தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Friday, July 3, 2020

தமிழ் இலக்கியத் துறையும் தமிழ் ஆய்வுக் கருத்தரங்குகளும்


    

    சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் 2002 ஆம் ஆண்டு பேராசிரியர் வீ. அரசு அவர்கள் பொறுப்பேற்றபோது துறையில் பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் பல மாணவர்கள் பல்கலைக்கழக மானியக் குழு நடத்திய தேர்வில் மேனிலையில் வெற்றிபெற்று உதவித்தொகையைப் பெற்றனர். 2003 ஆம் ஆண்டு நான் முனைவர்பட்ட ஆய்வாளராகச் சேர்ந்த தருணம் தமிழகம் முழுக்க நடைபெற்ற பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று கட்டுரை வாசிக்க சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியத்துறை மாணவர்கள் பலரும் சென்று வந்தோம்.

 எனது நெறியாளர் முனைவர் ய. மணிகண்டன் அவர்களும் இதனைப் பல நிலைகளில் ஊக்குவித்தார். அந்த சமயத்தில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு கருத்தரங்குகள் கடமைக்காகவும் கட்டுரை எழுதுவோரும் தலைமை வகிப்பவரும் மட்டுமே தனியே இருந்து கட்டுரை வாசிக்கும் நிலைமை யினையும் உருவாக்கியது. சடங்கிற்காக நடத்தப்பட்ட கருத்தரங்குகளே ஏராளம். இவ்வாறு நடத்தப்படும் கருத்தரங்குகளின் மதிப்பீடுகளை பேராசிரியர் வீ. அரசு அவர்களிடம் மூத்த ஆய்வாளர் மு.வையாபுரி அவர்கள் முன்வைத்தபோது பேராசிரியர் அவர்கள் தமிழ் இலக்கியத்துறை வழியாக சிரத்தையான கருத்தரங்குகளை முன்னெடுக்கவேண்டும் என்று கூறினார்.

 பேராசிரியர் வீ. அரசு அவர்கள் தமிழ் இலக்கியத்துறை முனைவர்பட்ட ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து முனைவர்பட்ட ஆய்வு சேர்ந்த நாளைக் கணக்கில் கொண்டு மூன்று மூன்று பேராக இணைந்து ஒரு கருத்தரங்கை ஒருங்கிணைததுச் செயல்படுங்கள் என்று கூறினார். அதன் தொடக்கமே தமிழ் இலக்கியத்துறை முனைவர்பட்ட ஆய்வாளர் கருத்தரங்கு. 2004 ஆம் ஆண்டு முதன்முதலாகத் தொடங்கப்பட்ட கருத்தரங்கில் தமிழகம் முழுவதிலிருந்தும்  முனைவர்பட்ட ஆய்வாளர்களிடமிருந்து  கட்டுரைகள் பெறப்பட்டு நல்ல கட்டுரைகளைத் தொகுத்து நெய்தல் என்ற பெயரில் தமிழ்மண் பதிப்பகம் வழி நூலாகவும் வெளியிட்டு கருத்தரங்கையும் வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். முனைவர் மு. வையாபுரி உள்ளிட்ட ஆய்வாளர்களின் முயற்சியில் தொடங்கப்பட்ட இந்தக் கருத்தரங்கு அதன் பின்பு தொடர்ந்து இன்று வரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

    ஒவ்வொரு ஆண்டும் ஒரு பொருண்மையை முன்வைத்து நடத்தப்பட்ட கருத்தரங்கின் நூலின் தலைப்பாக நிலங்களுக்குரிய பூக்களின் பெயர்களே சூட்டப்பட்டன. நெய்தல், மருதம், முல்லை, குறிஞ்சி, பாலை, வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை. வாகை, பாடாண் எனத் தொடர்ந்து இந்தக் கருத்தரங்கப் பெயரும் நூலின் பெயர்களும் அமைந்தன. பின்னாளில் துறையில் பேராசிரியர்களாக இணைந்தவரின் மாணவர்களும் இந்தத் தொகுப்பில் இணைந்தனர்.
 
    முதலில் கட்டுரை எழுதத் தமிழகமெங்குமிருந்தும் கட்டுரைகள் கேட்டு வாங்கப்பட்ட நிலை அடுத்த ஒரு சில தொகுப்புகளிலேயே கைவிடப்பட்டு தமிழ் இலக்கியத்துறை  ஆய்வாளர்களால் மட்டும் எழுதப்பட்டு தொகுக்கப் பட்டது. கட்டுரையின் தரம் கருதி பேராசிரியர் வீ. அரசு அவர்கள் இந்த முடிவை எடுத்ததோடு எழுதப்பட்ட கட்டுரையின் தரம் குறையாமலும் பார்த்துக் கொண்டார். ஆய்வாளர்கள் கட்டுரை எழுதுவதோடு மட்டுமல்லாமல் ஒரு நூலையும் எவ்வாறு உருவாக்க வேண்டும் என்று இந்தப் பயிற்சிமுறை அமைந்தது.

    குறிஞ்சி என்னும் தொகுப்பினை நான் உருவாக்கிய சமயத்தில் பேராசிரியர் அவர்கள் இயங்கிய தன்மை ஒரு தொகுப்பை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்று அறிந்துகொள்ள எனக்குப் பெரிதும் துணை புரிந்தது. தமிழ்மண் பதிப்பகம் முதலிலும் அதனைத் தொடர்ந்து பரிசல் பதிப்பகம் வழியாகவும் தற்போது நறுமுகை வழியாகவும் நூல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

    தமிழ் இலக்கியத் துறையின் தற்போதைய துறைத்தலைவர் பேராசிரியர் கோ. பழனி அவர்களும் இந்த முயற்சியை இடைவிடாமல் தொடர்ந்து நடத்தி வருகிறார். பல்வேறு அறியப்படாத பொருண்மைகளை அறிந்துகொள்ளவும் அறியப்படாத கவனத்தில் கொள்ளப்படாத துறைகளையும் தமிழ் இலக்கியத்துறை ஆய்வாளர்களின் ஆய்வுத்தொகுப்புகள் கவனத்திற்குட் படுத்தின. ஆய்வாளர்களை ஆய்வு திசை நோக்கி தொடர்ந்து பயணிக்க வைக்க இந்த முயற்சிகள் பெரும் உந்துசக்தியாக இருந்தன என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.











 














6 comments: