தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Friday, July 10, 2020

நாற்றம் - வாசம்

                                   

நாற்றம் என்றால் சங்க இலக்கியத்தில் நல்ல மணம் என்று பொருள். பல்வேறு வினை வடிவங்களில் பல இடங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட சொல் காலப்போக்கில் இன்று நல்ல மணம் என்ற பொருளிலிருந்து மாறி துர்நாற்றம் என்னும் பொருளில் அமைந்துவிட்டது.

சங்க இலக்கியத் தலைவி தலையில் பூச்சூடி செல்லும்போது தலைவன் உன் கூந்தலில் இருந்து நறுநாற்றம் வீசுகிறது என்றால் தலைவி மகிழ்வாள்.

ஆனால் இன்று பெண் பூச்சூடி செல்லும்போது தலைவன் தலைவியைப் பார்த்து உன் கூந்தலில் என்ன நாற்றம் வீசுகிறது என்றால் என்ன நடக்கும் என்பது தெரியும்.

இன்று வாசம், வாசனை என்னும் சொற்கள் நல்ல மணம் என்னும் பொருளில் பரவலாகக் கையாளப்படுகிறது.

ஆனால் சங்க இலக்கியத்தில் வாசனை என்னும் சொல் இல்லை. வாசம் என்று ஓரிடத்தில் மட்டுமே உள்ளது. குறுந்தொகை 309 பாடலில் இச்சொல் இடம்பெற்றுள்ளது.

சங்க இலக்கியத்தில் 100க்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்ட நாற்றம் இன்று பொருள் மாறி வழங்கிவருகிறது.

ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு இன்று அதே பொருளில் பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்படும் சொல்லாக வாசம் மாறிவிட்டது.

No comments:

Post a Comment