எனது அனுபவத்தினூடே
தமிழ்ப் பேராசிரியர் என்பவர் ஆசிரியர்
பணி என்பதைக் கடந்து பல்வேறு தளங்களில் செயல்படவேண்டிய ஒருவர் என்பதைத் தன் இயங்கியலின்
வழி தொடர்ந்து அடையாளப்படுத்தி வருபவர் முனைவர் கி. பார்த்திபராஜா அவர்கள். முதுகலை
வகுப்பில் முதன்முதலாக கி. பார்த்திபராஜா அவர்களை முனைவர்பட்ட ஆய்வாளராகச் சந்தித்தபோது
இவர் குரலின் கம்பீரமும், உடை நேர்த்தியும், பாடம் நடத்தும் முறையும் என்னைக் கவர்ந்தன.
ஒரு ஆய்வாளர் எப்படி இருக்கவேண்டும்
என்றும் எப்படிச் செயல்பட வேண்டும் என்றும் தனது உழைப்பாலும் செயலாலும் தொடர்ந்து எங்களுக்கு
போதித்தவர். வகுப்பறை மட்டுமல்லாது வெளியில் பரந்துவிரிந்து இருக்கும் தமிழ் உலகத்தை
எனக்கு அறிமுகப்படுத்தியவர். வீதி நாடகங்கள் வழியாக எனக்கு ஏதோ கொஞ்சம் நடிக்கவரும்
என்ற நம்பிக்கையை முதன்முதலில் விதைத்தவர். பெண்கள் மீது நிகழ்த்தப்படும் குற்றங்களைத்
தடுக்க கமிஷனர் அலுவலகத்தின் வழியே கொடுக்கப்பட்ட விழிப்புணர்வு தொடர்பாக வீதிநாடகங்கள்
பலவற்றில் என்னை நடிக்க வைத்து பேர் பெற்றுத் தந்ததோடு அதற்கான தொகையையும் வாரா வாரம்
வழங்கியவர். அந்தத் தொகையின் அவசியம் அன்றிருந்த நிலையில் எவ்வளவு பேருதவி என்பது சொல்லிமாளாது.
இந்த நாடக அனுபவமே பின்னாளில் மேடை நாடகங்கள் பலவற்றில் நான் நடிக்க பேருதவி புரிந்தது.
பார்த்திபராஜா அவர்களின் விடுதி அறை
என்பது எனது வீடு போன்றது. எப்போது வேண்டுமானாலும் சென்று அங்கு இருக்கும் நூல்களை
வாசிப்பது, சிற்றிதழ்களை வாசிப்பது என்பது எனக்கு அவர் தந்த சுதந்திரம். கோணங்கி தொடங்கி
தமிழின் சில இன்றியமையா ஆளுமைகளை இவர் அறையின் வழியே தான் நேரடியாகத் தெரிந்துகொண்டேன்.
பல்வேறு கூட்டங்களுக்குச் செல்வது, பலரோடு அறிமுகம் ஆவது, அவர்களோடு கலந்துரையாடுவது
முதலான பல்வேறு செயல்பாடுகளை இவரின் வழியாகவே நான் அறிந்துகொண்டேன்.
நான் ஆய்வாளராக இருக்கும்போதே நூல்
எழுதவேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டியது பார்த்திபராஜா அவர்கள் பாரதியார் குறித்து
எழுதிய நூலே ஆகும். அந்த வெளியீட்டு விழாவிற்குச் சென்றபோது இவரின் நூல்களை வெளியிட
வந்த ஆளுமைகளைப் பார்த்தபோது அதனை எனக்கான உந்துசக்தியாக எடுத்துக் கொண்டேன். அதன்
விளைவே நான் ஆய்வாளராக இருந்தபோதே மூன்று நூல்களை வெளியிட நேர்ந்தது.
அதற்குப் பிறகு அவர் கல்லூரிப் பணியில்
சேர்ந்தபோதும் இடையறாமல் உழைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு பெருவியப்பே
மிஞ்சும். நான் சோர்வடையும் போதெல்லாம் பார்த்திபராஜா அவர்களின் செயல்பாடுகள் எனக்குப்
பெரும் நம்பிக்கையளித்தன. எழுத்து, அரசியல், நடிப்பு, நாடக உருவாக்கம், பேச்சு எனப்
பலதளங்களையும் தனக்கான அடையாளமாக்கி முனைவர் கி. பார்த்திபராஜா அவர்கள் இன்றும் இயங்கிவருவது
அவர் தமிழ் மீது கொண்டிருக்கிற பற்றை நமக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
பார்த்திபராஜாவின் பயணங்கள்
வானம் பார்த்த பூமி, கருவக்காட்டுப் பிரதேசம், தண்ணியில்லாக் காடு என்றெல்லாம் பலவிதமாக அழைக்கப்படும் இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், பெருவாக்கோட்டையில் பிறந்தவர் முனைவர் கி.பார்த்திபராஜா.
தந்தையார் சி.கிருஷ்ணன் – தாயார் கி.லட்சுமி அம்மாள். பள்ளி ஆசிரியராகிய தந்தையின் கண்டிப்பில் வளர்ந்தார் கி.பார்த்திபராஜா. பெருவாக்கோட்டை, மங்கலக்குடி, ஓரியூர் ஆகிய இடங்களில் பள்ளிக்கல்வியைப் படித்த இவர், காரைக்குடி ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் மேல்நிலைப்பள்ளியில் உயர்நிலை வகுப்பையும் மு.வி.மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை வகுப்பையும் நிறைவு செய்தார். காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தையும் பெற்றார். தற்போது திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியின் தமிழ் மற்றும் முதுகலை ஆய்வுத்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்
சென்னை மெரினா கடற்கரை சாலையில் கம்பீரமாக நிற்கும் திருவள்ளுவர் சிலைக்கு எதிரில்தான் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறை. பேராசிரியர் பொற்கோ, பேராசியர் வீ.அரசு ஆகியோரிடம் பயின்றார் பார்த்திபராஜா. பேராசிரியர் வீ.அரசு அவர்களை வழிகாட்டியாகக் கொண்டு தனது முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ளத் தொடங்கினார். ‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வில் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்’ என்பதே இவரது ஆய்வுத் தலைப்பு.
1999 ஆம் ஆண்டில் இவர் முனைவர் பட்டத்திற்குச் சேர்ந்த காலத்தில், சென்னைக்கு வந்து சேர்ந்தார் பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு வருகைதரு பேராசிரியராக வந்த சிவத்தம்பி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் விருந்தினர் அறையின் கீழ்த்தளத்தில் தங்கினார்.
தன் வாழ்க்கையில் இயற்கை தனக்கு அளித்த பெரும்கொடை பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் அறிமுகம் என்று நினைவுகூர்கிறார் கி.பார்த்திபராஜா.
‘பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களுக்கு ஓர் உதவியாளர் தேவைப்படுகிறார், அவர் சொல்லச் சொல்ல எழுதும் பணி. நீ பணியேற்கிறாயா?’ என்று தனது வழிகாட்டி வீ.அரசு கேட்க, கிடைத்தற்கரிய அந்த வாய்ப்பினைப் பணிவுடன் ஏற்றார் இவர். இரண்டாண்டுகள் சிவத்தம்பி அவர்களோடு வாழ்க்கை இவரைப் பிணைத்தது. இலங்கை நாட்டின் கொழும்புவில் குடும்பத்தினர் இருக்க, தனியாக வந்து சென்னையில் தங்கிய பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களுக்கான அத்தனை பணிகளையும் மனமுவந்து ஏற்றார் பார்த்திபராஜா.
தன்னை, கா.சிவத்தம்பி அவர்கள், ‘பெறா மகன்’ என்று விளித்துக் கொண்டாடியதைக் கண்களில் நீர் கசிய நினைவுகூர்கிறார் கி.பார்த்திபராஜா.
‘’அறிவுக் கடலை அருகிருந்து தரிசிக்கும் வாய்ப்பு யாருக்கு வாய்க்கும்? எனக்கு வாய்த்தது. கனத்த சரீரமுடையவர் பேராசிரியர் கா.சிவத்தம்பி. அவரது உடலெல்லாம் படிப்பு; உணர்வெல்லாம் தமிழ். தமிழின் ஆகச்சிறந்த மகாமேதை ஒருவருக்கு உதவியாளராக இருக்கிறேன் என்பதன் கனதியை நான் அப்போதே உணர்ந்திருந்தேன். ‘உன்னைச் சிரமப்படுத்துறேனா ராசா…’ என்று கனிந்து கேட்கும் பேராசிரியரிடம், ‘ஐயா… நான் தமிழுக்கு அல்லவா பணி செய்கிறேன்…’ என்று மனதாரச் சொல்வேன். தனது கனத்த இரு கைகளாலும் எனது முகத்தினை ஏந்தி, நெற்றியில் தகப்பனுக்குரிய வாஞ்சையோடு முத்தமிடுவார் பேராசிரியர் கா.சிவத்தம்பி’’ என்று தழுதழுக்கிறார் பார்த்திபராஜா.
இந்திய ஆட்சிப்பணியிலிருந்தபோதும்
நாடகத்தின் மீதும், திரைப்படத்தின் மீதும் தீராத வாஞ்சை கொண்டிருந்த ஞானராஜ சேகரனின் ‘பாரதி’ திரைப்படம் வெளியாயிற்று. அதனையொட்டியே ‘தலித்முரசு’ இதழில் வே.மதிமாறன் பாரதியைக் குறித்த ஒரு தொடர் எழுதி வந்தார். ‘பாரதிய ஜனதா பார்ட்டி’ என்பது அத்தொடரின் குசும்புத் தலைப்பு.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாரதி திரைப்படம் குறித்த விவாதத்தில், தனது சக மாணவர்களோடும் வழிகாட்டியோடும் கருத்துப் போர் நடத்தினார் கி.பார்த்திப ராஜா. ‘தமிழ் படிக்கிறவங்கள்ள பெரும்பாலானோர் பாரதி பைத்தியங்களாக இருக்கிறார்கள். பாரதியின் கவிதை வரிகளை சிலவற்றை மனப்பாடம் செய்துவிட்டு, அவனது வாழ்க்கைச் செய்திகளில் சிலவற்றை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படித்துவிட்டு, அவனுக்கு வால்பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்ற கடுமையான விமர்சனத்தைத் தாங்க முடியாமல், கனத்த இதயத்தோடு கா.சிவத்தம்பியை வந்து சந்தித்தார்.
‘இந்தக் கேள்விக்கெல்லாம், நீ விரிவாக பதில் எழுதேன்…’ என்று தூண்டினார் கா.சிவத்தம்பி. ஆறுமாத காலம் பாரதியை விரிவாகப் படிப்பது என்று எடுத்துக் கொண்டு, இறுதியில் ‘பாரதி – கடந்த நூற்றாண்டுக் கவிஞன் பற்றிய மதிப்பீடு’ என்னும் நூலினை எழுதிக் கொண்டுவந்து பேராசிரியர் கா.சிவத்தம்பியின் கைகளில் கொடுத்து, அணிந்துரை வேண்டினார் பார்த்திபராஜா.
இப்படித்தான் அவருடைய முதலாவது ஆய்வுநூல் 2001 ஆம் ஆண்டு வெளியாயிற்று. கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி வெளியிட, கவிஞர் கனிமொழி பெற்றுக்கொள்ள, பேராசிரியர் அ.மார்க்ஸ், வழக்கறிஞர் அருள்மொழி, பேராசிரியர் வீ.அரசு, ஈழத்துப் பத்திரிக்கையாளர் தெ.மதுசூதனன் ஆகியோர் திறனாய்வு உரை நிகழ்த்தினர்.
கி.பார்த்திபராஜா அவ்வப்போது இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளை ‘சுழல்’ என்னும் தலைப்பில் தொகுத்து வெளியிட்டார். வீ.அரசுவும் இவரும் இணைந்து ‘வாய்மொழி வரலாறு’, ‘நாட்டார் சாமிகள்’ என்னும் இரு தொகுப்பு நூல்களைக் கொண்டு வந்தனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்த ஒயிலாட்டத்தை முழுவதுமாகப் பதிவு செய்து, ‘இராமாயண ஒயில் நாடகம்’ என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார் கி.பார்த்திபராஜா.
தெருக்கூத்து, இசை நாடகம், நவீன நாடகம் என்ற தளத்தில் தீவிரமாகச் செயல்பட்ட கி.பார்த்திபராஜா, இசை நாடகக் கலைஞர்களோடு தொடர்ந்து பயணப்பட்டார். எட்டு ஆண்டுகள் இடையறாது அக்கலைஞர்களோடு பயணப்பட்ட அனுபவத்தைச் சேகரித்துக் கொண்டு, ‘காயாத கானகத்தே…’ என்னும் நூலினை எழுதினார்.
தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்தனார் ஆகிய நாடக மேதைகளோடு டி.கே.சண்முகம், எம்.ஆர்.ராதா, எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், மணிமுத்து பாகவதர் முதலான கலை மேதைகளையும் தற்கால நடிகமணிகளையும் சுவையாக அறிமுகப்படுத்தும் நூல் அது. தமிழ் ஆய்வுப்புலத்தில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்ற பெருமைக்குரியது.
நாடகங்கள் குறித்த ஆய்வு நூலாக இவரது ‘பிரதியிலிருந்து மேடைக்கு…’ என்னும் நூலும் வெளிவந்தது. ‘திறக்கப்பட்ட புதிய வாசல்கள்’ நவீன நாடகங்களைக் குறித்த, கட்டுரைத் தொகுப்பு நூல்.
இவை தவிர, ‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வு’, ‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வில் தெ.பொ.மீ’, ‘சங்ககாலச் செவ்வியல்’, ‘மரபிலக்கியங்கள் குறித்த மறுவிசாரணை’ ‘கவிதை முதல் கம்பன்வரை’ முதலான நூல்களும் வெளிவந்தன.
‘தமிழ் மொழி அரசியல்’ என்னும் கி.பார்த்திபராஜாவின் மற்றுமொரு நூல், தமிழ் ஆய்வுலகத்தின் கவனத்தை ஈர்த்த நூலெனலாம். தமிழ்ச் சமூகத்தில் தமிழ் மொழியை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட அரசியலை ஏராளமான ஆய்வுக் குறிப்புகளோடு சொல்லுகிறது இந்நூல். தமிழுக்கும் வடமொழிக்குமான கருத்துமுரண் உருவாகி நிலைபெற்ற வரலாற்றையும் திராவிட இயக்க முன்னோடிகள், குறிப்பாகத் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் மொழிச்சிந்தனைகளையும்
பிற்கால திராவிட இயக்க மொழியரசியலையும் விரிவாகப் பேசும் நூல் இது.
தமிழ்ப் பண்பாட்டில் திருமணம், தமிழ்க் கலை மணிகள், திருக்குறள் உரை, அண்ணா உள்ளிட்ட இருபத்தைந்து நூல்களை எழுதியுள்ளார் கி.பார்த்திபராஜா.
சமூக விஞ்ஞானமாகிய மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் இலக்கியத்தை வாசிக்கும்போது புதிய வெளிச்சங்கள் கிடைக்கும் என்பது இவரது ஆய்வுக் கருதுகோள். நா.வானமாமலை, தொ.மு.சி.ரகுநாதன், கே.முத்தையா, க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, கோ.கேசவன், அ.மார்க்ஸ் ஆகியோரின் வழித் தடத்தில் நடைபயிலும் சிறுவன் என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொள்கிறார் கி.பார்த்திபராஜா.
மரபார்ந்த தமிழ் இலக்கியத்தை அளப்பதற்கு அந்நியக் கோட்பாடுகள் சரியா? என்று வினவும் அதிமேதாவிகள், அந்நிய நாட்டின் அறிவியல் கண்டுபிடிப்புகளை அன்றாடம் பயன்படுத்துவோரே ஆவர். கோட்பாடு தமிழ்நாட்டிலிருந்து உருவானதா, அந்நிய மண்ணில் உருவானதா என்பதல்ல முக்கியம், அது சரியானதா, பொருந்துவதா என்பதே கருத்தில் கொள்ளத்தக்கது என்ற கருத்துடையவர் கி.பார்த்திபராஜா. நம் மரபின் வேர்களை உயர்த்திப் பிடிப்போம்; நம் மரபிலிருக்கும் பிற்போக்கை உதறி எறிவோம் என்கிறார்.
மார்க்சிய வெளிச்சத்தில், அம்பேத்கரின் வழிகாட்டுதலில், பெரியாரின் கைத்தடி நீட்டப்பட்ட தடத்தில் பயணிப்பதைப் பெருமையாகக் கருதுகிறார் இவர்.
தமிழ் நவீன நாடகத்துறையிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மாணவராக இருந்தபோதே நவீன நாடக இயக்கங்களோடு தொடர்புடையவராக இயங்கத்தொடங்கிய கி.பார்த்திபராஜா, தொடர்ந்து தனது பங்களிப்பைச் செலுத்தி வருகிறார்.
தான் பணியாற்றும் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் ‘மாற்று நாடக இயக்கம்’ என்னும் அமைப்பைத் தோற்றுவித்து, மாணவர்களுக்கு நாடகப் பயிற்சியளித்து வருகிறார். நாடக ஆக்கங்கள், அளிக்கைகள், ஆய்வுகள், நூல்கள் என தனது களத்தை அவர் இன்னும் விரிவாக்கியிருக்கிறார்.
‘நெடும்பயணம்’, ‘புதிய ஒளி’ ஆகிய இரண்டும் இவரது நாடகத் தொகுப்புகள். இதில் நெடும்பயணம் என்னும் நாடகம் தேசிய நாடகப்பள்ளி நடத்திய நாடக எழுத்தாக்கப் பயிற்சிப்பட்டறையில் உருவாக்கப்பட்டது. சிறந்த நாடகங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையுடையது. ஏறத்தாழ இருபத்தைந்து இடங்களுக்கும் மேல் நிகழ்த்தப்பட்ட சிறப்புக்குரியது.
ஆளுமைத் திறன் வளர்ச்சிக்கு நாடகத்தைப் பயன்படுத்தலாம் என்ற கருத்துருவத்தை அடிப்படையாகக் கொண்டு, கல்லூரிகள், பள்ளிகளில் நாடகப் பயிற்சிகளை அளித்து வருகிறார். ‘கல்வியில் நாடகம்’, ‘வளாக அரங்கு’ என்னும் புதிய தளங்களில் அவரது செயல்பாடுகள் விரிந்து செல்கின்றன.
வெளியீடுகள்:
25
நூல்கள், கட்டுரைகள்: 100க்கும் மேற்பட்டவை.
நூல்கள்:
- பாரதி :கடந்த நூற்றாண்டுக் கவிஞன் பற்றிய மதிப்பீடு : ராகாஸ், சென்னை. 2001
- சுழல் (சிறுகதைகள்) :ராகாஸ், சென்னை, 2002
- வாய்மொழி
வரலாறு (இணைப் பதிப்பாசிரியர்)
: தன்னனானனே, பெங்களூரு, 2002
- நாட்டார்
சாமிகள் (இணைப் பதிப்பாசிரியர்)
:காவ்யா, சென்னை, 2002
- இராமாயண
ஒயில் நாடகம் (ஆய்வு)
: ராகாஸ் சென்னை. 2003.
- பிரதியிலிருந்து
மேடைக்கு… (நாடக ஆய்வு)
: தோழமை, சென்னை, 2005
- காயாத
கானகத்தே… (நாடக ஆய்வு)
: போதிவனம், சென்னை. 2006.
- இலக்கம்
4 பிச்சிப்பிள்ளை தெருவிலிருந்து
(நேர்காணல்): மதுரை, 2007
- இருபதாம்
நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வு வரலாறு(ஆய்வு):
அரிதாரி, திருப்பத்தூர், 2009.
- தமிழ்
மொழி அரசியல் : நியு செஞ்சுரி
புக் ஹவுஸ், சென்னை. 2010.
- இருபதாம்
நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வில் தெ.பொ.மீ
(ஆய்வு) : நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 2012
- நெடும்பயணம் : ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை. 2013-12-29
- திறக்கப்பட்ட புதிய வாசல்கள் : போதிவனம் பதிப்பகம், சென்னை. 2013
- புதிய ஒளி
– நாடகங்கள், ஜீவா பதிப்பகம், சென்னை
- படித்தேன் – கட்டுரைகள், ஜீவா பதிப்பகம்,
சென்னை
- இப்படிக்குத் தங்கள் அன்புள்ள… - கடிதங்கள்,
பாரதி புத்தகாலயம், சென்னை.
- மரபிலக்கியங்கள் ஓர் மறுவாசிப்பு – ஆதி பதிப்பகம்,
திருவண்ணாமலை.
- சங்ககாலச் சமூகவியல் – ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
- சமூக இலக்கியப் பயணம் – ஆய்வுக்கட்டுரைகள்,
போதிவனம், சென்னை.
- திருக்குறள் எளிய உரை – பாரதி பதிப்பகம்,
வேலூர்.
- ஆய்வு மலர்கள் – கட்டுரைகள், பரிதி பதிப்பகம்,
சோலையார்பேட்டை.
- அறிஞர் அண்ணா – வரலாறு, பாரதி பதிப்பகம்,
வேலூர்.
- பண்பாட்டுத் தளத்தில் திருமணம் – பாரதி புத்தகாலயம்,
சென்னை.
- தமிழ்க் கலைமணிகள் – கட்டுரைகள், பாரதி புத்தகாலயம்,
சென்னை.
- பாரதி – (மறு பதிப்பு) நியூ செஞ்சுரி புத்தக
நிறுவனம், சென்னை.
நல்லதொரு அறிமுகம் ஐயா.
ReplyDeleteநன்றிங்க
Deleteஐயாவைப் பற்றி பல தகவல்களை அறிந்துகொண்டேன். தொகுப்பிற்கு நன்றி
ReplyDelete