தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Tuesday, June 30, 2020

தமிழ் நாவல் எழுதியலில் பெண்கள்



பிரதாப முதலியார் சரித்திரத்தின் வழியாகத் தொடங்கிய தமிழ் நாவல் வரலாற்றில் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு குறிப்பிட்டுச் சுட்டத் தக்கது. சங்க இலக்கியத்தில் பெரும்பான்மைப் படைப்புகளை வழங்கிய பெண்படைப்பாளிகள் அதற்குப் பிறகான காலங்களில் பல்வேறு அரசியல், சமூக, சமய மாற்றக் காரணங்களினால் பின்தள்ளப்பட்டனர். இதனாலேயே நீதி இலக்கியக் காலந் தொடங்கிப் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலம் வரை எழுத்துலகில் பங்களிப்புச் செய்த பெண்படைப்பாளிகள் விரல் விட்டு எண்ணத்தக்க அளவிலேயே காணப்படுகின்றனர்.

ஐரோப்பியர்களின் வருகை, கல்விப் பரவலாக்கம், அச்சு ஊடக வருகை, சமூகத்தில் நிகழ்ந்த அரசியல் ரீதியான எழுச்சி ஆகியவை பெண்களின் எழுதியலை மீண்டும் மீட்டெடுத்தன. இவை மட்டுமல்லாது எழுதுமுறையில் ஏற்பட்ட மாற்றங்களும் இதற்குக் காரணமாயின. யாப்பி னாலும், செறிவான உரைநடையினாலும் ஆகச்சிறந்த புலவர்களால் மட்டுமே எழுதப்பட்ட தமிழ்ப்படைப்புகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சற்று நெகிழ்ச்சி பெற்றன. படைப்பு உருவாக்க முறையில் ஏற்பட்ட நெகிழ்ச்சி படைப்புகளைச் சொல்லும் முறையில் மேலை நாட்டு வடிவங்களின் வழி விரிவுபெற்றது. இவ்விரிவு புதிய பல படைப்பாளிகளை இலக்கிய எழுதியலில் உள்நுழைய வைத்தது. இதில் பெண் படைப்பாளி களும் தொடக்ககாலங்களில் கணிசமான அளவு பங்கேற்றனர்.

புனைகதை என்னும் வகைமையில் அடங்கும் நாவல், சிறுகதை ஆகியவற்றில் தொடக்ககாலப் படைப்பாளிகள் நாவல் எழுதுவதிலேயே பெருங்கவனம் செலுத்தியுள்ளனர்.  இக்காலகட்டங்களில் பலர் சிறுகதைகள் எழுதியிருந்தபோதிலும் அவர்கள் சிறுகதை ஆசிரியர்கள் என்ற தனித்த அடையாளத்தைப் பெறவில்லை. அதனாலேயே வ.வே.சு.ஐயர், புதுமைப் பித்தன் ஆகியோருக்கு முன்னரே பலர் கதைகள் எழுதியிருந்த போதிலும் அவர்களைத் தமிழ்ச்சமூகம் சிறுகதை ஆசிரியர்களாக அடையாளப்படுத்த வில்லை. ஆனால் நாவல் என்ற வடிவத்தில் முதல் நாவல் எழுதிய வேதநாயகம் பிள்ளையைத் தமிழ்ச் சமூகம் முதல் நாவலாசிரியர் என்ற பெயர் கொடுத்தே வரவேற்றுக்கொண்டது. அக்காலங்களில் நாவலுக்குக் கிடைத்த வரவேற்பு சிறுகதைகளுக்கு இல்லை என்னும் அளவுக்குக் கூட இருந்துள்ளது. இத்தகைய நாவல் வளர்ச்சி வரலாற்றில் பெண்கள் பலர்  பங்களிப்புச் செய்திருந்த போதிலும் குறிப்பிடத்தக்க சிலரே பல நாவல்கள் எழுதிய பட்டியலிலும், காலத்திற்கேற்ற தமது சிந்தனைகளை நாவலின் வழி பிரதிபலித்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.

125 ஆண்டுகால நாவல் வரலாற்றில் பெண்கள்

தமிழ் நாவல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாவல்கள் எழுதிய பெண் படைப்பாளிகள்:

ராஜாத்தி அம்மாள் ( 1897), விசாலாட்சி அம்மாள் ( 1905), தேவகுஞ்சரி அம்மாள் ( 1907), மீனாட்சி சுந்தரம்மாள் ( 1912), வை.மு.கோதைநாயகி அம்மாள் ( 1925), செய்யூர் சாரநாயகி,  டி.பி. ராஜலஷ்மி ( 1931), சகோதரி கிரிஜாதேவி ( 1931), மூவலூர் ராமாமிர்தத்தம்மாள் ( 1936), வி. சரஸ்வதி அம்மாள் ( 1933), குமுதினி ( 1946), கெளரி அம்மாள் ( 1949), லஷ்மி ( 1949),    கி. சரஸ்வதி அம்மாள் ( 1950), ராஜம் கிருஷ்ணன் ( 1953), சியாமளா ( 1955), ஸரோஜா ராமமூர்த்தி ( 1956), ஹெப்சிபா ஜேசுதாசன் ( 1965), கு.ப. சேது அம்மாள் ( 1972), அநுத்தம்மா ( 1976), அழகிய நாயகி அம்மாள் ( 1998), சிவகாமி ( 1989),  பாமா ( 1992), சுமதி (2001), சு.தமிழ்ச்செல்வி (2002), தமயந்தி ( 2002), சல்மா ( 2004), உமாமகேஸ்வரி (2003), பாரததேவி (2005), பிரியாபாபு (2008), முத்துமீனாள் (2008) என இன்னும் பலரும் இப்பட்டியலில் இடம்பெறுகின்றனர்.

இவர்களில் அதிக நாவல்கள் எழுதியவர்களாகவும், சமூகத்தில் ஏற்பட்ட பல்வேறுபட்ட சிந்தனைகளைத் தம் படைப்புகளின் வழி வெளிப் படுத்தியவர்களாகவும் பலர் இருப்பினும் அவர்களில் வெவ்வேறு காலங் களில் இயங்கிய குறிப்பிடத்தக்க சிலரைப் பின்வருமாறு வரிசைப் படுத்தலாம்.

வை.மு. கோதைநாயகி அம்மாள், ராஜம்கிருஷ்ணன், சிவகாமி, பாமா,

சு.தமிழ்ச்செல்வி

இந்த ஐந்து பெண் நாவலாசிரியர்களும்  வெவ்வேறு சிந்தனைப் பின்புலம் கொண்டவர்கள் என்ற பின்புலத்திலேயே அவர்களின் நாவல்களும் வடிவம் பெற்று வெளிவந்துள்ளன. சமூக மற்றும் குடும்பப் பின்புலம் – அவர்கள் கையாளும் மொழி – புதிய சிந்தனைகள் – புதிய கோட்பாடுகள் - சமூகம் சார்ந்த புரிதல்கள் என இவை அனைத்தும் ஒன்றிணைந்து இந்நாவலாசிரியர் களின் நாவல்களை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாற்றி யுள்ளன.

 சமூக ஒழுக்கமும் நாவலும்: வை.மு.கோதைநாயகி அம்மாள்

`        இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஆண்களுக்கு இணையாக நாவலுலகில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் வை.மு.கோ. அவர்கள். வைதேகி (1925) என்ற நாவல் வழியாகத் தன் நாவல் பயணத்தைத் தொடங்கிய இவர் 115 நாவல்களை எழுதியுள்ளார். இவரின் ஐந்து நாவல்கள் திரைப்பட வடிவம் பெற்றுள்ளன. சமகால வாழ்வைச் சித்தரிக்கும் கதைகள், நீதிக் கருத்துக்களை வலியுறுத்தும் கதைகள், கற்பனைச் சூழ்நிலை கொண்ட கதைகள் எனக் கோதைநாயகி அம்மாளின் கதைக்கரு பல நிலைகளில் அமைந்திருந்த போதிலும் துப்பறியும் கதைகளுக்கே இவர் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார் என்பதை அவரின் பல துப்பறியும் நாவல்கள் வழியாகக் கண்டறிய முடிகிறது. சமுக விழுமியங்களையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் முதன்மைப்படுத்தி  இவர் எழுதிய நாவல்கள் தொடக்ககால நாவல் வரலாற்றில் தனித்துக் குறிப்பிடத்தக்கவையாக விளங்குகின்றன.  

களமும் நாவலும் : ராஜம்கிருஷ்ணன்

          நாவல் கற்பனையிலிருந்து மட்டுமே உதிப்பவை அல்ல, அவை மக்களின் வாழ்வியல் அதுவும் உழைக்கும் மக்களின் வாழ்வியல் என்ற சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு தம் நாவல்களை வடிவமைத்தவர் ராஜம்கிருஷ்ணன். இந்திய விடுதலை, அதையொட்டிய அரசியல் நிகழ்வுகள் முதலியவற்றை வளைக்கரம், வேருக்கு நீர், ரோஜா இதழ்கள் ஆகிய நாவல்கள் வழியாக வெளிப்படுத்திய இவர் கரிப்பு மணிகள், குறிஞ்சித்தேன் ஆகிய நாவல்கள் வழியாகச் சமூக சார்ந்த பிரக்ஞையோடு செயல்பட்டுள்ளார் என்பதை அறியமுடிகிறது. இவரின் கள ஆய்வு சார்ந்த நாவல்களே தமிழ் நாவல் வரலாற்றிலும், பெண் நாவலாசிரியர்களின் வரலாற்றிலும் இவருக்கு தனித்த இடத்தைப் பெற்றுத்தந்தன. 


இக்காரணங்களாலேயே இந்திய அரசின் உயரிய விருதான சாகித்திய அகாதெமி விருதை முதல் பெண்ணாகவும் முதல் பெண் நாவலாசிரியராகவும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலித் பெண் அரசியலும் நாவலும்: சிவகாமி, பாமா

1980களில் தமிழில் புதியதாக உருப்பெற்ற மாற்று பெண்ணியச் சிந்தனைகள், தலித்தியச் சிந்தனைகள் ஆகியவற்றை முதன்மைப்படுத்தி சிவகாமி மற்றும் பாமா ஆகியோரது படைப்புகள் வெளிவந்தன. பழையன கழிதலும்               (1989), ஆனந்தாயி (1994), குறுக்குவெட்டு (1999) முதலிய நாவல்கள் வழியாகச் சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களை முதன்மைப்படுத்தி நாவல் வரலாற்றில் ஒரு புதிய போக்கை உருவாக்கியவர் சிவகாமி. இவரின் சமகாலத்தில் எழுத வந்தவர் பாமா. தன் வாழ்வின் நிகழ்வுகளைச் சுயசரிதை யாக எழுதிய தமிழின் முதல் பெண் நாவலாசிரியர். அந்நாவலுக்குக் கருக்கு (1992) என்று பெயரிட்டார். இந்நாவலுக்கான பெயர்க்காரணத்தை,

பனைமட்டையின் இருபுறமும் இரம்பம்போல இருக்கும் கருக்கு எளிதில் நம்மை அறுத்துவிடும். தலித் மக்கள் பல்வேறு நிலைகளில் அடக்கப்பட்டு, அறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வாழும் நிலையைக் குறிக்கவும், தங்களிடம் இயல்பாகவே உள்ள போர்க்குணத்தை இழந்துவிடாமல், தங்களை அடிமைப்படுத்தும் தடைகளை உடைத் தெறிந்து, தளைகளை அறுத்தொழித்து விடுதலை பெறவேண்டும் என்ற ஆசையினாலும் புத்தகத்திற்கு கருக்கு என்று பெயரிட்டேன். (தழும்புகள் காயங்களாகி, முன்னுரை, ப.9)

என்று ஆசிரியரே கூறுகிறார். கருக்கு நாவலைத் தொடர்ந்து சங்கதி (1994), வன்மம் (2002) ஆகிய நாவல்களின் வழியாகப் பெண்களின் பிரச்சினைகளையும், தலித்தியக் கருத்தாடலையும் முன்வைக்கிறார். சங்கதி, வன்மம் ஆகிய நாவல்களை விட இவரின் கருக்கு நாவலே பல்வேறு பாராட்டுகளையும், அதிக விமர்சனங்களையும் பெற்ற நாவலாக உள்ளது. 

தமிழ் நாவல் வரலாற்றில் புதிய வாசலைத் திறந்து வைத்தவர்களுள் இவ்விரு வர்க்கும் முக்கியப் பங்குண்டு.

பெண் - உடல் -  உழைப்பு - வலி - வன்மம் - நாவல் : சு.தமிழ்ச்செல்வி

இரண்டாயிரத்திற்குப் பிறகு நாவல் எழுதத் தொடங்கி 2008க்குள் ஆறு நாவல்களை எழுதித் தமிழ் நாவல் உலகில் தனக்கென தனித்த இடத்தைப் பெற்றவர் தமிழ்ச்செல்வி. மாணிக்கம் ( 2002), அளம் (2002), கீதாரி ( 2003), கற்றாழை ( 2005), ஆறுகாட்டுத்துறை ( 2006), கண்ணகி ( 2008) என்ற ஆறு நாவல்களின் வழி பெண் உடல் வலிகளை, மன வலிகளை வெவ்வேறு விதமாகப் பதிவுசெய்து சென்றுள்ளார். இவரது நாவலின் மைய நீரோட்டத்தை,

சு. தமிழ்ச்செல்வியின் நாவல்கள், ஆண்களும், ஆணாதிக்கச் சிந்தனை யைப் பிரித்தறிய முடியாத மூளையைக் கொண்ட ஆண்களின் ஏஜெண்டுகளாகச் செயல்படும் பெண்களும், பெண்களின் உழைப்பையும் சுயத்தையும் உறிஞ்சிக்குடித்து ஆடும் வன்கொடுஞ் செயலைச் சித்திரித்துள்ளன. (சு. தமிழ்ச்செல்வியின் நாவல்கள்: பெண் மீதான வன்மம் மற்றும் எதிர்வினை, மாற்றுவெளி ஆய்விதழ், 5, ப.73)

என்ற பெ. நிர்மலாவின் கூற்று எடுத்துரைக்கின்றது. ராஜம்கிருஷ்ணனின் களம் சார்ந்த சிந்தனையின் நீட்சியில் தனது படைப்புகளை முதன்மைப் படுத்திய தமிழ்ச்செல்வி மேலும் ஒருபடி சென்று பெண்களின் களம் சார்ந்த, உழைப்பு சார்ந்த, ஆண்களோடு  அவர்கள் கொள்ளும் முரணிலை சார்ந்த செயல்பாடுகளை முதன்மைப்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.


நிறைவாக 

Ø தமிழ் நாவல் எழுதியலில் ஆண் படைப்பாளிகள் தொட்டவற்றை, தொடாது விட்டவற்றைப் பெண் படைப்பாளிகள் தம் பார்வையின் வழியே விரித்து இன்னொரு உலத்தைப் பதிவுசெய்து சென்றுள்ளனர்.

Ø 125 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட நாவல் வரலாற்றில் ஒரு சில நாவல்களை மட்டுமே எழுதி அதன் வழி வரலாற்றில் இடம்பெற்ற பெண் படைப் பாளிகள் ஒரு புறம் இருக்க, ஒன்றுக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதித் தம் இருப்பை, எழுத்தின் வலிமையை, சமூகப் பிரக்ஞையை பறைசாற்றிச் சென்ற பெண்படைப்பாளிகளும் இன்னொரு புறம் உள்ளார்கள்.

Ø பொழுதுபோக்கு, சமூக விழுமியங்கள் என்ற அடிப்படையில் தொடங் கப்பட்ட தமிழ் பெண் நாவலாசிரியர்களின் எழுதுமுறை இந்திய விடுதலை அரசியல் களம் சார்ந்தும், இனக்குழுக்களின் வாழ்வியல் களம் சார்ந்தும், உழைக்கும் மக்களின் வாழ்வியல் களம் சார்ந்தும் இயங்கத்தொடங்கி, தலித் மக்களின் புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட வாழ்வையும் அதிலும் அப்பெண்களின் உளவியலையும், எதிர்த்துப்போராடும் குணங்களையும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி, பெண் உடல், உடல் மீது நிகழ்த்தப்படும் வெவ்வேறு வன்மங்கள், அதிகாரங்கள் ஆகியவற்றைப்  பிரதிபலிக்கத் தொடங்கி இன்று இத்திசைகளின் தொடர்ச்சியில் ஆழம் பெறத் தொடங்கியுள்ளன.   

Ø இவ்வளர்ச்சிக்குப் பல பெண் நாவலாசிரியர்கள் காரணங்களாக இருந்த போதிலும் அதில் மேற்சொல்லப்பட்டோரின் பங்களிப்புகளைத் தனித்து அடையாளப்படுத்துவதன் வழி அவர்களது படைப்பின் வேட்கையையும், சமூக அக்கறையையும் தமிழ்ச் சமூகத்திற்குப் பறைசாற்ற முடியும்.         

துணைநின்ற நூல்கள்: இதழ்கள்:

1.    அருள், வி., நந்தமிழ்நங்கை, இ., இளங்கோ, சி.,(தொகுப்பு) மருதம்                        (இரண்டாயிரத்திற்குப் பின் வெளிவந்த தமிழ்ப் புதினங்கள் குறித்த ஆய்வுகள்),  தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2007.

2.    கைலாசபதி, தமிழ் நாவல் இலக்கியம், குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை, மீள்பதிப்பு, 1999.

3.    சுந்தரராஜன், பெ.கோ., சிவபாதசுந்தரம், சோ., தமிழ்நாவல்: நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும், கிறிஸ்தவ இலக்கிய சங்கம்,1977

4.    பாமா, தழும்புகள் காயங்களாகி, விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர், 2004.

5.    பிரேம் – ரமேஷ், கட்டுரையும் கட்டுக்கதையும்: பின் நவீனத்துவ நோக்கு, மருதா, சென்னை, 2006.

6.    மாற்றுவெளி ஆய்விதழ் - 5, தமிழ் நாவல் சிறப்பிதழ் ( 1990 – 2010), பரிசல் புத்தக நிலையம், டிசம்பர், 2010.

7.    வேங்கடாசலபதி. ஆ.இரா., நாவலும் வாசிப்பும்,காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2002.

 

 (2012 ஆம் ஆண்டு கருத்தரங்கு ஒன்றில் வாசிக்கப்பட்ட கட்டுரை...)


புகைப்படம் கு. சுரேஷ்குமார்

 

 


No comments:

Post a Comment