தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Monday, July 7, 2014

தமிழ் இலக்கண நூல்களின் முதல் பதிப்புகள்


ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு தமிழ்ச்சமூகத்தில் ஏற்பட்ட கல்வி குறித்த சிந்தனை வெவ்வேறு புதிய போக்குகளை உருவாக்கின. மரபார்ந்த பயிற்றல் முறைகள் பின்தள்ளப்பட்டு நவீன வாசிப்பு சார்ந்த நிறுவனங்களும், புதிய வகையிலான பயிற்றல் கருவிகளும் தோற்றம் பெற்றன. ஐரோப்பியரின் தமிழ் மொழி அறிதல் என்னும் சிந்தனை விரிவுபெற்று ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தின் மொழி அறிதலாக ( எழுத்து அறிதல்) விரிவடைந்தது. இம்மொழி அறிதலுக்காக ஐரோப்பியர்கள் தாம் கொண்டுவந்த அச்சு ஊடகத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டனர். எனவே தான் தமிழ் இலக்கணப் பதிப்பு வரலாற்றை ஐரோப்பியர்களின் மொழி கற்றல் வரலாற்றிலிருந்தே தொடங்க வேண்டியுள்ளது. மதம் பரப்பலுக்காகவும், அதிகாரம் செலுத்துவதற்காகவும் தமிழைக் கற்க விழைந்த ஐரோப்பியர்கள் இரு நிலைகளில் அதற்கான கருவி நூல்களை உருவாக்கத் தொடங்கினர். இக் கருவி நூல்களின் உருவாக்கத்தில் தொடக்ககாலத்தில் அதிக பங்களிப்புச் செய்தவர்கள் சென்னைக் கல்விச் சங்கத்தைச் சார்ந்த எல்லிஸ்துரை மற்றும் அச்சங்கத்தின் புலவர்களே ஆவர்.

            சென்னைக் கல்விச் சங்கம் உருவாக்கம் பெற்ற அதே சமகாலத்தில் தமிழ் நாட்டில் ஏராளமான கல்விநிறுவனங்களும் தோன்றின. அச்சுப் பரவலாக்கச் சட்டம் வந்த பிறகு இந்நிறுவனங்களுக்குத் தேவையான பாட நூல் உருவாக்கத்தில் அக்காலத்தைய புலவர்களும், ஆசிரியர்களும் ஈடுபடத் தொடங்கினர். இவர்கள் மொழியை எளிமையாக அறிய உதவக்கூடிய உரைநடை இலக்கண நூல்களையும், வினாவிடையிலான இலக்கண நூல்களையும் எழுதத் தொடங்கியதோடு, தொன்றுதொட்டு பயிலப்பட்டு வந்த மரபான, எளிமையான நூல்களுக்கு உரையெழுதி அச்சிடவும் தொடங்கினர். இதனால் இவர்களனைவரும் புலவர், ஆசிரியர் என்ற பெயர்களுக்கு மேலாக  உரையாசிரியர்கள், பதிப்பாசிரியர்கள் என்ற புதிய பெயர்களையும் பெற்றனர்.

            பாட நோக்கிலான இத்தன்மை மேலும் விரிவுபெற்றுத் தமிழின் தொல் இலக்கண நூல்களும் அச்சிடப்பெற்றன. அவ்வகையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் இலக்கண நூலாக இன்று அறியப்படுவது நன்னூலே ஆகும். இந்நூலுக்கு முன்பே  சுருக்க நூல்களும் (தமிழ்ச் சுருக்க விளக்கம் - 1811, இலக்கண சுருக்கம் – 1813), வினாவிடை நூல்களும்       (1828) அச்சிடப்பெற்றிருப்பினும் மரபான இலக்கண நூல் என்ற முறையில் நன்னூலையே குறிப்பிடமுடிகிறது. நன்னூல் மூலமும் காண்டிகையுரையும் என்னும் தலைப்பில் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் தாமே உரை எழுதி 1835 ஆம் ஆண்டு கல்வி விளக்க அச்சுக்கூடத்தின் வழி வெளியிட்டார். இப்பதிப்பைத் தொடர்ந்து இலக்கணப் பஞ்சகம் என்னும் தலைப்பில் நன்னூல், நம்பி அகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் மூலங்களைத் தாண்டவராய முதலியாரும், அ. முத்துச் சாமிப் பிள்ளையும் இணைந்து பதிப்பித்து சென்னைக் கல்விச் சங்கத்து வழி வெளியிட்டனர்.

            இவ்விரு பதிப்புகளைத் தொடர்ந்து புதுவையிலிருந்து களத்தூர் வேதகிரி முதலியார் அவர்களால் 1838 ஆம் ஆண்டு வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கம் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இம்மூன்று நூல்களும் பாடநோக்கிலான நூல்களாக இருந்த சமயத்தில் தமிழின் தொல் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரையோடு  மழைவை மகாலிங்கையரால் பதிப்பிக் கப்பட்டு கல்விக்கடல் அச்சுக்கூடத்தின் வழி 1847ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நன்னூல் அச்சிடப்பட்டுப் பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்துத் தொல்காப்பியம் அச்சிடப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. காலத்தால் பழமையான நூல் தொல்காப்பியமாக இருந்தாலும் அச்சில் நிலைபெற்ற முதல் நூலாக இன்று அறியப்படுவது நன்னூலே ஆகும். இந்நூல்களை அச்சிட்டதில் சென்னைக் கல்விச் சங்கத்தைச் சார்ந்தவர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.

1835 ஆம் ஆண்டுத் தொடங்கி 1850 ஆம் ஆண்டு வரை விரல் விட்டு எண்ணத்தக்க இலக்கண நூல்களே அச்சிடப்பட்டிருப்பதை அறியமுடிகிறது. இதற்குப் பிறகான காலங் களிலேயே தமிழில் கிடைத்த அனைத்து இலக்கண நூல்களும் அச்சிலேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் மூலப்பதிப்புகளும் உரைப்பதிப்புகளும் அடங்கும். அவற்றின் விவரம் பின்வருமாறு:

தொல்காப்பியம்
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை, மழைவை மகாலிங்கையர் ( ப – ர்), கல்விக்கடல் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1847

தொல்காப்பிய நன்னூல் மூலம், இ. சாமுவேல் பிள்ளை – வால்ற்றர் ஜாயீஸ் ( ப – ர்), கிறிஸ்துமதக்கியான விளக்க சங்கத்தார் அச்சுக்கூடம், சென்னை, 1858. (தொல்காப்பியம் மூலம் முழுவதும் அடங்கிய முதல் பதிப்பு)

இறையனார் அகப்பொருள்
இறையனார் அகப்பொருள் மூலமும் உரையும், சி.வை.தாமோதரம் பிள்ளை ( ப –ர்), ஸ்காட்டிஷ் அச்சகம், கிரேவ்ஸ் குக்ஸன் அண்டு கம்பெனி, 1883.

புறப்பொருள் வெண்பாமாலை
இலக்கணப் பஞ்சகங்களில் நன்னூல் மூலமும் அகப்பொருள் மூலமும் புறப்பொருள் இலக்கியத்தோடு வெண்பாமாலை மூலமும், தாண்டவராய முதலியார் – அ. முத்துச்சாமிப்பிள்ளை ( ப – ர்), 1835

புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும், உ.வே.சாமிநாதையர் ( ப – ர்), வெ.நா. ஜீபிலி அச்சுக்கூடம், 1895.
யாப்பருங்கலம்
நன்னூல் மூலம் – அகப்பொருள் மூலம் – புறப்பொருள் மூலம் – யாப்பருங்கல மூலம் – காரிகை மூலம் – தண்டியலங்கார மூலம், நரசிங்கபுரம் வீராசாமி முதலியார் ( ப – ர்), இயற்றமிழ் விளக்க அச்சுக்கூடம், 1854.

யாப்பருங்கல மூலமும் சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர் பொழிப்புரையும், வித்தியாநுபாலன யந்திரசாலை, யாழ்ப்பாணம், 1900.
அமிர்தசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் மூலம் பழைய விருத்தியுரையுடன். பவானந்தம் பிள்ளை (ப – ர்) தாம்ஸன் கம்பெனி, 1916.
யாப்பருங்கலக்காரிகை
காரிகை மூலமும் குணசாகரர் விருத்தியுரையும், ஆறுமுக முதலியார் ( ப – ர்), இலக்கணக் களஞ்சிய அச்சுக்கூடம், 1854.
யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும், தில்லையம்பூர்ச் சந்திர சேகர கவிராஜ பண்டிதர், முத்தமிழ் விளக்க அச்சுக்கூடம், 1854.
வீரசோழியம்
வீரசோழியம், சி.வை.தாமோதரம்பிள்ளை ( ப – ர் ), வித்தியாநு பாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1881.
நேமிநாதம்
நேமிநாத மூலபாடம், கதிருவேலு உபாத்தியாயர், சரஸ்வதீ விலாச அச்சுக்கூடம், 1852.
நேமிநாத மூலமும் உரையும், ரா. இராகவையங்கார் ( ப – ர்),   தமிழ்ச் சங்க முத்திரா சாலைப் பதிப்பு, மதுரை, 1903.
நன்னூல்

நன்னூல் மூலமும் காண்டிகையுரையும், திருத்தணிகை விசாகப் பெருமாளையர் ( ப – ர் ), கல்வி விளக்க அச்சுக்கூடம், சென்ன பட்டணம், 1835.

நன்னூல் மூலமும் மயிலைநாதருரையும், உ.வே.சாமிநாதையர் (ப – ர்), வைஜெயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1918.

நன்னூல் மூலமும் சங்கரநமச்சிவாயருரையும், உ.வே.சாமிநாதையர் ( ப – ர்), கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, 1925.

 தண்டியலங்காரம்
தண்டியலங்கார மூலமும் உரையும், தில்லையம்பூர்ச் சந்திரசேகர கவிராஜ பண்டிதர் ( ப – ர்), முத்தமிழ் விளக்க அச்சுக்கூடம், 1854.

நம்பி அகப்பொருள்
அகப்பொருள் விளக்கம் மூலமும் உரையும், ச. வயித்தியலிங்க பிள்ளை உரை, க. சபாபதிப்பிள்ளை ( ப – ஆ), வியவாஹரதரஞ்சினி பிரஸ், 1878.

அகப்பொருள் விளக்கம் மூலமும் உரையும், பாண்டித்துரைத்தேவர், தமிழ்ச் சங்கமுத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1913.

மாறனலங்காரம்
மாறனலங்காரம் மூலமும் உரையும், நாராயணையங்கார் ( ப – ர்), தமிழ்ச் சங்கமுத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1915

மாறனகப்பொருள்
மாறனகப்பொருளும் திருப்பதிக்கோவையும், கி. இராமா நுஜையங்கார்  ( ப – ர்), தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1932 (முழுமைப் பதிப்பு இல்லை)

மாறனகப்பொருள் ஆய்வுப் பதிப்பும் அதன் அகக்கொள்கைகள் திருப்பதிக் கோவையில் பயிலும் நிலையும் ( பகுதி – 1, 2), முனைவர் சு. செல்லையா பிள்ளை ( ப- ர் ) தி பார்க்கர், சென்னை, 2005 ( முழுமைப் பதிப்பு)

மாறன் பாப்பாவினம்
பாப்பாவினம், கி. இராமா நுஜையங்கார் ( ப – ர்), தமிழ்ச்சங்க முத்திரா சாலைப் பதிப்பு, மதுரை, 1932

பிரயோக விவேகம்
பிரயோக விவேகம் மூலமும் உரையும், யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் ( ப – ர் ), வித்தியாநு பாலன யந்திரசாலை, சென்னபட்டணம், (இரத்தாக்‌ஷி – 1864), 

இலக்கணக் கொத்து
இலக்கணக் கொத்து மூலமும் உரையும், ஆறுமுக நாவலர் ( ப – ர்), வித்தியாநு பாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1866

இலக்கண விளக்கம்
இலக்கண விளக்கம், சி.வை.தாமோதரம் பிள்ளை ( ப – ர்), வித்தியாநு பாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1889.

தொன்னூல் விளக்கம்
தொன்னூல் விளக்கம் மூலமும் உரையும், களத்தூர் வேதகிரி முதலியார் ( ப – ர்), புதுவை, 1838

முத்துவீரியம்
முத்துவீரியம் மூலமும் உரையும், சுப்பராய தேசிகர் ( ப – ர்), கல்விப் பிரவாக அச்சுக்கூடம், 1862.

சுவாமிநாதம்
சுவாமிநாதம் மூலமும் விருத்தியுரையும், செ.வை.சண்முகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1976

அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம்
அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம், தண்டபாணி சுவாமிகள், பூவை. கலியாண சுந்தர முதலியார் ( ப – ர்), இந்து தியாலஜிக்கல் எந்திரசாலை, 1893

   இங்கு நூல்களின் கால வரிசையில் அவற்றின் முதல் பதிப்புகள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. இவ்விலக்கண நூல்களின் முதல் பதிப்புகளைத் தொகுத்துப் பார்க்கும்போது சில செய்திகளை அவதானிக்க முடிகின்றது. தமிழில் முழுமையாகக் கிடைத்த அனைத்து இலக்கண நூல்களும் அச்சிலேற்றப்பட்டுள்ளன. பாடத்திட்டம் என்பதைக் கடந்து நூல்களை அழியாமல் பாதுகாத்தல் என்ற விழிப்புணர்வு பதிப்பாசிரியர்களிடம் ஏற்பட்டி ருப்பதை அறியமுடிகிறது. இவற்றைப் பதிப்பித்த பதிப்பாசிரியர்களில் ஏராளமான நூல்களைப் பதிப்பித்தவர்களாகச் சந்திரசேகர கவிராஜ பண்டிதர், ஆறுமுக நாவலர்,  சி.வை. தாமோதரம் பிள்ளை, உ.வே. சாமிநாதையர் ஆகியோரை அடையாளப்படுத்த முடிகிறது.
            இப்பதிப்பாசிரியர்களின் பதிப்புகள் படிநிலை வளர்ச்சியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சந்திரசேகர கவிராஜ பண்டிதர் பதிப்பு முறையிலிருந்து ஆறுமுக நாவலரின் பதிப்பு முறைகள் சற்று மாற்றம் பெற்றனவாகக் காணப்படுகின்றன. ஆறுமுக நாவலர் பதிப்புக்களிலிருந்து சி.வை.தாமோதரம்பிள்ளை ஒரு படி முன்னேறி தாம் பதிப்பித்த இலக்கண நூல்களைப் பயன்பாட்டுக்குரிய தன்மையோடு பதிப்பித்து வெளியிடுகின்றார். இவரின் பதிப்பில் குறிப்பிடத்தக்கதாக அவரின் பதிப்பு முகவுரை களைச் சுட்டமுடியும். 
 1835ஆம் ஆண்டுத் தொடங்கி 1880 வரை ஏராளமான இலக்கண நூல்கள் அச்சிடப்பெற்றிருப்பினும் அவற்றில் முகவுரைகள் எழுதப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையை மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர் சி.வை.தா. அவர்களே. 1881 ஆம் ஆண்டு வீரசோழியப் பதிப்பிற்கு எழுதிய விரிவான முகவுரையின் வழி தமிழ் இலக்கணப் பதிப்பு வரலாற்றில் முதல் முகவுரை எழுதிய பெருமையைப் பெறுகிறார்.
            சி.வை.தா. பதிப்புகளைத் தொடர்ந்து உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த நன்னூல் மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர் உரைப்பதிப்புக்கள் இலக்கண பதிப்பு மரபில் முன்னோடிப் பதிப்புக்களாகக் காணப்படுகின்றன. இவரின் பதிப்பு முறை முதல் பதிப்பு என்ற தோற்றத்தை மறைத்து அவற்றை ஆய்வுப்பதிப்புகளாக மாற்றிவிட்டது. 
             பத்தொன்பதாம் நூற்றாண்டைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டிலும் ஏராளமான இலக்கண நூல்கள் அச்சிடப்பெற்று வெளியிடப்பட்டன. இப்பதிப்புகள் வளர்ச்சி பெற்ற பதிப்பு நுட்பங்களை உள்வாங்கி அச்சிடப்பெற்றன என்பதை அப்பதிப்பு களைப் பார்க்கும்போது கண்டறியமுடிகிறது. பாடத்திட்ட நோக்கிலான தமிழ் இலக்கணப் பதிப்பு வரலாறு ஆய்வு நோக்கிலான வரலாறாக மாறுவதற்குச் சி.வை.தா., உ.வே.சா. ஆகியோரின் பதிப்பு நுட்பங்கள் பெரும்பங்கு வகித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
            இலக்கண நூல்களை வியாபார நோக்கத்திற்கான ஒரு கருவியாக நினைத்த பல பதிப்பாசிரியர்கள், அச்சுக்கூட உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்தியில் சி.வை.தா. போன்றோர் அதை ஆக்கப்பூர்வமான செயல்பாடாக மாற்றியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. சி.வை.தா. அவர்களும் தம் பதிப்புகள் பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காகச் சில செயல்களைச் செய்திருந்தாலும் அவரின் அத்தகைய முயற்சிகள் பணம் ஈட்டுதல் என்பதைக் கடந்து தமிழின் முதன்மையான நூல்களை அழிவிலிருந்து மீட்டல் என்பதாகவே செயல்பட்டுள்ளது.
             தமிழ் இலக்கண நூல்களின் முதல் பதிப்புகள் பெரும்பாலானவற்றை இன்றைய நிலையில் நோக்கும்போது அவை வரலாற்றுச் சிறப்புமிக்க பதிப்புக்களாக இன்று நம் கண்முன் விரிகின்றன. தமிழ் மொழியின் கட்டமைப்பை, அவற்றின் தொடர் பயணங்களை, வெவ்வேறு சமயங்களின் பங்களிப்பைக் கண்டறிவதற்கும் தமிழர்களின் தொல் இன அடையாளங்களை மீட்டெடுப்பதற்கும் இவ்விலக்கண நூல்களின் முதல் பதிப்புகளே சான்றுகளாய் இருந்துள்ளன. 

    பயன்பாட்டுப் (பயிலுதலுக்கான) பதிப்பு என்று வரும்போது சற்று பின்னோக்கி நகரும் இப்பதிப்புகள் அனைத்தும் இன்றைய மூலபாட ஆய்விற்கு இன்றியமையாதனவாய் விளங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.  ஆவணப்படுத்தலில் சற்று பின் நோக்கியே இயங்கும் தமிழ்ச் சமூகத்தில் இவ்விலக்கண நூல்களின் முதல் பதிப்புக்களைப் பாதுகாத்து வைத்திருப்பதில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி  நூலகம் இல்லை என்றால் இவற்றில் பெரும்பாலான முதல் பதிப்புகள் இன்றில்லை. இப்பதிப்புகள் இல்லையென்றால் இக்கட்டுரை உருவாவதற்கும் வாய்ப்பில்லை.    

No comments:

Post a Comment