதல். தி.வே.கோ பற்றிய இந்த கட்டுரை அவரது பதிப்பு முயற்சிகளை விமரிசனப்பூர்வமாக அணுகியிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.
ReplyDelete