தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Tuesday, July 5, 2011

தமிழ்ச் செம்மொழி இலக்கண இலக்கியங்களின் முதல் பதிப்புகள் (செம்மொழித் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 41 நூல்களின் பதிப்பு விவரங்கள்)
தொல்காப்பியம் :

1.தொல்காப்பியம், இஃது ஜமதக்கினிமஹாரிஷியின் புத்திரரும், அகஸ்திய மஹாரிஷியின் முதன் மாணாக்கருமாகிய திரணதூமாக்கினி யென்னுமியற் பெயரையுடைய தொல்காப்பிய மகாரிஷியினால் அருளிச்செய்யப்பட்டது. இதில் முதலாவது - எழுத்ததிகார மூலமும் மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியரால் அருளிச்செய்யப்பட்ட வதனுரையும், கரலிகிதங் களாலாய வழுக்களை நீக்கி யச்சிட்டுத் தருகவெனச் சில வித்துவான்கள் கேட்டுக் கொள்ளக் கனம் பொருந்திய கம்பேனியாரால் ஏற்படுத்தப்பட்ட யூநிவர் சிட்டியென்னுஞ் சகல சாஸ்திரசாலைத் தமிழ்த்தலைமைப் புலமை நடாத்திய மழைவை மகாலிங்கையரவர்களால் பலபிரதிகளைக் கொண்டாராயப்பட்டுத் திருவண்ணாமலை வீரபத்திரையரால் தமது கல்விக்கடல் அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன. சரியான பிலவங்க வருடம், ஆவணி மாதம் 1847.

2. தொல்காப்பிய நன்னூல் : இதனுள் தொல்காப்பியமும் நன்னூலும், தம்முள் ளொற்றுமை வேற்றுமைகள் விளங்க, ஒருபான்மை உதாரண சகிதமாய்ச் சூத்திரசம்பந்தத்துடனே அச்சிடப்பட்டிருக்கின்றன. இந்நூல், ஐந்திரபாணிநீயம் என்றும் சமரசபாஷிய சித்தாந்தம் என்றும், இனிப்பெயர் பெறும் பெற்றிக்கேற்ப உத்தேசித்து, வடமொழி வழக்கும் தமிழ்மொழி வழக்கும் ஐங்கிலிய வழக்குங் கொண்டிருக்கின்ற சம்பந்தா சம்பந்தங்களைக் காட்டிப் பூரணவிருத்தியா யெழுதப்புகுந்திருக்கு முரை நூலுக்கு, முதற்பிரயத்தனம். இப்பதிப்பு இ சாமுவேல் பிள்ளையினால், வால்ற்றர் ஜாயீஸ் துரையவர்களுதவியைக் கொண்டு நிறைவேறியது. நூற்பயன்: இத்தேசத்தாரிடத்தில் ஐங்கிலிய துரைத்தனத்தார் கல்வி விருத்தி பண்ணி வருமுயற்சியினால், இனித்தமிழ்நாட்டின் நன்மைக்கென்று புது நூலியற்று வோர்க்குப் பாஷைநடைகளின் பேதாபேதக்கி யானத்திற்கு வேண்டிய, தெளிவு இஃது, 1858ஆம் வருடம் சென்னை மாநகரம், கிறிஸ்து மதக்கியான விளக்கச்சங்கத்தார் அச்சுக் கூடத்தில் கானர்துரை யவர்களால் பதிப்பிக் கப்பட்டது.

Tuesday, June 21, 2011

அறியப்பட வேண்டிய அரிய ஆவணங்கள்: பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியப் பதிப்புகள்இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ச்சமூகத்தில் தொல்காப்பியம் என்ற ஓர் இலக்கணப்பிரதி நிகழ்த்திய ஊடாட்டம் என்பது சாதாரணமானதல்ல. பிற்காலங்களில் தோன்றிய பல்வேறு இலக்கணப் பிரதிகளுக்கும் தொல்காப்பியம் ஒரு முதன்மைப் பிரதியாக நின்று அவையனைத்திலும் தன் தாக்கத்தை நிலை நிறுத்திக்கொண்டது.

தொல்காப்பியத்திற்குப் பிறகு பல்வேறு இலக்கணப்பிரதிகள் இங்குத் தோன்றியுள்ளன. அப்பிரதிகள் அதனதன் தன்மையில் சிறப்பாக நிலைபெற்றிருந்த போதிலும் தொல்காப்பியத்தோடு அவற்றை ஒப்பவைத்து எண்ணும்போது அவற்றின் விழுமியங்கள் மாறுபடவேச் செய்கின்றன. தமிழ்ச்சமூகத்தின் தொன்மை மரபின் ஆணிவேராக இன்று மையம் பெற்றுள்ள தொல்காப்பியம் ஒரு செறிவான தன்மைக்குள் கட்டப்பட்டுப் பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்திருந்த போதிலும் அப்பிரதியின் தெளிவான காலத்தையும் சமயத்தையும் அறுதியிட்டு வரையறை செய்யமுடியவில்லை.

இருந்தபோதிலும் தொல்காப்பியம் இத்தனை நூற்றாண்டுகள் நிலைபெற அதன் திட்டமிட்ட முறையியலான ஒழுங்கமைவு மற்றும் செய்நேர்த்தி, எல்லாக் காலத்திற்குமான பொருத்தப்பாடு, பல்வேறு காலங்களில் எழுந்த பலப்பல உரைகள், முதனூல் வழிநூல் என்ற மரபில் பிற்கால இலக்கணங்களுக்கு முதனூலாக நின்றமைதல், சமயச்சார்பின்மை ஆகிய அனைத்தும் மிகமுக்கியக் காரணங்களாக அமைகின்றன.

Saturday, June 18, 2011

அறியப்பட வேண்டிய அரிய ஆவணங்கள்: தொல்காப்பியமும் முதற்பதிப்பும்மிகச் செழுமையான நம் இலக்கிய மரபில் பல்வேறு அரிய நூல்கள் ஓலைச் சுவடிகளிலிருந்து கரையான்களாலும் சமயக் காழ்ப்புணர்ச்சி களாலும் அவ்வப்போது அழித்தொழிக்கப்பட்டு வந்துள்ளன. இவற்றில் எஞ்சி, ஐரோப்பியரால் கொண்டு வரப்பட்ட அச்சு இயந்திரத்தின் மூலம் நிலைபேறடைந்த பல குறிப்பிடத்தகுந்த நூல்களுள் தொல்காப்பியமும் ஒன்று. 2500 ஆண்டுகாலத் தொன்மையினையும், தமிழ்ப் பாரம்பரியத் தினையும் பறைசாற்றும் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம். 161 (1847) ஆண்டுகாலப் பழமையினைப் பெற்ற தொல்காப்பியத்தின் முதல் அச்சுப் பதிப்பு தமிழ் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த இடத்தினைப் பெறுகின்றது.

தொல்காப்பியம் அழிந்து போகாமல் இருக்க பண்டைய உரையாசிரியர்கள் எத்தகைய பணிகளைச் செய்தனரோ, அதே பணியினைத் தொடக்ககாலப் பதிப்பாசிரியர்களும் செய்துள்ளனர். உரையாசிரியர்கள் தொல்காப்பியத் தினை எவ்வாறு மீட்டுருவாக்கம் செய்தனரோ அதேபோல் பதிப்பாசிரியர் களும் ஓலைச்சுவடிகளில் சிதறிக்கிடந்தவற்றை ஒன்று திரட்டி அழகுறச் செப்பம் செய்து இன்றைய சந்ததியினர்க்கு முழுமையாகச் சேர்த்துள்ளனர். இன்றைய நிலையில் தொல்காப்பியம் பல்வேறு செப்பமான பதிப்புகளைக் கொண்டு விளங்குவதற்கு முதன்மைக் காரணமாக இருப்பவர் மழைவை மகாலிங்கையரவர்கள். இவரே தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்தினை நச்சினார்க்கினியர் உரையோடு முதன்முதல் ஓலைச்சுவடியில் இருந்து அச்சுவாகனமேற்றிய சிறப்புக்குரியர். தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியர் இளம்பூரணராக இருந்த போதிலும் பின் வந்த உரையாசிரியர் நச்சினார்க்கினியர்தான் முதல் அச்சுப் பதிப்பினைப் பெறுகின்றார்.

இன்றைய பதிப்பு முறைப்படி நூலினுள் முகவுரை, பதிப்புரை ஆகியவை இல்லை என்ற போதிலும் நூலின் முதற்பக்கமே அக்குறையினைத் தீர்த்துவிடுகின்றது. நூல் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு தமிழ் ஆண்டாகிய சாலீவாகன வரு – (1770) பிலவங்க ஆவணி எனத் தரப்பட்டுள்ளது. தமிழ் ஆண்டிற்கு இணையான கிறித்தவ ஆண்டினைக் கணிக்கும் போது ஆய்வாளர்களிடையே குழப்பம் காணப்படுகின்றது. இருந்த போதிலும் கி.பி. 1847 ஆம் ஆண்டுதான் பல ஆய்வாளர்களாலும் ஒப்ப ஏற்றுக் கொள்ளப்பட் டுள்ளது.

முதற்பக்கக் குறிப்பிலிருந்து பதிப்பாசிரியர் மகாலிங்கையர் பல்கலைக் கழகத் தமிழ்ப்புலவராக இருந்தவர் என்று அறியமுடிகிறது. பதிப்பாசிரியர் தம் உடனிருந்த வித்துவான்களின் வேண்டுகோளுக்கிணங்க இப்பதிப்பினை வெளியிட்டுள்ளார். பல பிரதிகள் ஒப்பு நோக்கி இப்பதிப்பு பதிப்பிக்கப்பட்டது எனக் கூறியிருந்த போதிலும் , ஒப்பு நோக்கி பதிப்பிக்கப்பட்ட சுவடிகள் பற்றிய குறிப்பு எங்கும் காணப்படவில்லை. திருவாவடுதுரையாதீன வித்துவான் தாண்டவராய சுவாமிகளால் இயற்றப்பட்ட நிலைமண்டில ஆசிரியப்பாவால் அமைந்த சிறப்புப்பாயிரம் ஒன்றும் காணப்படுகிறது. இச் சிறப்புப்பாயிரம் நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் ஆகியோரின் சிறப்பைக் கூறுவதாக அமைந்துள்ளது. நூலில் நூற்பாக்கள் சீர் பிரித்து அமைக்கப் பெறவில்லை. நூற்பாக்களும் உரையும் பத்தி அமைப்பிலேயே கொடுக்கப்பட்டுள்ளன. சுவடியில் இருந்தவற்றை எவ்வித மாற்றமு மில்லாமல் அப்படியே பதிப்பித்து இருப்பதால் ஒரு உரைநடை நூலைப் போல இப்பதிப்பு காணப்படுகின்றது. பதிப்பு நுட்பங்கள் வளர்ச்சி பெறாத காலத்தில் இது ஒரு குறை இல்லை. சிறப்புப் பாயிரத்தினை அடுத்து தொல்காப்பியச் சூத்திரவகராதி – இயலகராதி காணப்படுகின்றன.

தமிழ் செம்மொழி என அறிவிப்பதற்குச் செவ்வியல் இலக்கியங்களோடு கைகோத்து நின்ற தொல்காப்பியம் போலவே அதன் இம்முதற்பதிப்பும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

நனறி: முகப்புப்பக்கம்: மு.இளங்கோவன்
அறியப்பட வேண்டிய அரிய ஆவணங்கள் : தொல்காப்பிய முதல் முழுமைப்பதிப்பு (இ. சாமுவேல்பிள்ளை - 1858)தமிழ் இலக்கிய வரலாற்றை, தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதப்புகும் ஒருவருக்குக் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டும், இருபதாம் நூற்றாண்டும் உருவாக்கித் தரும் வெளி என்பது அளவிடற்கரியது. இவ்விரு நூற்றாண்டுகளுக்கு முந்தைய நூற்றாண்டுகளின் மொழி, இலக்கிய, சமூகச் செயல்பாடுகளிலிருந்து இந்த இரு நூற்றாண்டுகளும் முற்றிலும் வேறொரு தளத்தில் செயல்பட்டுள்ளதைக் கூர்ந்து கவனிப்பவர்கள் துல்லியமாக விளங்கிக் கொள்ள முடியும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே தான் இன்றைய நவீனகாலச் சமூக உருவாக்கத்திற்கான அடிப்படை விவாதங்களை முன்னெடுக்க முடியும். குருகுலக்கல்வி மரபிலும், திண்ணைப்பள்ளி மரபிலும் உயர்மனோபாவப் பின்புலத்தில் கட்டமைக்கப்பட்டிருந்த கல்விப்புலம் இந்நூற்றாண்டின் நிறுவனக் கல்வி’’ செயல்பாட்டில் நெகிழ்ச்சியடைந்து பரவலாக்கம் பெற்றதோடு மாற்றுச் சிந்தனை மரபுகளையும் உருவாக்க வழிவகை செய்தது.