தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Sunday, August 29, 2021

தமிழ்ச் சமூக ஆவணம் – தொல்காப்பியம்



தமிழின் தொன்மையான நூல் எது என்று பலரிடம் கேட்கும்போது சரியான பதில்கள் வருவதில்லை. ஒரு மாபெரும் தொன்மைச் சமூகத்தின் அடையாளமாக மூவாயிரம் ஆண்டுகாலத்திற்கும் மேலாக வாழ்ந்து வருகின்ற நூல் குறித்த அறிதல் பொதுவெளியில் இவ்வாறு அறியப்படாமல் இருப்பது தமிழறிஞர்களின் தவிர்க்க முடியாத வருத்தங்களில் ஒன்று. தமிழில் கிடைக்கின்ற முதல் இலக்கண நூல் என்று கூறியவுடன் இன்று வரை கிடைக்கப்பெறாத அகத்தியம் கூட நினைவிற்கு வருகிறது. ஆனால் தொல்காப்பியம் என்னும் தமிழ்ச்சமூக ஆவணம் பலரின் நினைவுகளில் இருந்து தப்பிவிடுகிறது. 

யார் கேட்டாலும் அடித்துச் சொல்லுங்கள் தமிழின் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் என்று. காலத்தின் பெட்டகம், கரையான் அரிக்கமுடியாத பொக்கிஷம், அனல்வாதமும் புனல்வாதமும் தொட்டுவிடமுடியாத அழியாச் செல்வம் தொல்காப்பியம் என்று. தொல்காப்பியர் என்னும் மாமனிதர் ஒருவரின் கடுமையான உழைப்பிலிருந்து நேர்த்தியாக உருவாக்கப்பட்ட தொல்காப்பியம் தான் அதற்குப் பிறகாக எத்தனை இலக்கண நூல்களைப் பெற்றெடுத்திருக்கிறது.

மூன்று அதிகாரம், இருபத்தேழு இயல்கள் என ஓர் ஒழுங்கின் கட்டமைப்புக் குள்ளாக நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்ட தொல்காப்பியம் 1610 நூற்பாக்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. எழுத்திற்கும் சொல்லிற்கும் மட்டுமே உலகத்தின் தொன்மை மொழிகள் இலக்கணம் வகுக்க தமிழ்ச்சமூகத்தின் அக வாழ்க்கையையும், புற வாழ்க்கையையும் ஒரு முறைமைக்குள்ளாகக் கொண்டுவந்து இலக்கணம் வகுத்தளித்துத் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்த நூலாகத் தொல்காப்பியம் திகழ்கிறது. 

இன்றைய மொழியியலாளர்கள் வியக்கும் படியான எழுத்துப் பிறப்பு குறித்து அறிவியல் முறைப்படி ஆராய்ந்து பிறப்பியல் என்னும் தனி இயலை உருவாக்கியர் தொல்காப்பியர். மனிதர்களின் உடல் மொழியைப் பகுத்து ஆராய்ந்து அந்த உடல்மொழி இலக்கியத்தில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதைக் கண்டறிய மெய்ப்பாட்டியலை வகுத்தளித்த பெருமைக்குரியவர் தொல்காப்பியர். தமிழின் தொன்மை இலக்கியங்களான சங்க இலக்கியத்தை வாசிக்க தொல்காப்பியர் உருவாக்கிய ஒரு திறவுகோல் தொல்காப்பியம். 

11 ஆம் நூற்றாண்டுத் தொடங்கி 15 ஆம் நூற்றாண்டு வரை தொல்காப்பியத்தைப் புரியவைக்க முயற்சித்த உரையாசிரியர்கள் இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடர் ஆகியோராவர். இருபதாம் நூற்றாண்டில் எண்ணற்ற உரையாசிரியர்கள் எளிய உரை தந்து தொல்காப்பியத்தை 21 ஆம் நூற்றாண்டிற்குக் கடத்தியவர்கள். 

1847 ஆம் ஆண்டில் ஓலைச்சுவடியிலிருந்து அச்சில் மழைவை மகாலிங்கையர் என்பவரால் நிலைபெற்ற தொல்காப்பியம் அதன் பிறகு ஏராளமான தமிழ் அறிஞர்களால் பதிப்பிக்கப்பெற்றது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை தொல்காப்பியப் பொருளதிகார இளம்பூரணர் உரையைப் பதிப்பித்து வழங்கியது கூடுதல் சிறப்பு.

உலகம் வியக்கும் நுட்பமான ஆய்வுகள், உலகம் புரிந்துகொள்ள உதவும் மொழிபெயர்ப்புகள் எனத் தொல்காப்பியம் அதன் எல்லை கடந்து இன்று பயணித்துக் கொண்டிருக்கிறது. இதனாலேயே தொல்காப்பியம் என்பது ஓர் இலக்கண நூல் என்ற எல்லையைக் கடந்து தமிழ்ச்சமூகத்தின் ஆவணமாக மாறியது. அந்த ஆவணத்தை இத்தனை நூற்றாண்டுகள் தலைமுறை தலைமுறையாகக் கொண்டுவந்து சேர்த்த நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் அந்த நூலை அடுத்து வரும் தலைமுறைகளுக்குப் பயன்படும் நோக்கில் எவ்வாறெல்லாம் கொண்டு சேர்க்கமுடியுமோ அவ்வாறெல்லாம் கொண்டுசேர்ப்பதொன்றாகவே இருக்கமுடியும். 


வேந்தர் நெறி இதழில் வெளிவந்தது...


No comments:

Post a Comment