தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Tuesday, July 3, 2012

இரு நூற்றாண்டுப் பதிப்பு வரலாற்றில் தொல்காப்பியம்


இரு நூற்றாண்டுப் பதிப்பு வரலாற்றில் தொல்காப்பியம்
குறிப்பு: 'இரு நூற்றாண்டுப் பதிப்பு வரலாற்றில் தொல்காப்பியம்' (இராசகுணா பதிப்பகம், சென்னை, விலை ரூ.75)  என்னும் தலைப்பில் வெளிவந்த எனது  நூலுக்கு பெருமாள்முருகன் அவர்கள் எழுதிய முன்னுரை இது;

வெளி நோக்கி விரியும் தேடல்



    
பொது வாசகர்களிடத்தும் தமிழ் இலக்கியக் கல்விப் புலத்திலும் இன்னும் போதுமான அளவு பதிப்பு தொடர்பான விழிப்புணர்வு உருவாகவில்லை. எனினும் தமிழிலக்கிய ஆய்வுச் சூழலில் குறைந்தபட்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சி தருகிறது. கல்விப் புலத்தில் இதற்கு முன்னும் பதிப்பு தொடர்பாக எழுதியவர்கள், பேசியவர்கள் இருந்தனர். அவர்களின்  ஆய்வுமுறை என்பது எவரையும் தொந்தரவு செய்யாதவை. ஆனால் இன்றைய ஆய்வுகள் அப்படியானவை அல்ல. பதிப்புக்குப் பின்னுள்ள அரசியல், காலச்சூழல் ஆகியவை பற்றியும் பதிப்புக் குறைபாடுகள் குறித்தும் வெளிப்படையாகப் பேசுகின்றன. இதுவரை வெளிப்படுத்தப்படாத பல முக்கியமான பதிப்பாசிரியர்கள், பதிப்புகள் குறித்துக் கவனம் குவிக்கும் வகையில் சான்றாதாரங்களோடு முன்வைக்கின்றன. யாரையாவது விமர்சனம் செய்தால் தம் உலகியல் பயன்கள் பாதிக்கப்படும் என்னும் அச்சத்தின் காரணமாகக் கருத்துரீதியான விவாதத்தைக்கூட முன்னெடுக்கத் தயங்கிய நிலை இன்றில்லை. மேலும் கருத்துரீதியான விவாதக்களம் இன்றைய ஊடக வாய்ப்புக்களின் மூலமாகக் குறிப்பிடத்தக்க அளவு சாத்தியமாகி இருக்கிறது.

 பழம் பதிப்புகளைத் தேடிக் கண்டடைவதற்கான சிரமமும் ஒப்பீட்டளவில் இன்று குறைந்திருக்கிறது. ஆனால் தமிழ்ப் பாடத்திட்டத்தில் இன்னும் பதிப்பியல் இடம்பெறவில்லை. நவீன இலக்கிய வாசகருக்கு உள்ள பதிப்புணர்வுகூடத் தமிழாசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இல்லை. தமிழ்க் கல்வியில் எவ்விடத்திலும் பதிப்பு தொடர்பான குறைந்தபட்ச அறிமுகக் குறிப்புகள் கிடைப்பதில்லை. ஒன்றையொன்று பார்த்துச் சில சொற்களை மட்டும் மாற்றி எழுதப்பட்டுப் பாடநூல் விற்பனை நோக்கில் வெளிவந்திருக்கும் நூற்றுக்கணக்கான இலக்கிய வரலாற்று நூல்களில் பதிப்பு பற்றிய தகவல்கள் ஏதுமில்லை. ஒன்பதாம் நூற்றாண்டு தொடங்கிப் பதினேழாம் நூற்றாண்டு வரை  விரிவான இலக்கிய வரலாற்று நூல்களை எழுதியிருக்கும் மு.அருணாசலம் மட்டும் தம் நூல்கள் சிலவற்றில் பதிப்புகள் தொடர்பான தகவல்களைக் கொடுத்துள்ளார். மூல நூல்கள் எதையும் பார்க்காமலே எழுதப்படும் இன்றைய இலக்கிய வரலாறுகளில் பொதுத்தகவல் பிழைகளே மலிந்து கிடக்கும்போது பதிப்பு பற்றிய செய்திகளை எதிர்பார்ப்பது மிகைதான். 

பாடத்திட்டத்தில் பதிப்பியல் இடம்பெறுவதுடன் அதை நூலகத்துடன் தொடர்புபடுத்தும் செய்முறை வகுப்புகளும் அவசியம். அதேபோலப் பதிப்பியல் தொடர்பான ஆய்வுக்களங்களும் இன்னும் விரிவடைய வேண்டும். பதிப்பு நுட்பங்கள், நெறிமுறைகள் தொடர்பான ஆய்வுகள் பெருக வேண்டும். இது பதிப்பாசிரியரின் உழைப்பு சார்ந்த விஷயம் மட்டுமல்ல. பதிப்பு நுட்பங்களின் வளர்ச்சி என்பது அதற்குரிய வாசகர்களின் தன்மை, புலமைத்தளத்தில் நிலவிய கருத்து விவாதங்களின் போக்கு முதலியவற்றையும் உள்ளடக்கியது. பதிப்பாய்வு என்பது பாடவேறுபாட்டு ஆய்வுகளையும் முதன்மைப் படுத்துவது. பாடவேறுபாடுகள் தொடர்பாக விரிவான ஆய்வுகள் இதுவரை நிகழவில்லை. எப்போதும் பேசப்படும் பதிப்பாசிரியர்கள் சிலரைத் தவிர இன்னும் பேசப்படாத பதிப்பாசிரியர்கள் பலர் உள்ளனர். அவர்களை  வெளிச்சப்படுத்துவதும் முக்கியம். 

இப்படி இத்துறை விரிவுபெற வேண்டும் என்னும் போதே தமிழ்ச்சூழல் சார்ந்த எச்சரிக்கையும் அவசியம். விரிவு என்பது நீர்த்துப் போகச் செய்தல் என்பதுதான் நம் சூழல் சார்ந்த அர்த்தம். மிக ஆழமான ஒரு துறையாக ஆய்வுலகுக்கு அறிமுகமான நாட்டுப்புறவியலுக்கு நேர்ந்த நிலையையும் மனதில் கொள்வது நல்லது. பதிப்பாய்வு என்பது பழைய விஷயங்களைப் பேசுவது மட்டுமல்ல, அதை இன்றைய வாசக உலகோடு இணைக்க வேண்டுமானால் இன்றைய பதிப்புகளைப் பற்றியும் அக்கரையோடு பேசியாக வேண்டும். பதிப்பாளர்களைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்னும் சுயநலன் சார்ந்த கருத்தே நவீனப் பதிப்புகளைப் பற்றிப் பேசத் தடையாக இருக்கிறது. அந்தக் கவலையின்றிச் சமகாலப் பதிப்புகளைப் பற்றியும் அவற்றில் உள்ள சிக்கல்கள் குறித்தும் பேசியவர்களுக்கு இன்று கூடுதல் கவனம் கிடைத்திருக்கிறதே தவிர எந்த மதிப்புக் குறைபாடும் நேரவில்லை. ச.வையாபுரிப்பிள்ளையும் மு.அருணாசலமும் இதற்குச் சிறந்த சான்றுகள். 

பழந்தமிழ் இலக்கியங்களை இன்று வெளியிடும் பதிப்பகங்கள் அவற்றைப் பலவிதமாகச் சிதைக்கும் போக்கைப் பதிப்பாய்வாளர்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடக்க காலத்தில் வெளியிட்ட நகலச்சுப் பதிப்புகளைப் போன்றும் இன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கம்பராமாயண மறுபதிப்பைப் போன்றும் வெளியிடுவதே பழம் பதிப்புகளின் மதிப்பைக் காப்பாற்றுவதாகும். அதை வலியுறுத்தும் வகையிலான ஆய்வுகளும் விமர்சனங்களும் பதிப்பாய்வை இன்றைய காலத்தோடு தொடர்புபடுத்துவன. புதிய பதிப்புகள் வரும்போது அவற்றில் இன்றைய தேவையை ஒட்டிய விசயங்களைக் கோருவதும் பதிப்பாய்வாளர்களின் கடன். அதற்கு நிச்சயம் நல்ல பலன்கள் இருக்கும். ஆ.இரா.வேங்கடாசலபதி பதிப்பித்த புதுமைப்பித்தன் கதைகள்பதிப்பு பற்றிய கட்டுரை ஒன்றில் பழைய இலக்கியப் பதிப்புகளில் செய்யுள் முதற்குறிப்பகராதி இருப்பதைப் போல இதில் கதைத் தலைப்பு அகராதி இடம் பெறுவது அவசியம்எனக் குறிப்பிட்டிருந்தேன். இப்போது பழ.அதியமான் பதிப்பில் வெளியாகி யிருக்கும் கு.அழகிரிசாமி கதைகள்நூலில் கு.அழகிரிசாமி கதைகள் அகர வரிசைஇடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது. 

இந்நிலையில் இன்றைய தமிழ்க் கல்விப்புலத்திலிருந்து உருவாகி வரும் இளம் ஆய்வாளர்கள் பலர் மிகுந்த உழைப்பையும் ஆய்வுப் பார்வையையும் கொண்டுள்ளனர் என்பது உவப்பான செய்தி. அத்தகையோரில் பா.இளமாறன் குறிப்பிடத்தக்கவர். ஏற்கனவே பதிப்பும் வாசிப்பும்என்னும் நூலை வெளியிட்டுள்ளார். பொதுவாக இவரது ஆய்வுகள் இலக்கணப் பதிப்புகள் சார்ந்தவை. பதிப்பைப் பல கண்ணிகளோடு தொடர்புபடுத்தும் ஆய்வுப் பார்வை கொண்டவை. தொல்காப்பியம் தொடர்பாக விரிவாகக் கவனம் செலுத்துபவர். தொல்காப்பிய ஆய்வு மரபு இடைமுறிந்த காலத்து இளமாறன் அதன் இணைப்புக் கண்ணியாக விளங்குகிறார் என்று சொல்லத் தோன்றுகின்றது. இவரது கட்டுரைகள் ஆய்வு முறையியலை உள்வாங்கி அதனை உயிர்ப்புடன் பின்பற்றுபவை. ஆய்வுக் கட்டுரையின் பின்னிணைப்பாக வகைப்படுத்தி இவர் வழங்கும் தரவுகள் இவரது ஆய்வுக்கான நம்பகத்தன்மையைக் கொடுப்பதோடு மேலாய்வோருக்குச் சிரமத்தைக் குறைக்கின்றன. தரவுகளை மறைத்துக் கொள்ளும் தந்திரம் அற்ற வெளிப்படைத் தன்மை இவரிடம் இருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.

இவர் தரும் தகவல்கள் மதிப்பு மிக்கவையாகவும் பார்வைகளை உருவாக்குபவையாகவும் இருக்கின்றன. 1858இல் தொல்காப்பிய நன்னூல் பதிப்பைச் செய்த சாமுவேல் பிள்ளையைப் பற்றியும் அவரது பதிப்பு நுட்பங்கள் குறித்தும் இவர் எழுதியுள்ள விரிவான கட்டுரையில் மிக முக்கியமான தகவல் ஒன்றைத் தந்துள்ளார். 1868 தொடங்கி 1950 வரை வெளிவந்த தொல்காப்பியப் பதிப்புகளில் சாமுவேல் பிள்ளையைப் பற்றியோ அவரது பதிப்பைப் பற்றியோ குறிப்பிடவில்லை என்பதுதான் அது. புரசபாக்கம் ஸ்ரீசாமுவேற் பண்டிதரவர்கள் தமது சொந்தக் கையினால் எழுதி வைத்திருந்த பிரதி ஒன்றைத் தாம் பயன்படுத்தியதாகக் குறிப்பிடும்சி.வை.தாமோதரம் பிள்ளையும் தமது பதிப்புரையில் சாமுவேல் பிள்ளை பதிப்பைச் சுட்டவில்லை. இந்தத் தகவல் வேறொரு சிந்தனைக்கு இட்டுச் செல்கிறது. உ.வே.சாமிநாதையர் தமது சீவக சிந்தாமணிப் பதிப்பில் அவருக்கு முன் சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகத்தைப் பதிப்பித்த ரெவரெண்ட் பவர் பற்றி எந்தக் குறிப்பையும் தரவில்லை என்பது ஏற்கனவே பலரும் சொன்ன செய்தி. பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பதிப்பாசிரியர்கள் தமது பதிப்புரைகளில் முந்தைய பதிப்புகளைக் குறிப்பிட வேண்டும் என்னும் உணர்வைக் கொண்டிருக்கவில்லை என்று சொல்லலாமா? பதிப்பாய்வுகள் முக்கியத்துவம் பெற்ற பின்னர் ஒரு பதிப்பில் முந்தைய பதிப்புகளைக் குறிப்பிட வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு உண்டாகியிருக்கக் கூடும். பதிப்பு நெறிமுறை சார்ந்த அறமாக இன்று கருதப்படும் விஷயம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கவனத்திற்குரியதாக இருந்திருக்கவில்லையோ என்று தோன்றுகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பதிப்புகளை முழுமையாக ஆராய்ந்தால் இதைப் பற்றி முடிவுக்கு வர இயலும்.

தொல்காப்பியம் தமிழரின் அடையாளமாக மாறியமைக்குப் பதிப்பாசிரியர்கள் செய்த பங்களிப்பை விவரிக்கும் இவரது ஆய்வு மிகவும் முக்கியமானது. ஒரு நூலின் மேல் கட்டமைக்கப்படும் புனைவுகள் படிப்படியாக அவிழ்ந்து அது வேறொரு பரிமாணம் பெறுவது சாத்தியம் என்பதற்குத் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் நிதர்சனமான சான்றுகள். தமிழ் இலக்கியக் கல்வியில் தொல்காப்பியம் இன்றுவரை மையமான இடத்தைப் பெற்றிருக்கும் அதிசயம் விரிவான ஆய்வுக்குரியது. இடையிடையே பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றிய போதும் அவை அனைத்தும் தொல்காப்பியத்தின் வழி, சார்பு நூல்களாகவோ தொல்காப்பியச் சிந்தனைக் குழுவுக்கு எதிரான ஒன்றாகவோ தாம் இருந்திருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இவ்விதம் ஒரு நூல் தனித்தன்மை பெற்றிருப்பது சாதாரண விஷயமல்ல. இதை விளக்குவது அவ்வளவு எளிதும் அல்ல. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பதிப்பாக வெளியான இந்நூல் படிப்படியாக நூறு ஆண்டுகளுக்குள்  பெற்ற அடையாளத்திற்குள் பல நூற்றாண்டு மரபுத் தொடர்ச்சி இருக்கிறது என்றே தோன்றுகின்றது. அதை நோக்கிய ஒரு அடிவைப்பாக இளமாறனின் கட்டுரை அமைந்திருக்கிறது. 

பதிப்பாய்வில் கவனம் கொள்ள வேண்டிய முக்கியமான பகுதி பாட வேறுபாடுகள். பதிப்பாசிரியர்கள் பாடத்தை நிர்ணயிக்கப் பல்வேறு அளவுகோல்களைக் கைக்கொண்டுள்ளனர். ஆனால் அவற்றைப் போதுமான அளவு அவர்கள் பதிவு செய்து வைக்கவில்லை. அளவுகோல்களைக் கண்டறிவதே இன்று முக்கியமான ஆய்வாக விரியக்கூடியது. பாட வேறுபாடுகளை முன்வைத்து ஒரு நூலின் வாசிப்பு வரலாற்றை உருவாக்கவும் இயலும். இளமாறன் தம் ஆய்வில் பாட வேறுபாடுகள் சார்ந்தும் கவனம் கொண்டுள்ளார். அவரது முந்தைய நூலில் மாறனகப்பொருள் பாட வேறுபாடு தொடர்பாக எழுதிய கட்டுரை சிறப்பானது. இந்நூலில் தி.வே.கோபாலையர் பற்றிய கட்டுரை இத்தன்மை கொண்டுள்ளது. ‘...மூலபாடத்தை முன்வைப்பதில் கோபாலையரிடம் சில சிக்கல்கள் காணப்படுகின்றன. சில அடிகள் மாறியும் விடுபட்டும் உள்ளன. ஆனால் இக்குறைகளை அவரின் பதிப்பு உருவாக்க முறை பூசி மெழுகுகிறதுஎன்று இளமாறன் குறிப்பிடுகிறார். மூலபாடம் தொடர்பாகக் கோபாலையரிடம் காணப்படும் சிக்கல்களுக்குக் காரணம் அவரது பதிப்பு உருவாக்க முறைதான் என்று கணிப்பது பொருத்தமாக இருக்கிறது. உரை மரபிலிருந்து பதிப்பு மரபை நோக்கிஎன்னும் கட்டுரைத் தலைப்பு கோபாலையரின் பதிப்பு உருவாக்க முறையை மையமாக்கிப் பொருத்தமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.  தான்கொண்ட பாடத்தையே மூலபாடமாக நிர்ணயிக்கும் அவர், வேறுபாடங்களை அடிக்குறிப்பில் தருவதில்லை. அவ்வாறு தருவது பதிப்பு மரபு மட்டுமல்ல, பதிப்பு நெறிமுறை. பயன்பாட்டுப் பதிப்பு என்னும் அவரது நோக்கம் இந்த நெறிமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பதிப்பாய்வில் பாட வேறுபாடுகளைக் கவனத்தில் கொண்டால் இவ்விதம் முக்கியமான சில முடிவுகளை எட்ட முடியும்.

இத்தொகுப்பில் உள்ள ஐந்து கட்டுரைகளில் தொல்காப்பியம் தொடர்பானவை மூன்று. கோபாலையர் பற்றியது ஒன்று. மற்றொரு கட்டுரை பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலக்கணப் பயில்வு நூல் உருவாக்கம்என்பதாகும். மிகுந்த உழைப்புடன் இளமாறன் உருவாக்கியுள்ள கட்டுரை இது. நமது கல்வி மரபில் இலக்கணப் பயில்விற்கு தொடர்முக்கியத்துவம் இருந்து வந்துள்ளது. இலக்கியத்தைப் போலவே இலக்கண உருவாக்கத்திலும் கல்வியிலும் மதம் செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கல்வி முறை மரபும் நவீனமும் இணையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம் என்று சொல்ல வேண்டும். கல்விக் கூடங்களின் பெருக்கம் நிகழ்ந்த அதேசமயம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை போன்ற மரபாசிரியர்கள் புகழ்பெற்று விளங்கினர். மகாவித்வானின் மாணவர்கள் ஓலைச்சுவடிகளோடு அச்சுப் பிரதிகளையும் கொண்டு பயின்றனர். பிரதாப முதலியார் சரித்திரம் எழுதிய வேதநாயகம் பிள்ளை நவீனக் கல்வி பயின்றவர் எனினும் மகாவித்வானோடு தொடர்பு கொண்டிருந்தவர். அவரைத் தம் ஆசிரியராகவே கருதும் இயல்பினர். இத்தகைய கல்விச் சூழல் நிலவிய காலமாதலால் இலக்கணப் பயில்விலும் நூல் உருவாக்கத்திலும் இதன் பிரதிபலிப்பைக் காணலாம். மரபான இலக்கண நூல்களைப் பயில்வதோடு அவற்றைப் போன்ற யாப்பில் புதிய நூல்களை உருவாக்கல் ஒருபுறம் நடைபெற்றுள்ளது. அதேசமயம் உரைநடையில் இலக்கணம் எழுதும் புதிய நடைமுறை பரவலாக்கம் பெற்றுள்ளது. 

இதைப் பற்றிப் பலவிதமான அவதானிப்புகளைச் செய்திருக்கும் இளமாறன், அக்காலத்தில் இலக்கணப் பயில்வு நூல்களால் ஏற்பட்ட நன்மை, தீமை எனப் பிரித்துச் சிலவற்றைச் சுட்டுகிறார். ஒரு காலமாற்றத்தை ஆய்வு செய்யும்போது நன்மை, தீமை எனப் பாகுபடுத்துவதன் பொருத்தம் குறித்து எனக்குக் குழப்பம் உள்ளது. மரபிலக்கண நூல்களின் வாசிப்பு பின் தள்ளப்பட்டு அவற்றின் சுருக்கத்தை மட்டும் அறிதல்என்னும் நிலை உருவானதைத் தீமை என மதிப்பிடுகிறார். மரபிலக்கண நூல் வாசிப்பில் செயல்பட்ட மதம், குழு சார்ந்த விஷயங்கள் படிப்படியாகப் பின் தள்ளப்பட்டமைக்கான தொடக்கம் எனவும் அச்சு ஊடகம் வெகுஜனப் பயில்வுக்கெனத் தனி நூல் உருவாக்கத்தையும் புலமைத்தளத்துக்கெனத் தனிநூல் உருவாக்கத்தையும் சாத்தியப்படுத்திய நகர்வு எனவும் இந்த மாற்றத்தைக் குறித்துச் சிந்தித்தால் நன்மை, தீமை என்னும் மதிப்பீடு மரபிலக்கண நூல்கள் மீதுள்ள ஈடுபாட்டின் காரணமாக எழுவது எனப் புரிகிறது. ஆகவே   ஒரு பயில்வு முறை பின் தள்ளப்பட்டுப் புதியதொரு முறை உருவாகியது என்னும் அவதானிப்பாக மட்டும் அதைக் கொள்வது சிந்தனையின் பரப்பை விரிக்கும் ஆய்வுமுறையாக இருக்கும்  எனத் தோன்றுகின்றது.

இளமாறனின் ஆய்வுக் கட்டுரைகள் புதிய புரிதல்களை வழங்குவதோடு வெவ்வேறு கோணங்களில் சிந்திப்பதற்கான தூண்டுதல்களையும் தருகின்றன. அதற்குக் காரணம் வளாகச் சுவர்களுக்குள் முடங்காமல் கதவுகளைத் திறந்துகொண்டு வெளி நோக்கி விரியும் தேடல் அவருக்குள் இருப்பதுதான்.

                                                                     ----------------------                               


No comments:

Post a Comment