தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Sunday, August 10, 2014

தமிழ் இலக்கண அடங்கல்: செய்யப்பட்டவையும் செய்யப்படவேண்டியவையும்


மிழ் இலக்கண ஆய்வுகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வலுப்பெறத் தொடங்கின. செந்தமிழ்(1902)  இதழின் வருகைக்குப் பிறகு பல புதிய சிந்தனைகள் இலக்கண ஆய்வுகளில் முகிழ்க்கத் தொடங்கின. இக்காலகட்டங்களில் தமிழில் கிடைத்த அனைத்து இலக்கண நூல்களும் அச்சிடப்பட்டுவிட்டன. இதன் தொடர்ச்சியாக இலக்கண ஆய்வுகளின் சிந்தனைப் போக்குகளும் வெவ்வேறு இலக்கண ஆய்வுத் துறைகளும் தோற்றம் பெற்றன. தொடக்ககாலங்களில் இலக்கண நூல்களின் புறநிலை ஆய்வுகளே அதிகம் மேற்கொள்ளப்பட்டன. 

பின்னர் படிப்படியாக இந்நிலை மாறி இலக்கண நூல்களின் அகநிலை ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாய்வுகள் இன்று வரை தமிழ் இலக்கண நூல்களின் சிந்தனைகளை உலகறியச் செய்ய உதவிபுரிகின்றன. இலக்கண ஆய்வுகள் தற்போது நவீன கோட்பாடுகளின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டு வருவது இலக்கண நூல்களின் பன்முகப்பாடுகளை அறிந்து கொள்வதற்கு துணைசெய்கின்றன.

இலக்கண ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோதே அவ்வாய்வுகளைத் தொகுத்து அடைவுபடுத்தும் முயற்சிகளும் தமிழில் மேற்கொள்ளப்பட்டன. இவ்வடைவுகள் எவ்வாறெல்லாம் உருவாக்கப்பட்டன. அவ்வடைவுகளை இன்றைய நிலையில் நோக்கும் போது அவற்றின் பயன்பாடுகள், சிக்கல்கள் என்னென்ன? ஆகியவற்றைத் தரவுகளின் அடிப்படையில் பின்வருமாறு தொகுத்துப்பார்க்கும்போது அறிந்துகொள்ளமுடியும். இவ்வடைவுகளை,

1.    இலக்கண நூல்களின் அடைவுகள்
2.    இலக்கண நூல்களின் உரை அடைவுகள்
3.    இலக்கண ஓலைச்சுவடி அடைவுகள்
4.    இலக்கணப் பாட நூல் அடைவுகள்
5.    இலக்கண நூல்களின் பதிப்பு அடைவுகள்
6.    இலக்கண நூல்களின் ஆய்வு அடைவுகள்
நூல் ஆய்வுகள்
உரை ஆய்வுகள்
பதிப்பு ஆய்வுகள்
அகராதி ஆய்வுகள்
என வகைப்படுத்தி விவரிக்கலாம்.

இலக்கண நூல்களின் அடைவுகள்

பின்வரும் ஆய்வுகள் அனைத்தும் இலக்கண நூல்களின் ஆய்வுகளாக இருந்தபோதிலும் அந்நூல்களை ஆவணப்படுத்தும் அடங்கல்களாகவும் காணப்படு கின்றன. எனவே அவை அனைத்தும் அடங்கல்களாகக் கருத்தில்கொள்ளப்பட்டு இங்கு வகைப்படுத்தப் பட்டுள்ளன.

சோம, இளவரசு, இலக்கண வரலாறு, தொல்காப்பியர் நூலகம், சிதம்பரம். 1963.

புலவர் இரா. இளங்குமரன், இலக்கண வரலாறு,  மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1990.

ஆறு. அழகப்பன் (ப.ஆ.), இலக்கணக் கருவூலம் (பாகம். 1,2,3). அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர். (1985, 1987, 1992)

மயிலை. சீனி. வேங்கடசாமி, மறைந்துபோன தமிழ் நூல்கள், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம். 1983.

எழுத்திலக்கணம்

செ.வை. சண்முகம்,   எழுத்திலக்கணக்கோட்பாடு, அனைத்திந்திய மொழியியல் கழகம், அண்ணாமலை நகர். 1980.

சொல்லிலக்கணம்

செ.வை. சண்முகம், சொல்லிலக்கணக் கோட்பாடு, அனைத்திந்திய மொழியியல் கழகம், அண்ணாமலை நகர், 1984, 1986. (பாகம் 1, 2, 3)

பொருளிலக்கணம்

த. வசந்தாள், தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் மரபுகள், ஒரு வரலாற்றுப் பார்வை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1990.
க.சுந்தரபாண்டியன், தமிழில் பொருளிலக்கண வளர்ச்சி, அய்யனார் பதிப்பகம்,சென்னை, மு.ப.2010

யாப்பிலக்கணம்

சோ.ந. கந்தசாமி, தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் (பாகம் 1, 2, 3). தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 1989, 2004.
ய. மணிகண்டன், தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி, விழிகள் பதிப்பகம், சென்னை. 2001.
பா. இளமாறன், தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு, மாற்று பதிப்பகம், சென்னை, 2011.

அணியிலக்கணம்

இரா. கண்ணன், அணியிலக்கண வரலாறு,  கூத்தன் பதிப்பகம், சென்னை. 2003.
இரா. அறவேந்தன், தமிழ் அணி இலக்கண மரபும், இலக்கண மறுவாசிப்பும், சபாநாயகம் பப்ளிகேஷன்ஸ், சிதம்பரம், 2004.

பாட்டியல்

மருதூர் அரங்கராசன், இலக்கண வரலாறு பாட்டியல் நூல்கள், பாலமுருகன் பதிப்பகம், மருதூர், மு.ப.1983.
நலங்கிள்ளி, பாட்டியல்கள் ஓர் அறிமுகம், வாணிதாசன் பதிப்பகம், சென்னை,1986

நிகண்டுகள்

தமிழ் நிகண்டுகள் ஆய்வு, மா. சற்குணம், இளவழகன் பதிப்பகம், சென்னை, 2002.
பெ. மாதையன், தமிழ் நிகண்டுகள் வரலாற்றுப் பார்வை (உருவ உள்ளடக்க ஆய்வு) தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2005. 

பொதுவானவை

ச.வே.சுப்பிரமணியன், தமிழ் இலக்கண நூல்கள்(மூலம் முழுவதும் – குறிப்பு விளக்கங்களுடன்), மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்,2007

சதாசிவம்பிள்ளை. அ., பாவலர் சரித்திர தீபகம் (2 பாகங்கள்) ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் (பதி. பொ. பூலோகசிங்கம்), கொழும்புத் தமிழ்ச்சங்கம், கொழும்பு, மீள்பதிப்பு, 2001.

Simon Casie Chetty, The Tamil Plutarch, Asian Educational services, New Delhi ,  Reprint , 1982.

இவை இல்லாமல் மு.அருணாசலம் உள்ளிட்டோர் எழுதிய இலக்கிய வரலாறுகள், பல இலக்கண ஆய்வு நூல்கள் ( இரா.சீனிவாசன், க.ப.அறவாணன், செ.வை.சண்முகம்), கலைக்களஞ்சியங்கள் ஆகியவற்றில் இலக்கண நூல்கள் பற்றிய  செய்திகள் இடம்பெற்றி ருப்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கண நூல்களின் உரை அடைவுகள்

பவானந்தம் பிள்ளை, நன்னூல் பதிப்பு, 1922

சு.அ. இராமசாமிப் புலவர், உரையாசிரியர்கள், பைந்தமிழ்ப்பண்ணை, தஞ்சாவூர், 1946.

மு. வை. அரவிந்தன், உரையாசிரியர்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, மூ.ப. 1995.

மு. அருணாசலம், இலக்கிய வரலாறு, தி பார்க்கர், சென்னை, 2003.    (பாகம் 9 முதல் 16 வரை)

க.ப. அறவாணன்,     எழுநூறு ஆண்டுகளில் நன்னூல், பாரி நிலையம், சென்னை, 1977.

மு. அ. முகம்மது உசேன் , தமிழ் உரைநூல் உரையாசிரியர் நூலடைவு, அற்புதா பதிப்பகம், கும்பகோணம், 1988. ( இவ்வடைவு விரிவான நிலையில் தமிழின் அனைத்து இலக்கண இலக்கியங்களுக்கும் எழுந்த எல்லா வகையான உரைகளையும் அவற்றின் பதிப்பு விவரங்களோடு வகைப்படுத்தியுள்ளது.

இந்நூல்களில் தமிழ் இலக்கண, இலக்கிய உரைகள் குறித்து ஆராயப்பட்டிருந்தாலும் இலக்கண உரைகள் என்று பார்க்கும்போது அவை குறித்த பட்டியலை விரிவாக எடுத்துரைக்கின்றன.

இலக்கண ஓலைச்சுவடி அடைவுகள்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனச் சுவடி விளக்க அட்டவணை, முனைவர் தி.மகாலட்சுமி    ( பதி.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை – 2001

கேரளப் பலகலைக்கழகக் கீழ்த்திசைச் சுவடிகள் விளக்க அட்டவணை,  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை – 1995

அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத் தமிழ்ச்சுவடிகள் விளக்க அட்டவணை, ஆ.தசரதன், மொ.மருதமுத்து, மூ.பரிமணன்,(பதி), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை – 1998
தமிழ்ச் சுவடி விளக்க அட்டவணை, த.கோ.பரமசிவம் (பதி), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை – 1987

மகோமகோபாத்யாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையச் சுவடிகளின் விளக்கம்,  உ.வே.சா.நூல்நிலையம், சென்னை, 1956.

தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூல்நிலையத் தமிழ்ச் சுவடிகளின் விளக்கம், சரசுவதி மகால் நூல் நிலையம், வீ.சொக்கலிங்கம்(பதி), 1981

அனைத்துலகத் தமிழ் ஓலைச்சுவடிகள் அட்டவணை, கா.செ.செல்லமுத்து, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1989

A  Descriptive catalogue of the Tamil Manuscripts, GOML, Madras, 1954

A  Descriptive catalogue of the Tamil Manuscripts in the Tanjore Maharaja Sarafojis saraswathi mahal library, Tanjore, 1964

A  Descriptive catalogue of Palm – Leaf Manuscripts in Tamil, Institute of Asian Studies, Chennai, 1997

Mackenzie Manuscripts, University of Madras, 1972

Descriptive catalogue of the Tamil Manuscripts, The Adyar Library and Research centre, 1994


இலக்கணப் பதிப்புகள் :

தொல்காப்பியம்

 சி. புன்னைவன நாதமுதலியார், தொல்காப்பிய மூலம் ( பதிப்பு முகவுரை), மதுரை P.N. சிதம்பர முதலியார் அன் கோ வெளியீடு,1922

க.த. திருநாவுக்கரசு (தொ-ர்), தொல்காப்பிய நூலடைவு, தமிழாய்வு தொகுதி 1, சென்னைப் பல்கலைக்கழகம், 1972.

மு.சண்முகம்பிள்ளை, தொல்காப்பியப் பதிப்புகள்,(பக்.1-70),தமிழாய்வு தொகுதி - 8, சென்னைப் பல்கலைகழகம், 1978.

அறவாணன். க.ப., தொல்காப்பியக் களஞ்சியம், பாரிநிலையம், சென்னை, 1975.

தமிழ்த்துறை ஆசிரியர்கள், தொல்காப்பியச் சிந்தனைகள்(தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த கட்டுரை), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்,1978.

கோ.கிருட்டிணமூர்த்தி, தொல்காப்பியப் பதிப்புகள், (தொல்காப்பிய ஆய்வின் வரலாறு), பக். 13-72, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1990.

ச.வே. சுப்பிரமணியன், தொல்காப்பியப் பதிப்புகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,1992.

பா. மதுகேஸ்வரன்., தொல்காப்பியப் பதிப்பு வரலாறு, சந்தியா பதிப்பகம், சென்னை, 2008.

யாப்பருங்கலம்

ந.சண்முகம், யாப்பருங்கல விருத்தி - பதிப்பும் ஆய்வும், (முனைவர்பட்ட ஆய்வேடு), கேரளப் பல்கலைக்கழகம், கேரளா,1992

யாப்பருங்கலக்காரிகை

வே.பால்ராஜ், யாப்பருங்கலக் காரிகை - பதிப்பும் ஆய்வும், (முனைவர்பட்ட ஆய்வேடு), கேரளப் பல்கலைக்கழகம், கேரளா,1992 ( இவ்வாய்வேடு நூல்வடிவம் பெற்றுள்ளது:யாப்பருங்கலக் காரிகை (ஆராய்ச்சிப் பதிப்பு), காவ்யா,சென்னை, 2007)

சு. முருகன், யாப்பருங்கலக் காரிகைப் பதிப்புகள்அம்மன் பதிப்பகம், சென்னை, 2000.

வீரசோழியம்

கா.அய்யப்பன், தமிழ் இலக்கண உரைவரலாறு - பெருந்தேவனார், (வீரசோழியப் பதிப்புகள் - இறுதிஇயல்),  தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், 2005     ( இவ்வாய்வேடு நூல்வடிவம் பெற்றுள்ளது: பெருந்தேவனாரின் வீரசோழிய உரைத் திறன், காசி பதிப்பகம், மயிலம், 2008)

நன்னூல்

பா. மதுகேஸ்வரன் , தமிழ் ஆராய்ச்சி வரலாறு - நன்னூல் பதிப்புகள் ( கி.பி. 1834-1999),  சென்னைப் பல்கலைக்கழகம்,சென்னை, 2003 (இவ்வாய்வேடு நூல்வடிவம் பெற்றுள்ளது: நன்னூல் பதிப்புகள், கீழ்ப்பள்ளிப்பட்டு, 2006.)

நம்பி அகப்பொருள்

தி.இராஜரத்தினம், அகப்பொருள் விளக்கம் - பதிப்பும் ஆய்வும், (முனைவர்பட்ட ஆய்வேடு), கேரளப் பல்கலைக்கழகம், கேரளா, 2006

தண்டியலங்காரம்

ம.கருணாநிதி, தண்டியலங்காரம் - பதிப்பும் ஆய்வும், (முனைவர்பட்ட ஆய்வேடு), கேரளப் பல்கலைக்கழகம், கேரளா, 2006

ம. கருணாநிதி, முன்னைத் தமிழ் இலக்கியம் (வரலாற்று நோக்கில் தண்டியலங்கார அச்சுப் பதிப்புகள்,  பக். 285-290), மு. மணிவேல், ஜலஜா கோபிநாத், (ப-ர்), ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், 2004.

இலக்கணப் பதிப்புகளைப் பொதுவான நிலையில் பதிவுசெய்தவை

மயிலை சீனி. வேங்கடசாமி, 19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம், சாரதா மாணிக்கம் பதிப்பகம், மறுபதிப்பு, சென்னை, 2003.

மா.சு. சம்பந்தன், அச்சும் பதிப்பும், தமிழர் பதிப்பகம், சென்னை, 1980

இ. சுந்தரமூர்த்தி, இன்றைய நோக்கில் இலக்கணப் பதிப்புகள் (40 – 48), இலக்கணப் பதிப்புகள் ( 49 – 62), (பதிப்பியல் சிந்தனைகள்), சேகர் பதிப்பகம், சென்னை, 2005

பா.மதுகேசுவரன், மதுகேசுவரன், ‘தமிழில் வெளிவந்த பழந்தமிழ் இலக்கண நூல்கள் முதல் பதிப்புகள் மட்டும்’, தமிழியல் ஆராய்ச்சி (தொகுதி - 8) (பதி. பொற்கோ), புலமை மன்றம், சென்னை, 2005.

கி. நாச்சிமுத்து, டாக்டர் உ.வே.சா. இலக்கணப் பதிப்புகள் , உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 1986.

இ. சுந்தரமூர்த்தி, பதிப்பியல் சிந்தனைகள் (இலக்கணப் பதிப்புகள் பக். 49-62,  திவாகர நிகண்டுப்பதிப்பு, பக். 105-171) , சேகர் பதிப்பகம், சென்னை, 2005.

பா. இளமாறன், தமிழ் இலக்கண பதிப்புகள்: அடைவு உருவாக்கம் – வரலாறு எழுதுதல்,    ( பதிப்பும் வாசிப்பும், பக் 13 -24), சந்தியா பதிப்பகம், சென்னை, 2008.

ம. மகாலட்சுமி, தமிழ் அகப்பொருள் இலக்கணப் பதிப்புகள், (காலம் சார்ந்த பார்வை), பூங்குயில் பதிப்பகம், வந்தவாசி, 2009.

மு. சண்முகம்பிள்ளை, தமிழாய்வு - தொகுதி - 6, திவாகரப் பதிப்பு வரலாறு, , பக். 1-10,  சி. பாலசுப்பிரமணியன், சென்னைப் பல்கலைக்கழகம், 1977.

மா. சற்குணம், தமிழ் நிகண்டுகளின் பதிப்பு வரலாறு, (தமிழ் நிகண்டுகள் ஆய்வு) பக்.137-196, இளவழகன் பதிப்பகம், சென்னை, 2002.

மருதூர் அரங்கராசன், இலக்கண வரலாறு பாட்டியல் நூல்கள் (ஒவ்வொரு நூலின் இறுதியிலும் பதிப்புகளின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.), பாலமுருகன் பதிப்பகம், மருதூர், மு.ப.1983.

வீ. அரசு, (பதிப்பு) பத்தொன்பதாம்நூற்றாண்டுத் தமிழியல் கைநூல், சென்னைப் பல்கலைக்கழகம், கல்விப் பணியாளர் கல்லூரி, தமிழ் இலக்கியத் துறை, 2010.

Barnett and The Late G.U. Pope (Compiled), A Catalogue of the Tamil Books in the Library of the British Museum, 1909.

John Murdoch (compiled), Classified catalogue of tamil printed books with introductory notices (Reprinted with a number of Appendices of supplement edited by M. Shanmukham), Tamil Development And Research Council, Government of Tamilnadu, First Edition, 1865, Reprint 1968.

இலக்கண பாட நூல்அடைவுகள்
 (உரை நடைவடிவிலான நூல்கள், வினா விடை நூல்கள், சுருக்க நூல்கள் முதலானவை)
ஆர்.இ. ஆஷெர், ஐரோப்பிய மொழிகளில் தமிழ் இலக்கண நூல்கள், தமிழ்ப் பதிப்புலகம், 1800 - 2009, சிறப்பு மலர், புதிய புத்தகம்பேசுது, பாரதி புத்தகலாயம், 2009.
வீ. அருள், , பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கண வளர்ச்சி, ( முனைவர் பட்ட ஆய்வேடு) தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், 2009.

சு.சுஜா, ஐரோப்பியர்கள் உருவாக்கிய மொழிக் கற்கை நூல்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழியல் கைநூல், தமிழ் இலக்கியத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம், 2010.

பா. இளமாறன், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலக்கணப் பயில்வுநூல் உருவாக்கம்,     (இரு நூற்றாண்டுப் பதிப்பு வரலாற்றில் தொல்காப்பியம்), இராசகுணா பதிப்பகம், சென்னை, 2011

இரா. வெங்கடேசன், தமிழ் இலக்கண நூல்களின் பதிப்புருவாக்க வரலாறு, (தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் செவ்வியல் நூல்கள்), இராசகுணா பதிப்பகம், சென்னை, 2011


இலக்கண ஆய்வடங்கல்

இலக்கண நூல் ஆய்வு அடைவுகள்

1.    பொற்கோ, தமிழிலக்கண அகரவரிசை,  தமிழாய்வு தொகுதி - 5, (, பக்.1 - 38),                    சி. பாலசுப்பிரமணியன் (ப-ர்), சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு, 1977.

இவ்வடைவு சென்னையிலுள்ள மறைமலையடிகள் நூலகத்தில் உள்ள நூல்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது. மூன்று நிலைகளில் இவ்வடைவு உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வடைவு நூல்களை அடைவு செய்வதில்  மட்டுமே கவனம் கொண்டுள்ளது. கட்டுரைகள் இவ்வடைவில் இடம்பெறவில்லை.
முதற்பகுதியில் அனைத்து விவரங்களோடும் கூடிய இலக்கண நூல்கள் அகரவரிசைப் படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளன.
இரண்டாம் பகுதியில் சில விவரங்கள் குறைவாக உள்ள இலக்கண நூல்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.
மூன்றாம் பகுதியில் நூலாசிரியரின் பெயர்கள் நூற்பெயர்களோடு அகரவரிசையில் தரப்பட்டுள்ளன. இவ்வடைவை,
இலக்கண நூல்கள்
இலக்கணப் பதிப்புகள்

இலக்கண ஆய்வுகள்

இலக்கண வினாவிடை நூல்கள், உரை நடை நூல்கள், சுருக்க நூல்கள்
இலக்கண நூல்களோடு அவற்றின் உரைகள்
முதலான பகுப்புகளின் கீழ் வகைப்படுத்தமுடியும்.
தமிழிலக்கண அகரவரிசை என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தாலும் இலக்கண நூல்கள் வரிசை என்பதைவிட மேற்சொல்லப்பட்ட அனைத்து அம்சங்களும் இதில் இடம் பெற்றிருப்பது இவ்வடைவின் தனிச்சிறப்பு. அது மட்டுமல்லாது ஆசிரியர் அகரவரிசைப் படுத்தும்போது அவ்வாசிரியர் எழுதிய அனைத்து நூல்களும் அதன் கீழே தரப்பட்டி ருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வடைவுதான் தமிழ் இலக்கண  நூல்களின் எல்லாப் பகுப்புகளையும் உள்ளடக்கிய முதல் அடைவு என்பது சுட்டத்தக்கது.
2.    ய. மணிகண்டன், தமிழ் யாப்பியல் ஆய்வு வரலாறு சுருக்க அறிமுகமும் தெரிவு செய்த நூல், கட்டுரை அடைவும், தொகுப்பு வீ.அரசு, ய.மணிகண்டன், கோ.பழனி, ஆ.ஏகாம்பரம், உயராய்வு, தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், 2006

3.    பா. இளமாறன், தமிழ் இலக்கண வரலாறு முழுமையை நோக்கிய சில விவாதக் குறிப்புகள், ( பதிப்பும் வாசிப்பும்), சந்தியா பதிப்பகம், சென்னை, 2008.

இலக்கணக் கட்டுரை அடைவுகள்

4.    துரை. பட்டாபிராமன், இலக்கண ஆய்வடங்கல், எழுத்தும் சொல்லும், முதல் தொகுதி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1992

5.    துரை. பட்டாபிராமன், இலக்கண ஆய்வடங்கல், தொகுதி - 2, (பொருள் – யாப்பு – அணி), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1999

தமிழ் இலக்கண நூல்களின் பகுப்பாகிய எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவை தொடர்பாக வெளிவந்த கட்டுரைகள், ஆய்வேடுகள், சில நூல்கள் இவ்வடைவில் இடம்பெற்றுள்ளன. இவ்வாய்வடங்கலின் ஆய்வெல்லை 1985 ஆம் ஆண்டு வரைதான்.

 செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பொழில், ஆய்வுக்கோவை, பல இலக்கண நூற் பதிப்புகள், இலக்கண மலர்கள், திறனாய்வு நூல்கள், பல்கலைக்கழக ஆய்விதழ்கள், ஆராய்ச்சி இதழ்கள், மொழியியல் இதழ்கள், கருத்தரங்கக் கட்டுரைகள் ஆகிய பல்வகையான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வடைவு உருவாக்கப் பட்டுள்ளது.

நூல்கள், ஆய்வேடுகள் ஆகியவற்றை இவ்வடங்கல் முதன்மைப்படுத்துவதை விட கட்டுரைகளை அடைவு செய்வதிலேயே அதிகம் கவனம் கொண்டுள்ளது.

இவ்வடைவில் மொத்தம் 1528 கட்டுரைகளும் 35 ஆய்வேடுகளும் அடைவு செய்யப் பட்டுள்ளன. எழுத்திலக்கணம் -  180, சொல்லிலக்கணம் - 811, பொருளிலக்கணம் - 309, யாப்பிலக்கணம் - 164, அணியிலக்கணம் – 64 என கட்டுரைகளின் எண்ணிக்கை இடம்பெற்றுள்ளன.   

 இவ்வடைவு கட்டுரை, கட்டுரையாளர், வெளிவந்த நூல், வெளியீட்டாளர் , வெளிவந்த ஆண்டு, பக்கம் முதலான விளக்கங்களின் அடிப்படையில் வரிசப்படுத்தப்பட்டுள்ளதோடு கருத்து என்னும் இறுதிப் பகுதியில் அக்கட்டுரைகளின் சுருக்க விளக்கமும்  தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கட்டுரைகளின் தலைப்பு அகரவரிசையில் இவ்வடைவு உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வடைவில் சில விடுபாடுகளும், சில தவறான தகவல்களும் உள்ளன. அது குறித்து அடைவை உருவாக்கிய ஆசிரியருக்கே தெளிவு இருப்பதால் வருங்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அடைவில் இவை திருத்தப்படவேண்டும்.

6.    கற்பகம், தமிழ் இதழ்களில் இலக்கண ஆய்வுகள் ( செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பொழில்), (எம்.பில் ஆய்வு), தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 2011

7.    P.R. Subramanian, Annotated Index To Centamil – The Journal of The Madurai Tamil Sangam, Sandhya Publications, Chennai, Reprint – 2008

8.    செந்தமிழ்த் தொகுதிகள் அட்டவணைக் குறிப்பு, மதுரைத் தமிழ்ச் சங்கம், மதுரை, 1981.
9.    கா.அய்யப்பன், செந்தமிழ் இதழில் தொல்காப்பிய ஆய்வுகள் ( 1902 – 1965), தொல்காப்பிய வாசிப்பு சில அடிப்படைகள், காவ்யா, சென்னை, 2009

இலக்கண ஆய்வேடு அடைவுகள்

10. T. Murugarathnam,  Bibliography of Dissertations on Tamilology, Journal of Tamil Studies – ( Volume 1, no.2, Oct. 1969)
இவ்வடைவில் பிஎச்.டி., எம்.லிட்  ஆய்வேடுகளின் தலைப்புகள் மட்டும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இவ்வடைவில் இலக்கண ஆய்வேடுகளும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

11. Anni Thomas, Dissertations on Tamilology, IITS, Tharamani, 1977
இவ்வடைவில் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்ட தமிழாய்வு தொடர்பான ஆய்வுகளோடு உலகில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழாய்வுத் தொடர்பாகப் பட்டம் பெற்ற ஆய்வேட்டுத் தலைப்புகளும் இடம் பெற்றுள்ளன. இவ்வடைவிலும் இலக்கண ஆய்வேடுகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

12. தமிழண்ணல், இ. முத்தையா, பதிப்பாசிரியர் கதிர்மகாதேவன், தமிழியல் ஆய்வு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பதிப்புத்துறை, மதுரை, 1983
தமிழண்ணல் மற்றும் பிற பேராசிரியர்களால்  உருவாக்கப்பட்ட இவ்வடைவில் 1500 க்கும் மேற்பட்ட ஆய்வேடுகளின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் எல்லா வகையான பட்டங்களுக்குரிய ஆய்வேடுகளும் உள்ளன. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் வெளிவந்த ஆய்வேடுகளும் தொகுக்கப்பட்டுள்ளன. ஆய்வேட்டு விவரங்களோடு நிறுவனங்களின் விவரம், ஆய்வு நெறியாளர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் அனைத்தும் இவ்வடைவில் இடம்பெற்றுள்ளன.

துறை வாரியாக இவ்வாய்வேடுகள் வகைமைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் இலக்கணம், மொழியியல் தொடர்பாக 176 ஆய்வேடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் பிஎச். டி. ஆய்வேடுகள் – 128, எம்.லிட் ஆய்வேடுகள் – 11, எம்.பில் ஆய்வேடுகள் – 37 ஆகும்.
இவற்றைத் தொடர்ந்து உரையாசிரியர்கள் பற்றிய பகுதியில் இலக்கண உரைகள் குறித்து நிகழ்த்தப்பட்ட 18 ஆய்வேடுகளும் இடம்பெற்றுள்ளன.
1983 ஆம் ஆண்டு இந்நூல் வெளிவந்ததால்  அதற்கு முன்னர் வெளிவந்த ஆய்வுகள் மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளன.

13.  தி. நெடுஞ்செழியன், தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகளை ( 1948 – 2007) கணினி வெளியீட்டில் ஒருங்கு குறியீட்டில் அட்டவணைப்படுத்தல்,  குறுந்திட்டப்பணி, 2007 – 2008, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.

இவ்வடைவில் 3500க்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் இடம்பெற்றுள்ளன. இவ்வடைவுப் பணி இன்னும் முழுமை பெறவில்லை. இவ்வடைவிலும் ஏராளமான இலக்கண நூல்களின் ஆய்வேடுகள் அடைவு செய்யப்பட்டுள்ளன.

14. Doctorate Degrees Awarded by the Bharathidasan University during its first ten years ( 1982 – 1992), Bharathidasan University, Thiruchirapalli, 1992, Tamil pp. 187 – 211.

15. செ. ஐயப்பன், வெ. இராஜேந்திரன் ( தொகுப்பாசிரியர்கள்), பாரதியார் பல்கலைக்கழகத் தமிழாய்வுகள்( 1982 முதல் 2000 வரை), கோவை, நூல் வெளிவந்த ஆண்டு இல்லை.
இந்நூலில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்ட ஆய்வேடுகள்  வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. இதில் விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலேயே இலக்கண ஆய்வேடுகள் இடம்பெற்றுள்ளன.

அகராதி ஆய்வு அடங்கல்

16.  பெ. மாதையன், அகராதி அடைவு,  பக்.1-50,  தமிழாய்வு தொகுதி - 7,                   சி. பாலசுப்பிரமணியன், (ப-ர்), சென்னைப் பல்கலைக்கழகம், 1978.
17.  வ. ஜெயதேவன், தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு,  ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, 1985.
18.  இரா. திருநாவுக்கரசு, தமிழ் அகராதியியல் ஆய்வடங்கல் ( 1992 வரை) தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2008

தமிழ் நோக்கு நூல் அடைவு
பெ.மாதையன், தமிழாய்வு - நோக்குநூல் அடைவு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை,1995
எல்லாவற்றையும் அடைவுபடுத்திய நோக்கு நூல்களை அடைவுப்படுத்தி யிருப்பதுதான் இந்நூலின் தனிச்சிறப்பு.
நிகண்டுகள், மொழி அகராதிகள், சிறப்பகராதிகள், நூல் அடைவுகள் என்னும் நான்கு பிரிவுகளாக இவ்வடைவு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நிகண்டு பகுதியில் பதிப்பாகி வெளிவந்த நிகண்டுகளின் விவரங்கள் அவற்றின் பதிப்பு விவரங்களோடு இடம்பெற்றுள்ளன. நூல் அடைவுப் பகுதியில் 1995க்கு முன்னர் வரை வெளிவந்த பலவகையான அடைவுகள் இடம்பெற்றுள்ளன. பின் வரக்கூடிய சில அடைவுகள் இந்நூலில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இலக்கணம், மொழியியல் சார் அடைவுகளும் இடம்பெற்றுள்ளன.

இலக்கண அடங்கல் முழுமையை நோக்கி:

இலக்கண ஆய்வடங்கலை மட்டும் தனித்துச் செய்யாமல் மேற்சொல்லப்பட்ட வகைப்பாடு களின் கீழ் இலக்கண அடங்கல் ஒன்றைத் தயாரிக்க வேண்டும்.
அதில்
இலக்கண நூல்கள் அடைவு (தொல்காப்பியம் தொடங்கி இன்றுவரை)
இலக்கண உரைகள் அடைவு ( இறையனார் களவியல் உரை தொடங்கி இன்றுவரை)
இலக்கணப் பதிப்புகள் அடைவு (முதல் பதிப்பு தொடங்கி இன்று வரை)
இலக்கண பயில்வு நூல் அடைவு
இலக்கண நோக்கு நூல் அடைவு
இலக்கண அகராதி அடைவு ( தொல்காப்பியச் சிறப்பகராதி முதலானவை)
இலக்கண ஆய்வு அடைவு
ஆகியவை இடம்பெற வேண்டும்

இலக்கண ஆய்வு அடைவு பல நிலைகளில் உருவாக்கப்பட வேண்டும்
1.   இலக்கண நூல் ஆய்வுகள்
2.   இலக்கண உறுப்பு ஆய்வுகள்
3.   இலக்கண உரை ஆய்வுகள்
4.   இலக்கணப் பதிப்பு ஆய்வுகள்
5.   இலக்கண ஒப்பீட்டு ஆய்வுகள்
6.   இலக்கண ஆய்வேடுகள்
ஆகியவற்றின் அடைவுகள் உருவாக்கப்படவேண்டும். இலக்கண நூல்களை வெவ்வேறு நிலைகளில் அணுகக்கூடிய நூல்கள், கட்டுரைகள் ஆகியவற்றை வகைப்படுத்திச் சில அடைவு நூல்களும், கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. ஆனால் அவை முழுமை இல்லை. இலக்கண உரை ஆய்வுகள், பதிப்பு ஆய்வுகள், ஒப்பீட்டு ஆய்வுகள் குறித்து வெளிவந்த கட்டுரைகளை அடைவுபடுத்தக்கூடிய சில அடைவுகளே வெளிவந்துள்ளனவே தவிர அவற்றை முழுமை நிலையில் அடைவுபடுத்திய அடைவுமுயற்சிகள் இன்னும் நிகழ்த்தப் பெறவில்லை.

1985 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை நிகழ்ந்த ஆய்வுகளை அடைவுசெய்தே சில அடைவு நூல்களும், கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. இவையும் முழுமை இல்லை என்பதை அவ்வடைவுகளை நோக்கும்போதே அறியமுடிகிறது. அவற்றோடு 1985 க்குப் பிறகு தமிழ் இலக்கண மரபை வெவ்வேறு நிலைகளில் ஆய்வு செய்து பல நூல்களும் கட்டுரைகளும், ஆய்வேடுகளும் வெளிவந்துள்ளன. 1985க்கு முன்பே தமிழில் மார்க்சிய சிந்தனையை அடியொற்றி எழுதப்பட்ட இலக்கணம் சார் நூல்கள், கட்டுரைகள் மேற்சொல்லப்பட்ட அடைவுகளில் பெரிதும் இடம்பெறவில்லை.  

1985 க்குப் பிறகு தமிழில் வளர்ச்சி பெற்ற பல துறைகள், கோட்பாடுகள் ஆகியவற்றைப் பொருத்தி ஏராளமான இலக்கணக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. பல புதிய நவீன சிந்தனைகள் கொண்ட இதழ்களில் இக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கன. மேலும், விருட்சம், நிறப்பிரிகை முதலியன. இவற்றில் எம்.டி.முத்துக்குமாரசாமி, நாகார்ச்சுனன், அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி, தமிழவன் என இன்னும் எராளமானோர் கட்டுரைகள் எழுதியுள்ளனர். இக்கட்டுரைகள் அனைத்தும் அடைவு செய்யப்படவேண்டும். நவீன சிந்தனையை உள்ளடக்கிய நூல்கள், வரலாற்றடிப் படையிலான நூல்கள் , சமூகவியல் நோக்கிலான நூல்கள், அமைப்பியல் ரீதியிலான நூல்கள், உரைகளை, பதிப்புகளை விரிவாக விவாதித்த நூல்கள் ஆகிய அனைத்தையும் ஒன்று திரட்டி வகைப்படுத்த வேண்டும்.

இவ்வகைப்பாடு எல்லா நிலைகளிலும் அமையவேண்டும்.
நூல் வரிசை
ஆசிரியர் வரிசை
கால வரிசை
துறை வரிசை
இலக்கணப் பகுப்பு வரிசை
என இன்னும் பல போக்குகளில் இவ்வடைவுகள் உருவாக்கப்படவேண்டும்.

ஏறத்தாழ 25 ஆண்டுகள் நடைபெற்றுள்ள இலக்கண ஆய்வுகளை ஆவணப் படுத்தியாக வேண்டிய பொறுப்பு நம்முன் உள்ளது. இவ்வாய்வுகள் அடைவு மிகச்சிலவே வந்துள்ளதால் அனைத்தையும் உள்ளடக்கிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டாகவேண்டும். செம்மொழித் தகுதிக்குப் பிறகு இலக்கண ஆய்வுகளின் எண்ணிக்கை கூடியுள்ளது. அடைவு முயற்சி என்பது தொடர்ந்து செய்யப்படவேண்டிய ஒன்று. எனவே இருப்பதை முதலில் தொகுத்தால்தான் வருங்காலங்களில் செய்யப்படும் ஆய்வுகளை அவற்றுடன் உடனுக்குடன் இணைக்க முடியும். இதனால் செய்யப்பட்ட ஆய்வுகளை மீண்டும் மீண்டும் செய்யும் நிலை தவிர்க்கப்படும். புதிய ஆய்வுகள் மேம்படும்.

ஆய்வுகளோடு மேற்சொல்லப்பட்ட அனைத்துக் கூறுகளையும் ஒன்றிணைக்கும் போதுதான் தமிழ் இலக்கண அடங்கல் முழுமை பெறும்.

தமிழ் இலக்கண அடங்கலை உருவாக்குவதற்குரிய வழிமுறைகள்

1.    வெளிவந்த அடைவுகளைத் தொகுத்தல்
2.    வெளிவந்த இதழ்கள், மலர்கள், ஆய்வுக்கோவைகள் முதலியவற்றைத் தொகுத்தல்
3.    வெளிவந்த ஆய்வு நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், ஆய்வேடுகளைத் தொகுத்தல்
4.    வெளிவந்த ஆய்வுநூல்களில், ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வேடுகளின் துணைநூற்பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்களைத் தொகுத்தல்
5.    கணினியில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளைத் தொகுத்தல்

என இலக்கணம் சார் தரவுகளை ஆவணப்படுத்துவதன் வழி இலக்கண அடங்கலை முழுமைபெற வைக்கமுடியும்.

1 comment: