தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Saturday, March 28, 2020

தொல்காப்பியம் பன்முக வாசிப்பு - இரண்டாம் பதிப்பு முன்னுரை





2008ஆம் ஆண்டு, முதல் பதிப்பாக வெளிவந்த தொல்காப்பியம் பன்முக வாசிப்பு தற்போது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. தமிழ்ச்சூழலில் பரவலாக கவனம் பெற்ற தொகுப்பு நூலாக இன்றளவும் இந்நூல் திகழ்வதில் பெருமகிழ்ச்சி. இரண்டாயிரம் ஆண்டு காலமாக வாசிப்பில் தொல்காப்பியம் தொய்வில்லாமல் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் போது தொல்காப்பியம் பன்முக வாசிப்பு பத்து ஆண்டு காலமாக வாசிப்பில் இருப்பதொன்றும் பெரும் ஆச்சரியமில்லை தான். கல்விப்புலங்களில் மட்டுமல்லாமல் பொதுவெளியிலும் இந்த நூல் தொடர்ந்து கவனிக்கப்பட்டதற்குக் காரணம் இந்நூலில் உள்ள கட்டுரைகளே.

முதல் பதிப்பு உருவாக்கப்படவிருந்தபோது தொல்காப்பியம் குறித்து ஏராளமான கட்டுரைகளைத் தொகுத்து வைத்திருந்தேன். அந்தக் கட்டுரைகள் எல்லாம் தரமுடையவை என்றாலும் எவ்வாறு ஒருங்கிணைப்பது என்ற பெருங்குழப்பம் இருந்தது. மாற்று வரிசையின் பொதுப்பதிப்பாசிரியராக இருந்த எனது மதிப்பிற்குரிய பேராசிரியர் வீ. அரசு அவர்கள் ஒரு வழிகாட்டியாக இருந்து கட்டுரைகளை வரிசைப்படுத்தி ஒழுங்குபடுத்தி இந்தத் தொகுப்பைச் சிறப்பானதான மாற்றினார். அவருக்கு இத்தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இரண்டாம் பதிப்பாக வெளியிடும் போது நூலை விரிவாக்கம் செய்து வெளியிடலாம் என அண்ணன் பரிசல் சிவ. செந்தில்நாதன் கூறினார். அதனை யொட்டி மீண்டும் சில கட்டுரைகளை இத்தொகுப்பின் தரத்திற்கேற்றவாறு தேடினேன். பேராசிரியர் செ.வை. சண்முகம் ஐயா தமது தொல்காப்பியச் செய்யுளியல்: முழுப்பார்வை என்ற விரிவான கட்டுரையை வழங்கி உதவினார். கட்டுரை வழங்கியதோடு மட்டுமல்லாமல் பேராசிரியர் . அண்ணாமலை அவர்களிடமிருந்து கட்டுரையைப் பெறுவதற்கு உதவியும் செய்தார். அவருக்கு இத்தருணத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேராசிரியர் . அண்ணாமலை அவர்களின் தொல்காப்பியரது மூன்று மொழிக் கருத்துகள் என்னும் தலைப்பிலான கட்டுரை ஒன்றும் இ்த்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் பேராசிரியருக்கு ஒரு மின்னஞ்சல் மட்டுமே அனுப்பினேன். அடுத்த நாளே மனமுவந்து இந்தக் கட்டுரையை வழங்கி உதவினார். பேராசிரியர் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர் இலக்குவனின் புறத்திணையியல் குறித்த வேற்றுப்புலக் களவுதன்னுறு தொழிலா? வேந்துறு தொழிலா? புறத்திணை மரபுகள் குறித்த ஒரு விசாரணை என்னும் கட்டுரை பெயல் இதழில் வெளிவந்திருந்தது. அக்கட்டுரையை பயன்படுத்திக் கொள்ள பெயல் இதழின் முதன்மை ஆசிரியர் என் அன்பின் நண்பர் முனைவர் மோ. செந்தில்குமார் அவர்களைத் தொடர்புகொண்டேன். இந்தக் கட்டுரையைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியதோடு இதழில் வந்த வேறு சில கட்டுரைகளையும் பரிந்துரை செய்தார். அதில் பக்க வரையறை கருதி மருத்துவர். மேரி கியூரி போல் அவர்களின் கட்டுரையையும் இத்தொகுப்பில் இணைத்துக் கொண்டேன். உந்தி முதலா.... மருத்துவ நோக்கில் என்னும் இக்கட்டுரையானது தொல்காப்பியர் உடற்கூறுஇயல் மற்றும் உடற்செயலியல் குறித்து எத்தகைய பேரரறிவு கொண்டிருந்தார் என்பதை வெளிப்படுத்தும் முகமாக எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்கள் நண்பர் முனைவர் இரா. இலக்குவன் மற்றும் மருத்துவர். மேரி கியூரி போல் ஆகிய இருவருக்கும், இவற்றைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி தந்த பேராசிரியர் மோ. செந்தில்குமார் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொல்காப்பியச் செய்யுளியலின் சில உறுப்புகளை நடேஷ் அவர்களின் நவீன ஓவியங்களோடு இணைத்து ஒப்பிட்டு எழுதப்பட்ட சண்முக. விமல் குமார் அவர்களின் கட்டுரையும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. தொல்காப்பியரின் சிந்தனை மரபு எல்லாக் காலங்களிலும் எல்லாக்களங்களிலும் பொருந்தும் என்பதை வெளிப்படுத்துவதாக எழுதப்பட்டுள்ளது இக்கட்டுரை. சிற்றேடு இதழில் வெளிவந்த இக்கட்டுரையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்த தம்பி சண்முக. விமல் குமாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய கட்டுரைகள் சிலவற்றைத் தட்டச்சு செய்து தந்த திரு கிரிதரன் அவர்களுக்கும் நூலினையும் அட்டையினையும் மறுவடிவமைப்பு செய்து தந்த திரு மணிகண்ட பிரபு அவர்களுக்கும் நூலை சிறந்த முறையில் வெளியிடும் அண்ணன் பரிசல் சிவ. செந்தில்நாதன் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் எல்லா செயல்பாடுகளுக்கும் எப்போதும் ஆக்கமும் ஊக்கமும் தந்து என்னை நெறிப்படுத்தும் எஸ்.ஆர்.எம். கல்விநிறுவனத்திற்கும், எனது மதிப்பிற்குரிய இணைத்துணைவேந்தரும் தமிழ்ப்பேராயத்தின் தலைவருமான முனைவர் இர. பாலசுப்பிரமணியன் ஐயா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நாள்: 23/12/2019                              முனைவர் பா. இளமாறன் (ஜெய்கணேஷ்)
   

No comments:

Post a Comment