தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Thursday, July 2, 2020

ஆய்வறிஞர் வரிசை - பேராசிரியர் பா. ரா. சுப்பிரமணியன்



    பா(வூர் சத்திரம்) ரா(ஜகோபால்) சுப்பிரமணியன் (20.12.1941) அண்ணாமலைப்  பல்கலைக்கழகத்தில்  முதுகலைப்  பட்டம் பெற்றார் (1962); கேரளப் பல்கலைக் கழகத்து மொழியியல் துறையில் பேரா. . . சுப்பிரமணியம் மேற்பார்வையில் தமிழக நாட்டுப்புறப் பாடல்களில் ஆய்வுசெய்து முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார் (1970).

சிந்து வெளி நாகரிக எழுத்துக்களை ஆய்வுசெய்த அஸ்கோ பர்போலாவிற்கு (Asko Parpola)  தமிழில் உதவிபுரிய கோபன்ஹேகன் நகரில் ஸ்காந்திநேவிய ஆசிய நிறுவனத்தில் ஓராண்டு (1971-72) பணிபுரிந்தார்;  பின்னர் ஜெர்மனியில் கொலோன் பல்கலைக்கழக இந்தியவியல் துறையில் 12 ஆண்டுகள் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார் (1972 -1983); பின்னர் மூன்று ஆண்டுகள் (1983 --86) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரகராதித் துறையில் பதிப்பாசிரியராகப் பணிசெய்தார்;

1986 இல் க்ரியா வெளியீட்டு நிறுவனத்தின் தற்காலத்தமிழ் அகராதியின் முதன்மைப் பதிப்பாசிரியராகச் செயல்படத் தொடங்கிய இவர் அதன் பிறகு அகராதித் துறையில் அரிய பல நூல்களை வெளியிட்டார்.

அந்த அகராதி வெளியான பின் (1992) மொழி அறக்கட்டளையில் இணைந்து 

தற்கால மரபுத்தொடர் அகராதி (1997), 

தமிழ் நடைக் கையேடு (2001), 

சொல்வழக்குக் கையேடு (2005)

ஆகிய நூல்களுக்கும்  முதன்மை பதிப்பாசிரியராக இருந்தார். இந்த நூல்கள் எல்லாமே இந்தத் துறையில் தனித்த தடம் பதித்த நூல்கள்.

வெளிநாட்டில் தமிழ்க் கற்பவர்களுக்காகத்  தமிழ் உரைநடைத் தொகுப்பு (Tamil Prose Reader)  ஒன்றும் உருவாக்கி வெளியிட்டிருக்கிறார் (2008). சொல்வலை வேட்டுவன் (கட்டுரைத் தொகுப்பு) 2009இல் வெளியாகியுள்ளது

இவருடைய நீண்ட காலத் திட்டப்பணியான தற்காலத் தமிழில் இணைந்து வரும் சொற்சேர்க்கைகளுக்குத் தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி ஒன்றை 2017 ஆம் ஆண்டு வெளியிட்டார். பாரதிபுத்தகாலயம் வழி வெளியிடப் பட்ட இந்த அகராதி தமிழில் முதல் அகராதியாகவும் முன்னோடி அகராதி யாகவும் விளங்குகிறது.

இதனைத் தொடர்ந்து சங்க இலக்கியங்களின் சொல்வளங்களைபொருளோடு வெளிப்படுத்த இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ்ச் சொல்வளம் - சங்க இலக்கியம் தொகுதி - 1: பூவுலகு (2018)

தமிழ்ச் சொல்வளம் - சங்க இலக்கியம் தொகுதி - 2 : உணவு, உடை, அணிகலன் (2019)

இந்த இரண்டு நூல்களும் கோயம்புத்தூரில் உள்ள வேலா பதிப்பகம் வழியாகக் கிடைக்கின்றது.

மொழி அறக்கட்டளையில் திட்ட இயக்குநராகவும் இருந்துவருகிறார். எஸ்.ஆர். எம். பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராய பரிதிமாற்கலைஞர் விருதினை 2014 ஆகஸ்டு மாதம் இவர் பெற்றிருக்கிறார்.

ஆய்வை எவ்வாறு செய்யவேண்டும், அதன் நுட்பங்களை எவ்வாறு அறிய வேண்டும், என்பதைப் பேராசிரியரின் ஒவ்வொரு கட்டுரையும் அவரின் தொகுப்புகளும் எல்லோருக்கும் முன்மாதிரியாக நின்று இன்றும் அறிவித்துக் கொண்டிருக்கின்றது.









இந்த நூல்களில் பலவும் மொழி அறக்கட்டளையிலும் வெளியிட்ட பதிப்பகங்களின் வழியாகவும் இணைய வழியாகவும் கிடைக்கின்றன.

 



4 comments:

  1. சிறப்பான பதிவு

    ReplyDelete
  2. பேராசிரியர் பா ரா சுப்பிரமணியன் ஐயாவின் ஆய்வுப்பணி போற்றுதலுக்குரியது

    ReplyDelete