தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Sunday, June 29, 2014

தொல்காப்பியச் சொல்லதிகாரப் பதிப்புகள்










பதிப்புகள் நூலை வாசிக்கப் பயன்படும் ஒரு கருவி என்பதைக் கடந்து அவை வரலாற்று நிலைப்பட்ட சில தன்மைகளையும் உள்ளடக்கி அமைகின்றன. பதிப் பாசிரியர்களும் நூலாசிரியர், உரையாசிரியர் போல சில விவாதங்களைத் தம் பதிப் புகளின் வழியாக முன்வைக்கின்றனர். அத்தகைய விவாதங்கள் ஒரு குறிப்பிட்ட காலச் செயல்பாட்டின் சமூக, அரசியல் பின்புலங்களை அறிந்து கொள்ளத் துணை புரிகின்றன. இந்தப் பின்புலத்தில் தொல்காப்பியச் சொல்லதிகாரம் சேனாவரையர் உரைக்கு முதன்முதலாக வெளிவந்த இரு பதிப்புகள் எவ்வாறு மேற்சொல்லப்பட்ட தன்மைகளை உள்ளடக்கி அமைகின்றன என்பதைப் பின்வரும் விவாதத்தின் மூலம் அறியலாம்.

தொல்காப்பியச் சேனாவரையம்
        தொல்காப்பியச் சொல்லதிகார சேனாவரையர் உரைக்கு இரண்டு பதிப்புகள் இரண்டு மாத இடைவெளியில் வெளிவந்தன. ஆறுமுகநாவலர் பரிசோதித்துத்தர சி.வை.தாமோதரம்பிள்ளையால் ஒரு பதிப்பும் கோமளபுரம் இராசகோபால பிள்ளை என்பவரால் மற்றொரு பதிப்பும் வெளியிடப்பட்டன. முதல் பதிப்பு 1868ஆம் ஆண்டு புரட்டாசி மாதமும் இரண்டாம் பதிப்பு அதே ஆண்டு கார்த்திகை மாதமும் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

          பாடநூல் விற்பனைக்காக ஒரேநூல் இருவேறு நபர்களால் ஒரே நேரத்தில் அச்சிடப்படுவது என்பது இன்றைய நிலையில் சாதாரணமான செயலாக உள்ளது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் பாடநூலாகவும் வாசிப்பு அளவிலும் பெரிதும் விற்பனையாகாத, கவனம்பெறாத தொல்காப்பியச் சொல்லதிகாரம் வெவ்வேறு நபர்களால் இரண்டு மாத இடைவெளியில் அச்சிடப்படக் காரணம் என்ன? என்று பார்க்கும்போது அது கருத்தியல் தளத்தில் இருவேறு நபர்களுக்கு இடையே நடந்த போட்டி மனப் பான்மையே காரணம் என்று உறுதிசெய்ய முடிகிறது. இதுகுறித்துப் பண்டிதர் சி. கணபதிப்பிள்ளை 1950ஆம் ஆண்டு வெளிவந்த ஈழகேசரி இதழில் தொல்காப்பியப் பதிப்பு என்னும் தலைப்பில் விரிவானதொரு கட்டுரையை எழுதி யுள்ளார். அக்கட்டுரையில் பின் வருமாறு பல கருத்துக்களை முன்வைக்கின்றார்.

Ø   ஆறுமுகநாவலர் சி.வை.தா.விற்குச் செய்த உதவியும் அதனால் சி.வை.தா. விற்குத் தமிழ்நாட்டில் கிடைத்த பரவலான பாராட்டுகளும் கோமளபுரம் இராசகோபால பிள்ளைக்கும் தொழுவூர் வேலாயுத முதலியாருக்கும் வயிற் றெரிச்சலை ஏற்படுத்தின.

Ø  இவர்கள் இருவரும் வள்ளலாரின் முதல் சீடராகிய நரசிங்கபுரம் வீராசாமி முதலியாரிடம் இதனை முறையிட்டனர். வீராசாமி முதலியார் நாவலரைத் திட்டி 12 நூல்கள் எழுதியவர். இவர் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு தாமோதரம்பிள்ளை சேனாவரையம் பதிப்பு குறித்து வெளியிட்ட விளம் பரத்தைக் கிண்டல் செய்து ‘விஞ்ஞாபனப் பத்திரிக்கை’ என்னும் பத்திரிக் கையில் ஒரு  தூஷணம் ஒன்றை எழுதினார்.

Ø  நாவலர் அவர்கள் சி.வை. தாமோதரம்பிள்ளை குறித்து அந்த விளம்பரத்தில், “இலக்கண இலக்கியங்களில் மகாவல்லவரும் சென்னை முதல் ஈழம் ஈறாக வுள்ள தமிழ்நாட்டு வித்துவான்களில் தமக்கு இணையில்லாதவருமாகிய” என்று குறிப்பிட்டிருந்தார். இதில் வரும் இணையில்லாதவர் என்ற சொல்லை வீராசாமி முதலியார் பெண்சாதி இல்லாதவர் சி.வை. தாமோதரம்பிள்ளை என்று பொருள்தந்து தனது தூஷணத்தை வெளியிட்டிருந்தார். இந்தக் கண்டணத்திற்கு மறுப்பாக நாவலர் அவர்கள் நரசிங்கபுரம் வீராசாமி முதலியாரே என்று கூறி “நல்லறிவுச்சுடர் கொளுத்தல்” என்ற உக்கிர கண்ட னத்தை எழுதினார்.

என்று சி. கணபதிப்பிள்ளை பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றார். கோமளபுரம் இராசகோபாலபிள்ளைப் பதிப்பு கணபதிப் பிள்ளையின் பார்வைக்குக் கிடைக்கவில்லை. எனவே அவர் அப்படியொரு பதிப்பு வெளிவந்திருக்க வாய்ப்பே இல்லை  என்று கூறுகிறார். இதனைச் ‘சென்னை அரசாங்கப் புத்தகப் பதிவில் இராசகோபாலபிள்ளை பதிப்பு இடம் பெறாததைக் கொண்டும் வையாபுரிப் பிள்ளை  முதலானோர் அப்பதிப்பைப் பார்த்ததில்லை என்று கூறியதைக் கேட்டும் கோமளபுரம் இராசகோபால பிள்ளை பதிப்பு வெளிவர வில்லை’ என்று முதலில் முடிவுசெய்கிறார்.

பின்னர் செந்தமிழ்ப் பத்திரிகையாசிரியர் இராமாநுஜையங்கார் தான் இராச கோபாலபிள்ளை பதிப்பை பார்த்துள்ளேன். அப்பதிப்பு 1868ஆம் ஆண்டு கார்த் திகை மாதம் வெளிவந்தது என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட கணபதிப்பிள்ளை வெளிவந்தி ருந்தாலும் அப்பதிப்பு சி.வை.தா.வின் பதிப்பு வெளிவந்து இரண்டு மாதம் கழித்துத்தானே வெளிவந்திருக்கிறது. அந்த வகையில் சி.வை.தா.பதிப்பு தான் சொல்லதிகாரச் சேனாவரையத்திற்கு முதல் பதிப்பு என்ற பெயர் பெறுகிறது என்று கூறுகிறார். மேலும் கோமளபுரம் இராச கோபாலபிள்ளை பதிப்பு குறித்து சந்தேகத்தையும் எழுப்புகின்றார்.

இந்த இராசகோபால பிள்ளை ஒருவர் பதிப்பித்த புத்தகத்தில் நாலு ஆறு பக்கங்களை மாற்றி, முகப்பைப் புதிது பண்ணித் தாமும் ஒரு பதிப்புப் பண்ணியதாகப் பாசாங்கு செய்ய வல்லவர்; கை வந்தவர். அவருடைய யோக்கியதை அவர் தேசத்தாராகிய கூடலூர்க் குமரகுரு சுவாமிகள் இயற்றி அச்சிற் பதிப்பித்த பரமோத்தர ரசாபாச தருப்பணத்தில் 35ஆம் 36ஆம் பக்கங் களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.  அது வருமாறு;

இராசகோபால பிள்ளை திருத்தி அச்சிற் பதிப்பித்த புத்தகத்தைப் பாராதீர். ஏனெனில் அவர் முதனூற் கருத்தறியாதவராகையால், வில்லிபுத்தூராழ்வார் செய்த பாரதத்தைப், பெரியோர் செய்த வாக்கை அழிக்கக் கூடாதென்று சிறிதும் அஞ்சாது, சிவபரமாயிருந்த பாடல்கள் அநேகத்தைத் தள்ளியும், சில பாடல்களை மாற்றியும், சில சொற்களைத் திரித்தும், மனம் போனவாறே அச்சிற் பதிப்பித்தனர். ஆதலால் அதனை நீக்கி வில்லிபுத்தூரார் பாடின படியே ஆறுமுகநாவலர் அச்சிற் பதிப்பித்திருக்கும் புத்தகம் ஒன்று சம்பாத் தித்துப் பாரும். உமது சந்தேகந் தீரும்.

என்று இராசகோபாலபிள்ளையின் பதிப்புசார் செயல்பாட்டை வெளிப்படுத்து கின்றார். மேலும் இந்த இரண்டுமாதம் இடைவெளி பற்றிய குறிப்பினால் தொல் காப்பியப் பதிப்பு வரலாற்றில் மழவை மகாலிங்கையருக்குப் பிறகு சி.வை. தாமோ தரம் பிள்ளையே நிகரான இடம் பிடிக்கின்றார் என்று இதன் வழியாக முன்வைக் கின்றார்.

இன்றைய நிலையில் இவ்விரு பதிப்புகளுமே காணக்கிடைக்கின்றன. இவ்விரு பதிப்புகளையும் ஒருசேரப் பார்க்க முடியாத பதிப்பாசிரியர்கள் இரண்டில் எது கிடைத்ததோ அதை வைத்துக்கொண்டு இதுதான் முதல் பதிப்பு என்று கூறி விடுகின்றனர். தொல்காப்பியச் சொல்லதிகார சேனாவரையத்தை அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக பதிப்பித்துக் கொண்டுவந்த கு. சுந்தர மூர்த்தி அவர்கள் சி. கணபதிப்பிள்ளையின் கட்டுரையினைக் கண் ணுறாததால் அவர் தமது பதிப்புரையில் கோமளபுரம் இராசகோபாலபிள்ளை பதிப்பே முதன் முதலாக வெளியிடப்பட்டது என்று கூறுகிறார். இதனை,

இச்சேனாவரையர் உரை முதன்முதல் திரு. சீனிவாச சடகோப முதலியார் அவர்களின் வேண்டுகோளின்படி, கோமளபுரம் திரு. இராசகோபால பிள்ளை அவர்களால் திருத்தம் செய்யப்பட்டுத் திரு. பு. கந்தசாமி முதலியார் அவர்களால் 1868-இல் பதிப்பிக்கப்பட்டது. பின்பு யாழ்ப் பாணத்து நல்லூர் திரு. ஆறுமுகநாவலர் அவர்களால் திருத்தம் செய்யப் பட்டு திரு. சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்களால் 1886-இல் பதிப்பிக் கப்பட்டது . (பதிப்பு முன்னுரை, ப.11).

என்னும் கூற்றின் வழி அறியமுடிகிறது. கு.சுந்தரமூர்த்தி, சி.வை.தாமோதரம் பிள்ளை பதிப்பித்து வெளியிட்ட முதல் பதிப்பைப் பார்க்காததாலும் இரண்டாம் பதிப்பே அவருக்குக் கிடைத்திருந்ததாலும் அவர் இத்தகைய வரிசைநிலைக்குக் கொண்டுவந்து இராசகோபால பிள்ளை பதிப்பே முதல் பதிப்பு என்று கூறி விடுகின்றார். சி.வை.தா., தாம் வாழ்ந்த காலத்தில் சில நூல்களுக்கே தாம் பதிப் பித்தவற்றை மீண்டும் சில திருத்தங்கள் செய்து மறு பதிப்பு வெளியிட்டார். அதில் இந்தச் சொல்லதிகாரச் சேனாவரையமும் ஒன்று. பலரும் 1886ஆம் ஆண்டு வெளிவந்த மறுபதிப்பையே பார்த்து அவரின் பதிப்பு பின்னர் வெளிவந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அதனாலேயே சி. கணபதிப்பிள்ளை அப்படியொரு கட்டுரையை எழுத நேர்ந்துள்ளது எனலாம்.

இரு பதிப்புகளும் பதிப்பின் தன்மைகளும்
சி. கணபதிப்பிள்ளை எழுப்பிய சந்தேகம் தீரும்படியும் இராமா நுஜையங்கார் கூற்று உண்மையாகும்படியும் கோமளபுரம் இராசகோபால பிள்ளை பதிப்பு தொல்காப்பியச் சொல்லதிகார சேனாவரையத்திற்கு வெளிவந்துள்ளது. 1868ஆம் ஆண்டு கார்த்திகை மாதம்தான் இப்பதிப்பு வெளிவந்துள்ளது. சி.வை. தாவின் பதிப்பு பற்றிய விவரத்தையும் இராசகோபாலபிள்ளை பதிப்பின் முழு விவரத்தை யும் பின்வருமாறு முழுமையாக அறியலாம்.

1.    கணபதிதுணை, தொல்காப்பியம் சொல்லதிகாரம். இஃது வடநூற்கடலை நிலை கண்டுணர்ந்த சேனாவரையருரையோடும் நல்லூர் ஆறுமுக நாவல ரால் பலபிரதிரூபங்களைக்கொண்டு பரிசோதித்து, யாழ்ப்பாணம்  சி.வை. தாமோதரம் பிள்ளையால் சென்னபட்டணம் ஊ. புஷ்பரதச் செட்டியாரது  கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. சென்னபட்டணம், விபவ வருடம் (1868), புரட்டாசிமாதம்.

2. ஸ்ரீமத்வரவரமுநயேநம: தொல்காப்பியச் சேனாவரையம். கா. பச்சையப்ப முதலியார் தர்மவிசாரணை சபாத்தியஷராகிய ம-ள-ள- ஸ்ரீ மேலை மணம்பேடு ஸ்ரீநிவாஸசடகோபமுதலியாரவர்கள் வேண்டு கோளின்படி சென்னை – நார்மல்ஸ்கூலென்னும் போதனா சக்திவிர்த்தி வித்தியாசாலைத் தமிழ்த்தலைமைப்புலவர் கோமளபுரம் இராசகோபால பிள்ளையவர்களால் கையெழுத்து வழுவறப் பரிசோதிப் பித்து பு – கந்தசாமி முதலியாரவர்களால் வர்த்த மானதரங்கிணீ சாகை அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. விபவ வருடம் (1868) கார்த்திகை மாதம்.

இவ்விரு பதிப்புகளையும் ஒப்பிட்டு நோக்கும்போது சி.வை.தாவின் பதிப் பிற்கும் இராசகோபாலபிள்ளை பதிப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை மதிப்பிட முடிவதோடு சி. கணபதிப்பிள்ளை கூறும் குற்றச்சாட்டின் தன்மைகளை யும் மதிப்பிட முடிகிறது.

சி.வை.தாமோதரம்பிள்ளை பதிப்பு
        தொல்காப்பியச் சொல்லதிகார சேனாவரையர் உரைப்பதிப்பே சி.வை. தாமோதரம்பிள்ளை பதிப்பித்த முதல் பெரியநூல் என்று கூறலாம். பதிப்புத் துறையில் அன்றைய காலகட்டத்தில் பல நூல்களைப் பதிப்பித் திருந்த ஆறுமுக நாவலர் இப்பதிப்பு வெளிவர முக்கியத் துணைபுரிந்திருப்பதால் இப்பதிப்பு அதற் கான தன்மைகளோடு வெளிவந்திருப்பது குறிப் பிடத்தக்கது.

அக்காலகட்டத்தில் முன்னுரை, பதிப்புரை எழுதும் வழக்கம் பெரிதும் வராததால் இப்பதிப்பிலும் அவை இல்லை. நூற்பா பெரிய எழுத்திலும் உரை அதைவிட ஒரு பங்கு சிறிய எழுத்திலும் தனித்தனியாக பிரித்து அச்சிடப் பட்டுள் ளது. நூற்பா சந்தி பிரிப்பின்றி சீருக்குச் சீர் இடைவெளி விடப்பட்டு நூற்பா அமைப்பில் பதிப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நூற்பாத் தொடக் கத்தில் அதிகாரத் தொடர் எண்ணும் உரை முடிவில் இயலின் வரிசை எண்ணும் இடப்பட்டுள்ளன. அடிக்குறிப்பு வழங்கும் மரபு அக்காலப் பதிப்புமரபில் பெரிதும் இடம்பெறாதபோதும் இப்பதிப்பில் சில அடிக்குறிப்புகள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வழங்குவதற்கு ஆறுமுகநாவலரே காரணம் என்று அறியமுடிகிறது.

இந்த அடிக்குறிப்பில் சிவஞானமுனிவரின் தொல்காப்பிய சூத்திரவிருத்தி எட்டிற் கும் மேற்பட்ட இடங்களில் ஒப்பிடப்பட்டுக் காட்டப்பட்டுள்ளது. மேலும் நன்னூல் விருத்தியுரை, நச்சினார்க்கினியர் உரை ஆகியவை ஒருசில இடங்களில் ஒப்பிடப் பட்டுக் காட்டப்பட்டுள்ளன. இவ்வாறு தொல்காப்பியச் சூத்திர விருத்தி அதிகமாக ஒப்பிடப்படுவதற்குக் காரணம் 1866ஆம் ஆண்டு ஆறுமுக நாவலர் தொல்காப்பியச் சூத்திரவிருத்தியைப் பதிப்பித்திருந்ததே காரணம் ஆகும்.

இதனைச் சிவஞானமுனிவர் விருத்துணர்த்தினர். தொல்காப்பியச் சூத்திர விருத்தி 13ம் பக்கத்திற்காண்க. (கிளவியாக்கம் நூ.1அடிக் குறிப்பு)
இச்சூத்திரத்துக்குச் சேனாவரையர் முதலாயினார் உரைத்த உரையைச் சிவஞானமுனிவர் மறுத்து வேறுரையுரைத்தார். தொல்காப்பியச் சூத்திர விருத்தி 37ம்,38ம் பக்கங்களிற் காண்க ( வேற்றுமையியல் நூ.22 அடிக் குறிப்பு)
என்னும் குறிப்புகளின் வழி அறியலாம். இது தவிர்த்து மேல்விளக்கம், ஒப்பீடு, சொற்பொருள் விளக்கம் ஆகியவை ஒவ்வொரு இடத்தில் மட்டும் அடிக் குறிப்பில் வழங்கப்பட்டுள்ளன.

மேல்விளக்கம்:
உயர்திணைவென்பது வினைக்குறிப்பு முற்றாங்கால் அகரம் ஆறாம் வேற்றுமையுருபாகாது வினைக்குறிப்பு முற்று விகுதியேயாமென்றறிக. (கிளவி யாக்கம் நூ. 2)

ஒப்பீடு:
எச்சவியலில் “வண்ணத்தின் வடிவின்” என்னும் இருபதாஞ் சூத்திரவுரையிற் காண்க( கிளவியாக்கம் நூ. 27)

சொற்பொருள் விளக்கம்:
மாறோகம் – கொற்கை சூழ்ந்த நாடு. ( பெயரியல் நூ. 10)
இக்குறிப்புகள் இன்றைய நிலையில் சாதாரணமான ஒன்றாகக் கருதப்பட்டாலும் பதிப்புமரபு பெரிதும் வளர்ச்சியடையாத காலகட்டத்தில் இவ்வாறு வழங்கப்பட்டி ருப்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய வொன்று. சி.வை.தா. பதிப்பில் நூற்பா எண்ணிக்கை 463ஆக உள்ளது. இந்நூற்பா எண்ணிக்கையே பெரும்பாலும் பிற்காலப் பதிப்புகளில் நிலைபெற்றது எனலாம்.

இப்பதிப்பில் சூத்திரவகராதி மற்றும் சுசீபத்திரம் (சூத்திரத்தொகை) ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. சுசீபத்திரம் என்பது தொல்காப்பியப் பதிப்பு மரபில் முதன்முதலாக இப்பதிப்பிலேயே இடம்பெற்றுள்ளது என்று மதுகேஸ் வரன் தமது தொல்காப்பியப் பதிப்பு வரலாறு (ப.14) நூலில் பதிவுசெய்கின்றார். மேலும் உரைப்பகுதிகள் ஒரே பத்தியாக அல்லாமல் படிப்பவர் எளிதில் புரிந்து படிக்கும்படி தனித்தனிப் பகுதிகளாகவும் சான்றுகள், இன்றியமையாத பகுதிகள் மேற்கோள் குறிகளுக்குள்ளாகவும், தேவையான இடங்களில் காற்புள்ளி, அரைப்புள்ளி போன்ற குறியீடுகளும் வழங்கப்பட்டிருப்பது  குறிப்பிடத்தக்கது. பலபிரதிரூபங் களைக் கொண்டு ஆறுமுக நாவலரால் ஆராயப்பட்டது என்று குறிப்பிடப் பட்டி ருந்த போதிலும் பாடவேறுபாடு இப்பதிப்பில் எங்கும் வழங்கப்படவில்லை.

இராசகோபாலபிள்ளை பதிப்பு
சி.வை.தா. பதிப்பிற்குப் பிறகு இரண்டு மாதம் கழித்து வெளியிடப்பட்ட இராசகோபாலபிள்ளை பதிப்பு நூற்பாவும் உரையும் தனித்தனியே பிரித்து அறியும் படி தரப்பட்டுள்ளது. ஆனால் நூற்பா உரைநடைத் தன்மையிலேயே பதிப்பிக்கப் பட்டுள்ளது. முன்னுரை, பதிப்புரை எவையும் இடம்பெறவில்லை. நூற்பா முதற் குறிப்பகராதி மட்டும் இடம்பெற்றுள்ளது. அதிகாரத்தொடர் எண், இயல் வரிசை எண் வழங்கப் பட்டிருந்தாலும் சி.வை.தா. பதிப்பில் இடம் பெற்றிருப்பது போல அடிக்குறிப்புகள் எங்கும் வழங்கப்படவில்லை. ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் பாடவேறுபாடு தரப்பட்டுள்ளது. வேற்றுமையியல் 17ஆம் நூற்பாவின் கீழ் அடிக் குறிப்பில் இப்பாடவேறுபாடு காணப்படுகின்றது.

தீமை என்று நூற்பாவில் வரும் இடத்திற்கு தின்மையென்றும் பாட முண்டு என்று பதிப்பாசிரியர் குறிப்பிடுகின்றார்.( வேற்றுமையியல் நூ.17)

இந்தப் பாடவேறுபாடு வேறு எந்தச் சுவடியிலும் அச்சுப்பதிப்பிலும் காணப் படாத பாடம் என்றும் இதுவே சிந்திக்கத் தூண்டும் பாடம் என்றும் ச.வே. சுப்பிர மணியன் தமது தொல்காப்பியப் பதிப்புகள் நூலில் (ப. 77) குறிப் பிடுகின்றார். சி.வை.தா. பதிப்பில் இப்பாடவேறுபாடு காணப்பட வில்லை.

இயல் தலைப்பில் சி.வை.தா. பதிப்பில் இடையியல், உரியியல் என்றே உள்ளது. இவர் பதிப்பிலோ இடைச்சொலியல், உரிச்சொலியல் என காணப் படுகின்றது. இவ்விரண்டு வழக்குகளுமே உரைகளிலும் பதிப்புகளிலும் காணப் படுகின்றன. இதில் இரண்டாவதாக இடம்பெறும் இடைச் சொல்லியல், உரிச் சொல்லியலே தொல்காப்பியர் கருத்தோடு ஒத்துப் போகின்றது என ச.வே. சுப்பிரமணியன் (ப. 78)  உறுதிசெய்கின்றார்.

கிளவியாக்கத்தின் முதல் நூற்பாவிற்கு முன்பாக ஒரு கடவுள் வாழ்த்து காணப்படுகின்றது. இக்கடவுள் வாழ்த்து மாதொருபாகன் என சிவனை முன்னிறுத் துவதாக உள்ளது. இந்தப் பாடல் சேனாவரையரால் எழுதப் பட்டதா அல்லது பின்வந்த ஒருவரால் எழுதிச்சேர்க்கப்பட்டதா என்று தெரியவில்லை. இப்பாடல் சி.வை.தா.வின் பதிப்பில் காணப்படுகின்றது. அதற்குப் பின் வந்த எல்லாப் பதிப்புகளிலும் (சி.கணேசையர், கு.சுந்தரமூர்த்தி) காணப்படுகின்றது. ஆனால் இராசகோபால பிள்ளைப் பதிப்பில் மட்டும் இந்தப் பாயிரம் இடம்பெறவில்லை. இவர் தீவிர வைணவர் என்பதனைப் பதிப்பின் முதல் பக்கத்திலேயே அறிய முடிகிறது. சி.வை.தா. பிள்ளையார் சுழியையும், கணபதிதுணை என்னும் வாசகத் தையும் பயன்படுத்த இவரோ முகப்புப் பக்கத்தில் ஸ்ரீமத்வரவரமுநயேநம: என்றும்  இயலின் முதல் பக்கத்தில் ஹரிஓம் – நன்றாக – குருவாழ்க -  ஸ்ரீமதேராமா நுஜாயநம: என்றும் சூத்திரவகராதியின் தொடக்கத்தில் ஸ்ரீமத்பராங்குசாயநம: என்றும் வைணவ வாசங்களைப் பயன்படுத்துகின்றார்.

மேலும் இவர் ஒரு தீவிர வைணவர் என்பதனை உறுதிப்படுத்த இன்னொரு சான்றும் உள்ளது.  கு. சுந்தரமூர்த்தி அவர்கள் தமது சேனாவரையப் பதிப்பை வெளியிட முற்பதிப்புகளில் இராசகோபாலபிள்ளை பதிப்பு கிடைக் காமல் தேடி யலைந்தார். இறுதியாக மு. அருணாசலம்பிள்ளையிடமே இப் பதிப்பு இருந்தது. மு. அருணாசலம்பிள்ளை  பதிப்பு பற்றிக் கூறிய போது, இராச கோபாலபிள்ளையின் வைணவப்பற்றையும்  பின்வருமாறு கு. சுந்தரமூர்த் தியிடம் கூறியுள்ளார். இதனை,

திரு. இராசகோபால பிள்ளையவர்கள் மறந்தும் புறந்தொழாத வைணவர் என்றும் அதனால் தாம் இருந்த ‘கோமளீஸ்வரபுரம்’ என்ற ஊரின் பெயரைக் கூட ‘கோமளபுரம்’ என மாற்றிச் சொல்லிக் கொண்டனர் என்றும் நல்ல தமிழ்ப் புலமையுடையவர் என்றும் கூறினார்கள்.  ( இரண்டாவது பதிப்பின் முன்னுரை, ப. 12)

என்னும் கூற்றின் மூலம் அறியலாம். இந்த வைணவப்பற்றே மாதொருபாகன் என்னும் பாடலைப் பதிப்பில் இடம்பெறாமல் செய்துவிட்டது. மேலும் ச.வே. சுப்பிரமணியன் அவர்கள் தமது தொல்காப்பியப் பதிப்புகள் நூலில்,

ஆயின் சுவடியில்  ‘மதிபாய் சடைமுடி’ என்ற சிவனைப்பற்றிய வெண்பாவும், ‘தாமரை புரையும் காமர் சேவடி’ என்ற குறுந்தொகை கடவுள் வாழ்த்துப் பாடலும் இன்னும் சில இறைதுதிகளும் உள்ளன. இராசகோபாலபிள்ளை வைணவராதலால் அவர்பதிப்பில் இவைவிடப் பெற்றுள்ளன எனத் தெரி கிறது. (ப.76)

என்று கூறுகின்றார். ஆனால் சுவடியில் காணப்படுவதாக ச.வே.சு. அவர்களால் குறிப்பிடப்படும் இப்பாடல்கள் நூலின் தொடக்கத்திலா? அல்லது உரையின் இடையிலா? எனத் தரப்படவில்லை. இப்பாடல்கள் இராசகோபாலபிள்ளை பதிப்பில் மட்டும் இல்லாமலில்லை. சி.வை.தா. பதிப்பு உட்பட வேறு எந்தப் பதிப்பிலும் தரப்படவில்லை என்பது சுட்டிச் சொல்லத்தக்கது. உரையின் இடையிலும் இப்பாடல்கள் வழங்கப் படவில்லை. எனவே பிற்காலத்தார் எழுதிச் சேர்த்த பாடல்கள் இவை என சி.வை.தா. உட்பட அனைத்துப் பதிப்பா சிரியர்களுமே இவற்றை விலக்கியுள்ளனர். உரையில் (கிளவியாக்கம் நூ. 55) வரும் ஒரு மேற்கோள்பாடலில் இடம்பெறும் முருகன் என்னும் பொருள்படும் படி வரும் முருகு என்னும் சொல்லை இவர் நீக்காமல் அவ்வாறே வழங்கிச்சென் றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய இருவேறு தன்மைகளும் இவர் பதிப்பில் காணப் படுவதும் குறிப்பிடத்தக்கது.

பதிப்பில் உரை, இடைவெளியில்லாமல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. சேனா வரையர் ஒன்றுக்கும் மேற்பட்ட நூற்பாக்களைச் சேர்த்து உரை எழுதியது போலவே இவர் பதிப்பும் அமைந்துள்ளது. எனவே இவரின் நூற்பா எண்ணிக்கை 429ஆகக் காணப்படுகின்றது. மேற்கோள்கள் சான்றுகள் தனித்து அறிய எவ்வித மேற்கோள்குறிகளும் பயன்படுத்தப்படவில்லை. காற்புள்ளி போன்ற குறியீடுகள் பெரிதும் பயன்படுத்தப்படவில்லை.

நிறைவாக
Ø  சி. வை.தா. பதிப்பும் இராசகோபாலபிள்ளைப் பதிப்பும் ஒரே ஆண்டில் இரண்டு மாத இடைவெளியில் வெளிவந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள் ளது. இதில் சி.வை.தா.வின் பதிப்பே முதல் பதிப்பாக விளங்குகின்றது.

Ø  இராசகோபாலபிள்ளைப் பதிப்பு இரண்டு மாத இடைவெளியில் வெளி வந்திருந்தாலும் அப்பதிப்பு சி.கணபதிப்பிள்ளையின் கூற்றுப்படி இல்லாமல் சுவடியிலிருந்தே பார்த்துப் பதிப்பிக்கப்பட்ட பதிப்பாகவே உள்ளது.

Ø  சி.வை.தா. பதிப்பு பற்றிய விளம்பரத்தைப் பார்த்துகூட இப்பதிப்புப் பணியை இராசகோபாலபிள்ளை தொடங்கியிருக்கலாம் என்பதை ஊகித் தறிய முடிகிறது.

Ø  இரண்டு பதிப்புகளிலும் பதிப்புரை எழுதப்படாததால் சுவடி பற்றிய விவரங் களை அறியமுடியவில்லை. இதனால் இவர்களில் இராச கோபால பிள்ளை சி.வை.தா. பதிப்பை அவ்வாறே பயன்படுத்திக் கொண்டார் என்று உறுதி படக்கூறமுடியாது.

Ø  பதிப்பு நுட்பங்கள் என்று பார்க்கும்போது ஆறுமுகநாவலரின் பதிப்புச் செயல்பாடுகள் இப்பதிப்பில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அதற்குரிய தன்மையோடு சி.வை.தா.வின் பதிப்பு காணப்படுகின்றது.

Ø  இராசகோபாலபிள்ளையின் பதிப்பு ஒரேயோரு பாடவேறுபாடு வழங் கியிருந்த போதிலும் பதிப்பு நுட்பங்கள் என்று பார்க்கும்போது சி.வை.தா. பதிப்பைவிடச் சற்று பின்தங்கியே உள்ளது. விரைவாக இப்பதிப்பை வெளியிடவேண்டுமென்ற எண்ணம் தெரிவதை அப்பதிப்பின் உருவாக்க முறையே முன்வைக்கின்றது.

Ø  தீவிர வைணவச் சமயத்தின் பற்றாளராக இருக்கும் இராசகோபால பிள்ளை பாயிரம் சார்ந்த செயல்பாடுகளில் சைவம் தொடர்பான பாயிரத் தை நீக்கி அதற்குரிய தன்மையோடும் உரையின் இடையே வரும் சைவம் சார்ந்த குறிப்புகளை நீக்காமல் அதற்குரிய தன்மையோடும் செயல் பட்டிருப்பதை மதிப்பிடமுடிகிறது.

Ø  ஒரே காலத்தில் வெளிவந்த இரு பதிப்புகள் இங்கு பதிப்புகளாக மட்டும் காட்சிப்படவில்லை. தொல்காப்பியம், சேனாவரையம் என எல்லாவற் றையும் கடந்து ஆறுமுகநாவலர் – வள்ளலார், சைவம் – வைணவம் என வேறுபட்ட தளங்களில் செயல்பட்டிருப்பதையும் இவ்விரு பதிப்புகளும் முன்னிறுத்துகின்றன.

துணைநூற்பட்டியல்
1)   கணபதிப்பிள்ளை, சி., தொல்காப்பியப் பதிப்பு, ஈழகேசரி இதழ், 1950.
2)   கிருட்டிணமூர்த்தி, கோ., தொல்காப்பிய ஆய்வின் வரலாறு, சென்னைப் பல்கலைக்கழகம், 1990.
3)   சுந்தரமூர்த்தி, கு., தொல்காப்பியம் சேனாவரையம் (பதிப்பு), அண்ணா மலைப் பல்கலைக்கழகம், மூ.ப. 1990 .
4)   சுப்பிரமணியன், ச.வே., தொல்காப்பியப் பதிப்புகள், உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனம், சென்னை, 1992.
5)   மதுகேஸ்வரன், தொல்காப்பியப் பதிப்பு வரலாறு, சந்தியா பதிப்பகம், 2008.






No comments:

Post a Comment