தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Sunday, August 29, 2021

மொழிபெயர்ப்பில் முகிழ்க்கும் பேரின்பம்


 

மொழிபெயர்ப்பு என்பது வரம். உலகத்தின் மனித மனங்களில் உருவாகும் அத்தனை வாழ்வியல் கூறுகளையும் எல்லா மொழியினரும் அறிந்துகொள்ள மொழிபெயர்ப்பு ஒரு திறவுகோல். உலகப் படைப்பாளிகளின் கனவு எழுத்துகளை இருந்த இடத்தில் இருந்தே நுகர்ந்துகொள்ள மொழிபெயர்ப்பு ஒரு சொர்க்கவாசல்.  மொழிபெயர்ப்பு அழகியலை மட்டும் அல்ல அரசியலையும் சொல்லித்தரும். வாழ்வியல் தத்துவங்களையும் அள்ளித்தரும் அமுதசுரபி.

காலத்தின் எல்லைகளையும் தேசத்தின் எல்லைகளையும் மொழிகளின் எல்லைகளையும் கடந்து ஒரு நதியைப் போல மொழிபெயர்ப்பு ஓடிக்கொண்டே இருக்கும். அப்படி ஓடிக்கொண்டே இருக்கும் மொழிபெயர்ப்பின் ஒரு சிறுதுளியாய் கடலின் ஓரங்கமாய் இன்று உருவாகி நிற்கிறது ஓர் அற்புதமான மொழிபெயர்ப்புத் தொகுப்பு. அதன் பெயர் “ அவன் கடவுளுக்கு நிகரானவன். மொழிபெயர்ப்பு செய்தவர் பல்லாண்டுகால மொழிபெயர்ப்பு அனுபவம் வாய்ந்த பேராசிரியர் முனைவர் செ. இராஜேஸ்வரி அவர்கள்.
ஒரு மொழியின் குறிப்பிட்ட படைப்பு அல்ல. 

உலகின் செம்மொழிகளாகத் திகழும் மொழிகள் தொடங்கி பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. ஒரு மொழித் தொகுப்பு அல்ல இது. பல மொழிகளின் கவிதைச் சங்கமத்தை இணைத்து கடலில் கலக்க முனையவைக்கும் ஓர் வழிப்பாதை. கிரேக்கம், இலத்தீன், சீனம், பாரசீகம், பிரெஞ்சு, இத்தாலி, ஜெர்மனி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்ட முப்பது கவிதைகள் இத்தொகுப்பினுள் அடங்கும். ஆங்கிலம் தவிர்த்த பிறமொழிக் கவிதைகள் வேறு ஆசிரியர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அந்த ஆங்கிலக் கவிதைகளைக் கொண்டு தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் முனைவர் செ.இராஜேஸ்வரி அவர்கள்.

மொழிபெயர்ப்புக் கவிதை என்றாலே இருண்மைசூழும் என்ற நம்பிக்கை பொதுப்புத்தியில் உண்டு. அந்தப் பொதுப்புத்தியை உடைத்து மூலமொழிக் கவிதைகளைத் தமிழ் மொழிக் கவிதைகளாக இயல்பாக மாற்றித் தந்திருக்கிறார் மொழிபெயர்ப்பு ஆசிரியர். மூலமொழிக் கவிஞர்கள் பலர் உலகின் மூலைமுடுக்குகளில் அறியப்பட்டவர்கள். அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தவர்களும் அத்தகையோரே. 
கிரேக்கத்தின் புகழ்பெற்ற சாஃபோவின் முதல் கவிதையில் தொடங்குகிறது இத்தொகுப்பு. 

சாஃபோவின் கவிதைத்தலைப்பு தான் இந்நூலின் தலைப்பாகவும் அமைந்திருப்பது சிறப்பிற்குரியது. சாஃபோவைத் தொடர்ந்து மாயா ஏஞ்சலோ, வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், எவெனோஸ் முதலான உலகம் தழுவிய பல கவிஞர்களின் கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த மூலக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களாக ஹோமர் பவுண்ட், எஸ்ரா பவுண்ட், மரியானாமூர், வில்லியம் கூப்பேர், கய்தேவன் போர்ட், ஆபிரகாம், பிரெளனிங் முதலானோர் திகழ்கின்றனர். இத்தனை விதமான தன்மை கொண்ட கவிதைகளையும் தமிழில் அழகுற மொழிபெயர்த்தவர்தான் நம் பேராசிரியர் செ. இராஜேஸ்வரி அவர்கள்.

முப்பது கவிதைகள் இத்தொகுப்பினுள் இருந்தாலும் அவை நான்கு இன்றியமையாத வகைப்பாட்டிற்குள் பிரிக்கப்பட்டிருப்பது கவிதை வாசிப்போருக்குத் தெளிவைத் தருவதோடு அயற்சியைத் தராமல் பார்த்துக்கொள்கிறது. காதல், இயற்கை, வாழ்க்கை, போரும் மரணமும் என்ற நான்கு வகைப்பாடுகளில் அமைந்த இந்தத் தொகுப்பில் சங்க இலக்கியம் போலவே அதிகமான பாடல்கள் காதல்பாடல்களாகவே உள்ளன. உலகமே புறத்தைவிட அகத்தில்தான் ஆழ்ந்து கிடக்கிறது என்பதை இந்தக் கவிதைத் தொகுப்பும் நமக்கு மெய்ப்பிக்கவே செய்கின்றது. 

காதல் கவிதைப் பகுதியில் 13 கவிதைகள் அடங்கியுள்ளன. காதலின் ரசனை, அழகியல், புன்னகை, நம்பிக்கை, மூத்தோர் காதல், காதல் தனிமை, இறப்பு எனக் காதலின் பன்முகத்துவங்களை உலகக் கவிகளின் ஆன்மா வழியாக தமிழ்ப்படுத்தித் தந்திருக்கிறார் மொழிபெயர்ப்பாசிரியர். அவன் கடவுளுக்கு நிகரானவன் கவிதையில் ஒரு காதலனின் ரசனை பேசப்படுகிறது.
அவன் கடவுளுக்கு நிகரானவன்
முக முகமாக அமர்ந்து
என் இனிமையான பேச்சையும்
அழகான சிரிப்பையும்
ரசித்தான்
இதுதான்
என் மார்பைக் கலவரப்படுத்தியது.
என்று நீள்கிறது. ஒரு காதலிக்கு காதலன் கண்களிலிருந்து வழியும் ரசனை எவ்வாறு உடலெங்கும் வழிந்தோடுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது இந்தக் கவிதை.
இதே போல் மற்றொரு கவிதையில் காதலின் இழப்பு குறித்துக் கூறும் போது “ ஓடும் நதியைப் போல காதல் நழுவுகிறது (பாலத்துக்குக் கீழே) என்று குறிப்பிடப்படுகிறது. மொழிபெயர்ப்பில் இந்த நழுவல் என்ற சொல் அழகாகப் பொருந்தி அந்த வரியையே அர்த்தப்படுத்தியுள்ளது. காதலின் தனிமை குறித்த மாயோ ஏஞ்சலோ கவிதை ஒன்றின் சில அடிகளில் சொற்கள் நம்மை தனிமைக்கே கொண்டுசென்று விடுகின்றன.
நீங்கள் கவனித்துக் கேட்டால்
எனக்குத் தெரிந்த ஒன்றை
உங்களுக்குச் சொல்கிறேன்
புயல் மேகங்கள் சூழ்கின்றன
பேய்க்காற்று வீசப்போகிறது
மனித இனம் துடிக்கின்றது
அதன் புலம்பல் எனக்குக் கேட்கிறது.
யாராலும்
ஏன்
ஒருவராலும்
தனித்திருக்க இயலாது
என்ற கவிதை வரிகள் வாசிப்போரை ஈர்க்கின்றன. காதல் கவிதைகளைத் தொடர்ந்து இயற்கை எனும் பகுதியில் ஐந்து கவிதைகள் இடம்பெற்றுள்ளன. மரங்கள், விலங்குகள், சிறுபூச்சிகள் ஆகியவற்றைக் கொண்டு படைக்கப்பட்ட இக்கவிதைகள் தனித்துவம் வாய்ந்தவையாகத் திகழ்கின்றன.
மரங்களின் இதயம் என்னும் கவிதையின் முதல் அடியே நம்மை வியக்க வைக்கிறது.
மரம் நடுவோன் எதை நடுகிறான்
சூரியனுக்கும் பூமிக்குமான தோழனை நடுகிறான்.
என்ற இந்த அடிகளில் மொழிபெயர்ப்பாசிரியர் தோழன் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். நண்பன் எனும் வார்த்தையை விடத் தோழன் எனும் சொல் தேர்வே பொருத்தமுற நிற்கிறது. காக்கா நரி கதை நம் மண்ணுக்கு உரிய கதை மட்டுமல்ல என்பதைப் பலரும் அறியார். பல நூற்றாண்டுகள் வாழ்ந்த கதை அது. நம்மூரில் வடை என்றால் ஐரோப்பாவில் அது பாலாடைக்கட்டி. இது குறித்துப் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட கவிதையை ஆங்கிலம்  வழி நம்மூர்க் கவிதையாகவே மாற்றிவிட்டார் மொழிபெயர்ப்பாசிரியர். காக்கையை வர்ணிக்கும் நரிகளின் வார்த்தைகள் இவ்வாறு வந்து விழுகின்றன.
ஆஹா நீ என்ன கருப்பு
அழகான கருப்பு
கனிமக் கருப்பு
உன் கரைதலின் இனிமையே தனி ரகம்
நீ மெலிவாக ஒயிலாக இருக்கிறாய் 
நம் நாட்டில்
இன்னிசை இரவுப்பாடிகள்
ஏராளம் ஏராளம்
ஆனால் உன் கரைதலுக்கு அதன் ஓசை ஈடாகுமா 
என்று காக்கையின் அழகை நரி வர்ணிக்கும் வார்த்தைகள் எனிய மொழியில் இனிமையாகக் காதில் நுழைகின்றன. இயற்கையைத் தொடர்ந்து வாழ்க்கைப் பகுதியில் ஏழு கவிதைகள் இடம்பெறுகின்றன. ஆபிரஹாம் கவ்லியின் ஒரு கவிதை மனிதன் மீது அக்கறை கொள்வதைப் பற்றிப் பேசுகிறது.
உயிரோடிருக்கும்போதே
சுகங்களை அனுபவிக்கிறேன்
இடுகாட்டில் எல்லோருமே துறவிதான்
என்ற சிறந்த வரிகளைக் கொண்ட கவிதையாக இருக்கிறது. இறுதியடிதான் இந்தக் கவிதை மொழிபெயர்ப்பின் உயிர். அற்புதமான சொற்களால் கோக்கப்பட்டிருக்கிறது இந்த மொழிபெயர்ப்பின் வரி. போரும் மரணமும் பகுதியில்  நான்கு கவிதைகள் இடம்பெற்றுள்ளன். போரின் வலிகளையும் ரணங்களையும் சொல்லும் கவிதைகள். மரணத்தின் வாசனைகளைப் பேசும் கவிதைகள் என இவை அமைகின்றன.
ஆயிரமாயிரம் உடல்கள் 
வெயிலில் நாறிக் கிடந்தன
ஆனால் இதுபோன்ற காட்சிகள்
மாபெரும் வெற்றிகளில் உண்டு
இந்த முரண்தான் இந்தக் கவிதையின் மொழிபெயர்ப்பில் ஆன்மாவாய்ப் புதைந்து கிடக்கிறது. 

மொழிபெயர்ப்பு என்பது இருண்மையற்ற தன்மையில் இருக்கவேண்டும். மூலத்தைப் புரிந்து வாசகன் உள்நுழைய வாசல் திறக்கவேண்டும். எளிமையான சொற்களால் எவரின் மனங்களிலும் பரவவேண்டும். கவிதையின் ஆன்மாக்கள் ஒளிரவேண்டும். இந்த அத்தனை தன்மைகளையும் கொண்ட மொழிபெயர்ப்புத் தொகுப்பாக முனைவர் செ. இராஜேஸ்வரி அவர்களின் இந்தத் தொகுப்பு அமைந்திருக்கிறது. உலகளாவிய மொழிக் கவிகளை இவ்வாறு எடுத்து வந்து  கவிதைச்சிற்பங்களாக வடித்துத் தந்த மொழிபெயர்ப்பாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
 

அவன் கடவுளுக்கு நிகரானவன் மொழிபெயர்ப்புக்
கவிதை நூலிற்கு எழுதிய அணிந்துரை
  

No comments:

Post a Comment