தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Tuesday, June 23, 2020

புள்ளக்குட்டிக்காரி






இது எத்தனாவது

ஏழு மா

உங்க வீட்டுக்கார் என்ன வேல செய்யறார்

லாரியில கம்பி ஏத்தற வேலதாங்க

அந்த ஆளுகிட்ட சொல்லுமா. இத்தோட குடும்பக் கட்டுப்பாடு ஆப்ரேஷன் பண்ணிரலாம்னு”. கவுர்மண்ட்டு ஆஸ்பத்திரி நர்ஸ், ராஜேஸ்வரிகிட்ட சொன்னப்பா அவளோட முகம் வெளிறிப் போச்சு.

என்ன நர்ஸம்மா சொன்னீங்க. அத்தோட அந்த ஆளு என்ன நடுரோட்டுலயே வச்சி வெட்டிருவான். நல்ல வேல அந்த ஆளு இங்க இல்ல. இல்லனா உங்ககிட்ட இந்நேரம் மல்லுக்கு நின்னிருப்பான்”.

என்னமோ போங்க எனக்கு என்ன? நீதான் நாளைக்கு அவஸ்த படப்போற. அந்த ஆளுக்கு என்ன? படுத்தானா? எந்திரிச்சு போனானான்னு போயிடப் போறான். வருஷா வருஷம் சாகிறது நீ தான. திருந்தவே மாட்டீங்கன்னுநர்ஸ் அம்மா சொல்லிக்கிடே டாக்டர் கூப்பிட உள்ள போச்சு.

சின்ன வயசுலயே புடிச்சு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. எங்க அப்பன் ஒரு குடிகாரன். எங்க அம்மா மட்டும் என்ன பண்ணும். அதுவும் அஞ்சும் பொண்ணுங்க நாங்க. எல்லாரையும் கரையேத்தறதுக்குள்ள எங்க அம்மா போய் சேர்ந்துருச்சு. எனக்கு வாய்ச்சவன் இவன் தான். ஆறு பெத்து கீழ இறக்கிட்டன். வயித்துல இருக்கற இது ஏழாவது. எல்லாம் என் தலையெழுத்துன்னுபக்கத்துல இருந்த ஆயாகிட்ட புலம்பிக்கிட்டுக் கிடந்தா ராஜேஸ்வரி.

எனக்கு முதல்ல பொண்ணுதான் பொறந்துச்சி. ஆஸ்பத்திரியில உயிர கையில புடிச்சி படுத்துக்கிட்டு இருந்தன். இந்த ஆளுக்குத் தகவல் சொல்லி அனுப்பியிருந்தாங்க. வேக வேகமா உள்ள வந்தான். என்ன கத்தப்போறானோன்னு ஈரக்குலலாம் நடுங்கி கிடந்துச்சு. கையில தூக்கினான். நான் அவனையே பாத்தான். அப்ப அவன் ஒன்னு சொன்னான்.

புள்ளையில என்ன பொம்பள புள்ள ஆம்பள புள்ள. எங்க ஆத்தா பொம்பளதான. என்கூட பொறந்ததுங்கள்ல நாலு பொம்பள புள்ள தான. உன்னை எதுக்கு கல்யாணம் பண்னன். உங்க வீட்டுல அஞ்சும் பொம்பள புள்ளைங்க. உங்க ஆத்தா என்ன பாடு பட்டிருப்பான்னுதான் உன்ன பண்ணிக்கிட்டன். மகாலட்சுமிய பெத்துத் தந்திருக்க. அதனால இவ பேரு மகாலட்சுமின்னு வைக்கலாம்னுஅவன் சொல்லிட்டு நின்னப்ப,

எனக்கு அவன் மேல வந்த மரியாதைக்கே அளவில்லாமப் போச்சு. இவனுக்காக என் உடம்பு என்ன ஆனாலும் பரவாயில்ல. எத்தன புள்ள வேணா பெத்துத் தரலாம்ணு தோணுச்சு. அதுக்கப்பறம் எனக்குப் பொறந்தது எல்லாமே ஆம்பள புள்ளைங்கதான்னுராஜேஸ்வரி எதிர்ல இருந்த இன்னொரு கர்ப்பிணிகிட்ட சொல்லிக்கிட்டு இருக்கறப்ப அவ கண்கள்ல இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிஞ்சுது.

சரி ஆத்தா நான் கிளம்பறன். புள்ளைங்க வீட்டுல தனியா கிடக்கும். அவ அக்காவும் இவரோட அம்மாவும்தான் எல்லாத்தையும் பாத்துக்குவாங்க. நான் வேலையோட போய் சேரன்னுஅங்கிருந்து கிளம்பினா ராஜேஸ்வரி.

ஓட்டு வீடுதான். ஒரே ஒரு அறைதான். ஒரு சமையல்கட்டு. மொழுவன அடுப்பு. கொஞ்சமான பாத்திரங்கதான். ராஜேஸ்வரிக்கு மீனுனா உசுரு. ஒவ்வொரு புள்ளயும் பொறந்த அஞ்சாம் நாளே புள்ளைய கிழவிகிட்ட விட்டுட்டு, தன்னோட நீண்ட முடிய வாரி எடுத்து ஒரு கொண்டைய போட்டுக்கிட்டு, ஒரு பெரிய தூக்கு எடுத்துக்கிட்டு மார்க்கெட்டுக்குப் போய் குழம்பு மீனையும் வறுக்கற மீனையும் வாங்கியாந்து கால நீட்டிப்போட்டு அருவாமனையில உக்காந்து ஆஞ்சியெடுத்து சட்டியில தெருவே மணக்க மணக்க குழம்ப வைச்சு கவல மீன மொறு மொறுன்னு வறுத்து எடுத்து சூடா சோத்தப் போட்டு வக்கணையா வாயில ஒரு உண்டைய போடறப்பதான் அவளுக்கு உசுரே வந்த மாதிரி இருக்கும்.

ஏண்டி ராஜேஸ்வரி. பச்ச உடம்புக் காரி. இப்படியா மார்க்கெட்டுக்குப் போய் வருவ. அப்படி என்னதாண்டி அந்த மீன்ல வச்சிருக்கன்னுஎதிர்த்த வீட்டுக்காரி கேக்கறப்ப,

அடப் போக்கா. இதல்லாம் உனக்கு சொன்னா புரியாது. அது மூக்க துளைச்சி, நாக்குல வழிஞ்சி உள்ள போற விஷயம். அத அனுபவிக்கணும் ஆராயக்கூடாதுன்னுராஜேஸ்வரி சொல்லிட்டு போயிருவா.

நல்ல உயரம். சிகப்பிதான் அவ பட்டபேரு. ரோட்டுல நடந்தா நாலு கண்ணு இல்ல நானூறு கண்ணுங்க அவமேல படும். அப்படி ஒரு அழகு. ஒருமுறை ரோட்டுல ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருந்துச்சு. அந்தப் படத்துல வைஜெயந்தி மாலா நடிச்சுக்கிட்டு இருந்தாங்க. அந்த ஷூட்டிங்க ராஜேஸ்வரி வேடிக்க பாத்துக்கிட்டு இருந்தப்ப அந்தம்மாவோட கண்ணு இவ மேல பட்டுச்சு. ராஜேஸ்வரிய கிட்ட கூப்பிட்டவங்கநீ ரொம்ப அழகா இருக்க. உன் கூட ஒரு போட்டோ எடுத்துக்கவான்னு கேட்டாங்கலாம். ராஜேஸ்வரிக்கு கையும் ஓடல காலும் ஓடல. பதற்றத்துலயும் கூச்சத்துலயும் கூட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டா. அன்னைக்கு சாயங்காலமே ஒரு பிரிண்ட் போட்டு ராஜேஸ்வரிக்கு ஒரு போட்டோவை வீடு தேடி வந்து கொடுத்துட்டு போச்சாம் அந்த அம்மா”.

கொஞ்சா நாட்கள்லயே ஏழாவது புள்ளயும் பொறந்துச்சு. ஹாஸ்பத்திரியில அன்னைக்குப் பெரிய சண்டையே நடந்துச்சு. கிருஷ்ணன் யார் சொல்லியும் கேக்கல. “இதல்லாம் பேச உங்க யாருக்கும் உரிமை இல்ல. அவ என் பொண்டாட்டி. நான் சொல்றததான் கேப்பான்னுகோவமா கத்திக்கிட்டே வெளியில போனான்.

பதினோராவது புள்ள பொறக்கவரைக்கும் ஆஸ்பத்திரியில இதே தகராறுதான். ஏழு வருஷம் கடந்தும் அவன் மனசுல எந்த மாற்றமும் இல்ல.

மகாலட்சுமிக்கு இப்ப பதினாறு வயசு ஆயிருச்சு. பக்கத்து தெருவுல ராம்குமார்னு  ஒரு பையன் இருக்கான். இவளதான்  கல்யாணம் பண்ணிக்கணும்னு இருக்கானாம். குடும்பம் கூட நல்ல குடும்பம்னு கேள்விப்பட்டன். கல்யாணம் பண்ணி வச்சிரலாமான்னு
 
ராஜேஸ்வரி கிருஷ்ணன் கிட்ட சொன்னப்ப  அதுக்கென்ன பண்ணி வச்சிட்டாப் போச்சுன்னுகிருஷ்ணன் சொல்ல பெருமூச்சு விட்டா ராஜேஸ்வரி.

வீட்ட மாத்தணுங்க. ரெண்ரு ரூம் இருக்க வீடாப் பாருங்க. மருமகன்லாம் வந்தா அவங்களுக்குன்னு தனியா ஒதுக்கணும்னுராஜேஸ்வரி சொன்னப்பஆமா ஆமா மாத்தணும். சீக்கிரமே மாத்திடறன்னு சொல்லிட்டுவெளிய கிளம்பினான் கிருஷ்ணன்.

கல்யாணம் முடிஞ்சி வீட்டுக்குப் பொண்ணும் மாப்பிள்ளையும் வந்த அன்னைக்கு ராத்திரி முதல் இரவு.

புள்ளைங்க எல்லாம் தூங்கிருச்சாடின்னுகிருஷ்ணன் கேட்டான்.

ஏங்க எதுக்க இப்ப கேக்கறிங்க. பொண்ணயே கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. அவளுக்குப் புள்ள பொறக்க நேரத்துல எனக்கும் புள்ள பொறக்கணுமான்னுசொல்லி முடிக்கற நேரத்துல விழுந்த அடியில அலற ஆரம்பிச்சா ராஜேஸ்வரி. எல்லாரும் முழிக்க மாப்பிள்ளையும் பொண்ணும் அலறி ஓடிவர அன்னைக்கு ராத்திரி எல்லாருக்கும் சிவராத்திரிதான்.

என்னடி நினைச்ச என்ன? ஆம்பளடி நானு. எனக்கு என்ன வயசாயிருச்சா? இல்ல உனக்குதான் வயசாயிருச்சா? இன்னும் பத்து பெத்துக்குவண்டி. என்ன யார் கேக்க முடியும்னுகிருஷ்ணன் பேசின பேச்சுல அடுத்த நாளே பொண்ணும் மாப்ளையும் ஊருக்குக் கிளம்பிட்டாங்க.

மாசம் ஓடிப்போச்சு. ஒருநாள் ராஜேஸ்வரிக்கு ஒரு போன் வந்துச்சுன்னு கடைகாரன் கூப்பிட போன கையில எடுத்தப்பஅம்மா நான் மகாலட்சுமி பேசறன். நீ எப்படி இருக்க. உன் கிட்ட ஒரு நல்ல விஷயம் சொல்லணும்னுதான் பண்ணன்னு அவ சொல்றப்பவே ராஜேஸ்வரி கண்கள்ல இருந்து கண்ணீர் வழிய ஆரம்பிச்சுருச்சு. மவராசியா இருடின்னு அவள வாழ்த்திட்டு திரும்பி வந்த ராஜேஸ்வரி எதையோ ஒன்ன மென்னு முழுங்கிக்கிட்டே வீட்டுக்கு வந்து சேந்தா.  

ஏழாம் மாசம் வீட்டுக்குள்ள மகாலட்சுமி நுழையறப்பவே கத்த ஆரம்பிச்சிட்டா. “ஏன்மா உனக்கு அசிங்கமாவே இல்லையா? அந்த ஆளுக்குதான் அறிவு இல்ல. உனக்குமா. என்னதான் ஜென்மங்களோ?”

என்ன என்னடி பண்ண சொல்ற. அந்த ஆளப்பத்திதான் உனக்குத் தெரியுமே. இங்க பாரு அந்த ஆளு என் புருஷன். அவன் நீ பொறந்தப்ப என்ன தெரியுமா சொன்னான்.”

நிறுத்துமா. நீ இதச் சொல்லியே பன்னிரண்டு பெத்துட்ட. இப்ப பதிமூணாவது. பொண்ணும் ஏழாம் மாசம். அம்மாவும் ஏழாம் மாசம். மாத்தி மாத்தி வளைகாப்பு செஞ்சிக்குவோம். நல்லா இருக்குமா தாயின்னுமகாலட்சுமி சொல்றப்பவே மூலையில உக்காந்து அழுதுகிட்டு இருந்தா ராஜேஸ்வரி.

ராஜேஸ்வரிக்குப் பதிமூணாவதா பொறந்தது பொண்ணு. மகாலட்சுமிக்கும் பொண்ணு. மகாலட்சுமியோட புருஷன் அமைதியா இருக்கறதாலயும் அவங்க வீட்டுல மகாலட்சுமிய எல்லாருக்கும் புடிச்சுப் போனதாலயும் எந்தப் பிரச்சினையும் இல்ல. அப்பாவோட முரட்டு குணம் தெரிஞ்ச பொண்ணும் அமைதியாயிட்டா.

ஒரு  வருஷம் கழிச்சு மகா போன் பண்ணா அம்மாவுக்கு. என்னடின்னு ராஜேஸ்வரி கேக்கறப்பவேநீ எத்தனாவது மாசம் சொல்லுன்னு சொன்னா?”

ராஜேஸ்வரி வெக்கப்பட்டுக்கிட்டேஇது நாலாவது மாசம்டின்னுசொன்னா.அதான் தெரியும்மே அதுக்குதான் கேட்டன்.

நான் இப்ப மூணு. ஏழாம் மாசம் வரன் பாத்துக்கோன்னுபோன வச்சிட்டா.

ஆஸ்பத்திரியே அன்னைக்கு அரக்க பரக்க கிடந்துச்சி. கிருஷ்ணன் துள்ளிக் குதிச்சிட்டுக்கிட்டு இருந்தான். “ ஏய் ஆத்தா எனக்கு ரெட்ட புள்ள. எப்படி சிங்கங்க மாதிரி இருக்காணுங்க பாருன்னுஎல்லாருக்கும் இனிப்பு வாங்கி கொடுத்துட்டு இருந்தான்.

மகாலட்சுமி வயித்த தள்ளிக்கிட்டு ராஜேஸ்வரி இருந்த அறைக்குள்ள நுழைஞ்சப்ப வெக்கத்துல கண்ண மூடிக்கிட்டுப் படுத்து இருந்தா அவ.

இந்த வெக்கத்துல ஒன்னும் குறைச்சல் இல்ல உங்களுக்கு. வெக்கத்தப்பாரு வெக்கத்த. காலம் போன காலத்துல ரெட்ட புள்ள வேற. இந்தக் கொடுமைய எங்க போய் சொல்வன் நானுன்னுஅவ புலம்பிக்கிட்டே தன்னோட தம்பிங்க கன்னத்த கிள்ளி முத்தம் தந்துக்கிட்டு இருந்தா. ஓரமா நின்னுக்கிட்டு இருந்த மாப்பிளஅத்த உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்னுஆரம்பிச்சார்.

சொல்லுங்க மாப்பிளைன்னுராஜேஸ்வரி கேக்க, “உங்களுக்கு இப்ப பதினாலு புள்ள ஆயிருச்சு. எனக்குப் பொறக்கப் போறது ரெண்டாவது. நானும் மகாலட்சுமியும் ரெண்டு போதும்னு முடிவுக்கு வந்துட்டோம். அவ குழந்தை பொறக்கறத நிறுத்திக்கிட்ட பிறகும் நீங்க புள்ள பெத்துக்கிட்டு இருந்திங்கனா எங்க எல்லாருக்கும் அசிங்கம். அதனால ஆபரேஷன் பண்ணிருங்க அத்தன்னுதயங்கித் தயங்கி அவர் சொல்லி முடிச்சப்ப ராஜேஸ்வரி கண்கள்ல இருந்து தண்ணி வழிய ஆரம்பிச்சிருச்சு.

மகாலட்சுமிக்குப் பையன் பொறந்தான். குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷனுக்குத் தயார் ஆயாச்சு. பக்கத்துப் படுக்கையில ராஜேஸ்வரியும் படுத்து இருந்தா அதே ஆபரேஷனுக்கு.

அத்த ஒன்னும் கவலப் படாதீங்க. மாமா ஊருல இருந்து வரதுக்குள்ள எல்லாம் நல்லபடியா முடிஞ்சிரும். அவர் வந்த பிறகு சொல்லிக்கலாம்னுமருமகன் சொல்லி முடிக்கறதுக்குள்ளயே அவ ஒடுங்கியும் நடுங்கியும் படுத்து இருந்தா.

எதிர்த்த வீட்டுக்காரி வேகமா ஓடி வந்தா. “அண்ணி அண்ணி உள்ள போய் கதவ சாத்திக்கோங்க. அண்ணனுக்கு யாரோ தகவல் சொல்லிட்டாங்க. கத்திய எடுத்துக்கிட்டு ஓடி வரார். மாப்ள நீங்களும் எங்கயாவது போயிருங்க. அந்த ஆளு கொல கூட பண்ணத் தயங்க மாட்டான்னுசொல்லி முடிச்சா.

ராஜேஸ்வரி சின்னப்புள்ளைங்கள கூப்பிட்டுக்கிட்டு உள்ள போய் கதவ சாத்திக்கிட்டு அழுதுகிட்டே கிடந்தா. வெளியில பயங்கர சத்தம். கிருஷ்ணனோட குரல் தெரு முழுக்கக் கேட்டுச்சு. நல்லா தண்ணி அடிச்சு இருந்தான்.

எவன்டா என்ன கேக்காம என் பொண்டாட்டிக்கு குடும்பக்கட்டுப்பாடு பண்ணது. மருமகன்னா என்ன வேணா பண்ணலாமா? என் பொண்ணதான் அவனுக்குக் கட்டிக் கொடுத்தன். அவன் பொண்டாட்டிக்கு அவன் பண்ணது சரி. என் பொண்டாட்டிக்கு ஏன் பண்ணான்.

பெரியவங்க கல்யாணத்து அன்னைக்கு என்ன சொன்னாங்க. பதினாறும் பெத்து பெருவாழ்வு வாழணும்னு. அதுவும் அத சொன்னது எங்க அப்பத்தா. அது வாக்க காப்பாத்ததாண்டா இவ்ளோ போராடினன். பதினாலுதாண்டா பெத்தன். பதினாறு பெத்துமுடிக்கறதுக்குள்ளயே இப்படி பண்ணிடிங்களேடா. பாவிப்பயலுகளா?ன்னுகிருஷ்ணன் போட்ட கூப்பாடு, அவனோட அழுகை, கோபம், வெறி எல்லாம் சேந்து காத்துல கரைஞ்சிக்கிட்டு இருந்துச்சு.

மாமா வந்து அத்த முகத்த பாருங்க. நான் பண்ண தப்புக்கு அவங்க என்ன பண்ணுவாங்க. எந்திரிச்சு வாங்க. ஒருமுறை பாருங்க. இத்தன வருஷம் தான் பேசாமலே இருந்துட்டீங்க. கடைசியா ஒருமுறை பாக்கவாவது செய்யலாம்லன்னுமருமகன் சொல்றப்ப கைய உதறிட்டு எந்திரிச்சு நடக்க ஆரம்பிச்சுட்டார்.

எத்தன முறையா உன் கிட்ட சொன்னன். ஏழாவது புள்ள அப்பவே ஆபரேசன பண்ணிரு பண்ணிருன்னு தலப்பாடா அடிச்சுகிட்டன். கேட்டியா நீ. அன்னைக்குப் பண்ணியிருந்தா இந்தக் கற்பப் பையில பாழாப் போன கேன்சர் வந்திருக்குமா? அவளும்தான் இவ்வளவு சீக்கிரமா செத்து இருப்பாளா. நீங்கலாம் திருந்தவே மாட்டிங்கையா?ன்னு அந்த ஆஸ்பத்திரி நர்ஸ் சொன்ன வார்த்தைகள் கிருஷ்ணனனோட காதுல ஒலிச்சிக்கிட்டே இருந்துச்சு.

சேகண்டி சத்தம் எழுப்ப, சங்கு தெருவெங்கும் முழங்க, பறை இசை காதுகளைத் தொலைத்து கால்களை ஆடவைக்க ரெண்டு பெண்களும் அழுது புலம்ப புள்ளைங்க எல்லாம் பாடையைத் தோளில் ஏந்த பேரப்பிள்ளைகள் தீப்பந்தம் சுற்ற கிளம்பினாள் ராஜேஸ்வரி.

புள்ளக்குட்டிக்காரிடா? எப்படி கம்பீரமா போறான்னுஎதிர்த்த வீட்டுக்காரியின் பேச்சு ராஜேஸ்வரியின் காதில் உள்நுழைய எத்தனித்த படியே கிடந்தது.        

பா. ஜெய்கணேஷ்

             

 


No comments:

Post a Comment