தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Saturday, July 4, 2020

சங்க இலக்கியச் சொல்வளமும் தமிழ்ச்சமூக ஆவணமும் - தமிழ்ச் சொல்வளம் - சங்க இலக்கியம் – பூவுலகு



மொழி அறக்கட்டளை பல்வேறு அரிய ஆவணங்களை அகராதியியல் நோக்கில் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. தற்காலத் தமிழ் மரபுத் தொடர் அகராதி, சொல் வழக்குக் கையேடு, தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி முதலானவற்றைத் தொடர்ந்து சங்க இலக்கியங்களின் சொல்வளத்தினைத் தமிழ்ச் சொல்வளம் என்னும் வரிசையில் அடைவுபடுத்தி வெளியிட்டு வருகிறது மொழி அறக்கட்டளை. அகராதியியல் துறையிலும் நாட்டார் வழக்காற்றியல் துறையிலும் ஆழங்கால்பட்ட பேராசிரியர் பா.ரா.சுப்பிரமணியன் அவர்களின் கடுமையான உழைப்பில் உருவாகி வரும் இந்த சொல்வளப் பொருளகராதிகள் அதிக நம்பகத்தன்மை கொண்டவை.

சங்க இலக்கியத்தில் உள்ள சொற்களை அறிவதற்கு நமக்குத் துணைசெய்பவை சொல்லடைவுகள் மற்றும் பொருளடைவுகளே. கேரளப் பல்கலைக்கழகம் வழியாக உருவாக்கப்பட்ட சொல்லடைவுகள், தாமஸ் லேமன்தாமஸ் மால்டன் ஆகியோர் இணைந்து உருவாக்கிய சங்க இலக்கியச் சொல்லடைவு, பெ.மாதையன் அவர்களின் சங்க இலக்கியச் சொல்லடைவு, புலவர் மணியன் அவர்களின் சங்க இலக்கிய வினைவடிவங்கள், பாண்டியராஜா அவர்கள் இணைய வழி உருவாக்கிய சங்கத் தொடரடைவு (sangam concordance) முதலானவை சங்க இலக்கியத்தின் சொற்களைப் பலநிலைகளில் அடைவுபடுத்தித் தருகின்றன. புலவர் மணியன் அவர்களின் சங்க இலக்கிய வினைவடிவங்கள் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள வினைகளையும் அவற்றின் வடிவங்களையும் நிரல்படுத்தி பொருண்மை வேறுபாடுகளோடு தருகிறது. அகராதியியல் நோக்கில் சில குறைபாடுகள் காணப்படினும் சங்க இலக்கிய வினை வடிவங்களை முழுவதுமாக அறிந்துகொள்வதற்கு இந்த நூலே பெரிதும் துணை செய்கிறது.

பேராசிரியர் பாண்டியராஜா அவர்கள் உருவாக்கிய சங்க இலக்கியத் தொடரடைவு ஒரு சொல் அவற்றுடைய வடிவங்கள் ஆகியவற்றை வகைப்படுத்தி அந்தச் சொல் எந்த எந்தத் தொடர்களிலெல்லாம் இடம்பெற்றுள்ளது என்பதை வகைப்படுத்தித் தருகிறது. தொடரடைவு என்பதில் பெரும் ஆவணமாக இருந்த போதிலும் ஒரு சொல்லோடு தொடர்புடைய பல சொற்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு இதில் இல்லை. கடுமையான உழைப்பையும் பெரும் நேரத்தையும் விழுங்கும் இதுபோன்ற பணிகளை இவர்கள் இவ்வாறு செய்து தமிழ்ச் சமூகத்திற்குக் கையளித்திருப்பது காலங் கடந்து போற்ற வேண்டிய ஒன்று. ஒரு நோக்கோடு செய்யப்படும் இப்பணிகளை அடுத்தடுத்த தளங்களுக்கு நகர்த்த வேண்டியது மற்றவர்களின் பொறுப்பு.

இந்தப் பொறுப்பினைத் தமிழின் மூத்த பேராசிரியர் பா.ரா. சுப்பிரமணியன் தம் தலைமேல் கொண்டு சுமக்கின்றார். சங்க இலக்கியத்தின் சொல்வளத்தை உலகறியச் செய்யவேண்டும் என்னும் நோக்கோடு இப்பணியினை அவர் தொடர்ந்து செய்து வருகிறார். மாபெரும் இலக்கியத் தொகைகளான சங்க இலக்கியத்தில் பொதிந்து இருக்கிற சொற்களை ஒரே நேரத்தில் ஆராய்ந்து வெளிப்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று என்பதால் பொருண்மை அடிப்படையில் வகைதொகைப்படுத்தி அதனை வெளியிட்டு வருகின்றார்.

தமிழ்ச் சொல்வளம் சங்க இலக்கியம் தொகுதி 1 : பூவுலகு என்னும் தலைப்பில் மொழி அறக்கட்டளை உருவாக்கிய நூல் வேலா பதிப்பகத்தின் வழி  2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இத்தொகுதியின் முதன்மைப் பதிப்பாசிரியராகப் பேராசிரியர் பா.ரா. சுப்பிரமணியன் விளங்க, சொல் தொகுப்பாளர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பாளர் கள் எனப் பலர் பணிசெய்துள்ளனர். ஆங்கில மொழிபெயர்ப்புப் பணியினை சு.வாசு அவர்களும், கே.எஸ். சுப்பிரமணியன் அவர்களும் திறம்படச் செய்துள்ளனர். அகராதியைப் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்த விளக்கங்கள் முன்னுரையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதோடு காட்சி வடிவத்திலும் அதற்கான சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னுரை, அகராதிப் பதிவின் அமைப்பும் விளக்கமும், பயன்படுத்திய பதிப்புகள், நூற்பெயர்களின் சுருக்கம், பூவுலகின் பகுப்புகள், முதன்மைச் சொற்களின் அகரநிரல் என இந்நூலின் கட்டமைப்பு அமைகிறது.

பூவுலகு என்னும் பகுப்பின் கீழ் நான்கு வகைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இயற்கை வளம், காலநிலை, புவியியல், வசிப்பிடம் என அமையும் இந்தப் பகுப்புகளின் கீழ் வருகின்ற பெயர்ச்சொற்களை அவற்றின் ஒத்த சொற்களோடு வகைப்படுத்தி அந்தச் சொற்கள் பயின்று வருகிற சங்க இலக்கியத் தொடரைப் பயன்படுத்தி அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பை வழங்கி உருவாக்கப்பட்டுள்ளது இந்த அகராதி. இந்த நான்கு பகுப்பகளின் கீழ் மொத்தம் 718 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நான்கு பகுப்பினுள் காலநிலையில் 224, இயற்கை வளத்தில் 188, புவியியலில் 182, வசிப்பிடத்தில் 124 என முறையே சொற்கள் அடங்கியுள்ளன.

ஒவ்வொரு பகுப்பின் கீழும் எவையெல்லாம் அடங்கும் எனவும் எவையெல்லாம் அடங்காது எனவும் கூறப்பட்டுள்ளது. சான்றாக இயற்கை வளம் என்பதில் நெருப்பு, நீர், காற்று, நீர், மழை, ஆறு, வெள்ளம், கடல், அருவி, குளம், காடு, சோலை என்ற சொற்களும் அவற்றின் ஒத்த சொற்களும் மட்டுமே இடம்பெறுகின்றன. செடிகொடிகள், மரங்கள் அவற்றின் உறுப்புகள் இதில் இடம்பெறாதவை எனக் கூறப்பட்டுள்ளது. வசிப்பிடம் கீழும் இந்தப் பாகுபாடு உள்ளது. காலநிலை, புவியியல் ஆகிய இரண்டு பகுப்பின் கீழ் இடம்பெறாதவையாக எவையும் குறிப்பிடப்படவில்லை.

சங்க இலக்கிய மூலத்தை முதன்மைப் பதிப்பாசிரியர் நேரடியாக வாசித்து சொற்களைத் தேர்வுசெய்த முறையோடு விடுபட்ட சொற்களை, ஒத்த சொற்களை நிகண்டுகள், பொருளோடு கூடிய சொல்லடைவுகள், சங்க இலக்கிய ஆய்வுகள் ஆகியவற்றின் வழியும் தேடிக் கண்டடைந்து சொற்கள் விடுபடாமல் உருவாக்கியுள்ளனர். அகராதியில் சொற்கள் இடம்பெறும் முறையானது முதலில் நெருப்பு என்னும் சொல் வழங்கப்பட்டு நெருப்பின் வேறுபெயர்களான அழல், எரி, சுடர், தீ ஆகியவை வழங்கப்பட்டு, நெருப்போடு தொடர்புடைய புகை புகையின் வேறுபெயர்களான ஆவி, நறை முதலியன தரப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு சொல்லையும் அந்தச் சொல்லோடு தொடர்புடைய சொற்களையும் பொருளோடும் சங்க இலக்கியங்களில் அந்தச் சொற்கள் பயின்றுவரும் முறைமையினையும் அறிந்துகொள்ள முடிகிறது.

எல்லாத் தொடர்களையும் வழங்கினால் பெருக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு மேற்கோள் தொடர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அந்த மேற்கோளும் பொருண்மையின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. மேற்கோள் தொடரில் இடம்பெற்றுள்ள கடின சொற்களுக்கான பொருளும் வழங்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. இந்த நூல் உலகளாவிய நிலையில் போய்ச்சேரவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு ஆங்கில மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சங்கப் பாடல்களின் தொடர்களுக்கு இன்றைய ஆங்கில உரைநடையிலேயே மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது.

சங்க இலக்கியப் பாடல்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தின் வெவ்வேறு நூற்றாண்டுகளில் எழுதப்பட்டதால் ஒரு சொல்லுக்குரிய பல ஒத்த சொற்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு சில சொற்களுக்கு எண்ணிக்கையளவில் ஏராளமான ஒத்த சொற்கள் இருப்பதாக நூலின் முன்னுரை குறிப்பிடுகின்றது.

நீர் – 10 சொற்கள், மழை – 11 சொற்கள், வழி அல்லது பாதைக்கு 15 சொற்கள், கடலைக் குறிக்க 18 சொற்கள், காடு என்பதற்கு 19 சொற்கள், குளம் என்பதற்கு 19 சொற்கள் எனக் கிடைப்பதாகக் கூறப்பட்டுள்ளது. காடு, குளம் ஆகியவற்றிற்கு அதிக எண்ணிக்கையிலாக 19 சொற்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் பல சொற்கள் இன்று வரை வழக்கில் இருப்பதையும் பல சொற்கள் வழக்கில் இருந்து மறைந்து போனதையும் அறியமுடிகிறது. நெடுங்காலத்திற்கு முன்பாகவே வழக்கிழந்து போன சொற்கள் பலவற்றிற்குப் பழைய உரைகள், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி ஆகியவற்றைப் பயன்படுத்தியதோடு, பொருள் தெரியாத சொற்கள் பலவற்றிற்குப் பதிப்பாசிரியரே பாடலின் அடிப்படையில் பொருள் புரிந்து பொருளை உருவாக்கியுள்ளார்.

சான்றுக்காக, குளம் என்னும் என்னும் சொல்லின் ஒத்த சொற்களாக அகழ், அகம்பு, அயம், இலஞ்சி, ஏரி, கயம், குட்டம், குண்டு, கேணி, சுனை, சூழி, தடம், தடாகம், படு, பழனம், பொய்கை, மருங்கு, முதுநீர், வாவி முதலான சொற்கள் கிடைக்கின்றன. மாபெரும் சொல் தரவுகளைக் கொண்டு இருக்கிற சங்க இலக்கியத்தில் இடம்பெற்றிருக்கிற சொற்களில் பெரும்பான்மை தமிழ்ச் சொற்களே என்பது குறிப்பிடத்தக்கது.

சொல்வளங்களை எல்லா நிலைகளிலும் வகைப்படுத்தி வெளிவந்திருக்கும் இந்த அகராதியினைக் கொண்டு மேலாய்வுகள் பலவற்றைச் செய்ய இயலும். அன்று இருந்த பல சொற்கள் எவ்வாறெல்லாம் இன்றுவரை தொடர்ந்து வந்திருக்கின்றன என்பதோடு, சங்க இலக்கியங்களில் பயின்று பிற்காலங்களில் வழங்கொழிந்த சொற்கள் எந்த காலகட்டத்தில் வழங்கொழிந்தன என்பது வரை ஆய்வுகள் மேற்கொள்ள முடியும். சங்க இலக்கியத்தில் பயின்று வந்த சொற்களை அவற்றின் ஒத்த சொற்களொடு இணைத்து தொடரடைவுகளைத் துணைக்கு வைத்துப் புலவர்கள்  அந்தக் காலத்தில் கூடுதல் எண்ணிக்கையில் எந்தச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதைக் கண்டுணர முடியும். சங்க இலக்கியங்களில் பயின்றுவந்துள்ள இந்தச் சொற்கள் பிற திராவிட மொழிகளிலும் மற்ற உலக மொழிகளிலும் இதே பொருண்மையோடு பயின்று வருகின்றனவா என்பதையும் விளங்கிக்கொள்ள முடியும்.

சங்க இலக்கியம் போன்ற செவ்வியல் பனுவல்களுக்குச் சொல் வளங்கள் போன்ற அகராதிகளை உருவாக்கும் போது தொன்மைக்காலத் தமிழ்ச்சமூகத்தின் சொல் வளங்களை இன்றைய தலைமுறையினர்க்குக் கொண்டு செல்வதோடு இன்றைய இளைய தலைமுறையின் சிந்தனையில் சொல்வளத்தின் பெருக்கத்தையும் அறியச் செய்யமுடியும். தொகுதி 1 என்பதன் தொடர்ச்சியாக உணவு, உடை, அணிகலன் குறித்து இரண்டாவது தொகுதியும் வெளிவந்துள்ளது. அதுகுறித்த அறிமுகம் அடுத்த பகுதியில் இடம்பெறும்.

தமிழ்ச்சமூகத்தின் மொழிவளத்திற்குப் பெரும்பங்காற்றி வரும் மொழி அறக்கட்டளை தொடர்ந்து உருவாக்கி வரும் அகராதிகள் சங்க இலக்கிய வாசிப்பின் பக்கங்களைப் புதிய கண்ணோட்டத்தோடு திறக்கும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.

நூல் அட்டை: நன்றி - மெரினா புக்ஸ்

1 comment:

  1. அண்ணா வணக்கம். இந்த நூல் வரிசையில் தொகுதி 2 க்கான தங்களது திறானாய்வு எழுதியிருக்கிறீர்களா? அதையும் படித்தறிய விரும்புகிறேன். இந்த இரண்டு தொகுப்பும் எனக்கு வேண்டும். பெறுவதற்கு உரியவழி கூறி உதவுங்கள். நன்றி.

    ReplyDelete