கவிதை எழுதுதல் என்பது ஒரு வரம்தான். எல்லோருக்கும் வாய்க்கப்பெறுவதில்லை கவிதை எழுதுதலின் சூட்சுமங்கள். எனக்கும் அப்படி இருப்பதாகவேதான் கருதி இருந்தேன். நவீன நாடகக்காரனாக உருவாகுவதற்கான முயற்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த
காலங்களில் ஆய்வு என்னைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டது. இலக்கணமும் பதிப்புகளும் வாரி அணைத்துக்கொண்டன. ஆனாலும் நவீன இலக்கிய வாசிப்பு என்னைப் பின்தொடர்ந்தபடியே இருந்தது. புதினங்களையும் சிறுகதைகளையும் கடந்து நவீன கவிதைகளே என்னை
அதிகம் ஆக்கிரமித்திருந்தன. ஆழப்பதிந்த கவிஞர்களின் கருப்பொருட்களும் மொழியும் என்னை
வசீகரித்தன. கவிதைகளில் உள்நுழையும் போதெல்லாம் வானம் தாண்டி கடலில் நுழைந்து
பேரண்டம் முழுவதுமாக நீந்தி நதியின் கரையோரங்களில் அமர்ந்து பனிக்காற்றைச் சுவாசித்துக்
கொண்டிருப்பேன். என் எழுதுகோலுக்கு மட்டும் பனிமலையாகவே தோற்றம் தந்து கவிதைகள்
அச்சுறுத்தின.
எப்போதாவது பெரு விருப்பமற்று எழுதிய சில கவிதைகள் சூழல்
சார்ந்த கவிதைகளாக இருந்தன. தலைவர்களின் பிறந்தநாள் கவிதைகள், வகுப்பறைக் கவிதைகள் என எழுதியவற்றைக் கவிதைகளாக நானாக நினைத்துக்
கொண்டதுண்டு. தீவிரத்தன்மையுடன் அதனுள்ளாக நான் நுழைவதேயில்லை. ஆனால் எழுதிவிடவேண்டும் என்ற எண்ணம் மட்டும் முழுவதுமாகப்
பீடித்திருந்தது.
தூக்கம் கலைந்த இரவொன்றில் ஆழ்மனத் தேடல்களில் நிகழ்த்தப்பட்ட
புதிய வெளிகள் வாழ்க்கையின் பெளதீக எல்லைக்குள் இருந்து என்னை வெகுதூரம் தூக்கியெறிந்தன. என் இயல்பான சிந்தனைகளுக்குள்ளாக நுழைந்து அந்தத் தேடல்கள்
நிகழ்த்திய போராட்டங்கள் கலவரங்களை நிகழ்த்தின. வாழ்வையும் அதன் இருப்பையும் கேள்விக்குள்ளாகின. நேர்கொண்ட எனது எழுத்துகளைக் கலைத்துப் போட்டன. காட்டின் அடர்நிலத்தின் பச்சைப் புல்வெளிகளில் என்னைச் சரியச் செய்தன. எழுத்தும் எழுத்தின் வீரியமும் மிகுந்தன. நீண்டகால நூற்றாண்டுகளின்
வெளியில் கவிஞர்கள் கடலில் வேட்டையாடி எழுதிய கவிதைகளின் மிச்சச் சொற்களை எனக்குத்
தந்தனர். எடுத்துக் கோர்த்து வடித்து மாற்றினேன். கவிதைகள் உருப்பெற்றன. மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் என்னும் முதல் கவிதைத் தொகுப்பு என்னைக் கவிஞனாய்ப்
பரவசப்படுத்தியது.
என் முதல் அடையாளமாய் மாயச்சிறுமி பூமி குடைந்து யானையின்
மீதேறி ஊர்வலமாக ஊரெங்கும் பயணித்தாள். மஞ்சள் வெயிலில் அவளின் வாசம் கடல் கடந்து போயின. மாயத்தின் வேர்களின் தொடர்ச்சி மட்டும் என் கவிதைகளைத் தொடரவைத்தன. எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை என்னைப் பின்தொடர்ந்தன. இரண்டாண்டுகள் கடந்த நிலையில் இப்போது இந்தக் கவிதைகள் போதிமரத்திலிருந்து
பூக்கத் தொடங்கிவிட்டன.
வாழ்க்கையின் அர்த்தங்களின் மையங்கள் என்னிலிருந்து என்னை
உதிர்த்தன. தேடல்கள் வெளியெங்கும் நிறைந்தன. காட்டாற்றின் நீளங்கள் என்னைத் துரத்தின. அந்தத் தேடல்களும் நீளங்களுமே இந்தத் தொகுப்பு. தலைப்பைத் தேடி நெடுநாட்களாய்ப் பயணித்துக் கொண்டிருந்தேன். சிறுவயதில் சித்தார்த்தன் என் ஆதர்ச நாயகன். வாழ்வில் நான் இழந்தவற்றை அவன் அனுபவித்தவற்றைக் கதைகளாக
என்னுள் உலவவிட்டேன். அவனின் வாழ்வியல் சூழல்களை நானாக உணர்ந்து எனது கவிதைகளைத்
தேடினேன். சித்தனின் மாற்று முகமாய்ப் புத்தன் விரிந்தான். புத்தனின் பன்முக ஆளுமைகளையும் காற்றில் விரியவிட்டேன். கவிதைகள் எல்லை கடந்தன. தலைப்பும் உருப்பெற்றன. சித்தனும் புத்தனும்.
எனக்கான அனுபவங்கள் மட்டுமல்லாது என்னைச் சுற்றிலுமான அகப்புற
உலகங்களின் தடங்களின் சுவடுகளே இந்தச் சித்தனும் புத்தனும். உங்கள் கைகளில் தவழவிடுகிறேன். வாசிப்பில் உங்கள் வார்த்தைகளில் என் கவிதைகளைச் செதுக்குங்கள். வானம் விரிந்து மானுடத்தின் வாசனையைப் பரப்பட்டும்.
என் வளர்ச்சியில் துணைநிற்கும் எல்லோருக்கும் இத்தருணத்தில்
நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு இத்தொகுப்பை அழகுற வடிவமைத்துத் தந்த வெ. மணிகண்ட பிரபு அவர்களுக்கும் இந்தத் தலைப்பை தம் சிந்தனைகளின்
வண்ணங்களால் அழகுற அட்டையாக வடிவமைத்துத் தந்த தோழர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கும்
நூலை பரிசல் பதிப்பகம் வழி சிறப்பாக வெளியிடும் அண்ணன் சிவ. செந்தில்நாதன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
பா. ஜெய்கணேஷ்.
துறைத்தலைவர், தமிழ்த்துறை,
அறிவியல் மற்றும் கலையியல் புலம்,
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம்,
காட்டாங்குளத்தூர்
– 603203
ilamarantamil@gmail.com
No comments:
Post a Comment