தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Tuesday, June 30, 2020

தொல்காப்பியச் சிந்தனை வழிப்பட்ட நச்சினார்க்கினியர் கலித்தொகை உரை



உரையாசிரியரின் பணி என்பது நூலிற்குப் பொருள் சொல்வது என்பதைக் கடந்து அந்நூலைத் தம்சிந்தனை வழிப்பட்ட தன்மையில் கைக்கொள்வது  என்பதாகவும் மாற்றம் பெறுகிறது. அவ்வகையில் நச்சினார்க்கினியர் தாம் உரைஎழுத எடுத்துக்கொண்ட பனுவல்களை எச்சிந்தனை வழிப்பட்டு பொருளுரைக்கின்றார் என்பதும் அதில் கலித்தொகை உரை எவ்வாறு அவரால் வழிநடத்தப்படுகின்றது என்பதும் இக்கட்டுரை யின் மையப் பொருண்மையாக அமைகின்றது.

உரையாசிரியர்களின் காலம் என்று வரையறை செய்யப்படும் காலத்தின் இறுதிக் கட்டத்தில் நிற்கும் நச்சினார்க்கினியர் தமது உரைகளின் வழியாக ஒரு நீண்டகால வாசிப்புச் செயல்பாட்டையும் சில கேள்விகளின் வழியாக வெளிவரமுடியாத அளவுக்கு சில அதிர்வலை களையும், கதைகளின் வழியாக சில வரலாற்றையும் கட்டமைத்துச் சென்றுள்ளார்.

தமிழ் உரைவரலாற்றிலேயே அதிக உரைகள் எழுதியவராகவும் இலக்கணம், இலக்கியம் எனப் பன்முகப்பட்ட பிரதிகளுக்கு உரை வரைந்தவராகவும் நச்சினார்க்கினியர் காணப் படுவதோடு அவை அனைத்திற்குள்ளாகவும் ஒரு தொடர்ச்சியையும் அவற்றை ஒன்றுக்குள் ஒன்றாக இணைப்பதிலும் தனித்த கவனம் செலுத்தியுள்ளார் என்பதை எல்லா உரைகளையும் இணைத்து வாசிக்கும்போது அறியமுடிகிறது.

வைதீகப்பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு தம் உரையை வழிநடத்துபவர், வடமொழிக் கருத்தாக்கங்களை அதிகம் திணிப்பவர், நூலைப் புரியவிடாத அளவிற்கு சிதைத்து உரை எழுதிச் செல்பவர் எனப் பலதளங்களில் நச்சினார்க்கினியர் உரையைப் பற்றிக் கருத்தாக்கங்கள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இவற்றைக் கடந்து நச்சினார்க்கினியரின் உரைசொல்லல் முறை என்பது முழுக்க முழுக்க தொல்காப்பியச் சிந்தனைவழிப்பட்ட  தன்மையிலேயே காணப்படுகின்றது.

தொல்காப்பிய நூலிற்கு உரை எழுதும்போதும் பிற இலக்கிய நூல்களுக்கு உரை எழுதும்போதும் தொல்காப்பியத்திலிருந்து மாறுபடாமல் தமது உரையை வழிநடத்திச் செல்கின்றார். உரை எழுத எடுத்துக்கொண்ட இலக்கிய நூல்கள் தொல்காப்பிய விதிப்படியே எழுதப்பட்டது என்று முன்னிறுத்துவது, தொல்காப்பிய விதியிலிருந்து எவையெல்லாம் மாறுபடுகிறதோ அவற்றை கேள்விக்குட்படுத்துவது, அல்லது தொல்காப்பிய விதிகளுக்குள் அவற்றை உட்செறிப்பது, தொல்காப்பியரின் பல கூறுகளைப் பொருத்திக்காட்டிப் பிற்காலக் கருத்துகளை மறுப்பது என எல்லாப் பக்கங்களிலும் நச்சினார்க்கினியர் தொல்காப்பிய சிந்தனை வழிப்பட்ட தன்மையிலேயே பயணித்துள்ளார்.

இறையனார் களவியல் உரையில் தொடங்கப்பட்ட மூன்று சங்கம் - அகத்தியம், தொல்காப்பியம்சங்கச்சான்றோர்கள் என்ற கருத்தாக்கம் புறப்பொருள்வெண்பாமாலை, பேராசிரியர் உரை ஆகியோரைப் தொடர்ந்து நச்சினார்க்கினியரிடம் வந்துசேர்ந்தபோது அவை வேறொரு பரிணாமம் அடைந்தது.

இச்சிந்தனை மரபை நிலைபெறச்செய்ததிலும் கூர்மையாக்கியதிலும் பேராசிரியர் முன்னத்திஏராய் நின்றாலும் அதை தொடர்ந்து கையிலெடுத்து வேறுவேறு தளங்களில் இயங்கச்செய்தவராய் நச்சினார்க்கினியரே காணப்படுகின்றார். அகத்தியம் அவர்காலத்தி லேயே இல்லாததாலும் தொல்காப்பியம் ஒன்றே எல்லாவற்றையும் முன்னிறுத்தும் பிரதியாகக் கருதப்பட்டதாலும் தொல்காப்பியர் ஒருவரே அகத்தியரின் எல்லா மாணவர் களிலும் முதன்மை மாணவராகக் கருதப்பட்டதாலும் நச்சினார்க்கினியர் தம் கவனம் முழுவதையும் தொல்காப்பியரின் மீதும் தொல்காப்பியத்தின் மீதும் குவித்தே பிறவற்றை வழிநடத்தினார்.

Ø  இது பின்னுள்ளோர் கூறிய நூற்கெல்லா முதனூலாதலின், தொல்காப்பியனாரை                     மாறுபடுதல் மரபன்றென்க (செய். நூ. 140)

         Ø  இனி இவ்வாறு வந்த கொச்சகங்களை எல்லாம் ஒருவரையறைப்படுத்துப் பாத்தோறு             இனஞ்சேர்த்திப் பண்ணிற்குத்திறம் போலப் பின்னுள்ள ஆசிரியர் அடக்குவர்; அதனை             அகத்தியமுந் தொல்காப்பியமும் உணர்ந்து அவர்தம் கருத்தறிந்த ஆசிரியர் அவ்வாறு                 அடக்காமைக்குக் காரணங் கூறுவர். (செய். நூ. 149)

         Ø  இனித் தொல்காப்பியனாரை ஒழிந்த ஆசிரியர் பதினொருவருட் சிலர் இனமுங்                        கொண்டார். அதுபற்றி யாப்பருங்கல முதலியவற்றினும் இனங்கொண்டா ரென்பார்க்கு          அவர்கள் அகத்தியனார்க்கு மாறாக நூல் செய்தவராவர். அவை வழி நூலெனப்படாவென்று         மறுக்க. (செய். நூ. 238)

முதலான கூற்றுகள் வழி அகத்தியம் தொல்காப்பியம் ஆகியவற்றின் இணைவை அறியமுடிவதோடு அவற்றிற்கு மாறாகச் செல்லக்கூடிய கருத்துகளையும் செல்லக் கூடியவர்களையும் புறந்தள்ளுவதையும் அறியமுடிகிறது.

இலக்கியப் பரப்புகளையெல்லாம் அறிந்து இலக்கணம் வகுக்கப்படு கின்றதுஎன்ற கருத்தாக்கத்திலிருந்து இலக்கண வழிப்பட்டு இலக்கியம் உருவாக்கப்படுகின்றது என்ற கருத்தாக்கத்தை வலுவாக முன்மொழிந்தவர் நச்சினார்க்கினியரே. பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி முதலானஇலக்கிய நூல்கள் தொல்காப்பிய சிந்தனை வழிப்பட்டு எழுதப்பட்ட தாகவும் கலித்தொகை தொல்காப்பிய சிந்தனை வழிப்பட்டு தொகுக்கப் பட்டதாகவும் புறநானூற்றுக்குத் தொல்காப்பிய வழிப்பட்டே திணை, துறை வகுக்கப் படவேண்டும் என்பதை வலியுறுத்தியும் நச்சினார்க்கினியர் இலக்கிய உரையாக்க மரபு அமைகின்றது.

Ø  அகன்று பொருள் கிடப்பினு மணுகிய நிலையினும் இயன்று பொருண் முடியத்தந்தன ருணர்த்தல் மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்” (தொல். செய். சூ. 211)என்னும் மாட்டிலக்கணத்தான் இப்பாட்டுக்கள் பத்தும் செய்தார்களாதலின் இவ்வாறே மாட்டி முடித்தல் யாண்டும் வருமென்றுணர்க. (பத்துப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, அடி, 43- 44)

Ø  இத் தொடர்நிலைச்செய்யுள் தேவர் செய்கின்ற காலத்திற்கு நூல் அகத்தியமும்,      தொல்காப்பியமுமாதலானும், முந்துநூல்கண்டு முறைப்பட வெண்ணி... என்றதனால்     அகத்தியத்தின் வழிநூல் தொல்காப்பிய மாதலானும், பிறர் கூறிய நூல்கள் நிரம்பிய     இலக்கணத்தன அன்மையாலும், அந்நூலிற் கூறிய இலக்கணமே இதற்கிலக்கணம்     என்றுணர்க. (சீவகசிந்தாமணி. பா.1. நச்.)

Ø  தத்தம் புதுநூல் வழிகளாற் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும், அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைக்கு நூலாகலின் அவர் சூத்திரப்பொருளாகத் துறை வேண்டும் என்றுணர்க.(புறத். நூ. 72. நச்.)

என்னும் கூற்றுகள் இதை வலியுறுத்துகின்றன. பத்துப்பாட்டு உரை தொல்காப்பியரின் மாட்டு என்னும் இலக்கணத்தின் வழியாக வழிநடத்தப்பட்டதோடு ஒவ்வொரு பாட்டின் முன்னுரை யிலும் அந்தப் பாட்டு எவ்வாறு தொல்காப்பிய விதிப்படி பொருந்துகிறது அல்லது பொருந்தாமல் போகிறது என்பதும் நச்சினார்க்கினியரால் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றது. ஏராளமான தொல்காப்பிய நூற்பாக்கள் பாட்டுக்களின் இடையிலும் இறுதியிலும் பலநிலைகளில் பொருத்தி விவாதிக்கப்பட் டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கலித்தொகை - தொல்காப்பிய சிந்தனை வழிப்பட்ட உரை

தொடர்நிலைச் செய்யுளான பத்துப்பாட்டிற்கு உரை எழுதும் போது மாட்டு இலக்கணத்தை முதன்மைப்படுத்தி உரைஎழுதிய நச்சினார்க்கினியர் கலித்தொகைக்கு உரை எழுதும்போது தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் பல இயல்களையும் பொருத்தி அவற்றிற்கு ஏற்ப தமது உரையை வழிநடத்திச் செல்கின்றார்.

தொல்காப்பியரின் விதிப்படியே கலித்தொகை தொகுக்கப் பட்டிருக்கிறது என்றும் அப்படியில்லையென்றாலும் அவை தொல்காப்பிய விதிக்குள்ளாக அடங்கி விடுகின்றன என்றும் நச்சினார்க்கினியர் தொல்காப்பிய இலக்கண விதியின் வழி கலித்தொகைக்குப் பொருளுரைக்கின்றார்.

கலித்தொகையின் 150 பாடல்களில் 113 பாடல்களுக்குத் தொல் காப்பிய நூற்பாக்களை  ஏதோ ஒருவகையில் நேரடியாகப் பொருத்திக் காட்டித் தமது உரையை எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர். இந்த 37 பாடல்களிலும் வரும் யாப்பிலக்கணக் குறிப்புகளும் தொல்காப்பிய விதிப்படியே அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் எழுத்த திகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய மூன்று அதிகாரங்களும் பொருத்திக்காட்டப்பட்டாலும் பொருளதிகார நூற்பாக்களே அதிக அளவில் இடம்பெறுகின்றன. ஒரு சில நூற்பாக்கள் பல இடங்களில் மீண்டும் மீண்டும் பயன் படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு முறைமை:

கலித்தொகையின் தொகுப்பு குறித்தும் ஏழு அகத்திணைகள் குறித்தும் நச்சினார்க்கினியர் பின்வருமாறு தொல்காப்பிய இலக்கணத்தின் வழி விளக்க மளிக்கின்றார்.

நடுவணைந்திணை நடுவண தொழியப்படுதிரை வையம் பாத்தியப் பண்பே என்றும் மாயோன் மேய காடுறை யுலகமுஞ்சேயோன் மேய மைவரை யுலகமும்வேந்தன் மேய தீம்புனல் உலகமும்வருணன் மேய பெருமணல் உலகமும்முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே என்றும் நிலம் நான்கேயாகக் கூறலிற் பாலைக்கு நிலம் இன்றெனின், அற்றன்று. புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவைதேருங்காலைத் திணைக்குரிய பொருளே என நால்வகை நிலத்துங் கொண்ட உரிப்பொருட்கிடையே பிரிதலும் உரிப்பொருளாக ஆசிரியர் கொண்டார். அப்பிரிவு நான்கு நிலத்திடையும் பொதுவாய்  மயங்கி வருமென்று கருதி ஆதலான் ஈண்டுப் பாலைத்திணையையுந் திணையாக ஆசிரியர் நல்லந்துவனார் கோத்தாரென்று கூறுக.

ஆயிற் கைக்கிணை முதலாப் பெருந்திணை இறுவாய்முற்படக் கிளந்த எழுதிணை என்ப என்றலிற் கைக்கிளையும் பெருந்திணையும் கோத்தல் வேண்டு மெனின் அஃது உரிப்பொருளல்லன மயங்கவும் பெறுமே என்பதனால் அவை உரிப்பொருளன்மையின் நால் வகை நிலத்தினும் மயங்கிவரப்பெறுமன்றார். ஆகலின் இத் தொகைக்கண்ணும் அவை மயங்கிவரக் கோத்தா ரென்று கூறி விடுக்க. அவை வரவரப் பாட்டுக்கள் வந்துழிக் காட்டுதும்..

இனிச் சொல்லிய முறையாற் சொல்லவும்படுமே என்ற வழிச் சொல்லாத முறையாற் சொல்லவும்படுமென்று பொருள் கொண்டமை பற்றிப் பாலை குறிஞ்சி மருதம் முல்லை நெய்தலெனவுங் கோத்தார். ஐங்குறுநூற்றினும் பிறவற்றினும் வேறுபடக்கோத்தவாறுங் காண்க. (கலித்தொகை தோற்றுவாய்)

இலக்கிய நூலின் தொகுப்பு முறையை ஒழுங்குபடுத்துவதோடு அத்தொகுப்பு உருவாக்கம் தொல்காப்பியத்திற்கு மாறானது அல்ல என்பதை வலியுறுத்துவதாக மேற்சொல்லப்பட்ட கூற்றுகள் அமைகின்றன.

மேலும் தொல்காப்பிய விதிகளைப் பொருத்திக்காட்டி இப்பாடல் இக்காரணத்தால் இந்த திணையுள் சேர்க்கப்படாமல் இந்தத் திணையுள் சேர்க்கப்பட்டது என்று காரணமும் கூறுகின்றார். பெருந்திணையாக இருந்தாலும் அது மருதத்தில் கோக்கக் காரணம் என்ன என்பதையும், காலம் மயங்கி வந்ததால் முல்லைக்கலியுள் கோக்காமல் நெய்தற்கலி யுள்ளும்,உரிப்பொருள் முதன்மை பெறுவதால் பாலைக்கலியுள் கோக்காமல் நெய்தற் கலியுள் கோத்தமையையும் காரணங்களோடு எடுத்துக் காட்டியும் விளக்கிச் செல்கின்றார். இவற்றைப் பின்வரும் சான்றுகளின் மூலம் அறியலாம்.

Ø  இஃது வேட்கை மறுத்து என்னும் பொருளியல் சூத்திரத்தால் வேட்கை மறுத்துக் கூறிய பெருந்திணை. இஃது ஊடற் பகுதியாகலின் மருதத்துக் கோத்தார். (கலி. 94 உரை)

 Ø  இது முதலிய மூன்றுபாட்டும் மாலைக்காலத்தைக் கூறினமையின் காரும் மாலையும் முல்லை என்னும் பொதுவிதி பற்றி முல்லையுட் கோத்தல் வேண்டுமெனின் அது பெரும்பான்மைபற்றிக் கூறியது. மாலை எற்பாட்டின் பின் நிகழுங் காலமாதலின் அதற்கியைபுபட்டு நெய்தற்கும் உரித்தாயிற்று. அது நிலனொருங்கு மயங்குதலின்று என்றதனாற் காலமொருங்கு மயங்குமென்றது கொண்டு சான்றோர் பலருஞ் செய்யுள் செய்தார். “கானன் மாலைக் கழிப்பக் கூம்ப” (அகம் – 40) என்னும் அகப்பாட்டும் நெய்தற்கண் மாலை வந்தது. “ தொல்லூழி தடுமாறிஎன்னும் நெய்தற் கலியுட் ( 129) கங்குலும் மாலையும் முன்பனியும் வந்தவாறு காண்க. இந்நிலத்து மாலை வந்த பாட்டுக்கள் பலவுமுள. பிற சான்றோர் செய்யுட்களுட் காலம் மயங்குமாறு பலவுங் கண்டு கொள்க. ( கலி. 118 பாடல் உரை)

Ø  இதுவும் காலம் மயங்கிற்று ( கலி. 129 பாடல் உரை)

Ø  இஃது இளவேனிற் பருவங் குறித்து வற்புறுத்திப் பிரிய ஆற்றியிருந்து அப்பருவம் வந்த பின்னர் ஆற்றாளாய் இரங்குகின்ற தலைவியைத் தோழி ஆற்றுவித்தலான் இரக்கமாகிய உரிப்பொருள் சிறத்தலின் அவ்வுரிப்பொருள் முதலிலுங் கருவிலுஞ் சிறந்ததென்று இரக்கத்திற்கு உரிய நெய்தலிற் கோத்தார். முதல் கரு உரிப்பொருளென்ற மூன்றே, நுவலுங்காலை முறை சிறந்தனவே, பாடலுட் பயின்றவை நாடுங் காலை, என்றாராகலின். இது பாலைக்கு உரிய முதலுங் கருவும் வந்து அதற்கு உரிய உரிப்பொருள் சிறவாமல் நெய்தற்கு உரிய உரிப் பொருள் சிறந்ததாயிற்று. (கலி. 150 பாடல் உரை)

விதியை நிலைப்படுத்தல்:

ஒரு பாடலில் ஒரு கூறினைத் தொல்காப்பிய விதிப்படி விளக்கும் போது அதே விதியினை பின்வருவனற்றிற்கும் பொருத்திக்கொள்க என்று பல இடங்களில் நச்சினார்க்கினியர் கூறிச்செல்கின்றார்.

இவ்விதி மேற் செலவழுங்குவனவற்றிற்கெல்லாம் கொள்க  (கலி. 2 உரை)

இவ்விலக்கணங் கொண்டு இத்தொகையில் ஒத்தாழிசை செய்தா ரென்று உணர்க. ( கலி. 2 உரை)

இவ்விதி மேல்வருவனவற்றிற்குங் கொள்க ( கலி. 2 உரை)

மேலும், இங்ஙனங் களவு நிகழ்ந்து ஏறு தழுவி வரைகின்றதாகக் கூறும் பாட்டு களுக்கெல்லாம் இதுவே விதியாகக் கொள்க ( கலி. 104 பாடல் உரை)

இந்நிலத்து முன் உள்ளுறை கூறியவற்றிற்கும் பின்னர் உள்ளுறை கூறுகின்ற வற்றிற்கும் இதுவே விதியாகக் கொள்க ( கலி.40 உரை)

நுட்பமான கூறுகளைத் தொல்காப்பிய விதிகளின் படி கூறுதல்:

          தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் பொருட்புலப்பாட்டுக் கூறுகளையும், வடிவக் கூறுகளையும் எல்லா நிலைகளிலும் பொருத்திக் கலித்தொகை உரையை விளக்கிச் சென்றுள்ளார். பாடலின் தொடக்கத்தில் அந்தப் பாடலின் முன்னுரையாக எழுதப்படும் உரை தொடங்கி, உவமை, உள்ளுறை உவமை, இறைச்சி, மெய்ப்பாடு, யாப்பு அமைப்பு ஆகிய அனைத்து இடங்களிலும் தொல்காப்பிய நூற்பாக்கள்பெரும்பாலும் பொருத்திக் காட்டப்படு கின்றன. இதில் மெய்ப்பாடும் யாப்பும் எல்லாப் பாடல்களிலும் பொருத்திக் காட்டப்பட்டிருப்பது கலித்தொகையினை வேறொரு பரிமாணம் பெற வைத்துள்ளது.

பாடலின் தொடக்க உரை:

இது, தலைமகனாற் பிரிவுணர்த்தப்பட்ட தோழி காட்டது கடுமையுந் தலைவியது மென்மையும்நாளது சின்மையும் இளமைய தருமையுந் தாளாண்பக்கமுந் தகுதிய தமைதியும், அன்பின தகலமும் அகற்சிய தருமையும்கூறிச் செலவழுங்கிவித்தது.

என்று துறை அமைப்பில் கூறப்படுவதோடு அதனைப் பாடலோடு பொருத்தியும் இப்பாட்டின் உரையில் காண்பிக்கின்றார்.

              கடைநாளிதுவென் றறிந்தாருமில்லைஇது நாளது சின்மை

            இளமையுங் காமமும் நிண்பாணி நில்லாஇஃது இளமையதருமை

            உரனுடைய உள்ளத்தைஇது தாளாண் பக்கம்

செய்பொருண் முற்றியஇது தேடும் முறைமையிற் தேடவேண்டு மென்றலிற் தகுதியதமைதி

சிறுநனி நீ….. செல்வோய்இஃது அன்பின்பதகலம்

இடைமுலைக்….. காண்டைஇஃது அகற்சியதருமை ( கலி. 12 பாடல் உரை)

பாடலைக் கலைத்துப்போட்டு அதனை வாசிப்பவர் எளிதில் பொருள் புரிந்துகொள்ளும் படி எழுதப்பட்ட உரைப்பகுதியாக இப்பகுதி அமைகின்றது.

உள்ளுறை உவமை:

          பாடல் 38இல் உள்ளுறை உவமத்தைப் பாடலோடு பொருத்திக்காட்டி பின்வருமாறு தொல்காப்பிய நூற்பாக்களையும் இணைத்துக்காட்டுகின்றார்.

இஃது உள்ளுறை உவமம் ஏனை உவமமெனத் தள்ளாதாகுந் திணையுணர் வகையே, என்னும் அகத்திணையியற் சூத்திரத்தினும் உள்ளுறை உவமஞ் சுட்டு நகை சிறப்பெனக்கெடலரு மரபின் உள்ளுறை ஐந்தே என்னும் பொருளியற் சூத்திரத்தினும் யாங் கூறிய உரையான் உணர்ந்து கொள்க. மேலும் இத்தொகையுள், ஏனை உவமமும் வந்தும், ஏனையுவமம் உள்ளுறை உவமத்திற்குச் சிறப்புக் கொடுத்துத் திணையுணர்தலைத் தள்ளாது நிற்கும் பாட்டுக்கட்கெல்லாம் இச்சூத்திரங்களே விதியாகக் கொள்க.

மெய்ப்பாடு:

கலித்தொகை நாடகப் பாங்கிலான நூல் என்பதை உணர்ந்து நச்சினார்க்கினியர் 150 பாடல்களுக்கும் தொல்காப்பிய வழிப்பட்டு நின்று மெய்ப்பாட்டுக்குறிப்புகளை வழங்கிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

இப்பாட்டுப்பல மெய்ப்பாடுகளுந் தோற்றுவித்து நின்றதேனும் அவை உரைப்பிற் பெருகுமாதலின், முடிந்த பொருளாற் பிறந்த மெய்ப்பாடே கூறுதும்; அது தன்கட் தோன்றிய ஆக்கம் பற்றிய மருட்கையாம். (கலி. 2 உரை)

இதனாற் தோழிக்கு இழிவும் தலைவற்கு அசைவும் பிறந்தன ( கலி. 22 உரை)

இதனாற் தலைவிக்கு அச்சம் நிகழ்ந்தது. இதனைத் தோழி கூற்றாக்கி உரைப் பாரும் உளர். ( கலி. 76. உரை)

 யாப்பமைப்பு:

     தொல்காப்பியச் செய்யுளியல் அமைப்பு மாறி பிற்கால யாப்பிலக்கண மரபு வளர்ச்சியடைந்த காலத்தில் கலித்தொகைக்கு நச்சினார்க்கினியர் தரும் யாப்புக் குறிப்புகள் இன்றியமையாத இடம்பெறுகின்றன. உறழ்கலி வீழ்ச்சியடைந்து கலிப்பா இலக்கணத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்ற காலத்தில் அவற்றிற்குப் பின் உரைஎழுதும் நச்சினார்க்கினியர் கலித்தொகைக்கு எல்லாவகையிலும் செய்யுளியல் கலி இலக்கணத்தைப் பொருத்திக்காட்டி யாப்பமைப்பை விளக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் கலித்தொகை பிற்கால இலக்கண அமைப்பால் யாப்புவிளக்கம் பெற்று விடக்கூடாது என்பதில் நச்சினார்க்கினியர் மிகுந்த கவனத்துடன் இருந்துள்ளார் என்பதை அறியமுடிகிறது. புறநானூற்றுக்குப் பிற்கால இலக்கண நூல்களின் வழி துறை கூறப்பட்டதை இவர் மறுத்துரைப்பது இந்தப் பின்புலத்திலேயே என்பதையும் இங்கு இணைத்துப் பார்க்கவேண்டியுள்ளது.

இது வெண்பாவாய் வருதலிற் குறித்த பொருளை மறையாது செப்பிக்கூற வேண்டும். இது குறித்த பொருளை மறைத்து வந்தமையானும் தனக்கு உரிய வெண்டளையான் வந்தமையானுங் கலிவெண்பாட்டாயிற்று. நெடுவெண்பாட்டே முந்நாலடித்தேகுறுவெண்பாட்டி னளவெழுசீரே எனவே, நெடுவெண்பாப் பன்னீரடியின் இகவாவென்றலின் இதற்குப் பன்னீரடி பெருமையென்று கொண்டார். இக் கலித்தொகையின் இவ்விலக்கணம் பெற்றுவரும் பாட்டு எட்டுள. அவை வந்துவழிக் கூறுதும். பன்னீரடியின் இகந்துவரும் கலிவெண்பாட்டுக்களுக் கும் அவை வந்துழி அவற்றவற்றிலக்கணங் கூறுதும். ( கலி.6 உரை)

கொச்சகம் வெண்பாவாய் வருதலானுந், தாழிசையோடு தொடராது வருதலானும் இவை தரவிணைக் கொச்சகம். இரண்டும் ஒரு பொருள்நுதலி இவ்வாறு வரினும் கொச்சகமேயாம். இதுபாநிலை வகையேஎன்னும் சூத்திரவிதியாம்.

என்று எல்லாப் பாடல்களுக்கும் தொல்காப்பிய இலக்கண விதிகளைப் பொருத்தி இவர் எழுதியிருப்பது கடினமான கலிப்பா யாப்பினை எளிமையாக மாணவன் உள்வாங்கிக் கொள்ள பயனுள்ளதாக அமைகின்றது.

மேல் விளக்கம்:

நெடுநல்வாடையில் வேம்புதலையாத்த என்னும் தொடரைக்கொண்டு அகமா? புறமா? என்று விவாதிக்கும் நச்சினார்க்கினியர் கலித்தொகையின் 67 ஆம் பாடலில் இடம்பெறும் புனலூரன் என்ற சொல் பாண்டியனைக் குறிப்பது. எனவே இது சுட்டி ஒருவர் பெயர்கொளப்பெறார் என்னும் விதிப்படி அகமாகாது என்று கருதுகின்றார். அதே சமயம் இன்னொரு தொல்காப்பிய விதிப்படி இதை அகப்புறமாகக் கருதலாம் என்று கூறுகின்றார்.

புனலூரன் என்றது பாண்டியனை யாதலிற் பாட்டுடைத் தலைவனே கிளவித் தலைவனாகக் கூறிய அகப்புறமாயிற்று. இதற்கு விதி காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர். எனபதனுள் ஏனோர் பாங்கினும் என்பதனாற் கூறினாம். ( கலி. 67 உரை)

விதியால் ஒரு பக்கம் கேள்வி எழுப்பி அதனை மற்றொரு விதியால் விடைதீர்த்து உரைக்கும் பாங்கு நச்சினார்க்கினியரிடம் மேலெழும்பிக் காணப்படும் உரைப்பண்பாகும்.

இத்தகைய கூறுகள் தவிர்த்து நேர்பொருளாகாக உரைகூறுவதும், சொற்பொருள் உரைப்பதும், ஏராளமான பாடவேறுபாடுகளை உரையின் இடையில் சுட்டிக்காட்டுவதும், இலக்கணக் குறிப்புகளைப் பலநிலைகளில் எடுத்துரைப்பதும், மேற்கோள்கள் காட்டி விளக்குவதும் என உரைத்திறன் களுக்குரிய அத்தனை கூறுகளையும் நச்சினார்க் கினியரின் கலித்தொகை உரை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வைதீக மரபும் - நச்சினார்க்கினியரின் உரையும்

          தொல்காப்பியரை இறையனார் களவியல் உரை தொடங்கி வைதீக மரபின் பின்புலத்தில் கட்டமைக்கப்பட்ட காரணத்தின் பின்புலத்தில் நச்சினார்க்கினியரும் அதே தன்மையில் அவரைக் கைக்கொள்கின்றார். அவர்களைவிட இன்னொருபடி மேல்சென்று தொல்காப்பியருக்குத் தமது பாயிரத்தின் வழியாக வேறொரு வரலாற்றைக் கட்டமைக்கின்றார். அந்த அளவிற்குத் தொல்காப்பியத்தை வைதீகசமயப் பின்புலத்தில் கட்டமைத்துவிட்டு அதன் பயணத்திலேயே தொல்காப்பியத்திற்கும் களவியல் உரையில் இடம்பெறும் சங்கச்சான்றோர் செய்யுட்களுக்கும் உரை எழுதுகின்றார்.

நச்சினார்க்கினியரின்  முக்கிய நோக்கம் தொல்காப்பியத்தையும் சங்கச் சான்றோர் செய்யுட்களையும் பிற்கால மரபிலிருந்து அது வைதீகமோ அவைதீகமோ அவற்றைத் தனித்துப் பிரித்து அடையாளப்படுத்தவேண்டும் என்பதே ஆகும். வடமொழியின் மீது ஈடுபாடு கொண்டு வடமொழிக் கருத்துக்களைத் திணிப்பவர் நச்சினார்க்கினியர் என்று பலராலும் குற்றம் சாட்டப்பட்டாலும் ஓரிடத்தில் வடமொழி மறுக்க என்று கூறுவதும் சித்திரக்கவி இலக்கணம் வடமொழி இலக்கண மரபில் முதன்மை பெற்றா லும் அதனைத் தொல்காப்பிய இலக்கணத்துள் இணைத்துக் கூறமாட்டேன் என்பதிலும் நச்சினார்க் கினியர் தெளிவுடன் செயல்பட்டுள்ளார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சமணசமய நூலாக இருந்தாலும் அது தொல்காப்பிய இலக்கணத்திற்குள் பொருந்தி வருவதால் அதற்கு உரை எழுதும் தன்மை யுடையவராகவும் நச்சினார்க்கினியர் காணப் படுகின்றார்.

கலித்தொகை உரையிலும் அகத்தியரையும் தொல்காப்பியரையும் ஓரிடத்தில் இணைத்துச் சுட்டி உரையெழுதுகின்றார் நச்சினார்க்கினியர்.

இதனைக் கைக்கிளை யாகாதெனவும், இதனைக் குறுங்கலி யென்பார்க்கு அகத்தியனாருந் தொல்காப்பியனாருங் கூறாமையின் அப்பெயர் பொருந்தா தெனவுங் கூறி மறுக்க. ( கலி. 99 உரை)

வைதீக மரபிலும் நச்சினார்க்கினியர் அகத்தியர்தொல்காப்பியர்சங்கச்சான்றோர் என்பதை மையப்படுத்தியே தமது உரைகளை முன்னெடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துணை நூல் பட்டியல்:

1.    அண்ணாமலை, மு.,நச்சினார்க்கினியர், பழனிபிரசுரம், புதுக்கோட்டை, 1956.

2.    அரவிந்தன், மு.வை., உரையாசிரியர்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, மு.., 1968.

3.    குருசாமி, ., நச்சினார்க்கினியர் உரை நெறி, இராணி பதிப்பகம், சென்னை, 2008.

4.    சங்கர், கை., மாட்டு என்னும் நச்சினார்க்கினியர் உரையும், திபார்க்கர், சென்னை, மு.. 2008.

5.    சண்முகம், செ.வை., யாப்பும்நோக்கும், (தொல்காப்பியரின் இலக்கியக் கோட்பாடுகள்) மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2006.

6.    சதீஷ், ., சங்க இலக்கிய உரைகள், அடையாளம், திருச்சி,  மு.., 2008.

7.    சீனிவாசன், இரா., தமிழ் இலக்கண மரபுகள் கி.பி. 800 - 1400, இலக்கண நூல்களும் உரைகளும், தி பார்க்கர், சென்னை,  மு.., 2000.

8.    சுப்பிரமணியம்பரமேசுவரன், நச்சினார்க்கினியரின் இலக்கியத் திறனாய்வு, குயில் பண்ணை, சேலம், 2000.

9.    தாமோதரம்பிள்ளை, சி.வை. கலித்தொகை நச்சினார்க்கினியர் உரை, ஸ்காட்டிஷ் பிரஸ், 1887.

10. மணிகண்டன், ., தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி, விழிகள் பதிப்பகம், சென்னை, 2001.

பெயல் ஆய்விதழில் வெளிவந்த கட்டுரை - அக்டோபர் 2014 - மார்ச் 2015

No comments:

Post a Comment