தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Tuesday, July 5, 2011

தமிழ்ச் செம்மொழி இலக்கண இலக்கியங்களின் முதல் பதிப்புகள் (செம்மொழித் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 41 நூல்களின் பதிப்பு விவரங்கள்)




தொல்காப்பியம் :

1.தொல்காப்பியம், இஃது ஜமதக்கினிமஹாரிஷியின் புத்திரரும், அகஸ்திய மஹாரிஷியின் முதன் மாணாக்கருமாகிய திரணதூமாக்கினி யென்னுமியற் பெயரையுடைய தொல்காப்பிய மகாரிஷியினால் அருளிச்செய்யப்பட்டது. இதில் முதலாவது - எழுத்ததிகார மூலமும் மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியரால் அருளிச்செய்யப்பட்ட வதனுரையும், கரலிகிதங் களாலாய வழுக்களை நீக்கி யச்சிட்டுத் தருகவெனச் சில வித்துவான்கள் கேட்டுக் கொள்ளக் கனம் பொருந்திய கம்பேனியாரால் ஏற்படுத்தப்பட்ட யூநிவர் சிட்டியென்னுஞ் சகல சாஸ்திரசாலைத் தமிழ்த்தலைமைப் புலமை நடாத்திய மழைவை மகாலிங்கையரவர்களால் பலபிரதிகளைக் கொண்டாராயப்பட்டுத் திருவண்ணாமலை வீரபத்திரையரால் தமது கல்விக்கடல் அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன. சரியான பிலவங்க வருடம், ஆவணி மாதம் 1847.

2. தொல்காப்பிய நன்னூல் : இதனுள் தொல்காப்பியமும் நன்னூலும், தம்முள் ளொற்றுமை வேற்றுமைகள் விளங்க, ஒருபான்மை உதாரண சகிதமாய்ச் சூத்திரசம்பந்தத்துடனே அச்சிடப்பட்டிருக்கின்றன. இந்நூல், ஐந்திரபாணிநீயம் என்றும் சமரசபாஷிய சித்தாந்தம் என்றும், இனிப்பெயர் பெறும் பெற்றிக்கேற்ப உத்தேசித்து, வடமொழி வழக்கும் தமிழ்மொழி வழக்கும் ஐங்கிலிய வழக்குங் கொண்டிருக்கின்ற சம்பந்தா சம்பந்தங்களைக் காட்டிப் பூரணவிருத்தியா யெழுதப்புகுந்திருக்கு முரை நூலுக்கு, முதற்பிரயத்தனம். இப்பதிப்பு இ சாமுவேல் பிள்ளையினால், வால்ற்றர் ஜாயீஸ் துரையவர்களுதவியைக் கொண்டு நிறைவேறியது. நூற்பயன்: இத்தேசத்தாரிடத்தில் ஐங்கிலிய துரைத்தனத்தார் கல்வி விருத்தி பண்ணி வருமுயற்சியினால், இனித்தமிழ்நாட்டின் நன்மைக்கென்று புது நூலியற்று வோர்க்குப் பாஷைநடைகளின் பேதாபேதக்கி யானத்திற்கு வேண்டிய, தெளிவு இஃது, 1858ஆம் வருடம் சென்னை மாநகரம், கிறிஸ்து மதக்கியான விளக்கச்சங்கத்தார் அச்சுக் கூடத்தில் கானர்துரை யவர்களால் பதிப்பிக் கப்பட்டது.

சங்க இலக்கியம் : எட்டுத்தொகை

1. நல்லந்துவனார் கலித்தொகை, மதுரை -பாரத்துவாசி நச்சினார்க் கினியார் உரையோடும், யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையால் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து ஸ்ரீ தொண்டமான் புதுக்கோட்டை மகாராசாவின் மந்திரியும் பிரதிகாவலரு மாகிய கௌரவ அ. சேஷைய சாஸ்திரிகள் சி.எஸ்.ஐ. காருண்யோபகார திரவியத்தைக் கொண்டு பதிப்பிக்கப்பட்டது, சர்வஜித்து வருஷம் ஆடி மாசம். Madras, Printed At the Scottish Press, By Graves, Cookson and co, 1887.

2. எட்டுத்தொகையுள் ஒன்றாகிய புறநானூறு மூலமும் உரையும், இவை கும்பகோணம் காலெஜ் தமிழ்ப்பண்டிதராகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால் பல பிரதிரூபங்களைக்கொண்டு பரிசோதித்து சென்னை வெ.நா. ஜூபிலி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன, 1894.

3. எட்டுத்தொகையுள் மூன்றாவதாகிய ஐங்குறுநூறும், பழையவுரையும். இவை, கும்பகோணம் காலேஜ் தமிழ்ப்பண்டிதராகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால் பல பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து சென்ன பட்டணம், வைஜயந்தி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன. சோபகிருது வருஷம் ஆனி மாசம், 1903.

4. எட்டுத்தொகையுள் நான்காவதாகிய பதிற்றுப்பத்து மூலமும்,  பழைய வுரையும், இவை, சென்னைப் பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால் பல பிரதிரூபங் களைக் கொண்டு பரிசோதித்து, சென்னபட்டணம், வைஜயந்தி அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன. குரோதி வருஷம், ஆனி மாசம், 1904.

5. எட்டுத்தொகையுளொன்றாகிய நற்றிணை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் அவர்கள் எழுதிய உரையுடன், சென்ன பட்டணம், சைவவித்தியாநு பாலனயந்திரசாலையில் அச்சிற்பதிப்பிக்கப்பட்டது. இராக்ஷசவருஷம், வைகாசி மாசம், 1915.

6. எட்டுத்தொகையுள் இரண்டாவதாகிய குறுந்தொகை மூலமும், திருக்கண்ண புரத்தலத்தான் திருமாளிகைச் சௌரிப் பெருமாளரங்கன் இயற்றிய புத்துரையும், இவை உரையாசிரியரால் சோழவந்தான் கிண்ணி மடம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சிவப்பிரகாச ஸ்வாமிகள் ஆதரித்து அருந்தமிழை அறிவுறுத்திய ஆருதவிக்காக அவ்வடிகளுக்கு அகங்கனிந்து உரிமையாக வேலூர் வித்யா ரத்னாகர அச்சுக்கூடத்திற் பதிப்பித்து வெளியிடப்பட்டன. (க முதல் கஅ - பாரங்கள் வேலூர் வி.என். ப்ரஸ்ஸில் அச்சிடப்பட்டன) 1915.

7. எட்டுத்தொகையுள் ஐந்தாவதாகிய பரிபாடல் மூலமும் ஆசிரியர் பரிமேலழகரியற்றிய உரையும். இவை சென்னை, பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால் கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டு பரிசோதித்து, தாம் நூதனமாக எழுதிய பல வகையான குறிப்புக்களுடன் சென்னை, கமர்ஷியல் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றன, 1918.

8. அகநானூறு மூலமும் உரையும், முதற்பகுதி Madras, Kambar vilas Book Depot, Mylapore, 1918, Price Rs. 2. இரண்டாம் பகுதி - 1920.

பத்துப்பாட்டு

1. திருமுருகாற்றுப்படை மூலபாடம், தெய்வத்தன்மை பொருந்திய மதுரைக்கடைச்சங்கத்து மகாவித்துவானாகிய நக்கீரனார் அருளிச்செய்தது. நச்சினார்க்கினியாருரைப்படியே பரிசோதித்துச் சென்னபட்டணம் விவேகக் கல்விச்சாலைத் தமிழ்த்தலைமைப் புலவராகிய சரவணப் பெருமாளையரால் கல்விவிளக்க வச்சுக்கூடத்தில் அச்சிற்பதிப்பிக்கப்பட்டது. சயவருஷம் ஆவணி மாசம் (1834)

2. பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினி யருரையும், இவை கும்பகோணம் காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய உத்தமதானபுரம் வே.சாமிநாதையரால் பரிசோதித்து சிவகங்கை ஸப்டி விஷன் சிறுவயல் ஜமீந்தாரவர்களாகிய முத்துராமலிங்கத் தேவரவர்களு டைய பேருதவியால் சென்னைத. கோவிந்த ஆசாரியாரது திராவிட ரத்நாகர அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டு நிறைவேறின, 1889.

பதினெண்கீழ்க்கணக்கு :

1. திருக்குறள் மூலபாடம், தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்தது. இலக்கண விலக்கிய வாராய்ச்சியுடைய வர்களால் லிகிதப் பிழையற வாராய்ந்து சுத்தபாடமாக்கப்பட்டது. தொண்ட மண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சைநகரம் - மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப் பிறகாசனால் அச்சிற்பதிப்பிக்கப்பட்டது. மாசத்தினச் சரிதையின் அச்சுக் கூடம், இ.ஆ. 1812.

2. நாலடியார் மூலபாடம், முனிவாகன அருளிச்செய்தது, இலக்கண விலக்கிய வாராய்ச்சியுடையவர்களால் லிகிதப்பிழையற வாராய்ந்து சுத்தபாடமாக்கப் பட்டது. தொண்டமண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சைநகரம் - மலையப்பபிள்ளை குமாரன் ஞானப்பிறகா சனால் அச்சிற் பதிப்பிக் கப்பட்டது. மாசத்தினச் சரிதையின் அச்சுக்கூடம், இ.ஆ. 1812.

3. மதுரை தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் அருளிச் செய்த இனியா நாற்பது. இது குளத்தூர் சின்னையா முதலியார் உரை செய்து தருகவெனக் கேட்க, அவ்வாறே வீரநாமநல்லூர், அப்பாசி ஐயரால் பதவுரை செய்து அச்சில் பதிப்பிக்கப்பட்டது. இவர்க்கியற்றமிழாசிரியராகிய முகவை. ராமாநுசக் கவிராயரவர்களால் பரிசோதிக்கப்பட்டது. 1844.
 
4. ஆசாரக்கோவை, திருத்தணிகை விசாகப் பெருமாளையர் முன்னிலையில் தில்லையம்பூர்ச் சந்திரசேகர கவிராஜப் பண்டிதரால் இலட்சுமி விலாச அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. 1857.

5. நல்லாதனாரால் செய்யப்பட்டுச் சங்கமருவிய நீதிநூலாகிய திரிகடுகம். இது திருக்கோட்டியூர் இராமாநுசாசாரியர் செய்த உரையுடன் நல்லூர் சதாசிவப் பிள்ளையால் சென்னபட்டணம் வர்த்தமான தரங்கிணீ சாகை யச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. விபவ வருஷம். புரட்டாசி மாதம் 1868.

6.நான்மணிக்கடிகை மூலம், சென்னை பிரெஸிடென்சு காலேஜில் தமிழ்ப்பிரதம பண்டிதர் தி.ஈ. ஸ்ரீநிவாசராகவாசாரியார் அவர்களால் செய்யப்பட்ட உரையுடன் ஊ. புஷ்பரத செட்டியாரால் பதிப்பிக்கப்பட்டது. சென்னை. கலாரத்நாகரம் அச்சுக்கூடம். 1872.

7. முன்றுறையரையனார் அருளிச்செய்த சங்கமருவிய பழமொழி மூலம், இஃது, திரிசிரபுரம் மஹாவித்துவான், மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் மாணாக்கருள் ஒருவரும், சென்னைக் கவர்ன்மெண்டு நார்மல் பாடசாலைத் தமிழ்ப்புலவராய் இருந்தவருமாகிய திரிசிரபுரம் - சோடசாவதானம் சுப்பராய செட்டியாரால், வரம்பின்றிக் கிடந்ததைப் பால், இயல், அதிகாரங்கள் ஆக வகுத்தும், கரலிகிதங்களால் தொக்கும், மிக்கும், பிறழ்ந்தும் இருத்தலைப் பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்துப் பழைய உரைக்கு இணங்கத் திருத்தியும், சென்னை மிமோரியல் என்னும் அச்சுக்கூடத்திற் பதிப்பிக் கப்பட்டது. 1874.

8. காரியாசான் செய்த சிறுபஞ்சமூலம். இஃது உரையுடன் சண்முகசுந்தர முதலியாரவர்களாற் பரிசோதித்து, திரிசிரபுரம் புத்தகவியாபாரம் தி-சபாபதி பிள்ளையவர்களது மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப் பட்டது. சிந்தாத்திரிப்பேட்டை சாமிநாய்க்கர் வீதி, யுவ வருடம், மேடரவி. 1875

9. பொய்கையாரருளிச் செய்த களவழிநாற்பது, உரைபாடம். இஃது கொன்ற மாநகரம், சண்முகசுந்தர முதலியாரவர்களாற் பரிசோதித்து, திரிசிரபுரம் புத்தகவியாபாரம் தி-சபாபதிபிள்ளைய வர்களது மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. சிந்தாத்திரிப்பேட்டை சாமிநாய்க்கர் வீதி. யுவ வருடம், மேடரவி 1875.

10. மதுரைக் கண்ணங்கூத்தனார் செய்த கார்நாற்பது, இஃது உரையுடன் சண்முகசுந்தர முதலியாரவர்களாற் பரிசோதித்து திரிசிரபுரம் புத்தக வியாபாரம் தி.சபாபதி பிள்ளையவர்களது மட்டுவார் குழலாம்பாள் அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. சிந்தாத்திரிப்பேட்டை சாமிநாய்க்கர் வீதி. மிதுனரவி. 1875.

11. கபிலராற் செய்த இன்னா நாற்பது, இதற்குரையுடன், கொன்றமாநகரம் சண்முகசுந்தர முதலியாரவர்களாற் பரிசோதித்து தி-சபாபதிபிள் ளையவர்கள் மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. சிந்தாத்திரிப் பேட்டை சாமிநாய்க்கர்வீதி. தாது வருடம், ஆவணி மாதம் 1876.

12. கடைச்சங்கத்துள் ஒருவராகிய கணிமேதாவியார் செய்த ஏலாதியும், திருநெல்வேலி இந்து சர்வகலாசாலை தமிழ் பண்டிட் A.T. சபாபதிப்பிள்ளை செய்த உரை முதலியவும், Printed at the Darling Press, 1881

13. மதுரை சங்கப் புலவருளொருவராகிய கூடலூர் கிழார் இயற்றிய முதுமொழிக்காஞ்சி, இஃது முன்னோரியற்றிய உரையுடன் திரிசிரபுரம் மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் மாணாக்கராகிய - உறையூர் மதுரைநாயக முதலியாரவர்களால் பார்வையிடப்பட்டு திருப்பரங் குன்றம் நாராயணசரணரால் பதிப்பிக்கப்பட்டது. திருச்சினாப்பள்ளி வி. பாக்கியம்பிள்ளை அண்டு சன்ஸ், 1895.

14. மாறன் பொறையனார் அருளிச்செய்த ஐந்திணையைம்பது மூலமும் உரையும், சேதுசம்ஸ்தான வித்துவானும் செந்தமிழ்ப் பத்திராசிரியருமாகிய ரா.இராகவையங்காரால் பரிசோதிக்கப்பட்டன. மதுரை: தமிழ்ச்சங்க முத்திரா சாலைப் பதிப்பு, 1903.

15. கணிமேதாவியார் அருளிச்செய்த திணைமாலை நூற்றைம்பது மூலமும் உரையும். சேதுசம்ஸ்தான வித்வானும் செந்தமிழ்ப் பத்திராசிரி யருமான ரா. இராகவையங்காரால் பதிப்பிக்கப்பெற்றன. மதுரை: தமிழ்ச் சங்கமுத்திரா சாலைப் பதிப்பு. 1904.

16. ஐந்திணை எழுபது, மு. ராகவையங்கார், செந்தமிழ்ப் பிரசுர வெளியீடு, 1906.

17. சாத்தந்தையார் மகனார் கண்ணன் சேந்தனார் அருளிச்செய்த திணைமொழி யைம்பது, மூலமும் பழைய உரையும், இஃது இலக்கண விளக்க பரம்பரை சோமசுந்தரதேசிகரால் பரிசோதிக்கப்பட்டு திருவாரூர்த் தமிழ்ச்சங்கத்தாரால் வெளியிடப்பட்டது. திருவாரூர் விக்டோரியா அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப் பெற்றது. 1918.

18. ஐந்திணையெழுபதும் கைந்நிலையும், பழைய வுரையோடும் தாம் புதிதாக எழுதிய பிரயோக விளக்கத்தோடும், இடையாற்று மங்கலம் வைத்தீச்சு வரையரவர்கள் குமாரரும் சென்னை, பிரஸிடென்ஸி காலேஜ் Retired தமிழ்ப் பண்டிதரும் ஆகிய அனந்தராமையரால் இயன்ற அளவு பரிசோதித்து, சென்னை நோபில் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப் பெற்றன, 1931.

காப்பியங்கள் : சிலப்பதிகாரம் :

1. சிலப்பதிகாரம், (முதல் எட்டு காதைகள் மட்டும்) தி.ஈ. ஸ்ரீநிவாஸராக வாசாரியரால் பு-ம-சபாபதிமுதலியாரது கல்விவிளக்க அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. 1872 வருடம், சூன் மாதம்.

2. சிலப்பதிகாரம், முதலாவது புகார்காண்டம், இஃது, சென்னை பிரெஸிடென்சி காலேசு தமிழ்ப்பிரதம பண்டிதராகிய தி.ஈஸ்ரீநிவாசராக வாசாரியாரவர்களால் ஊ.புஷ்பரத செட்டியாரது கலாரத்நாகரம் என்னும் அச்சுக்கூடத்திற் பதிப்பித்துப் பிரசுரஞ் செய்யப்பட்டது. சென்னபட்டணம், 1876 வருடம்.

3. சேரர் குலத்துதித்த இளங்கோவடிகள் இயற்றிய பஞ்சகாவி யங்களுள் ஒன்றாகிய சிலப்பதிகாரம் புகார்காண்டம். இஃது அடியார்க்கு நல்லார் உரையோடும் திரிசிரபுரம் ஸ்ரீ மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்கள் மாணாக்கராகிய சென்னைக் கவனர்மெண்டு நார்மல் பாடசாலைத் தமிழ்ப்புலவர் தி.க. சுப்பராய செட்டியாரால் பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்து, தாம் இயற்றிய கானல்வரியுரையோடும் சென்னை மிமோரியல் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. விக்கிரமவருஷம். சித்திரை மாதம். 1880.

4. இளங்கோவடிகளருளிச் செய்த சிலப்பதிகார மூலமும் அடியார்க்கு நல்லாருரையும், இவை கும்பகோணம் காலேஜ் தமிழ்ப்பண்டிதராகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால் பல பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து, சென்னை: வெ.நா. ஜூபிலி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன. 1892.

மணிமேகலை :

1.மணிமேகலை, இஃது மதுரைக் கூலவாணிகன்சாத்தனார் பாடியது. புரசை - அட்டாவதானம் - சபாபதி முதலியார் அவர்கள் மாணாக்கர் திருமயிலை சண்முகம்பிள்ளை அவர்களால் பார்வையிடப்பட்டுக் கயப்பாக்கம். இரத்தின செட்டியார் குமாரர் க.முருகேச செட்டியாரால் சென்னை: மதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலையில் பதிப்பிக்கப்பட்டது. விஜய வருடம், தனுர் ரவி. 1894.

2. கடைச்சங்கப்புலவர்களுள் ஒருவராகிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் அருளிச்செய்த மணிமேகலை மூலமும், கும்பகோணம், கவர்ன்மென்ட் காலேஜ் தமிழ்ப்பண்டிதராகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரெழுதிய அரும்பத வுரையும், இவை பாலவனத்தம் ஜமீந்தாரவர்களாகிய இராமநாதபுரம் பாண்டித் துரைத் தேவரவர்கள் உதவியைக் கொண்டு, மேற்படி சாமிநாதையரால் சென்னை வெ.நா. ஜூபிலி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன. 1898.

இறையனாரகப்பொருள் :

1. இறையனாரகப்பொருள், இஃது மதுரைக் கடைச்சங்கத்துக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் கண்டருளிய உரையோடு  யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம்பிள்ளையால் பலதேசப் பிரதிரூபங்களைக்கொண்டு பரிசோதித்து மேற்படி ஊர் தி. குமாரசாமிச்செட்டியாரால் பதிப்பிக்கப்பட்டது. சென்ன பட்டணம், சுபானு வருடம், சித்திரை மாதம். Printed at the Scottish Press, By Graves cookson And co. 1883.

முத்தொள்ளாயிரம் :

1. முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் (105), ஸேதுஸம்ஸ்தான வித்வானும் செந்தமிழ்ப் பத்திராசிரியருமானரா.இராகவையங்காரால் பரிசோதிக்கப் பெற்றன. மதுரை: தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, 1905.

No comments:

Post a Comment