தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Saturday, July 4, 2020

தமிழ் நூல் பதிப்புரைத் தொகுப்புகள்

    

    19 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் தமிழின் பேரிலக்கியங்கள் ஓலைச் சுவடியிலிருந்து அச்சில் ஏறத் தொடங்கின. 1835 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அச்சுப் பரவலாக்கச் சட்டமும், புதிய வகையிலான கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிகளும் தமிழ் நூல்களைத் தொடர்ந்து அச்சில் ஏற்றின. 

       1812 ஆம் ஆண்டு திருக்குறள் முதல் பதிப்பு தொடங்கி 1847 தொல்காப்பியம், 1887 சங்க இலக்கியத்தில் கலித்தொகை 1892 சிலப்பதிகாரம் எனத் தமிழின் செவ்வியல் இலக்கியங்கள் தொடர்ந்து அச்சாக்கம் பெற்றன. சரவணப் பெருமாளையர், ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர், இரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார், எஸ்.வையாபுரிப்பிள்ளை, வ.உ.சிதம்பரம்பிள்ளை, பவானந்தம் பிள்ளை எனப் பல பதிப்பாசிரியர்கள் தமிழின் அரிய செல்வங்களை அச்சில் நிலைபெறச் செய்தனர்.

    1812 ஆம் ஆண்டிலேயே நூல்கள் பல அச்சில் நிலைநின்றாலும் ஓலைச் சுவடியிலிருந்து நூலாக மாற்றம் செய்த முறைமை என்பது ஓலைச்சுவடி மரபுகளைப் பின்பற்றியே இருந்தது. காலம் செல்லச் செல்ல நூல் உருவாக்க முறைகளிலும் மாற்றம் நிகழத் தொடங்கின. நூலுக்கு முன்னுரையோ பதிப்புரையோ எழுதும் வழக்கம் தொடக்கக் காலத்தில் நடைபெறவில்லை. 1850 களுக்குப் பிறகே பதிப்புரை எழுதும் வழக்கம் முன்னெடுக்கப்பட்டது. அந்தப் பதிப்புரைகளும் ஒரு சில பக்கங்களிலேயே முடிந்துவிட்டன. 

    இந்த மரபை மாற்றிப் பதிப்புரையை ஒரு ஆய்வுரையாக மாற்றியவர் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களே. 1881 ஆம் ஆண்டு வெளிவந்த வீரசோழியப் பதிப்பில் இவர் எழுதிய பதிப்புரை இன்று வரை தொடர்ந்து தனித்த இடத்தைப் பெற்று வருகிறது. அதற்குப்பிறகு பல நூல் பதிப்புகளிலும் இந்த வழக்கத்தை மேற்கொண்டு வந்தார். 

    சி.வை. தா. அவர்களைத் தொடர்ந்து உ.வே.சா. அவர்கள் 1887 ஆம் ஆண்டு வெளியிட்ட சீவகசிந்தாமணிப் பதிப்புத் தொடங்கி ஒரு சில தவிர மற்ற அனைத்திற்கும் பதிப்புரை எழுதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இவர் களின் காலத்திற்குப் பிறகு வந்த பதிப்பாசிரியர்கள் பதிப்புரைகளை எழுது வதைத் தொடர்ந்து பின்பற்றி வந்தனர்.

    இவ்வாறு எழுதப்பட்ட பதிப்புரைகள் இன்று பெரும் ஆவணங்களாக மாறியிருக்கின்றன. அந்தப் பதிப்புரைகளைப் பதிப்பாசிரியர்கள் அடிப்படை யிலும் நூல் அடிப்படையிலும் தொகுத்துப் பலரும் நூல்களாக வெளியிட்டுள்ள னர். இந்தப் பதிப்புரைகளின் தொகுப்பு நூல்களை வாசிக்கும் போது 19, 20 ஆம் நூற்றாண்டின் கல்வி சூழலை  விரிவாக அறியமுடிகிறது. 

    நூல்களை உருவாக்க சுவடி கொடுத்து உதவியோர், பொருளுதவி செய்தோர், நூல் வரலாறுகளை, ஆசிரியர் வரலாறுகளைத் தொடக்கக் காலங்களில் புரிந்துகொண்ட நிலை, பதிப்பு உருவாக்கத்திற்குத் துணை நின்றோர், சுவடி தேடுவதில் அடைந்த சிக்கல்கள், சுவடிகளின் நிலை எனப் பல அடிப்படைகளில் ஆய்வுசெய்வதற்கு இந்த நூல்கள் இன்று பெரிதும் துணைசெய்கின்றன. இந்த முன்னுரைகளைக் கொண்டு சில ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்போது வேறு பல தளங்களில் ஆய்வுகளும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

    எல்லாப் பதிப்பாசிரியர்களின் பதிப்புரைகளும், நூல்களின் பதிப்புரைகளும் இன்னும் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை. அதனாலேயே இந்தப் பதிவு. பதிப்பு முகவுரைகளாகத் தொகுக்கப்பட்டவை எவையெவை என்று அறிந்தால் தான் செய்யவேண்டிய பணிகளை மேற்கொள்ளமுடியும். அவ்வாறு செய்து முடிக்கும் நிலையில் தமிழ்ச் சமூகக் கல்வி வரலாற்றில் 19, 20 ஆம் நூற்றாண்டின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது என்பதை விரிவான ஆய்வு நோக்கிற்கு நகர்த்த முடியும். 

பதிப்புரைத் தொகுப்புகள்:

1. தாமோதரம் (சி.வை.தாமோதரம் பிள்ளையின் பதிப்புரைகளின்                       தொகுப்பு) - முதல் பதிப்பு, கூட்டுறவு தமிழ் நூல் விற்பனைக் கழகம், 1971.

     இரண்டாம் பதிப்பு  - இதே பதிப்பகம், 2004.

2.  ப. சரவணன், தாமோதரம் (சி.வை.தா. பதிப்புரைகள் ), காலச்சுவடு                 பதிப்பகம், 2017

3. ப. சரவணன்சாமிநாதம் (உ.வே.சா.முன்னுரைகள்), காலச்சுவடு                           பதிப்பகம், 2014.

4. இரா. ஜானகி, சங்க இலக்கியப் பதிப்புரைகள், பாரதி புத்தகாலயம், 2011.

5. கா. அய்யப்பன், செம்மொழித் தமிழ் நூல்கள் பதிப்புரைத் தொகுப்பு,             காவ்யா வெளியீடு, சென்னை, 2009.

6. தமிழ்ப் புலமை மரபில் தொல்காப்பியம், நியூ செஞ்சுரி புத்தக நிலையம்,     சென்னை, 2014.

எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களின் பதிப்புரைகள் தொகுக்கப்பட்ட குறிப்பு மட்டுமே கிடைத்தாலும் நூல் பற்றி அறியமுடியவில்லை.

தாமோதரம் முதலில் வெளிவந்த நூலில் சில விடுபாடுகள் இருப்பதைக் கண்டறிந்து முனைவர் ப. சரவணன் அவர்கள் நூல் அதனைப் பலநிலைகளில் வளப்படுத்தியிருக்கிறது.இவை தவிர்த்து பல நூல்களின் பதிப்பாசிரியர்களின் முகவுரைகள் தொகுக்கப்படவேண்டும். அவ்வாறு தொகுக்கப்படும் போது தமிழ்ப் பதிப்பாய்வில் புதிய வெளிச்சங்கள் கிடைக்கும்.

பதிப்புரைத் தொகுப்புகள்












                    
தாங்களுக்குத் தெரிந்த வேறு முயற்சிகள் நடைபெற்று இருந்தாலும் கீழே பதிவிடவும்.

2 comments: