பரோட்டா எல்லாருக்கும் சாப்பிடப் பிடிக்கும். எனக்கு போடப் பிடிக்கும். ரொம்ப நல்லாவே போடுவன்.
சின்னப் பசங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடற உணவு. எங்க கடைக்கு சாப்பிட வர பொக்கை வாய்த்தாத்தா ஒருத்தர் பிச்சிப்போட்டு குருமாவ ஊத்தி ஊறவச்சி வாய்க்குள்ள அங்கயும் இங்கயுமா தள்ளி உள்ளதள்ளும். ஒருவழியா ஒருமணிநேரம் போராடி தின்னுமுடிக்கும். இவ்ளோ போராடி இத சாப்பிடனுமான்னு கேப்பன். அடப்போடா அதோட ருசியே தனிடான்னு சொல்லிப் போட்டு போகும்.
இரவு சாப்பிட்டா வயிறு வலிக்கும் செரிக்காது பொதுவா உடம்புக்கு கெடுதினு பேசற பல பெருசுங்களும் பரோட்டாவ விழுந்தடிச்சு ஓசியில யாராவது வாங்கித் தந்து தின்றப்ப தட்ட பிடுங்கி போட்டுறனும்னு தோணும். எவ்ளோதான் பரோட்டவ பல பேர் திட்டனாலும் அது மேல இருக்கற காதல் எனக்கு எப்பவும் குறைஞ்சது கிடையாது.
சின்னவயசுல எங்க கடைக்கு திருவிழாக்கு பரோட்ட மாஸ்டருங்க வருவாங்க. நாலுநாள்ல இரண்டு மூட்டை மாவு பரோட்டா போடுவாங்க. பரோட்டா மாவு பிசையறதுலதான் அதோட சுவை இருக்கு. அப்பறம் பீடா பிடிக்கணும் அதான் உண்ட. அப்பறம் ஊறனபிறகு விசுறனும். விசுறதுனா மாவு உருட்டி இடக்கையால பிடிச்சு வலக்கையால பெருசா ஆக்கிக்கிட்டே போறது. அப்புறம் அத சுத்தி அடுக்கி அப்புறம் உருட்டி கல்லுல போட்டா சுவையான பரோட்டா ரெடி. பரோட்டா போடறதுல சவாலான விஷயம் விசுறதுதான். புதுசா ஒருத்தருக்குக் கொடுத்தா விசுறன்னு துணிதுவைச்சு அடிச்சு கிழிச்சு பரோட்டா மேல ஒரு கொடும் கொலை நிகழும். இதையேதான் நானும் தொடக்கத்துல பண்ணன். பயிற்சியில வாய்க்கப்பெறாதது இந்த உலகத்துல ஒன்னும் இல்ல. அப்படி தான் இந்தப் பரோட்டாக் கலையும் எனக்கு கைவரப் பெற்றது.
மாமா சொல்லிட்டார். நைட் ஹோட்டல் ஆரம்பிக்கனும். எப்படியாவது கத்துக் கோடான்னு. அப்படி கத்துக்கிட்டு அதுல ஒரு பெரிய மாஸ்டரா மாறினன். பின்னடிலாம் திருவிழாக்கு வெளியில இருந்து ஆள்வைக்காம நானே இரண்டு உதவியாளர்களோட சமாளிக்க ஆரம்பிச்சுட்டன். காலேஜ்ல கூட படிக்கிற பொண்ணுங்க பரோட்டா வாங்க கடைக்கு வரப்பலாம் கூட நானே சுட்டுத்தருவன். உனக்கு கூச்சமா இல்லையாடான்னு நண்பனுங்க கேப்பாங்க. இதுல என்ன கூச்சம் என் உழைப்பு என் காசு நான் ஏன் கூச்சப்படணும்னு சொல்லிட்டு வேலையப் பாப்பன்.
முதுகலை படிக்க சென்னை வந்தபிறகும் முனைவர் பட்ட ஆய்வாளரான பிறகும் ஆசிரியர் ஆன பிறகும் கூட ஊருக்குப் போனா பரோட்டா போடறதுமேல இருக்கற ஆர்வம் குறைஞ்சதே இல்ல. கடைக்கு வரவங்க கிட்ட எங்க மாமா பெருமையா சொல்வாரு இவன் பேராசிரியரா இருக்கான்னு. அவங்க ஆச்சரியத்துல வாய பிளந்துகிட்டு போவாங்க.
ஒருநாள் சென்னையில ஒரு சாலையோரக் கடையில பயங்கர கூட்டம். மாஸ்டர் லீவு. ஒரு தாத்தா போராடிக்கிட்டு இருந்தார். டிப்டாப் டிரஸ்ல நான் களத்துல இறங்கிட்டன். அரைமணி நேரத்துல கூட்டம் கலைஞ்சிருச்சு. பரோட்டா வாங்கன வங்க பார்த்த பார்வை ஆயிரம் கதை சொல்லுச்சு எனக்கு. தாத்தா ரொம்ப சந்தோஷப்பட்டார்.
பரோட்டா சிலோன் பரோட்டா வீச்சு பரோட்டா கொத்து பரோட்டா இத எல்லாத்தோடயும் முட்டை சேத்தா அதுக்கு ஒரு பேரு அப்படின்னு பலவகைல பரோட்டா போடுவோம். கொத்து பரோட்டா போடறப்பதான் என்னோட அதிகபட்ச இசையறிவ வெளிப்படுத்துவன். வீட்ல சொல்லுவன் வாத்தியார் வேல கிடைக்க லனாலும் பரவாயில்லை கவலைபடாதீங்க. பரோட்டா போட்டு புழைச்சுக்குவன்னு. இன்னைக்கு அதுக்கான அவசியம் இல்ல. எனக்குப் பிடிச்ச வாத்தியார் வேல ரொம்ப சந்தோஷத்தை தருது. சாலையோரக் கடைகள்ல யாராவது பரோட்டா போடறன்னு துணிதுவைச்சிக்கிட்டு இருந்தா வர கடுப்புக்கு அளவே இல்லாம போயிரும்...
No comments:
Post a Comment