மொழியில் புதிய புதிய சொற்கள் தோற்றம் பெறுகின்றன. அவை அவ்வாறே நிலை பெறுவதில்லை. கால ஓட்டத்தில் திரிந்தும் பின்னர் மறைந்தும் போகின்றன. அவ் வகையில் வீழ்ந்து போன அல்லது மறைந்து போன சொற்களை ஒவ்வொரு மொழியும் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றன. தமிழ் மொழியில் சங்க இலக்கியக் காலந் தொடங்கி இருபதாம் நூற்றாண்டு வரை மறைந்துபோன சொற்களைப் பட்டியலிடுவ தென்பது இந்த பூமியைக் காலால் நடந்து அளப்பதற்குச் சமமான ஒன்றாகும். அந்த அளவிற்கு அதன் எல்லை விரிவுடையது.
ஒரு பொருளைத் தரக்கூடிய பலசொற்கள் எல்லா
மொழியிலும் உண்டு. தமிழில் ஒரு பொருளுக்கு எண்ணற்ற சொற்கள் உண்டு என்பதைக்
கிடைக்கக் கூடிய அத்தனை நிகண்டுகளையும் புரட்டினாலே அறிந்துகொள்ளமுடியும். ஒரு
பொருளைத் தரக்கூடிய பல சொற்களில் சில சொற்கள் சில காரணங்களால் நீண்ட காலம்
வாழ்வதும் சில சொற்கள் தோன்றிய உடனே மறைந்து போவதும் என்பது மொழியில் இயல்பாய்
நடக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. இச்சொற்கள் வாழ்வதற்கும் மறைவதற்கும் உள்ள காரணங்களை
ஆராயும் போது அவற்றை ஒரு பொதுவிதியாக வரையறை செய்யமுடியவில்லை.
பழங்காலத்தில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட பல சொற்கள் சுவடு தெரியாமல் மறைந்து போனதும், ஓரிரண்டு இடங்களில் மட்டும் பயன்படுத்தப்பட்ட பல சொற்கள் புழங்குநிலையில் பெருவளர்ச்சி பெற்றிருப்பதையும் அறியமுடிகிறது. அவ்வகை யில் இக்காலத்தில் பெயரளவில்கூட பெரிதும் அறியப்படாதுபோன ‘மாந்து’ என்ற வினைச்சொல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய செவ்விலக்கியங் களான சங்க இலக்கியங்களில் எவ்வாறு பெருவழக்குப் பெற்றிருந்தது என்பதையும் அச்சொல் எந்நிலைகளிலெல்லாம் புலவர்களால் பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருந்தது என்பதையும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.
சங்க
இலக்கியத்தில் உட்கொள்ளுதல்
சங்க
இலக்கியங்களில் ‘உட்கொள்ளுதல்’
என்னும் செயலைக் குறிக்கப் பல வினைகள் வழங்கியிருப்பதை
அறியமுடிகிறது.
உண்ணுதல்,
மாந்துதல், மடுத்தல்,
தின்னுதல், அருந்துதல், பருகுதல்,
குடித்தல், ஆர்தல்.
இவ்வினைகள்
தவிர்த்து இன்று பரவலாக வழங்கப்படுகின்ற சாப்பிடு என்னும் வினை ஒருமுறை கூட சங்க
இலக்கியத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.1 சாப்பிடு என்னும் வினை
இக்காலத்தில் எவ்வாறு பெருவழக்குப் பெற்றிருக்கிறதோ அதே போல் சங்க இலக்கியங்களில்
பெருவழக்குப் பெற்ற வினையாக உண்ணுதல் என்னும் வினையே இருந்துள்ளது. ஏறக்குறைய
இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த வினையின் பல வடிவங்கள் வந்துள்ளன என்பதை
சங்க இலக்கிய வினை வடிவங்கள் என்னும் அடைவு வழியாக அறிய முடிகிறது 2
இக்காலத்தில்
திட உணவுப் பொருளையும் (Solid Food)
திரவ உணவுப் பொருளையும் (Liquid Food) உட்கொள்வதற்கு
சாப்பிடு, உண், தின் - குடி, அருந்து, பருகு முதலான பல வினைகள்
பயன்படுத்தப்படுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று இந்த
வினைச்சொற்கள் எவ்வாறு வழங்கின எனப் பார்க்கும்போது பரவலாக அறியப்பட்ட வினைகளாகப்
பின்வருவனவற்றைக் கூறலாம்:
இக்காலத்
தமிழில் வழங்கும் உண்ணுதல் என்னும் வினையே சங்க இலக்கியங்களில்
மிகுதியாகவும் பெருவரவாகவும் உள்ளது. குடித்தல்
என்னும் வினை மிகக் குறைவாகவே சங்க இலக்கியங்களில் வழங்கியதை அறிகிறோம். நான்கு
முறையே ‘குடித்தல்’ என்னும் வினை வழங்கியிருக்கக்
காண்கிறோம். அந்த நான்கு இடங்களுமே திரவப்பொருளை உட்கொள்ளுதல் தொடர்பானவை.
சங்க இலக்கியங்களில் அருந்து என்னும் வினை மனிதர்களோடு
தொடர்புபடுத்தப் பட்டிருப்பது மிகக் குறைவு. விலங்குகளோடும் பறவைகளோடும்
தொடர்பு படுத்தப்பட்டிருப்பதே மிகுதி. சங்க இலக்கியங்களில் பருகு
என்னும் வினை மனிதரும் விலங்குகளும் திரவப் பொருளை உட்கொள்ளுவதைப் பதிவு செய்துள்ளது.
தின் என்னும் வினை திடப்பொருளை மென்று உட்கொள்ளும் செயலுக்குரிய
வினையாகவே சங்க இலக்கியங்களில் வழங்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. மடுத்தல்
என்னும் சொல் குறைவான நிலையில் குடித்தல் என்னும் பொருளில் இடம்பெற்றுள்ளது. இந்த
அனைத்துச் சொற்களும் இன்றைய தமிழிலும் வெவ்வேறு நிலைகளில் இடம்பெற மாந்து என்ற
சொல் இன்றைய நிலையில் பெயரளவில் கூட அறியப்படாத சொல்லாக, வழக்குவீழ்ந்த சொல்லாக
மாறிவிட்டது. 3
என்னும்
கூற்றின் வழியாக மாந்து தவிர மற்ற சொற்கள் சங்க இலக்கியம் தொடங்கி இன்று வரையிலும்
வழக்கு பெற்று வந்திருக்கக்கூடிய தன்மையினையும் மாந்து என்னும் சொல் இன்றைய
நிலையில் வழக்கற்றுவிட்ட நிலையினையும் அறிந்து கொள்ள முடிகிறது.
மாந்து
வாழ்ந்த வரலாறு
மாந்து
என்ற வினைச்சொல் இன்றைய நிலையில் அறியப்படாத சொல்லாக மாறி விட்டாலும் சங்க
இலக்கியங்களில் அச்சொல் வெவ்வேறு நிலைகளில் புலவர்களால் எடுத்தாளப்பட்டுள்ளதைப்
பார்க்கும்போது அச்சொல்லின் புழக்கம் மற்றும் பயன்பாடு எவ்வாறு இருந்தது என்பதை அறியமுடிகிறது.
குறுந்தொகை,
நற்றிணை, அகநானூறு, கலித்தொகை, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து என
எட்டுத்தொகை நூல்களில் பரிபாடல் தவிர மற்றவை அனைத்திலும், பத்துப்பாட்டில்
குறிஞ்சிப்பாட்டு, நெடுநல்வாடை, பொருநராற்றுப்படை ஆகியவற்றிலும் மாந்து என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பது
குறிப்பிடத்தக்கது. மாந்து என்ற வினை மாந்த, மாந்தி, மாந்திய, மாந்தும் என்ற பல
வடிவங்களில் இடம்பெற்றுள்ளது.
திடப்பொருளை
உண்பதற்கும், திரவப்பொருளைக் குடிப்பதற்கும் மாந்து பயன்படுத்தப்பட்டுள்ளதோடு மனிதர்,
விலங்கு, பறவை என அனைத்து உயிரினங்களும் மாந்துவதாகவும் குறிப்புகள்
காணக்கிடைக்கின்றன.
சங்க
இலக்கியங்களில் மாந்து – மனிதர்கள்:
எட்டுத்தொகை,
பத்துப்பாட்டு ஆகிய இரண்டிலும் மாந்து என்ற வினை பல நிலைகளில்
பயன்படுத்தப்பட்டிருப்பதை அறியமுடிகிறது. மனிதர்கள் செல்நெல் சோறு, வெண்சோறு, வாளைமீனுடன்
கூடிய வெண்சோறு, இறைச்சியுடன் கூடிய உணவு, வரகுஅரிசி சோறு, நெல்லிக்காய், மீன்,
பனம்பழம் என திடப்பொருளை மாந்தியதாக குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.
மனிதர்கள்
திரவப்பொருளை உட்கொண்டதாகப் பார்க்கும்போது கள் மட்டும் மாந்திய தாகக் பல
பாடல்களில் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.
விலங்குகள்:
விலங்குகள்
என்று பார்க்கும்போது மான், யானை, எருமை, ஏறு, பன்றி, நீர்நாய், நரி முதலானவை
திடப்பொருளை மாந்தியதாக அறியமுடிகிறது. மான் அறுகினது மெல்லிய தண்டினையும், யானை கொருக்காந்தட்டை,
வேங்கைப் பூ ஆகியவற்றையும் எருமை ஆம்பலையும், ஏறு புல்லினையும், பன்றி
கிழங்கினையும், நீர்நாய் மீனினையும், நரி இறைச்சியினையும் மாந்தியதாக சான்றுகள் சங்க
இலக்கியப் பாடல்களில் கிடைக்கின்றன.
திரவப்பொருள்
என்று பார்க்கும்போது மான் நீரினையும், மான் குட்டி பாலினையும், யானைக்கன்று
எருமையின் மடிப்பாலையும் மாந்தியதாக அறியமுடிகிறது.
பறவைகள்:
சங்க
இலக்கியங்களில் எந்தெந்தப் பறவைகள் எந்த வகையான
திட உணவுப் பொருளை மாந்தின என்று பார்க்கும்போது குருவி தானியங்களையும், வெளவால் நெல்லிக்காயினையும், அன்னம் அயிரையினையும்,
காக்கை மீன் மற்றும் பலிச் சோற்றினையும், கிளி தினையையும், மயில் ஆலம்பழத்தினையும்
மாந்தியதாக அறியமுடிகிறது.
திரவப்பொருள்
என்னும்போது வண்டு தேனினையும், காக்கை குருதியினையும் மாந்தியதாகப் புலவர்கள் தம்
பாடல்களில் பதிவுசெய்து சென்றுள்ளனர்.
மாந்து
வினையும் அட்டவணைகளும்:
மாந்து
என்ற வினை சங்க இலக்கியங்களில் எவ்வாறெல்லாம் வாழ்ந்தது என்பதை பின்வரும்
அட்டவணைகள் தெளிவாக விளக்கி நிற்கின்றன. அட்டவணை 1 சங்க இலக்கியங்களில் மாந்து என்னும்
சொல் பயின்று வரும் இடங்களின் மொத்த எண்ணிக்கையினையும்,
அட்டவணை 2 சங்க இலக்கியங்களில் மாந்து என்னும்
சொல் இடம்பெறும் பாடல் எண்கள் மற்றும் அடி எண்களையும், அட்டவணை
3 மாந்து என்னும் வினையின் வினை வடிவங்களையும், அட்டவணை 4 சங்க இலக்கியங்களில் மாந்து என்னும் வினை எவ்வாறெல்லாம்
பிறசொற்களோடு ( திட உணவுப்பொருள், திரவ
உணவுப்பொருள்) இணைந்து சொல் இணைகளாக வந்துள்ளன என்பதையும் அட்டவணை
5 சங்க இலக்கியங்களில் மனிதர்கள், விலங்குகள்,
பறவைகள் திடப்பொருளையும் திரவப்பொருளையும் உட்கொள்ளும் மொத்த இடங்களின்
எண்ணிக்கையினையும் எடுத்துரைப்பதாக அமைகின்றன.
அட்டவணை
– 1
சங்க இலக்கியங்களில் மாந்து என்னும்
சொல் பயின்று வரும் இடங்களின் மொத்த எண்ணிக்கை.
சங்க இலக்கியம் |
மாந்த |
மாந்தி |
மாந்தும் |
மாந்திய |
எட்டுத்தொகை |
2 |
38 |
7 |
- |
பத்துப்பாட்டு |
- |
3 |
- |
1 |
மொத்த எண்ணிக்கை |
|
|
|
51 |
அட்டவணை - 2
சங்க
இலக்கியங்களில் மாந்து என்னும் சொல் இடம்பெறும் பாடல் எண்களும், அடி எண்களும்.
எட்டுத்தொகை நூல்கள் |
மாந்த |
மாந்தி |
மாந்தும் |
ஐங்குறுநூறு |
- |
- |
165-2; 263-2 |
குறுந்தொகை |
225 -1 |
46-3;187-2;201-4;250-1;256-2;277-3;317-2 |
170-3 |
நற்றிணை |
|
60-6;195-2;213-4;258-6;304-1;352-6;386-3;388-8 |
|
அகநானூறு |
|
56 -5; 139-9; 157-3; 178-5;182-4;221-1;236-3;277-17;313-14;336-6;346-15;348-9;349-11 |
100-17; 107-10; 165- 5 |
கலித்தொகை |
|
109-2;121-4 |
|
புறநானூறு |
225-2 |
61-6;67-6;209-4;361-19;367-7;395-37 |
215- 5 |
பதிற்றுப்பத்து |
|
12-18;81-21 |
|
பத்துப்பாட்டு நூல்கள் |
மாந்தி (அடி எண்ணிக்கை) |
மாந்திய |
பொருநராற்றுப்படை |
192 |
183 |
நெடுநல்வாடை |
33 |
- |
குறிஞ்சிப்பாட்டு |
155 |
- |
அட்டவணை – 3
சங்க
இலக்கியங்களில் மாந்து என்னும் சொல் வினை வடிவங்களின் எண்ணிக்கை அடிப்படையில்
தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
எட்டுத்தொகை நூல்கள் |
மாந்த |
மாந்தி |
மாந்தும் |
ஐங்குறுநூறு |
- |
- |
2 |
குறுந்தொகை |
1 |
7 |
1 |
நற்றிணை |
- |
8 |
- |
அகநானூறு |
- |
13 |
3 |
கலித்தொகை |
- |
2 |
- |
புறநானூறு |
1 |
6 |
1 |
பதிற்றுப்பத்து |
- |
2 |
- |
பத்துப்பாட்டு நூல்கள் |
மாந்தி |
மாந்திய |
பொருநராற்றுப்படை |
1 |
1 |
நெடுநல்வாடை |
1 |
- |
குறிஞ்சிப்பாட்டு |
1 |
- |
அட்டவணை
- 4
சங்க இலக்கியங்களில் மாந்து என்னும் சொல்
எவ்வாறெல்லாம் பிறசொற்களோடு இணைந்து சொல் இணைகளாக வந்துள்ளன என்பது பற்றிய
விவரங்கள்;
1.
மனிதர்கள் –
திடப்பொருள், திரவப்பொருள்
2.
விலங்குகள் - திடப்பொருள்,
திரவப்பொருள்
3.
பறவைகள் - திடப்பொருள்,
திரவப்பொருள்
என்னும்
அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன.
1.
மனிதர்கள் –
திடப்பொருள், திரவப்பொருள்
எதை |
யார் அல்லது எது |
மாந்து |
திடப்பொருள் |
மனிதர்கள் நாடன், குறவன் சுற்றத்தார், உழவன், வீரன். |
1.செந்நெல்சோறு (குறு. 277-3), வெண்சோறு (அக.
100-17, நற். 258 -6), நெல்லிக்காய் (குறு. 317-2), வாளைமீனுடன் கூடிய வெண் சோறு (புற. 61-6),
இறைச்சியுடன் கூடிய உணவு (புற. 395 – 37), வரகுஅரிசி – வெண்பூ – தயிர் – சேர்ந்த
கலவைச் சோறு ( புற. 215 – 5), சோறு ( நற். 60-6). 2. ஊன் இறைச்சியோடு கள் ( பதி – 12 – 18), 3. மீன் ( அக- 236-3), பனம்பழம் (புற – 225 –
2) |
திரவப்பொருள் |
மனிதர்கள் |
ஆடவர்கள் – கள் ( அக. 157-3; 182-4; 221-1; 346- 15; 348-9),
(புற. 209- 4; 361-19; 367 - 7),
(பதி. 81 – 21), (நற். 388 -8),
(குறிஞ். 155) , (நெடு. 33). மகளிர் – கள் ( அக. 336-6) |
2.
விலங்குகள் -
திடப்பொருள், திரவப்பொருள்
எதை |
யார் அல்லது எது |
மாந்து |
திடப்பொருள் |
விலங்குகள் |
|
|
மான் யானை எருமை ஏறு பன்றி நீர்நாய் குழவிச்சேதா நரி |
அறுகினது மெல்லிய தண்டு (குறு. 256-2) கொருக்காந்தட்டை (குறு. 170-3), வேங்கைப் பூ(
அக. 349-11) ஆம்பல் (அக. 56-5), புதுமலர் ( அக. 100 -17) புல் ( கலி.109 -2) கிழங்கு (அக. 178-5), தினை ( ஐங். 263 – 2,
நற். 386 – 3) மீன் ( நற். 195-2) பழம் (நற். 213 – 4) இறைச்சி ( நற். 352 -6) |
திரவப்பொருள் |
விலங்குகள் |
|
|
மான் மான் குட்டி யானைக்கன்று |
நீர் (குறு. 250-1), (அக. 139-9) பால் (குறு. 187-2; 225 -1) எருமையின் மடிப்பால் ( அக.165 -5) |
3.
பறவைகள் -
திடப்பொருள், திரவப்பொருள்
எதை |
யார் அல்லது எது |
மாந்து |
திடப்பொருள் |
பறவைகள் |
|
|
குருவி வெளவால் அன்னம் பறவைகள் காக்கை கிளி மயில் |
தானியங்கள்
(குறு. 46-3) நெல்லிக்காய்
(குறு. 201-4) அயிரை
( புற. 67 – 6) இரை
( கலி. 121 – 4) மீன்
( ஐங். 165 -2), பலிச்சோறு (பொரு. 183) தினை
(நற். 304 – 1) ஆலம்பழம்
( பொரு. 192) |
திரவப்பொருள் |
பறவைகள் |
மாந்து |
|
வண்டு காக்கை |
தேன் ( அக. 277 -17) குருதி ( அக. 313- 14) |
அட்டவணை
– 5
சங்க
இலக்கியங்களில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் திடப்பொருளையும் திரவப்பொருளையும்
உட்கொள்ளும் மொத்த இடங்களின் எண்ணிக்கை:
யார் அல்லது எது |
உண்ணும் பொருள் |
உண்ணும் இடங்களின் மொத்த எண்ணிக்கை |
மனிதர்கள் |
திடப்பொருள் |
11 |
மனிதர்கள் |
திரவப்பொருள் |
13 |
விலங்குகள் |
திடப்பொருள் |
12 |
விலங்குகள் |
திரவப்பொருள் |
5 |
பறவைகள் |
திடப்பொருள் |
8 |
பறவைகள் |
திரவப்பொருள் |
2 |
மேற்கண்ட
அட்டவணைகளின் வழியாக மாந்து என்னும் வினை அதன் வடிவங்களோடு 51 இடங்களில் சங்க
இலக்கியங்களில் புலவர்களால் பயன்படுத்தப் பட்டுள்ளன. மனிதர், விலங்கு, பறவை என மூன்று
நிலைப்பட்ட உயிர் வாழினங்களும் திட உணவு, திரவ உணவு ஆகியவற்றை மாந்துவதாகக்
குறிப்புகள் கிடைக்கின்றன. இதில் மனிதர்கள் திடப்பொருளை 11 இடங்களிலும்,
திரவப்பொருளை 13 இடங்களிலும் மாந்துவதாக அறியமுடிகிறது. விலங்குகள் திடம், திரவம்
என முறையே 12, 5 ஆகிய எண்ணிக்கையில் மாந்துவதாக குறிப்பு கிடைக்கின்றது. பறவைகள்
திடப்பொருளை 8 இடங்களிலும், திரவப்பொருளை 2 இடங்களிலும் மாந்துவதாகப் பாடல்கள்
கிடைக் கின்றன.
இன்று
அருவழக்காக அருகிவிட்ட அல்லது பெருவழக்கிலிருந்து வீழ்ந்துவிட்ட மாந்து என்னும்
வினையினை இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று சங்க இலக்கியங்களின் வழி அறிய முற்படுகிறபோது
அச் சொல் வாழ்ந்த வரலாறு பதிவுசெய்யப்படவேண்டிய வரலாறாகக் காணப்படுகின்றது. உண்
என்னும் வினைக்கு அடுத்த நிலையில் மாந்து என்ற வினை பலநிலைகளில் செயல்பட்ட வினையாக
இருப்பதையும் அறியமுடிகிறது.
குறிப்புகள்:
1.
இந்த வினைச்சொல்
சங்க இலக்கியங்களில் வழங்கவில்லை. எந்த நூற்றாண்டில்
இந்த வினை தமிழில் வழங்கத் தொடங்கியது என்பதும் அறியக்கூடியதாக இல்லை. மேலும் இந்த வினை பிற திராவிட மொழிகளிலும் காணப்படவில்லை
என்பதை Dravidian
Etymological Dictionary என்பதில் அந்த வினைக்குப் பதிவு இல்லாத காரணத்தால்
அறியமுடிகிறது.
2.
புலவர் மணியன்,
சங்க இலக்கிய வினைவடிவங்கள், பக். 63-65
3.
பா.ரா. சுப்பிரமணியன், பா.
இளமாறன், மயில் அகவும், குயில்
அகவுமா?சங்க இலக்கியங்களில் சொல் இணைகளின் நிலை, புதிய பனுவல், ப.24 – 28.
பயன்பட்ட
நூல்கள்:
1.
சுப்பிரமணியன்,
பா. ரா., இளமாறன்,
பா., மயில் அகவும், குயில்
அகவுமா?சங்க இலக்கியங்களில் சொல் இணைகளின் நிலை, புதிய பனுவல் – காலாண்டிதழ், அக்டோபர்,
2011.
2.
பசுபதி,
ம.வே., செம்மொழித் தமிழ்
இலக்கண இலக்கியங்கள், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2010.
3.
புலவர்மணியன்
(தொகுப்பும் பகுப்பும்), சங்க இலக்கிய வினைவடிவங்கள்,
Dravidian
Linguistics Associations, Thiruvananthapuram , 2007.
4.
மாதையன்,
பெ., சங்க இலக்கியச் சொல்லடைவு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2007.
5. Thomas
Lehmann & Thomas Malten (comp.), A Word Index For Cankam Literature,
Institute of Asian Studies, Chennai, Second ed., 2007.
6. Burrow,
T., Emeneau, M.B. (ed.), A Dravidian Etymological Dictionary, Oxford, Second
ed., 1984.
7. Oxford
Collocations, Dictionary for Students of English, Oxford University Press,
2002.
No comments:
Post a Comment