தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Tuesday, June 30, 2020

தமிழ் நூல் தொகுப்புப் பாடல்கள் - தொல்காப்பியம் குறித்த தொகுப்புப் பாடல்கள்

    
    

    தமிழ்ச் சமூகத்தின் தொன்மைக் கல்விமுறை மனனக் கல்விமுறையாக இருந்தது. சுவடிகள் தயாரிப்பது, எழுதுவது ஆகிய சிக்கல்களின் காரணமாக பயிலும் நூல்களை மனனம் செய்து படிக்கும் பழக்கத்தினையே பெரிதும் மேற்கொண்டிருந்தனர். பண்டைத் தமிழ் நூல்கள் தொகுப்பு நூல்களாகவே பெரிதும் இருந்தன. இந்த நூல்களும் நூல்களின் கட்டமைப்பும் விரிவானதாகவும் இருந்தன. இவற்றைக் கருத்தில் கொண்டு தொகுப்பு நூல்கள், நூல்களின் கட்டமைப்பு ஆகியவை குறித்து எளிதில் நினைவில் கொள்ள பல மனனப் பாடல்கள் உருவாக்கப்பட்டன. இவற்றைப் பழம் பாடல்கள் என அழைப்பதுண்டு. பல நேரங்களில் இவற்றை எழுதியோர் யார் எனத் தெரிவதில்லை. நூல்களைத் தொகுத்து ஆவணப்படுத்தி இருக்கும் இப்பாடல்களை தொகுத்துத் தருவது இப் பதிவின் நோக்கம்.

தொல்காப்பியம்

எழுத்ததிகார இயல் வைப்பு

நூலின் மரபு மொழிமரபு நுண்பிறப்பு

மேலைப் புணர்ச்சி தொகைமரபு - பாலாம்

உருபியலின் பின்னுயிர் புள்ளி மயக்கம்

தெரிவரிய குற்றுகரஞ் செப்பு (தொல்காப்பியம், மர்ரே பதிப்பு - 1960)


எழுத்ததிகார இயல்களின் பெயர்கள்

1. நூன்மரபு, 2. மொழிமரபு, 3. பிறப்பியல், 4. புணரியல், 5. தொகைமரபு, 6. உருபியல், 7. உயிர் மயங்கியல், 8. புள்ளி மயங்கியல், 9. குற்றியலுகரப் புணரியக்


எழுத்ததிகாரச் சூத்திர எண்ணிக்கை

 எழுத்து அதிகாரத்துச் சூத்திரங்கள் எல்லாம்

ஒழுக்கிய ஒன்பது ஓத்துள்ளும், வழுக்கு இன்றி

நானூற்று இரு - நாற்பான் மூன்று என்று நாவலர்கள்

மேல்நூற்று வைத்தார் விரித்து (தொல்காப்பியம், மர்ரே பதிப்பு - 1960)


சொல்லதிகார இயல் வைப்பு

கிளவி ஆக்கம்மே, கிளர் வேற்றுமையே

ஒளி வேற்றுமை மயக்கத்தோடு - விளி மரபு

தேற்றும் பெயர், வினைச் சொல், சேரும் இடை, உரிச்சொல்

தோற்றியிடும் எச்ச இயல் சொல் (தொல்காப்பியம், மர்ரே பதிப்பு - 1960)


சொல்லதிகார இயல்களின் பெயர்கள்

1. கிளவியாக்கம், 2. வேற்றுமை இயல், 3. வேற்றுமை மயங்கியல், 4. விளிமரபு, 5. பெயரியல், 6.வினையியல், 7. இடையியல், 8. உரியியல், 9. எச்சவியல்


சொல்லதிகார சூத்திர எண்ணிக்கை

தோடு அவிழ் பூங்கோதாய்! சொல் அதிகாரத்துள்

கூடிய ஒன்பது இயல் கூற்றிற்கும் பாடம் ஆம்

நானூற்று அறுபத்து நான்கே நல் நூற்பாக்கள்

மேல் நூற்று வைத்தார் விரித்து. (தொல்காப்பியம், மர்ரே பதிப்பு - 1960)

 

சொல்லதிகார இயல் நூற்பா எண்ணிக்கை

கிளவி ஓர் அறுபான் இரண்டு; வேற்றுமையில்

கிளர் இருபஃது இரண்டு; ஏழ் - ஐந்து

உள மயங்கு இயலாம்; விளியின் முப்பான் ஏழ்;

உயர் பெயர் நாற்பதின் மூன்று;

தெளி வினை இயல் ஐம்பானுடன் ஒன்று

செறி இடை இயலின் நாற்பான் எட்டு;

ஒளிர் உரி இயல் ஒன்பதிற்றுப் பத்துடன் எட்டு

ஒழிபு அறுபான் ஏழ் (தொல்காப்பியம், மர்ரே பதிப்பு - 1960)

 

பொருளதிகார இயல் வைப்பு

ஈட்டும் அகத்திணையும், ஏய்ந்த புறத்திணையும்

காட்டும் களவு இயலும், கற்பு இயலும், மீட்டும்

பொருள் இயல், மெய்ப்பாடு, உவமம், போற்றிய செய்யுள்,

மரபு இயலும், ஆம் பொருளின் வைப்பு (தொல்காப்பியம், மர்ரே பதிப்பு - 1960)


 பொருளதிகார இயல்களின் பெயர்கள்

1. அகத்திணையியல், 2. புறத்திணையியல், 3. களவியல், 4. கற்பியல், 5. பொருளியல், 6. உவமவியல், 7. மெய்ப்பாட்டியல், 8. செய்யுளியல், 9. மரபியல்


பொருளதிகாரச் சூத்திர எண்ணிக்கை

பூ மலர் மென் கூந்தால்! பொருள் இயலின் சூந்திரங்கள்

ஆவ அறு நூற்று அறுபத்து ஐந்து ஆகும்; மூவகையால்

ஆயிரத்தின் மேலும் அறு நூற்றுப் பஃது என்ப,

பாயிரத் தொல்காப்பியம் கற்பார் (தொல்காப்பியம், மர்ரே பதிப்பு - 1960)


புகைப்படம் : தொல்காப்பியம் என்னும் முகநூல் பக்கத்திலிருந்து...

No comments:

Post a Comment