தமிழ் இலக்கண மரபில் தொல்காப்பியத்திற்குப் பிறகு கிடைக்கிற இலக்கண நூல்களில் இரண்டாவதாகத் திகழ்வது இறையனார் களவியல் நூலும் அதன் உரையும். இறைவனால் எழுதப்பட்டது, குமரக்கடவுளால் கேட்கப்பட்டது, பத்து தலைமுறைகளாக எழுதப்பட்ட உரை வாய்மொழியே கேட்கப்பட்டு எழுத்தில் நிலைபெற்றது எனப் பாயிரத்தின் முகப்புரை பல்வேறு செய்திகளை முன்வைத்த போதிலும் 20 ஆம் நூற்றாண்டு ஆய்வில் அவையெல்லாம் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டு பல்வேறு முடிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நூலும் உரையும் பல்வேறு விவாதங்களுக்கு உரியன என்றாலும் அறுபது நூற்பாக்கள் கொண்ட நூலைக் காலம் கடந்து நிலைபேறடையச் செய்துள்ள பெருமை அதன் உரையையேச் சாரும். உரை மொழி, உவமைகளின் திறன், விளக்கும் பாங்கு என உரைநுட்பங்களின் வழி களவியல் உரை தமிழ் இலக்கண உரை வரலாற்றில் தனித்த அடையாளத்தோடு திகழ்கிறது.
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இறையனார் களவியல் நூலும் அதன் உரையும் முதன் முதலாக 1883 ஆம் ஆண்டு சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்களால் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இப்பதிப்பு வெளியிடப்பட்ட பின்னர் இன்றுவரைடு வரை இறையனார் களவியலுக்குப் பல்வேறு பதிப்புகள் வெளிவந்துள்ளன. கல்விப்புலத்தின் பாடத்திட்டங்களில் நம்பி அகப் பொருளும், தொல்காப்பியப் பொருளதிகாரமுமே பெரிதும் நிலைபெற, வாசிப்பிற்குள்ளாக இறையனார் களவியல் உரை அதன் கடினத்தன்மை நோக்கிப் பாடத்திட்டங்களில் இடம்பெறாமலே போய்விட்டது. இதனால் ஆய்வாளர்களின் கவனத்திற்குள்ளான பிரதியாகவே இறையனார் களவியல் இன்றுவரை திகழ்கிறது.
இதனால் தொல்காப்பியத்திற்கு வெளிவந்தது போன்று தொடர்ச்சியான பதிப்புகள் இறையார் களவியலுக்கு வெளிவரவில்லை என்றாலும் வந்த சில பதிப்புகள் ஆய்வுப் பதிப்புகளாக நிலைபெற்றன. இறையனார் களவியலுக்கு இதுவரை என்னென்ன பதிப்புகள் வெளிவந்துள்ளன என்பதைத் தேடியே கண்டறிய வேண்டி இருப்பதால் அதனை ஆவணப்படுத்தும் முயற்சியாக இப்பதிவு அமைகிறது. சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் தாம் வாழ்ந்த காலத்திலேயே இரண்டு பதிப்புகள் இறையனார் களவியலுக்கு வெளியிட்டு இருந்தாலும் வாசிப்பதற்குத் துணை நிற்பவையாக பவானந்தம் பிள்ளை, கா.ரா.கோவிந்தராஜ முதலியார், நமச்சிவாய முதலியார் ஆகியோரின் பதிப்புகளே பெரிதும் உதவுகின்றன.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழியாகப் பேராசிரியர் அ. தாமோதரன் அவர்கள் வெளியிட்ட இறையனார் களவியல் மூலப் பதிப்பு சுவடிகளையும் பதிப்புகளையும் ஒப்புநோக்கி வெளியிடப்பட்ட சிறந்த பதிப்பாக உள்ளது. 1939 ஆம் ஆண்டு வெளிவந்த கா.ரா.கோவிந்தராஜ முதலியார், மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை ஆகியோர் இணைந்து உருவாக்கிய பதிப்பு ஆவண நோக்கில் பயன்பாட்டுப் பதிப்பாக உள்ளது (இந்தப் பதிப்பின் முகப்புப் பக்கம் மட்டும் கிடைக்காததால் இதில் இணைக்க இயலவில்லை).
பதிப்புகள் கால வரிசை நிலையில்
1. இறையனாரகப்பொருள், சி.வை.தாமோதரம்பிள்ளை, ஸ்காட்டிஷ் பிரஸ் வெளியீடு, சென்னை. 1883.
2. இறையனாரகப்பொருள், சி.வை.தாமோதரம்பிள்ளை, ஜூபிலி பிரஸ் வெளியீடு, சென்னை. இரண்டாம் பதிப்பு, 1899.
3. இறையனார் அகப்பொருள் மூலம் (நக்கீரனார் உரையுடன்), ராவ்பஹதூர் ச. பவனாந்தம் பிள்ளை, பவானந்தர் கழகம், 1916. (இதன் மறுபதிப்புகள் - பாரி நிலையம், சென்னை - 2010, சாரதா பதிப்பகம், சென்னை -2010,
4. களவியல் என்னும் இறையனார் அகப்பொருள் மூலமும் நக்கீரனார் உரையும், கா.ர. கோவிந்தராஜ முதலியார், மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை, பவானந்தர் கழகம், சென்னை, 1939 (இதன் மறுபதிப்பு - வசந்தா பதிப்பகம், சென்னை - 2006)
5. இறையனார் களவியல் என்னும் இறையனார் அகப்பொருள், கா. நமச்சிவாய முதலியார், C.R.N. & SONS, சென்னை, 1943.
6. களவியல் என்ற இறையனார் அகப்பொருள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, முதல் பதிப்பு 1953.
7. இறையனார் அகப்பொருள் - செம்பதிப்பு - 1, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், வெளியீடு, சென்னை, 2013
8.மதுரை மின்னூலாக்கத்திட்டம் வழியாக மூலமும், தமிழ் இணையக் கல்விக்கழக நூலகத்தில் மூலமும் உரையுமாக இணைய வழி இறையனார் அகப்பொருள் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
இறையனார் அகப்பொருளின் பதிப்பு முகப்புப் பக்கங்கள்
1883 ஆம் ஆண்டுப் பதிப்பு
1899 ஆம் ஆண்டுப் பதிப்பு
1916 ஆம் ஆண்டுப் பதிப்பு
1943 ஆம் ஆண்டுப் பதிப்பு
1953 ஆம் ஆண்டுப் பதிப்பு
2006 ஆம் ஆண்டு - மறுபதிப்பு
2010 ஆம் ஆண்டு - மறுபதிப்பு
இந்தப் பதிவில் சேர்க்க வேண்டிய பதிப்புகள் இருந்தால் கருத்துரைப் பகுதியில் கருத்துரைக்கவும்.
அருமையான பதிவுகளை ,அனைவருக்கும்
ReplyDeleteபயன்படும் வகையில் தருகிறார்கள் ஐயா
மிக்க நன்றி.
நன்றி
Delete