தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Wednesday, July 15, 2020

இளம் ஆய்வாளர் வரிசை - முனைவர் கை. சங்கர்


    முனைவர் கை. சங்கர் அவர்களைத் தொல்காப்பியரின் மாட்டு குறித்த ஆய்வுக்கட்டுரைக்காக முதன்முதலாகத் தொடர்பு கொண்டேன். அவர் மாட்டு என்னும் இலக்கணமும் நச்சினார்க்கினியர் உரையும் என்னும் தலைப்பில் நூல் எழுதியிருந்தார். அந்த நூல் குறித்து அவரோடு உரையாடும் போதுதான் எனக்கு அவர் அறிமுகமானார்.

மாட்டு குறித்து அன்று அலைபேசி வழியாக நிகழ்த்திய விவாதங்களி லிருந்தும் அவர் நூலை வாசித்ததன் வழியும் சங்கர் அவர்களின் ஆய்வின் ஆழத்தை நான் அறிந்துகொண்டேன். அது மட்டுமல்லாது ஆய்வு அறம் கொண்டவர்களில் இவரும் ஒருவர். விரிவாக வாசித்துக் கொண்டிருப்பவர். சங்க இலக்கியங்கள் தொடங்கி நவீன இலக்கியங்களோடு வேறு பல துறைகளையும் நன்கு அறிந்தவர்.

தற்போது நந்தனம் அரசினர் ஆடவர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் சங்கர் அவர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வழியாகத் திருக்குறளும் பொருள்கோளும் என்னும் தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி 2007 ஆம் ஆண்டு முனைவர்பட்டம் பெற்றவர். திருக்குறளில் ஆய்வு மேற்கொண்டு ஆழ்ந்து வாசித்ததன் விளைவாகத் திருக்குறள் தொடர்பாக மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார்.

பல்கலைக்கழக மானியக்குழுவின் பெருந்திட்டத்தின் முனைவர் கை. சங்கர் அவர்கள் சிறந்த செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்தச் செயலியில் 1812 முதல் 1950 வரை வெளிவந்த செம்மொழி இலக்கண இலக்கியப் பதிப்புகள் பலவற்றையும் ஆவணப்படுத்தியுள்ளார். நூல்கள் தேவைப்படுவோர் Sanga Elakkiyam APP என்னும் செயலியின் வழியாகவும் Sanga Elakkiyam. Org என்ற இணையதளம் வழியாகவும் பதிவிறக்கம் செய்து வாசிக்க இயலும்.

பேராசிரியர், ஆய்வாளர் என்பதோடு மட்டும் நின்றுவிடாமல் தம் சிந்தனையின் விருட்சங்களைத் திரையின் வழியாகவும் உலகெங்கும் கொண்டு சேர்த்துள்ளார். இவரின் மாணவர் நெல்சன் அவர்கள் இயக்கிய ஒருநாள்கூத்து, மான்ஸ்டர் எனத் தமிழின் இன்றியமையாத இரண்டு திரைப்படங்களில் சங்கர் தாஸ் என்னும் பெயரில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்துள்ளார். தமிழ் பயிலும் மாணவர்கள் பேராசிரியர் பணி என்று மட்டும் தம்மைச் சுருக்கிக் கொள்ளாமல் திரை உலகிலும் சாதனை புரிய சங்கர் அவர்கள் முன்மாதிரியாக நிற்பதோடு எதிர்காலத்தில் பயணம் செய்ய இருப்பவர் களுக்காகத் தமிழ் இலக்கிய மாணவர்கள் திரைக்கதை, வசனம் எழுது தலுக்கான வழிகாட்டி பயிற்சி நூலாக திரைத்தமிழ் என்னும் நூலை விரைவில் வெளியிடவுள்ளார்.

முனைவர் கை. சங்கர் அவர்களின் நூல்கள்

2003 – ஒரு விடியலில் இருந்து இன்னொரு விடியல் வரை (கவிதை)

2008 – திருக்குறள் பொருள்கோள் உரை விளக்கம் ( அறத்துப்பால்)

2008 – திருக்குறள் உரைச் சிந்தனைகள்

2008 – மாட்டு என்னும் இலக்கணமும் நச்சினார்க்கினியர் உரையும்

2008 – சில குறள்கள் சில முடிவுகள்

திரைப்படப் பணி

(சங்கர் தாஸ் என்ற புனைபெயரில் எழுதியுள்ளார் )

2016 -  ஒரு நாள் கூத்து – (கதை, திரைக்கதை, வசனம்)

2019 – மான்ஸ்டர் (தமிழ்) – (கதை, திரைக்கதை, வசனம்)








5 comments:

  1. நல்ல தகவல். இளம் ஆய்வாளர்களைத் தேடி அறிமுகப்படுத்திச் சிறப்பிக்கும் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நன்றி

    ReplyDelete
  2. நன்றி நண்ப இளமாறன்.. பெரும்பாலும் அதிகம் நபர்களுக்குத் தெரியாத என்னைப் போன்ற தமிழ் ஆர்வலர்களையும் ஆவணப்படுத்தும் தங்கள் பணி மிகச் சிறப்பானது. உங்கள் உள்ளமும், முயற்சியும் போற்றுதலுக்குரியது.

    ReplyDelete
  3. இனிய பெருமிதச் செவ்வாழ்த்துக்கள்

    ReplyDelete