தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Wednesday, July 1, 2020

தமிழ் நூல் தொகுப்புப் பாடல்கள் - சங்க இலக்கியம் குறித்த தொகுப்புப் பாடல்கள்


      


    சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு குறித்த பழம் பாடல்கள் மனப்பாடக் கல்விமுறையையொட்டி எழுதி வைக்கப்பட்டுள்ளன. காலங் காலமாகச் சொல்லப்பட்டு வந்த இப்பாடல்களில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு தொகுப்புப் பழம்பாடல் இரண்டும் இன்றைய காலத்திலும் தொடர்ந்து பலரின் மனங்களில் பதிந்த பாடல்களாக உள்ளன. அதன் தொடர்ச்சியாக நூல்களின் ஆசிரியர்கள், கட்டமைப்பு ஆகியவை குறித்தும் பல பாடல்கள் உள்ளன. அவற்றைத் தொகுத்து வழங்குவதாக இப்பதிவு அமைகிறது. இதன் தொடர்ச்சியாக வேறு சில நூல்களின் தொகுப்புப் பாடல்களும் அடுத்த பதிவுகளில் இடம்பெறும்.

சங்க இலக்கியம்:

எட்டுத்தொகை

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று

இத்திறத்த எட்டுத் தொகை

1. நற்றிணை, 2. குறுந்தொகை, 3. ஐங்குறுநூறு, 4. பதிற்றுப்பத்து, 5. பரிபாடல், 6. கலித்தொகை. 7. அகநானூறு, 8. புறநானூறு

 பத்துப்பாட்டு

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி  - மருவினிய

கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து.

1. திருமுருகாற்றுப்படை, 2. பொருநராற்றுப்படை, 3. பெரும்பாணாற்றுப்படை, 4. சிறுபாணாற்றுப்படை, 5. மலைபடுகடாம் என்னும் கூத்தராற்றுப்படை, 6. மதுரைக்காஞ்சி, 7. நெடுநல்வாடை, 8. குறிஞ்சிப்பாட்டு, 9. பட்டினப்பாலை, 10. முல்லைப்பாட்டு.

பத்துப்பாட்டில் பாடப்பட்டோர்

முருகாறு செவ்வேள் பொருநாறு பாலை

கரிகால் நெடுஞ்செழியன் காஞ்சி  - இருபானும்

நல்லியக் கோடன், இளந்திரையன் நன்னன்கடாம்

கல்வித் தலைவர் கருது.

பத்துப்பாட்டும் பாடினோரும்

முருகு நல்வாடையும் கீரன்; முடத்தாமக் கண்ணி பொருந்

மருவு பாண், பாலை உருத்திரங் கண்ணன்; மகிழ்சிறு பாண்

புரியுநத் தத்தன் மருதம்நன் காஞ்சி நப்பூதன் முல்லை

வருமெங் கபிலன் குறிஞ்சி, மலைபடுகடாம் கௌசிகனே.

ஐங்குறுநூறு

மருதம் ஓரம்போகி நெய்தல் அம்மூவன்

கருதுங் குறிஞ்சி கபிலன் - கருதிய

பாலை ஓதலாந்தை பனிமுலை பேயனே

நூலையோ தைங்குறு நூறு

அகநானூறு பாட்டு வைப்புமுறையும் திணைப்பாகுபாடும்

பாலைவியம் எல்லாம் பத்தாம் பனிநெய்தல்

நாலு நளிமுல்லை நாடுங்கால் மேலையோர்

தேரும் இரண்டெட்டு இவைகுறிஞ்சி செந்தமிழின்

ஆறு மருதம் அகம்

அகநானூறு பாட்டு வைப்புமுறையும் திணைப்பாகுபாடும்

வியமெல்லாம் வெண்டேர் இயக்கம் கயமலர்ந்த

தாமரையா றாகத் தகைபெறீஇக் காமர்

நறுமுல்லை நான்காக நாட்டி வெறிமாண்ட

எட்டும் இரண்டும் குறிஞ்சியாக் குட்டத்து

இவர்திரை பத்தா, இயற்பட யாத்தான்

தொகையில் நெடியதனைத் தோலாச் செவியான்

வகையின் நெடியதனை வைப்பு. ( சங்ககால ஆராய்ச்சி அட்டவணை)

அகநானூறு பாட்டு வைப்புமுறையும் திணைப்பாகுபாடும்

ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை; ஓதாது

நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை; அன்றியே

ஆறாம் மருதம்; அணிநெய்தல் ஐயிரண்டு

கூறாதவை குறிஞ்சிக் கூற்று  ( சங்ககால ஆராய்ச்சி அட்டவணை)

கலித்தொகை தொகுப்பாசிரியர்

நாடும் பொருள்சான்ற நல்லந் துவனாசான்

சூடும்பிறைச் சொக்கன் துணைப்புலவோர் - தேடுவார்

கூட்டுணவே வாழ்த்தோடு கொங்காங் கலியினையே

கூட்டினான் ஞாலத்தோர்க்கு ( பெருமழைப்புலவர் பதிப்பு 1972)

கலித்தொகையின் திணை அமைப்பு

போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி

யாக்கமளி  யூடலணி மருத - நோக்கொன்றி

யில்லிருத்தன் முல்லை யிரங்கியபோக் கேர்நெய்தல்

புல்லுங் கலிமுறை கோப்பு

கலித்தொகையினைப் பாடிய புலவர்கள்

பெருங்கடுங்கோன் பாலை குறிஞ்சி கபிலன்

 மருதன் இளநாகன் மருதம் - அருஞ்சோழ

நல்லுருத்திரன் முல்லை நல்லந்துவன் நெய்தல்

கல்விவலார் கண்ட கலி.

கலிப்பா எண்

இறைவாழ்த்தொன் றேழைந்து  பாலைநா லேழொன்

றிறைகுறிஞ்சி யின் மருதம் ஏழைந்து - துறைமுல்லை

ஈரெட்டொன் றாநெய்தல் எண்ணாஙொன் றைங்கலியாச்

சேரெண்ணோ மூவைம்ப தே.

கலித்தொகைச் சிறப்புப் பாடல்

திருத்தகு மாமுனிசிந் தாமணி கம்பன்

விருத்தக் கவிவளமும் வேண்டேம் - திருக்குறளோ

கொங்குவேண் மாக்கதையோ கொள்ளேம் நனியார்வேம்

பொங்குகலி இன்பப் பொருள்

பதிற்றுப்பத்து பாட்டுடைத் தலைவர்கள்

இமையவரம்பன் பல்யானைக் குட்டுவன் இன்களங்காய்

அமைகண்ணி நார்முடிச்சேரல் செங்குட்டுவன் ஆடுகொள்வேள்

தமிழியற் செல்வக் கடுங்கோ தகடூஇரும் பொறையன்

இமிழ்குடக்கோ இளஞ்சேரல் பதிற்றுப்பத்து ஏற்றவரே.

 பதிற்றுப்பத்தினைப் பாடிய புலவர்கள்

கல்விமிகு குமட்டூர் கண்ணர் பாலைக்கவுதமனார்

பல்யாற்றுக் காப்பியனார் பரணர் காக்கைப் பாடினியார்

நல்ல கபிலர் அரிசில்கிழார் நலம் சிறந்த

தொல் பெருங்குன்றூர் கிழார் பதிற்றுப்பத்துச் சொல்லினரே.

பரிபாடலில் பாட்டுடைத் தலைவர்

திருமாற்கு இருநான்கு; செவ்வேட்கு முப்பத்

தொருபாட்டு காடுகாட்கு ஒன்று மருவினிய

வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப

செய்ய பரிபாடல் திறம்.


3 comments:

  1. அருமையான தொகுப்பு...
    பழம்பாடல்களின் வழி நூற்சிறப்புணர்த்தும் பாங்கு போற்றுதற்குரியது.

    ReplyDelete
  2. அருமையான பணி ஐயா! வாழ்த்துக்கள்,நன்றி

    ReplyDelete