தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Saturday, March 28, 2020

மஞ்சள் வெயிலும் மாய்ச்சிறுமியும் – கவிதை நூல் விமர்சனம் - முனைவர் ஜெ. சுடர்விழி




இவ்வாண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பரவலாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு அரங்கு தோழர் செந்தில் நாதனின் பரிசல். சிறந்த நூல்களைத் தெரிவு செய்து தொடர்ந்து வெளியிட்டு வரும் பரிசல் பா.ஜெய்கணேஷின் மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும்கவிதை நூலை வெளியிட்டு இவ்வாண்டு கூடுதல் வெளிச்சத்தைத் தேடிக்கொண்டது. பொதுவாக தமிழ்ச்சூழலில் எழுதித் தீர்ந்தவுடன் படைப்பாளனின் பணி முடிவடைந்துவிடுகிறது. அப்படைப்பைச் சமூகத்திடம் கொண்டு போய் சேர்க்கவும் போட்ட முதலை எடுக்கவும் பதிப்பாளர் படும்பாடு சொல்லி மாளாதது. ஆனால் கவிஞர் ஜெய்கணேஷ் அந்தச் சிரமத்தைப் பதிப்பாளருக்கு கொடுக்கவில்லை. பல்வேறு புது உத்திகளைக் கையாண்டு விற்பனைக்களத்தில் தானே இறங்கினார்.
சமூக ஊடகத்தை சரியான முறையில் பயன்படுத்தி கண்கள் கூசும் அளவிற்கு மஞ்சள் வெயிலை முகநூல் பக்கங்களில் உலவவிட்டார். இந்நூலை விளம்பரப் படுத்தும் விதமாக அரைநிமிட காணொளி பதிவேற்றுவதும் புத்தகக் கண்காட்சி நடைபெற்ற ஒவ்வொரு நாளும் பரிசல் அரங்கிற்குச் செல்வதும் நெருங்கிய நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் தானே நூல் அறிமுகம் செய்வதும் அரங்கிற்கு நூல் வாங்க வந்தவர்களுடன் நின்று புகைப்படம் எடுப்பதும் அவற்றை முகநூலில் பதிவிடுவதும் என்று இவரது தொடர்ச்சியான விற்பனை யுக்திகள் மாயச்சிறுமி நூல்களை விரைவிலே மயமாக்கின.
ஒருபடைப்பாளனே அப்படைப்பை விற்க மேற்கொண்ட முயற்சிகளால் எழுத்தாளர்கள் வட்டத்திலும் வாசகர் வெளியிலும் என்னென்ன பின்னூட்டங்கள் நிகழும் அல்லது எழும் என்பதை அறியாதவர் அல்லர் ஜெய்கணேஷ் ஆனால் அவற்றைக் குறித்து அவர் சற்றேனும் கவலை கொள்ளவில்லை. ஒரு கவிஞனுக்கு தன்னைக் குறித்த சுயமதிப்பீடும் நூல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான விற்பனைத் திறனும் வேண்டும்  என்பதற்கு மூத்த கவிஞன் பாரதியே முன்னுதாரண மாகத் திகழ்கிறான். ”புவியனைத்தும் போற்றிட வான் புகழ் படைத்துத் தமிழ் மொழியைப் புகழில் ஏற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லைஎனும் வசை என்னால் கழிந்ததன்றே என்று தன்னை மதிப்பிட்டு உரைத்ததுடன் மண்ணெண்ணெய் தீப்பெட்டிகளைக் காட்டிலும் அதிக சாதாரணமாகவும் அதிக விரைவாகவும் நூல்கள் விற்கப்படுமென்று கனவுகண்டு அதற்கான முயற்சியிலும் இறங்கியவன் பாரதி. பாரதியின் கனவு அவன் வாழ்நாளில் பலிக்கவில்லை ஆனால் ஜெய்கணேஷ் தனது கவிதை நூலை மிகச்  சாதாரணமாகவும் மிக விரைவாகவும் விற்று முதல் கவிதை நூல் முயற்சியிலேயே விற்பனையிலேயே முத்திரை பதித்துள்ளார்.
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புலத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஜெய்கணேஷ் இதுவரை ஒரு பேராசிரியராகவும் ஆய்வாளராகவும் மட்டுமே தமிழ்ச்சூழலில் அறியப்பட்டு வந்தவர் யாப்பு பதிப்பு, தொல்காப்பிய உரை போன்ற ஆய்வுக்களங்களில் தொடர்ந்து இயங்கி குடியரசுத் தலைவரிடம் இளம் ஆய்வறிஞர் விருதைப் பெற்றவர். தற்போது பொதிகைத் தொலைக்காட்சியின் ழகரம்நிகழ்ச்சியின் நெறியாளராகவும் அந்நிகழ்வின் வெற்றிக்கு காரணராகவும் செயல்பட்டு வரும் ஜெய்கணேஷ் மஞ்சள் வெயிலும் மாயச்சிறுமியும்என்ற கவிதைநூலை வெளியிட்டுக் கவிஞராகவும் புதுபரிமாம் பெற்றுள்ளார்.
ஒரு கவிஞன் வாழ்க்கையில் தான் பெறுகிற அனுபவத்தைக் கவிதானுபவமாக மாற்றி அதை வாசகனுக்கும் கடத்தி எப்போது அவ்வனுபவத்தை வாசகனுக்கு உரியதாக மாற்றுகிறானோ அப்போதே அக்கவிதை அதன் இலக்கை அடைந்துவிட்டது எனலாம். அவ்வகையில் வாழ்வில் தனக்கேற்பட்ட பன்முக அதிர்வுகளையும் அனுபவங்களையும் கவிமணம் மாறாமல் வாசகனின் அனுபவமாக மாற்றி இருக்கும் ஜெய்கணேஷின் முதல் முயற்சி தன் இலக்கை எட்டியிருக்கிறது எனலாம்.
நான் இதன் பக்கங்களிலிருந்து உன் கைகளுக்குத் தாவுகிறேன்என்று விட்மன் தனது கவிதைகளைக் குறித்துக் கூறியிருப்பது இங்கு நினைவு கூறத்தக்கது. அவ்வாறே உதிர்ந்து கிடக்கும் பூக்களைச் சேகரிக்கும் மாயச் சிறுமி தன் கூடைக்குள் மஞ்சள் வெயிலை மட்டுமல்ல வாசகனின் மனங்களையும் சேர்த்து வாரிப் போட்டுக்கொண்டு பயணிக்கிறாள். புதையுண்ட ஈரநிலம், ரித்துப்போன மனிதம், நம்பிக்கை சிதைந்து போன வாழ்வில் ஏற்பட்ட தார்மீகக்கோபம், அடுக்கடுக்கான தனிமனித உணர்வுகள் அனைத்தும் இவரது கவிதை மொழிக்குள் அடங்கி அடங்கா வாசிப்பனுபவத்தை நமக்குள் ஏற்படுத்துகின்றன. இப் பொருண்மைகள் தமிழ்க் கவிதை உலகில் மீண்டும் மீண்டுமாய் பாடப்பெற்று சலிப்பை ஏற்படுத்துவது போன்று தோன்றினாலும் கூர்மையானதும் பாசாங்கற்றதுமான இவரது கவிமொழி இப் பொருண்மைக்கு வேறொரு அர்த்தகனம் வழங்கியுள்ளதாகவே கருதுகிறேன். ஆய்வுலகிலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்த வருக்குக் கவிதைமொழி இவ்வளவு எளிதாய் கைவரப்பெற்றிருப்பது வியப்பளிக்கிறது.
மஞ்சள் அட்டையில் மயக்குறு தோற்றத்துடன் பிரம்மாண்டத்தின் பேருருவமாய் நிற்கும் யானைநூல் நெடுகிலும் பல்வேறு உணர்வுகளின் குறியீடாய் அசைந்தபடியே நகர்கிறது. “யானையை வீழ்த்திய கல்லின் அளவு காட்டி வீழ்ந்ததில் சிறுமையில்லை எழுவதில் மட்டும் என்ன பெருமையாஎன்று யானையை எள்ளி நகையாடும் பூனையின் கேள்வியிலும் எறும்பு எச்சரிக்கைவிட்ட போதெல்லாம் இறுமாப்புடனே அலைந்து கிடந்த யானை மதநீர் ஒழுக ஒழுக விழுந்து கிடக்கிறதுஎன்கிற வரிகளிலும் பிரம்மாண்டங்களின் வீழ்ச்சி பேசப்படுகிறது. தமிழக அரசியல் சூழலுடன் பொருத்திப் பார்த்துக்கொள்ளவும் இவ்வரிகள் வாசிப்பவனுக்கு வாய்ப்பளிக்கிறது.
எதிரில் நிற்பவனிலிருந்தே யானைகள் யானைகளாக ஆகின்றன” என்ற ஒற்றை வரியில் கலிங்கத்துப்பரணியின் யானைகளையும் காசுக்காக கைநீட்ட பழக்கப்படுத்தப்படும் யானைகளையும் ஒருங்கே காட்சிப்படுத்துகிறார். ”களிறு பிடியுடன் சேர்ந்து தும்பிக்கையில் நீர் சேகரித்து செல்லுகிறதுஎன்பது கவிதை வரிகள் என்பதைக் காட்டிலும் வறட்சியாக்கப்பட்ட மண்ணின் வலிகளாகத் தெரிகின்றன. தொலைந்த மஞ்சள்நிற யானையை வாசகர்களின் நம்பிக்கையோடு தேடிக்கொண்டு இருப்பதாகக் கூறும் கவிஞர் அந்த யானை எது என்பதை வாசகனின் அவதானிப்பு களுக்கே விட்டுவிடுகிறார்.
 சிட்டுக்குருவியின் செஞ்சோற்றுக்கடன், மரத்தின் இயலாமை நீரற்ற நதித் தடங்கள், பலியாடு, இல்லாதவைகளின் உலகம், தொலைந்த மரங்கள், வழிந்தோடும் வெயில், சிதைவுகளின் வன்மம், தலைப்புகளில் அமைந்த கவிதைகள் தொன்மை களைத் தொலைத்து நதிகளை வற்றச் செய்து ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பிலும் ஒரு உயிரினத்தின் வீழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வன்மம் சமூகத்தின் மனநிலையை விளாசித் தள்ளுகிறது. ”என்னுள் உங்களைத் தேடாதீர் நான் நானாக இருந்து விடுகிறேன்இங்கு பிறந்த உடனே யாரைப்போல் குழந்தை இருக்கிறதென்று நம்முள் பிறரைத் தேடும் சமூகத்தின் மீதான கோபம் மட்டுமல்ல தனித்துவம் தேடி அலையும் கவிஞனின் தாகமும் ஒருங்கே சேர்ந்து வெளிப்படுகிறது.
மஞ்சள் வெயில் நூல் முழுவதும் பங்குனி வெயில் போல் பல்லிளித்துக் கொண்டே வருகிறது. மரங்களை, திண்ணைகளை, நீண்ட குறடுகளை, பெரும் கிணறுகளை, மரங்கள் நிறைந்த தோட்டங்களை என்று எல்லாவற்றையும் வணிகச் சூழ்ச்சிக்கு வாரிக் கொடுத்து விட்ட மனிதர்களை கூர்ந்து கவனித்துக் கொண்டே என்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல் வெயில் எக்காளமிட்டுத் திரிகிறது.
இவரது சில கவிதைகள் ,கதைகள் போலவும் சில ஹைக்கூபோல் முடிவிலே பேசுவனவாகவும் சில கவிதைகள் வாசகனுக்கு அவனது உலகத்தைப் பொருத்திப் பார்க்க இடம் தருவனவாகவும் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு, உவமைகள், வெற்று அலங்கார சொற்களை நிரப்பும் கவிதை புனைவை மறுத்தும் அதே நேரத்தில் புரியாத சொற்களை அடுக்கிப் புதிராகப் புனைந்து வாசகனை மிரட்டும் பாணியில் இல்லாமலும் கவிதைகள் மிக நேர்த்தியாகப் பதிவாகியிருக்கின்றன. நூலின் அச்சும் அமைப்பும் வாசகனை இன்னும் நெருக்கப்படுத்தியுள்ளன. பொதுவாக வெயில் என்பது ஈரத்தைக் காயவைக்கும்; ஆனால் இவரது மஞ்சள் வெயிலோ அன்பின்றி காய்ந்து கிடக்கும் மனங்களை ஈரமாக்கும். எழுதிய ஜெய்கணேஷ் அவர்களுக்கும் பதிப்பித்த பரிசல் செந்தில்நாதன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

28/02/2018                                                    முனைவர் ஜெ. சுடர்விழி                             


No comments:

Post a Comment