”அப்பா
எனக்கு உன்கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேக்கணும்”
”கேளுடா
மகனே… ஊருல அவன் அவன் கேக்காததையா நீ கேட்டுறப் போற”
”இல்லப்பா
கூத்துல ராமன், பீமன், அருச்சுனன்,
இராவணன்னு இப்படி எத்தனையோ கதாப்பாத்திரம் இருக்க நீ மட்டும்
ஏன்ம்பா பாஞ்சாலி, சீதைன்னு பொம்பளைங்களா நடிக்கணும்னு
விருப்பப்பட்ட”.
“சின்ன வயசுல கூத்துப் பாக்க எங்க அம்மா கூட போவண்டா. அம்மாவே தூங்கிரும். ஆனா நான் மட்டும் தூங்கவே மாட்டன். எவ்வளவு பெரிய ஆம்பள நடிகருங்க வந்தாலும் அங்க பெருசா கைத்தட்டல் இருக்காது. இப்ப நீ சொன்னியே பொம்பளைங்க அவங்க மாதிரி வேஷம் போட்டு ஆம்பளைங்க வந்து நிக்கறப்ப அந்த இடமே அதிரும்டா.
காசு
கொண்டு போய் குடுப்பாங்க நிறைய அவங்களுக்குதான். எல்லாரும் பாராட்டுவாங்க அவங்கள.
இத பல ஊருக்காரங்க கூத்துலயும் பாத்துக்கிட்டே இருந்த நான் மெது மெதுவா என்னையும்
மாத்திக்க ஆரம்பிச்சன். நான் பேசறது சாதாரணமாவே பொம்பள மாதிரிதான் இருக்கும்.
அதுவும் சேர்ந்து ஊருல போறவன் வரவன்லாம் உசுப்பேத்த எனக்கும் கூத்துல பொம்பளையா
நடிக்கணும்னு ஆச வந்துருச்சுடா”.
”அதுக்கு
என்ன பண்ண? எப்படி நடிக்க வந்த”?
“எனக்கு
பதினைஞ்சு வயசு இருக்கறப்ப அம்மா கிட்ட சொன்னன். அம்மா முதல்ல சொன்ன வார்த்தையே
அடி செருப்பாலன்னுதான். ஆம்பள பையன சிங்கம் மாதிரி பெத்து வச்சிருக்கன்னு ஊருலலாம்
சொல்லிட்டு திரியுறன் நானு. நீ என்னடான்னா பொம்பளையா வேஷம் போட்டு நடிக்கப்போறன்னு
வந்து நிக்கிற அப்படின்னு” திட்டோட அடியும் சேர்ந்துதான்
விழுந்துச்சு.
ரெண்டுநாள்
நான் கொலப்பட்டினி. அன்னைக்கு இரவு தூங்கறப்ப அம்மா தலமாட்டாண்ட வந்து உக்காந்து “டேய்
பொம்பளயா நடிக்கிறதுல இருக்கற சிக்கல்லாம் உனக்கு தெரியாதுடா. சொன்னா
புரிஞ்சிக்கோடான்னு” எவ்வளவோ சொல்லிப் பாத்துச்சு. நான்
அப்பயும் அழுது அடம்பிடிச்சேன். அப்புறம் சமாதானமா “என்னமோ
பண்ணுடான்னு” சொல்லிட்டுப் போயிருச்சு.
அம்மா
சொன்னதுல இருந்து முதல்ல நீளமா முடி வளக்க ஆரம்பிச்சன். மீசை, தாடி
கொஞ்சம் வளந்தாக்கூட வழிச்சு விட்டுருவன். நான் கொஞ்சம் மாநிறம் வேறயா. அதனால
எப்பவும் பாக்க அழகா இருக்கணும்னு மேக்கப் போட்டுக்கிட்டே இருப்பன்.
”ஏன்ம்பா
பொம்பளைங்க யாரும் நடிக்காம ஆம்பளைங்க அவங்க வேஷம் போட்டு நடிச்சாங்க”…
“அடேய்
இந்தக் காலத்துலயே பல வீட்டுங்கள்ல பொம்பளைங்க நடிக்கறதுன்னா அவ்ளோதான். அந்தக்
காலம்னா சொல்லவா வேணும். பொம்பளைங்க வீதியில இறங்கி நடிச்சாங்கன்னா வீட்டோட மானமே
காத்துல பறந்த மாதிரி. அதனால நடிக்கவே விடமாட்டாங்க. அதுக்காகத்தான் என்ன மாதிரி
பொம்பள வேஷம் போடத் தயாரா இருக்க ஆம்பளைங்கள நடிக்க வச்சாங்க”.
”சரி
சரி நீ உன் கதைய சொல்லு”…
“டேய்
கதைகேட்டது போதும் உங்க அப்பா ராஜா தேசிங்கு கதைய… எந்திரிச்சி
வந்து கஞ்சி குடிக்கற வழி பாருடா. அடுத்த வேள கஞ்சிக்கே வழி இல்லையாம். கதயப் பாரு
கதய”…
”அம்மா
இரும்மா… வரன். நானும் ரொம்பநாளா கேக்கனும்னு நினைச்ச கதை.
கேட்டுட்டு வந்து கஞ்சி குடிக்கறன் இரு”.
”உங்க
ஆத்தா அப்படித்தாண்டா. அவளுக்கு எப்பவுமே என்ன கண்டா எலக்காரம் தான்”
”அதவிடுப்பா
நீ வா கதைக்கு…”
”பக்கத்து
ஊருல இருக்கற ராவணன் கூத்துக் குழுவுக்கு நடிச்சு வந்த பொம்பள ஆளு
கல்யாணத்துக்குப் பொண்ணு கிடைக்காம தற்கொலை பண்ணி செத்துருச்சாம். அந்த சமயத்துல
ஆள் தேடிக்கிட்டு இருந்தாங்க. அப்பதான் நான் போய் பாத்தன். முன்னடி இருந்தவ நல்லா
சிவப்பா இருப்பாளாம். நான் மாநிறம்ல. ரொம்ப யோசிச்சாங்க. ஒருவாரம் கழிச்சு வரச்
சொன்னாங்க. ஒரு வாரம் வரைக்கும் வேற ஆள் கிடைக்கல. என்னையே சேத்துக்கிட்டாங்க.
மூனுமாசம்
பயிற்சி. எனக்கு இயல்பாவே உடல்மொழியும் குரலும் இருந்ததால என் குருவுக்கு சிக்கல்
இல்லாம போயிருச்சு. நல்லாவே கத்துக்கிட்டன் எல்லாத்தையும்”…
”அப்புறம்
முதல்நாள் முதல் கூத்து எங்க நடந்துச்சு. உனக்கு அந்தநாள் நினைவு இருக்காப்பா”
”அது
மறக்கக்கூடிய நாள் இல்லடா? என் வாழ்க்கையவே புரட்டிப்போட்ட
நாள் அது. என்னோட வாழ்நாள் கனவு ஈடேறப்போற நாள்னு மேக்கப்லாம் போட்டுகிட்டு
மேடையில போய் நின்னன். மேக்கப் போடறப்பவே விடல பசங்க என்ன டிரஸ் மாத்தவிடாம தொல்ல
பண்ணிக்கிட்டே இருந்தாங்க. நான் மேடைக்கு வரதுக்குள்ளயே அங்கங்க சீண்டிக்கிட்டே
இருந்தாங்க. இது என்னடா இம்சன்னு மேடைக்கு போய் நின்னப்ப ஊரே ஒரே கைத்தட்டல்.
பெருமையா இருந்துச்சு.”
”அப்புறம்
என்ன? உனக்கு”…
”டேய்
நடிக்கறப்ப காசுகுடுக்கறன்ற பேர்ல நான் ஆம்பள வேஷம் போட்ட பொம்பளன்னு தெரிஞ்சி கூட
கண்ட இடத்துலயும் வந்து தொட்டானுங்க. வாய்க்கு வந்ததலாம் பேசினானுங்க. நான்
நடிச்சு முடிக்கிறதுக்குள்ளயே ஒருவழி ஆயிட்டன்”.
”ஆனா
அதல்லாம் பொறுத்துக்கிட்டுதாண்டா நடிச்சன் அதுக்கப்பறமும்”.
”சரி
ஊருல உன்ன எல்லாரும் எப்படி பாத்தாங்க”…
”எல்லாரும்
என்ன ஒன்பது, அலி, உஸ்ன்னே கூப்பிட
ஆரம்பிச்சாட்டானுங்க. நான் எவ்ளோ சொல்லிப்பாத்தன். ஆம்பளையா இருந்து பொம்பளையா
நடிக்க வந்த என்னையே இப்படி விரட்டறாங்கன்னா, உண்மையாவே
பொம்பளையா மாறவங்க கதி என்னன்னு யோசிச்சன். அதுல இருந்து இன்னைக்கி வரைக்கும்
அவங்கள கையெடுத்து கும்பிட ஆரம்பிச்சிட்டண்டா”…
”எனக்கு
எங்க ஊருல ஒரு பொண்ண ரொம்ப பிடிக்கும். அழகா இருப்பா அவ. அவ பின்னடியே திரிஞ்சன்…
அவளும் சிரிப்பா, ஆனா பேச மாட்டா. ஒருநாள் அவ
பின்னடியே போய் நின்னனா”…
”என்ன
நின்னனா, சொல்லு சீக்கிரம்”
அவ
திரும்பன சமயம் பாத்து உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். என்ன கல்யாணம்
கட்டிக்கிறிங்களான்னு கேட்டன். அவ்ளோதான். அவ விழுந்தடிச்சு சிரிச்சா என்ன பாத்து.
”என்னது காதலிக்கிறிங்களா, கல்யாணம் பண்ணிக்கணுமான்னு
கேட்டா”
”ஆமாம்னு
சொன்னன். அடுத்து அவ கேட்டா பாரு”.
“உங்களால
புள்ள பெத்து தரமுடியுமான்னு. நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்ககூட நடந்து வந்தா
நீங்க நடக்கற நடய பாத்து இந்த ஊரு என்ன சொல்லும். ஐயா சாமி நான் உங்கள பாத்து
சிரிச்சது எல்லாம் உங்க நடையையும் குரலையும் கேலி பண்ணிதான். மூதேவிக்கு பாரு ஆசய
கல்யாணம் கட்டிக்கணுமா நானு. போய் வேலயபாருன்னு” சொல்லி
அனுப்பிட்டா…
”அப்பறம்
எப்படி அம்மா மட்டும் உன்ன கல்யாணம் பண்ணிக்கிச்சு. அத நீ சொல்லவே இல்ல”…
“காதல்
ஆச காணாம போனதுல இருந்து கல்யாண ஆச வந்துச்சு. உங்க ஆயா எந்தெந்த ஊருலயோ போய்
பொண்ணு பாத்துச்சு. அப்பன் ஆத்தாங்க ஒத்துக்கிட்டாலும் பொண்ணுங்க ஒத்துக்கல.
வயசும் ஆயிருச்சு. ஒருத்தி கூட என்னக் கட்டிக்கில. வரவ எல்லாமும் என்னயும் சேத்து
கிண்டல் பண்ணிட்டுதான் போனாளுங்க.
”அப்பறம்
அம்மா மட்டும் எப்படிப்பா”
“உங்க
அம்மாவோட அப்பா ஒரு பெண் வேஷம் போடற கூத்தாடி. அந்த ஆளும் இறந்துபோயிட்டான். அநாதையா
இருந்த உங்க அம்மா கிட்ட எங்க அம்மா பேச உங்க அம்மாவும் ஒத்துகிட்டா. அதனால
இன்னைக்கு என்கூட அவ. எங்களுக்கு நீ.
”சரி
அம்மா கூட உன்கூட எங்க போனாலும் கூடவே நடக்க மாட்டுது. உன்ன முன்ன போவவிட்டுட்டுப்
பின்னதான் நடந்து வருது. அவங்க அப்பாவும் அப்படித்தான. அப்பறம் என்ன?”
“நானும்
அததாண்டா நினைச்சன். ஆனா இவ சொன்னா பாரு… ”பொம்பள வேஷம் போடற
கூத்தாடிக்கு மட்டும் வாக்கப்பட்டுற கூடாதுன்னு என் வாழ்நாள்ல நினைச்சன். ஆனா என்
விதி எங்க அப்பன் செத்து இவன கொண்டு வந்து விட்டுருச்சுன்னு இன்னைக்கும்
திட்டிக்கிட்டு இருப்பாடா”. உனக்கு இதல்லாம் சொன்னா
புரியாதுடா. சரி பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகலயா. நீ கிளம்பு முன்னடி போ. நான்
பின்னடியே வந்து உங்க வாத்தியாரப் பாக்கணும்.
”அப்பா
ஒன்னு சொல்லவா”?
”என்னடா”?
”நீ
பள்ளிக்கூடம் பக்கம் மட்டும் வந்துராத. அம்மாவ நான் வரச்சொல்லிட்டன். பசங்கலாம்
என்ன வெறுப்பேத்துறாங்க.. ஒன்பது பையன் ஒன்பது பையன்னு…
புகைப்படங்கள் : கு. சுரேஷ்குமார்
No comments:
Post a Comment