ஒலித்த குரலின் கம்பீரம் பட்டென தூக்கத்திலிருந்து எழும்ப
வைத்தது.
நீங்கள் யார் என்றேன்? ஒளவை என்றார்.
ஒளவையா? ஆமாம் ஒளவை தான்.
ஒளவை என்றால் வயதான உருவம்தானே எங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.
நான் கோல் ஊன்றும் வயதினள் அல்ல. உங்கள் கற்பனை போல்... நான் சங்ககால ஒளவை. பாடினி.
உங்கள் ஊரில் அறம் பாடினாலே வயதானவர்களாகவே மாற்றி விடுகிறீர்களே? தம்பி பாரதிக்கு 39 வயதுதான். அவர் சொல்லாத அறம் இல்லையே? புதிய ஆத்திசூடி கூட பாடியிருக்கிறாரே அவர் என்ன கோலூன்றும் ஆளா? நல்ல வேளை தம்பியின் புகைப்படம் கிடைத்துவிட்டது. இல்லையென்றால் நீங்கள் அவரையும் அப்படித்தான் ஆக்கியிருப்பீர்கள். சரி வாருங்கள் காலார காலத்திற்குள்ளாக நடந்து போகலாம்.
காலாரவா என்றேன்.
ஆமாம் பழகிக்கொள்ளுங்கள் இன்றைய காலத்தில் உங்களுக்குத் தேவைப்படும்.
சரி வருகிறேன். இந்தக் காலம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்றேன்.
ஆமாம் பிடித்திருக்கிறது. ஆனால் மக்களை இந்தப் புதுப்புது நோய்கள் பிடித்து ஆட்டுகிறது. அதுதான் பிடிக்கவில்லை. ஆனால் இங்கே
எங்கள் சங்க காலம் போன்று ஏராளமான பெண் கவிகள் இருக்கிறார்கள். அவர்கள் கவிதைகள்
எங்கள் காலம் போல செறிவாக இருக்கின்றன. எங்கள் காலத்தைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அதனால் எனக்கு
இந்தக் காலம் கூடுதலாகப் பிடித்திருக்கிறது என்று சொன்னார். சரி வாருங்கள்
மேலே நடக்கலாம்.
பாடினி வந்தாள் பாடினி வந்தாள்....
ஏதோ என் பெயரைச் சொல்லி அழைப்பது போல ஒரு பாடல் ஓடுகிறதே
என்ன?
அது ஒரு நாடகம் உங்கள் பெயரில்தான் நடக்கிறது, வாருங்கள் உள்ளே
போகலாம்.
இந்த நாடகம் மானுடக் கவி இன்குலாப் அவர்களால் ஒளவை என்னும்
பெயரில் எழுதப்பட்டு பேரா.அ.மங்கை அவர்களால் இயக்கப்பட்டது. இந்த நாடகம்தான் உங்களை இளமையாகவும் உங்களின் இயல்பு வாழ்க்கையையும்
எதார்த்தமாகப் பதிவுசெய்தது.
பரவாயில்லை மகிழ்ச்சி, என்னை சரியாக அடையாளம் கண்டிருக்கிறார்.
காட்சி - 2
இன்னும் சற்று முன் நடக்கலாமா? இது என்ன படம்?
இது நீங்கள் நடித்தப் படம்தான். நானா?
இல்லை இல்லை உங்களையும் பிற்கால நீதி இலக்கிய ஒளவையையும்
சேர்த்து ஒன்றாக்கி எழுதப்பட்ட கதை. அதோ எங்களுக்கெல்லாம் ஒளவை அவர்கள்தான்.
கே.பி. சுந்தராம்பாள். அருமையாகப் பாடி நடிப்பார்.
ஆனால் அவர் நான் இல்லையே.
அவர்தான் நாங்கள் உங்களைப் படிக்கும் வரை எங்களுக்குத் தெரிந்தவர்
என்றேன்.
ஆமாம் இங்கே உ.வே.சா. இருக்கிறாரா? இருக்கிறார். தமிழ்த்தாத்தாவாக.
உண்மைதான். அவரும் இன்னும் சில பதிப்பாசிரியர்களும் சேர்ந்துதான் என்
பாடல்களை எல்லாத் தளங்களிலும் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். அனைவருக்கும்
நன்றிக்கடன் பட்டவள்.
காட்சி - 3
இன்னும் முன்னே போலாமா என்று சொல்லி முடிப்பதற்குள் சோழர்காலத்தில்
நின்றிருந்தோம் நாங்கள். இங்கேதான் அந்த
ஒளவை இருக்கிறார். வா விசாரித்துவிட்டு வருவோம். ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை பாடிய ஒளவையே வணக்கம் என்றார் சங்ககால ஒளவையார்.
வணக்கம் வணங்குகிறேன் என்றார் நீதி இலக்கிய ஒளவை.
உங்களையும் என்னையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள் இவர்கள். அதனால்தான்
தம்பியை உங்களிடம் அழைத்து வந்தேன்.
வரலாறு என்னும் பெயரில் இவர்கள் அவ்வப்போது குழம்புவார்கள். அதனால் ஒரே
பெயரில் இருக்கும் நம்மையும் குழப்பிவிடுவார்கள்.
தம்பி நான் இவர் இல்லை. நான் அறம்செய விரும்பு என்றவள்.
அவர் அறம் செய்த அதியமானையே பாடியவர்
நான் அறத்தை மட்டுமே பாடியவள்
அவர் அறத்தோடு அகம் புறம் என எல்லாம் பாடியவர்
எனக்கு மூத்தவள். என் மூதாதை என்று சொல்லி முடித்தார்.
உண்மை அம்மா. எல்லோருக்கும் இனி ஒரு தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
காட்சி - 4
ஆர்வமும் வேகமும் கூட 7 ஆம் நூற்றாண்டான பக்தி இலக்கியக் காலத்தில் நின்றிருந்தோம்
இரு தம்பி. அதோ ஆண்டாள். அந்தப்பக்கம் காரைக்காலம்மையார். இருவரிடமும் பேசிவிட்டுச் செல்லலாம். ஆண்டாளின் பக்தியின்
கவி மொழியும் காரைக்காலம்மையாரின் பக்திநெறியும் எனக்குப் பிடிக்கும். இந்தக் காலத்தில்
கவிபாடிய பெண்கள் இவர்கள் இருவர்தான்.
உண்மைதான் அம்மா. காக்கைபாடினி என்று ஒருவர் கூட இருப்பதாகப் படித்திருக்கிறேன். அவர் ஆணா பெண்ணா
என்ற பெயர்க் குழப்பம் ஆக்கிவிட்டீர்கள். இப்படித்தான் நிறைய புலவர்களை பெயர்க்குழப்பத்தில் தள்ளி
இறுதியில் ஆண் புலவர் என்றே வாதில் வென்றும் விடுவீர்கள என்றார்.
காட்சி - 5
சரி வா நம் உலகத்திற்குப் போகலாமா? சங்ககால உலகமா
என்றேன். ஆம் என்றார்.
ஆகா உங்கள் கவிதை உலகம் எனக்குப் பிடித்த உலகமாச்சே.
சரி ஒன்றை மறந்துவிட்டாயே என்றார் ஒளவை. என்ன என்றேன்?
நடந்து வரும்போது நீ சந்திந்த ஆண் கவிகள் எத்தனை? எண்ணிலடங்கா, அதனால் எண்ணுவதற்கு
முடியவில்லை என்றேன்.
பெண் கவிகள்:
18 ஆம் நூற்றாண்டிலிருந்து உங்கள் சங்க காலத்திற்கு முன் வரை 10 பேர் கூட இல்லை. என்ன நினைக்கிறாய். இது குறித்து
என்றார்.
பெண்கள் பெரும்பாலானோர் படிக்கும் சூழல் இல்லாத காலமாக இருந்திருக்கிறது
என்றேன்.
பார்த்தாயா உனக்கு எளிதாக தெரிந்திருக்கிறது. பெண்களுக்கான
கல்வி மறுக்கப்பட்ட காலம் இவை. என் காலத்திலும் உங்கள் காலத்திலும் இருந்த அளவிற்கான பெண்கல்வி
பற்றிய சிந்தனை இந்தக் காலங்களில் இல்லை. அதனால் தான் பெண்பாற்புலவர் எண்ணிக்கையே இங்கு இல்லை. ஒளவை என்னும்
என் பெயரிலேயே இதில் நான்கு பேர் இருப்பதாக உங்கள் இலக்கிய வரலாறுகள்
சொல்கின்றன. அவ்வளவே.
கூர்ந்து கவனித்திருந்த நான் சரி உங்களுக்கு உங்கள் காலத்தில்
யாரெல்லாம் அதிகம் பிடித்தவர்கள் என்றேன்.
முதலில் அதியமான். அவர் என் தோழர். அடுத்து வெள்ளிவீதி, அடுத்து கபிலர், அடுத்து பாரி மகளிர்.
நீங்கள் பெரிதும் விரும்பாதவர்கள்? பேரரசுகள் என்றார். ஏன் என்றேன்.
எப்போதும் குறுநில மன்னர்கள் மீது ஏதோ ஒரு காரணத்திற்காகப்
போர் தொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அதனால் எனக்கு அவர்கள் மீது விருப்பமில்லை. ஒருமுறை இந்தப்
போரையெல்லாம் கைவிட்டு அறம் செய்யுங்கள் என்று கூட அறிவுரை கூறிவிட்டேன். ஆனால் கேட்டவரில்லை.
சரி உங்கள் கவிதைகள் பற்றிப் பேசுவோமா? உங்கள் அகப்பாடல்
பற்றிச் செல்லுங்களேன்.
நான் எழுதிய பாடல்கள் அனைத்தையும் உங்கள் தொகுப்பின் வசதிக்காகத்
தூக்கி விட்டீர்கள். நீங்கள் படிப்பது நான் எழுதியவற்றிலிருந்து தேடித் தொகுத்தவை.
உங்களுக்குக் காதல் என்றால் அவ்வளவு பெருவிருப்பமா? அத்தனைப் பாடல்களை
குறுந்தொகை, அகநானூறு, நற்றிணையில்
எழுதியிருக்கிறீர்களே.
மனிதர்கள் எல்லோருக்குள்ளும் இருக்கிற ஆழ்ந்த உணர்வு. அதை வெளிப்படுத்துபவர்கள்
வெளிப்படுத்தாதவர்கள் இந்த இரண்டு வகைதான். நான் பாடினி இல்லையா. அதனால் பாடலாகப் பாடினேன்.
புறத்தில் ஏன் அதியமானையே அதிகம் பாடினீர்கள் என்றேன்?
அவனோடு சண்டையிட்டு அவன் வள்ளல் தன்மையை வியந்து நெல்லிக்கனி
உண்டு அவனையே வியந்தவள். நான் கண்ட சிறந்தவர்களில் அவன் என் தலைமைக்குரியவன். தோழன். அதனாலேயே அதிகம்
பாடினேன் என்றார்.
ஒளவையின் குரலில் அகமும் புறமும் ஓங்கி ஒலிக்க கவிதைகளில்
நெடுநேரம் மூழ்கிக் கிடந்தோம். காற்று மெல்ல வருடி தடவிய போது “ஆசாகு எந்தையாண்டுளன் கொல்லோ”? என்ற அடியை நான் கூறினேன். ஒளவை கண்கலங்கி நின்றார். எங்களைப் போன்றோருக்கெல்லாம் பற்றுக்கோடாய் இருந்தவன் அவன். தொலைந்தவனைத்தான்
உங்கள் காலம் வரை தேடி வந்தேன். உங்களையும் சந்தித்தேன் என்று சொல்லி முடித்து காலத்தில்
எல்லைக்கோடு கடந்து காணாமல் போனார்.
பொழுது விடிந்திருந்தது. தூக்கம் கலைந்து தேநீர்க் கோப்பையோடு மொட்டை மாடியில் அகண்ட
வானத்தின் தூரங்களைக் கண்களால் அளந்துகொண்டிருந்தேன். தூரத்தில் மின்னிய ஒற்றை ஒளி என்னை நோக்கியே மின்னிக்கொண்டிருந்தது.
No comments:
Post a Comment