தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Sunday, August 29, 2021

கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினியின் வல்லினம் 2.0 நூல் அணிந்துரை


தமிழ்ச்சமூகம் தாய்வழிச்சமூகமே. தாயானவளே குடும்பத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தாள் என வரலாறு சொல்கிறது. வலிமையே அவள் ஆயுதமாக இருந்தது. அந்த வலிமையைக் கால ஓட்டத்தில் மெதுமெதுவாய்ப் பறித்த ஆண் சமூகம் தலைமைப் பொறுப்பைத் தன் வசப்படுத்தி பெண்மையை மென்மையாகக் கற்பிதம் செய்து அவளை ஒரு மூலைக்குள்ளாக அடக்கி ஒடுக்கியது. பெரும் புலமையும் பேராற்றலும் கொண்டிருந்த சங்கப் புலமைகளுக்குப் பிறகு வந்தவர்களை எல்லாம் படைப்பில் பங்கேற்க விடாமல் வெறும் புனிதக் கதாப்பாத்திரங்களாக மாற்றி தன் இருப்பை எழுத்தைப் பாதுகாத்துக் கொண்டது ஆண் சமூகம். ஒரு நூற்றாண்டு அல்ல பல நூற்றாண்டுகள் இழைக்கப்பட்ட காலத்தின் ஒடுக்குமுறை. அதையும் மீறி நூற்றாண்டுகளில் ஓரிருவர் எழும்பி தம் இருப்பை அடையாளத்தை வெளிக்கொண்டுவந்தனர்.

குடும்பம், சமூகம், பெண்ணுடல் எனச் சொல்லிச் சொல்லியே காலம் காலமாக பெண்ணுக்கு நிகழ்த்தப்பட்டு வந்த கொடுமைகள் சொல்லி மாளாது. அவளின் அறிவை அடக்கி அச்சம், மடம், நாணம், பயிர்ப்பை அணிவித்து பதுமையாய் வரலாற்றில் நிற்கவைத்து வேடிக்கை பார்த்தது ஆணதிகாரம். ஓடும் காலம் உங்களுக்கானது அல்ல எங்களுக்கானதும் என மாறியது. பெண்ணுக்கு மறுக்கப்பட்டவை எல்லாம் திரும்ப எடுக்கப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டிலேயே இந்தக் கணக்கு தொடங்கப்பட்டாலும் 21 ஆம் நூற்றாண்டிற்குள் பரந்து வளர்ந்து வானமாய் விரிந்திருக்கிறது. காலத்தில் மூதாதைகள் தொலைத்தவற்றை கடந்த காலங்களுக்குள் சென்று கவலைப்படாமல் நிகழ்காலத்திற்குள் நின்று மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறது இன்றைய பெண் சமூகம். 

இந்த மீட்டெடுப்பு ஆண்களுக்கு அதிர்ச்சியைத் தந்ததோடு அவர்களின் அதிகார எல்லைகள் அவர்கள் கண்முன்னாலேயே சரிவதை ஏற்கும் மனமற்றவர்களாகவும் மாற்றியது. மாற்றத்தை நோக்கிய சிறுபான்மை ஆண்சமூகம் இருந்ததைப் பலரின் வழியாக வரலாறு பதிவு செய்தாலும் பெரும்பான்மை ஆண்சமூகம் இந்த மாற்றத்தை எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்று திக்கித் திணறுகின்றனர். அவர்களுக்கான ஒரு வழிகாட்டி நூலாக கலைமாமணி கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினியின் வல்லினம் 2.0 என்னும் இந்த நூல் அமைகிறது.

உங்களுக்குச் சொல்லித் தந்த கற்பிதங்களிலிருந்து நீங்கள் எவ்வாறு வெளிவர வேண்டும் என்று நினைத்தீர்களானால் இந்த நூலை ஒருமுறையாவது வாசித்துவிடுங்கள். உங்கள் காலப் பக்கங்களில் உங்கள் மூதாதைகள் செய்த பழிகளையும் பாவங்களையும் நீங்கள் ஏற்காமல் இருக்கவேண்டுமானால் இந்த நூலை ஒன்றுக்கு மறுமுறையாவது வாசித்துவிடுங்கள். நீங்கள் உங்கள் ஆண் அதிகாரம் என்ற கட்டிலிருந்து விடுபடுவீர்கள். 

மென்மையாகவும், மெல்லினத்தின் அடையாளமாகவும் மட்டுமே சித்திரிக்கப்பட்டு வந்த பெண்ணை வல்லினத்தின் அடையாளமாக வரலாற்றின் முன் நிற்கவைக்கிறார் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி. குடும்பம், கல்வி, வேலை, சமூகம் என அனைத்திலும் மாறிவரும் பெண்களின் இருப்பை, அடையாளத்தை ஆண் எவ்வாறு உள்வாங்க வேண்டும், எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதை நமக்குப் புரியும் மொழியில் இயல்பாக எதார்த்தமாக நின்று சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். 

குறிப்பாக, திருமணமான பிறகு ஒரு பெண் எவ்வாறெல்லாம் இயங்குவாள், அந்த இயக்கத்தினை எவ்வாறெல்லாம் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் அவ்வாறு ஏற்கவில்லை என்றால் என்னவெல்லாம் நிகழும் என இன்றைய பரந்துவிரிந்த பெண் வாழ்வியலிலிருந்து ஓங்கி ஒலிக்கிறார் கவிஞர். ஆண் மட்டுமே குடும்பத்தின் சமூகத்தின் தலைமை அல்ல, பெண்ணுக்கும் அதில் சமபங்கு உண்டு அதை உணர்வதற்கும் ஏற்பதற்கும் முயற்சிசெய்தால் இனிவரும் வாழ்வு நலமாகும் என்பதையும் அழுத்தமாக முன்வைக்கிறார்.

மாறிவரும் பெண்களை ஏற்கும் மனநிலை ஆண்களுக்கு உருவாக வேண்டும் என்பதை மையப்படுத்தி ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் எழுதிய இந்நூல் காலத்தின் பிரதிபலிப்பு. கல்கி இதழில் தொடந்து எழுதப்பட்ட வல்லினம் தொடரை ழகரம் வெளியீடாக ஒரு குறுநூலாக வெளியிடும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது.   ஒருசேர இந்தக் கட்டுரைகளை வாசிக்கும் போது அவை எழுப்பும் கேள்விகளும் அசைக்கும் சலசலப்பும் ஏராளம். ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் அந்தக் கட்டுரையின் அடையாளமாக வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கவிதையும் இன்றைய பெண் கவிஞர்களின் வாழ்வியல் குரலாக நிமிர்ந்துநிற்கிறது. 

பெண்ணை வல்லினம் என்றே எல்லாக் கட்டுரைகளிலும் அழைக்கும் கவிஞர் ஆண்களை தம்பிகளாக என்றே விளிக்கிறார். இந்த மரியாதைச் சொல் நம்மீதான அக்கறையின் உச்சம். கடந்த போன தலைமுறைகள் மெல்லினங்கள் மீது நிகழ்த்திய சமத்துவமற்ற தன்மைகளை இனிவரும் தலைமுறைகள் வல்லினங்கள் மீது ஏவிவிடக்கூடாது என்று சொல்லாமல் ஏவிவிடமுடியாது என்பதை வலியுறுத்தியே கலைமாமணி கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி தன் கட்டுரைகள் முழுதுமாக நிறைந்திருக்கிறார். எத்தனையோ கையேடுகள் உங்கள் கைகளில் இருக்கலாம். அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வல்லினம் 2.0 என்னும் கையேட்டை உங்கள் கைகளில் ஏந்துங்கள். ஆண், பெண் ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமத்துவ சமூகம் நிலைபெறும்.

கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களின் வல்லினம் 2.0 நூலிற்கு எழுதிய அன்புரை



No comments:

Post a Comment